Wednesday, December 30, 2009

உலகக்கிண்ணம்2010


சிலி
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்து தகுதி பெற்ற இரண்டாவது நாடு சிலி. பிரான்ஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சிலி 12 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான 18 தகுதி காண் போட்டியில் விளையாடிய சிலி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்தது. சிலி 32 கோல்கள் அடித்தது. சிலிக்கு எதிராக 22 கோல்கள் அடிக்கப்பட்டன. 33 புள்ளிகளைப் பெற்றது. 43 முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. நான்கு முறை எச்சரிக்கை விடப்பட்டது. மூன்று தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. கம்பின்டோ சுசோ 10 கோல்களை அடித்தார். மாரியா பெர்னாண்டோ நான்கு கோல்கள் அடித்தார். ஒரு போட்டி மீதமாக இருக்கையில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 42 கோல்கள் மூலம் வெற்றி பெற்றதும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை சிலி பெற்றது.
ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகியவற்றுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடிய சிலி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. மாரியஸ் பெர்னாண்டஸ், அலெக்ஸிஸ் சஞ்சஸ், ஹம்பட்டோசுசோ ஆகியோர் சிலி அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களாவர். ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த மாசெலோ பியல்சா சிலியின் பயிற்சியாளராக உள்ளார்.
1962ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி சிலியில் நடைபெற்றது. அப்போது 1 0 கோல் கணக்கில் யூகோஸ்லோவியாவை வென்று சிலி மூன்றாவது இடத்தைப் பெற்றது. ஸ்பெய்ன், ஹொண்டூராஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுடன் எச் பிரிவில் சிலி உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, December 29, 2009

உலகக்கிண்ணம்2010


பிரேஸில்
தென் ஆபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து 10 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. பிரேஸில், சிலி, பரகுவே, ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய ஐந்து நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
19 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் தொடர்ச்சியாக விளையாடிய ஒரே ஒரு நாடு என்ற பெருமையுடன் திகழும் பிரேஸில் தென் அமெரிக்காவில் இருந்து தெரிவான முதலாவது நாடாக விளங்குகிறது. 18 போட்டிகளில் விளையாடிய பிரேஸில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஏழு போட்டிகளை சமநிலையில் முடித்தது. ஈக்குவடோருக்கு எதிராக 50 கோல்கள் அடித்தது. ஈக்குவடோர் கோல் எதனையும் அடிக்கவில்லை. உருகுவே, சிலி, வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டியில் தலா 4 0 கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையிலான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். முதலாவது போட்டியில் இரண்டு நாடுகளும் கோல் அடிக்காமையினால் போட்டி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் பிரேஸில் மூன்று கோல்கள் அடித்தது. ஆர்ஜென்டீனா கோல் அடிக்காது தோல்வி அடைந்தது.
கொலம்பியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிந்தன. இரு போட்டிகளிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. பிரேஸில் 33 கோல்கள் அடித்தது. பிரேஸிலுக்கு எதிராக 11 கோல்கள் அடிக்கப்பட்டன. 34புள்ளிகளுடன் உல கக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட பிரேஸில் தகுதி பெற்றது.
லூயிஸ் பாபியானோ, காகா இருவரையும் கட்டுப்படுத்துவது எதிரணிக்கு மிகு ந்த சிரமமாக இருக்கும். லூயிஸ் பாபியா னோ ஒன்பது கோல்களையும் காகா ஐந்து கோல்களையும் அடி த்து தமது பலத்தை நிரூபித்துள்ளனர். கோல் கீப்பரான ஜூலியோ சீஸர் பிரேஸிலின் வெற்றிக்கு பிரதானமான வீரராகத் திகழ்கிறார். 18 தகுதிகாண் போட்டிகளில் பிரேஸில் விளையாடியது. அதில் 12 போட்டிகளில் எதிர்த்து விளையாடிய நாடுகள் கோல் எதனையும் அடிக்கவில்லை. டுங்கா என செல்லமாக அழைக்கப்படும் கார்லொஸ் காட்டனோ பெலடோன் பிரேஸில் அணியின் பயிற்சியாளராக உள்ளார். 1962 ஆம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான பிரேஸில் அணியில் விளையாடியவர். 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் பிரேஸில் அணியின் பயிற்சியாளராக டும்ங்கா பொறுப்பேற்றார். 2008 ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரையிலான 19 போட்டிகளில் பிரேஸில் தோல்வியடையவில்லை. தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வடகொரியா, ஐவரிகோஸ்ட், போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் ஜி பிரிவில் பிரேஸில் உள்ளது. ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, December 27, 2009

