Sunday, July 5, 2020

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்திபெத், தைவான் மக்களும் ஆதரவு

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதும், இந்திய வீரர்கள் 20 பேரை கொலை செய்ததும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அங்குள்ள நியூயார்க், நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்கள், புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கூடி சீனாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சீனாவை புறக்கணிப்போம் என்ற பெயரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும், ‘பாரத் மாதா கி ஜே, ‘சீன பொருட்களை புறக்கணிப்போம் என்பன போன்ற கோஷங் களை எழுப்பினர். சீனாவை பொருளாதார ரீதியில் புறக்கணிக்கவும், தூதரக ரீதியாக தனிமைப்படுத்தவும் வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

இந்தியர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திபெத், தைவான் மக்களும் பங் கேற்றனர்.  ‘இந்தியாவுக்கு திபெத் ஆதரவளிக்கிறது, ‘திபெத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்பன போன்ற வாசகங் கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.


ட்ரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா தொற்று

  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பிரச்சார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்காக ஜனாதிபதி ட்ரம்புடன் தெற்கு டகோட்டா மாகாணத்துக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி ட்ரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.. 


அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை - வடகொரியா

  

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு குண்டுகளை தொடர்ந்து சோதனை செய்து வந்தது.

  வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாலமாக இருந்த தென் கொரியாவுடன் வடகொரியாவுக்கு மோதல் வலுத்து வருகிறது

இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அணு ஆயுத பேச்சுவார்த்தைக்காக கிம் ஜாங் உன்னை, ட்ரம்ப் சந்திப்பார்என அண்மையில் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனவும் அவர் கூறினார்.

ஆனால் வட கொரியா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

மேலும் அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான விரோத போக்குகளை மாற்றிக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும் வட கொரியா கூறியுள்ளது

இது குறித்து பேசிய வடகொரியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி சோ சோன் ஹூய்சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின்போது செய்துகொண்ட ஒப்பந்தங்களை புறக்கணித்துவிட்டு வடகொரியா மீது விரோத கொள்கையை செயல்படுத்திவரும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? ஏதேனும் பரிவர்த்தனை செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பினார்

மேலும் அவர்அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணரவில்லை. ஏனெனில் இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு கருவி ஆகும்எனக் கூறினார்

இதனிடையே அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டின் தலைமை மாற வாய்ப்புள்ளதால் நவம்பர் வரை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை வடகொரியா தவிர்க்கும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

விமான நிலையத்தில் தூங்கியவர் விமானத்தைத் தவறவிட்டார்

 துபாய் விமான நிலையத்தில் இந்தியர் ஷாஜகான் என்பவர் தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் ஐக்கிய அரபு அமீரகத்தில் 427 இந்தியர்கள் (கேரளாவை சேர்ந்தவர்கள்) சிக்கி தவித்தனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக கேரள முஸ்லிம் கலாசார மையம், ஜம்போ ஜெட் ராட்சத விமானத்துக்கு ஏற்பாடு செய்தது.

இந்த விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு செல்வதற்காக , அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் ஸ்டோர்கீப்பராக வேலை செய்துவந்த ஷாஜகான் என்பவர் 1100 திர்ஹாம் (சுமார் ரூ.22,500) கொடுத்து பதிவு செய்திருந்தார்.

விமானத்தில் ஏறுவதற்காக அவர் முந்திய நாளே தூங்காமல் இருந்தார். மறுநாள் அதிகாலையிலேயே துபாய் விமான நிலையத்துக்கு வந்து விட்டார். விமானத்தில் ஏறுவதற்கான ‘செக்-இன் நடைமுறைகளை முடித்தார். கொரோனாவுக்கான துரித கருவி சோதனையும் முடிந்தது.

அதைத் தொடர்ந்து விமானத்தில் ஏறுவதற்காக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு 3-வது முனையத்தில் உள்ள ‘போர்டிங் வாயிலை அடைந்தார். மற்றவர்களிடம் இருந்து விலகி அமர்ந்தார். நேரம் கடந்தது. மாலை 4.30 மணியை தாண்டியபோது லேசாக கண்மூடினார்.  கண்விழித்துப்பார்த்தால் அவர் ஏற வேண்டிய விமானம் புறப்பட்டு சென்று விட்டதை அறிந்து துடித்துப்போனார். 

விசா காலாவதியாகி இருந்ததால் விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வர முடியாது. கையில் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து விமான டிக்கெட் வாங்கிவிட்ட நிலையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் அமைப்புச்செயலாளர் ஜாசிம்கான் கள்ளம்பலம் விமான நிலையத்துக்கு சென்று, அவருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார். 

இதுபற்றி விமான பயண ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிஜாமுதீன் து,

“ விமானம் புறப்பட்டு சென்ற பின்னர் கண் விழித்து பார்த்த ஷாஜகான் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் எங்களை தொடர்பு கொண்டு நடந்ததை சொன்னார். ஷாஜகானை, விமான நிறுவன அதிகாரிகள் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது தெரிய வந்தது. அவர் விமானத்தை தவற விட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அடுத்த எமிரேட்ஸ் விமானத்தில் அவரை அனுப்பி வைக்க முயற்சிப்போம் என குறிப்பிட்டார். தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட ஷாஜகான், அடுத்த விமானத்துக்காக இப்போது காத்திருக்கிறார். 

கடந்த மார்ச் மாதமும் இதே போன்று இன்னொரு இந்தியர் தூக்கத்தால் விமானத்தை தவற விட்டு விட்டு, ஊரடங்கால் 50 நாட்களாக காத்திருந்து நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, July 4, 2020

கொரோனா வைரஸ் பரவியதைக் கண்டறிய சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு

  கொரோனா வைரஸின் தோற்றம் பற்றியும் மனிதர்களுக்கு அது பரவிய விதம் பற்றியும் ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி பெருத்த சர்ச்சை நிலவிவருகிறது. சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. ஆனால் உகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கு இடையே, கொரோனா வைரஸ் உகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க டி.வி. பரபரப்பு செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கூறி வந்தனர்.

ஆனால் அமெரிக்க படை வீரர்கள்தான் இந்த வைரஸை சீனாவில் கொண்டு வந்து விட்டதாக சீனா குற்றம் சுமத்துகிறது. இதை அமெரிக்கா நிராகரித்தது. இப்போது இந்த வைரஸின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது.

 கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின்  வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனாவுக்கு செல்கிறது. இந்தக் குழு, கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் முதன் முதலில் பரவியது, விலங்குகள் மூலமாக மனிதர்களிடம் தொற்று வந்ததா? அல்லது வெளவால்களிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளது. 

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறி உள்ளார்.


Thursday, July 2, 2020

செக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை

 செக் குடியரசு நாட்டில் கொரோனா வைரசுக்கு விடை கொடுப்பதை குறிக்கும் வகையில் சார்லஸ் பாலத்தில் நடந்த பிரியாவிடை விருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

செக் குடியரசு நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கடந்த மாதம் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த வாரம் இந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் 1000 நபர்கள் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி அளித்தது 

குறிப்பாக நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், கோட்டைகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டன. இதனால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர் 

இந்நிலையில், கொரோனாவுக்கு பிரியாவிடை கொடுப்பதை குறிக்கும் வகையில், தலைநகர் பிராக்கில் உள்ள சார்லஸ் பாலத்தில் வித்தியாசமான பிரியாவிடை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது  கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையிலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சார்லஸ் பாலத்தில் நடந்த பிரியாவிடை விருந்துக்காக கூடினர். 

பாலத்தின் மீது 500 மீற்றர் நீளத்தில் மேஜை அமைக்கப்பட்டு, இருபுறமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டனர். ஒருவருக்கொருவர் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்தனர். இதுதவிர உள்ளூர் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தும் பாட்டு பாடியும் அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

 

இந்த பிரியாவிடை விருந்துக்கான ஏற்பாடுகளை உள்ளூர் கபே உரிமையாளரான கோப்ஸா செய்திருந்தார். கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்ததை கொண்டாடவும், மக்கள் பயப்படவில்லை என்பதை காட்டவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார் 

செக்குடியரசு நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர்

 


Tuesday, June 30, 2020

ட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல்' நிராகரித்தது

தனது நாட்டின்  முக்கிய படைத் தளபதியின் கொலை வழக்கில்  அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி  ஈரான் விடுத்த கோரிக்கையை  சர்வதேச பொலிஸ் அமைப்பான  'இன்டர்போல்  நிராகரித்தது.

.ஈரான் ராணுவத்தின் முக்கிய படை தளபதியான  ஜெனரல்  குவாசிம் சுலைமானி  ஈராக்கின் பாக்தாதில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இந்தாண்டு ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்  அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்தது.இந்நிலையில்  குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  உட்பட  அமெரிக்காவைச் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள்  அரசியல்வாதிகளை  ஈரான் குற்றவாளிகளாக கூறியுள்ளது. அவர்கள் மீது கைது பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படிஇ இன்டர்போலின் உதவியை  ஈரான் நாடியுள்ளது.

  ஈரானின் இந்தக் கோரிக்கையை  ஐரோப்பிய நாடான பிரான்சின் லியானை தலைமையிடமாக வைத்து செயல்படும்  இன்டர்போல் நிராகரித்து விட்டது.இன்டர்போல் விதிகளின்படி  அரசியல் காரணங்களுக்கான இது போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது. அதனால்  ட்ரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.இருப்பினும்  ஈரானின் இந்த நடவடிக்கை  இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.