சாதித்தது தி.மு.க துவண்டது அ.தி.மு.க


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி உள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் போட்டியிட்டதனால் எதிர்பார்த்த வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெறாது என்ற கணிப்பீட்டைப் பொய்யாக்கி 2006 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றியீட்டினர்.
திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. வந்தவாசியில் வன்னியர் அதிகளவில் வாழ்வதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகம் என்ற மாயை இருந்தது.
இத்தேர்தலில் இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதே எதிர்க்கட்சிகளின் பிரதான பிரசாரமாக இருந்தது.
ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்செந்தூரில் ஸ்டாலினும், வந்தவாசியில் அழகிரியும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப் போர் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் கசிந்த இவ்வேளையில் இடைத்தேர்தலின் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தனது செல்வாக்கு இன்னமும் மங்கி விட வில்லை என்பதை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்துவதற்கும் இடைத்தேர்தலின் வெற்றி உதவி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதற்கு இடைத்தேர்தலின் வெற்றி உதவி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியும் அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கும் திருச்செந்தூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்குக்கும் இடையே யான பலப்பரீட்சையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியீட்டியுள்ளார்.
2001 ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் இடைத் தேர்தல் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்வதைவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் துரோகம் செய்த அனிதா ராதாகிருஷ்ணனை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்தார். நம்பி வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைவிடக் கூடாது என்ற கொள்கையுடன் முத ல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் அனிதா
ராதாகிருஷ்ணன் 13,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட 16,623 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார். இதன் மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்ற மாயை தேர்தல் முடிவு உடைத்தெறிந்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து திருச்செந்தூரை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றி உள்ளது.
வந்தவாசி இடைத் தேர்தலிலும் அதிக வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. வந்தவாசி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான ஜெயராமன் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜெயராமனின் மகனான கமலக்கண்ணனை திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிறுத்தியது. தந்தையைவிட அதிக வாக்குகள் பெற்று கமலக் கண்ணன் வெற்றி பெற்றார்.
இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற திரம்விட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாது, தனது தோழமைக் கட்சியான காங்கிரஸுக்கும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. இரு பிரதான கட்சிகளும் பணமும் அன்பளிப்புகளும் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
விஜயகாந்தின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கனவுடன் அரசியலில் புகுந்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை உணர்ந்தும் உணராதவர் போல் நடந்து கொள்கிறார். கடந்த தேர்தல்களின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியைத் தகர்த்த விஜயகாந்த் தே.மு.தி.க. இம்முறை இரண்டு தொகுதிகளிலும் கட்டுப்பணத்தை இழந்துள்ளார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் புயலாக மாறி புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என்ற கணிப்பீடுகள் எல்லாவற்றையும் வாக்காளர்கள் பொய்யாக்கி விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறவைத் துண்டித்து விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் எனத் துடித்த காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் திரம்விட முன்னேற்றக் கழகம் கரியைப் பூசி உள்ளது.
முதல்வரின் அரசியல் வாரிசுகளான ஸ்டாலினும் அழகிரியும், திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றி நாயகர்களாக விளங்குகின்றனர். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே பிரச்சினை அதிகாரம் மிக்கவர் யார் என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு என்று பரவலாகத் தகவல் வெளியானாலும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தை இருவரும் நிறைவேற்றி விட்டனர். முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து கொண்டே வெற்றிக் கனியைப் பறித்து விட்டார். கருணாநிதிக்கு பின்னர் கட்சியை வழி நடத்த இரண்டு புதல்வர்களும் இருக்கிறார்கள் என்ற தெம்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலை புறக்கணிக்கும்படி ராமதாஸ் விடுத்த கோரிக்கையை எவரும் கணக்கில் எடுக்கவில்லை. திருச்செந்தூரில் 17 பேரும், வந்த வாசியில் 21 பேரும் தேர்தலைப் புறக்கணிக்கும் படிவத்தை நிரப்பியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினால் புறந்தள் ளப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை இர ண்டு தொகுதிகளிலும் உள்ள மக்கள் நிராகரி த்து விட்டனர்.
அடுத்து நடைபெறும் தேர்தலில் கூட்டணியில் சேர்வதற்கான பேரம் பேசும் தகுதியை ராமதாஸும் விஜயகாந்தும் இழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் பலம் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் உள்ளது என்ற மாயை அகன்று விட்டது. இவர்களை தமது கட்சியில் சேர்ப்பதை விட இவர்களது கட்சித் தொண்டர்களையும் பிரபலமானவர்களையும் தமது கட்சிக்கு இழுக்கும் வேலையை பிரதான எதிர்க்கட்சிகள் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை வலுப்படுத்த வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கான பேரம் பேசும் வலுவை திராவிட முன்னேற்றக் கழகம் அதிகரித்துள்ளது.
வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 27/12/09


உலகக்கிண்ணம்2010


ஹொண்டூராஸ்
வட அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தெரிவான மூன்றாவது நாடு ஹொண்டூராஸ். அரசியல் மாற்றத்தினால் சோர்வடைந்திருந்த ஹொண்டூராஸ் நாட்டின் மக்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டு தடவை மட்டுமே விளையாடுவதற்கு தகுதி பெற்ற ஹொண்டூராஸ் 28 வருடங்களின் பின்னர் மூன்றாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 10 வெற்றியையும் ஆறு தோல்விகளையும் சந்தித்த ஹொண்டூராஸ் இரண்டு போட்டிகளை சமப்படுத்தியது.
32 கோல்கள் அடித்த ஹொண்டூராஸுக்கு எதிராக 18 கோல்கள் அடிக்கப்பட்டன. 38 தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒரு தடவை எச்சரிக்கை விடப்பட்டது.
நான்காவது சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஹொண்டூராஸ் ஐந்து வெற்றிகளையும் நான்கு தோல்விகளையும் பெற்றது. ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. 17 கோல்கள் அடித்த ஹொண்டூராஸுக்கு எதிராக 11 கோல்கள் அடிக்கப்பட்டன.
16 புள்ளிகளைப் பெற்றது. நான்காவது சுற்றில் கடைசிப் போட்டியில் எல்சல்வடோரை 1 0 என்ற கோல்களினால் வெற்றி பெற்றது. ஹொண்டூராஸ் மக்கள் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தனர்.
அமெரிக்காவும் மெக்ஸிக்கோவும் தெரிவாகி விட்டன. அமெரிக்காவுக்கும் கோஸ்ரரிக்காவுக்கும் இடையேயான போட்டியில் கோஸ்ரரிக்கா வெற்றி பெற்றால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை கோஸ்ரரிக்கா பெற்று விடும்.
ஹொண்டூராஸ் வெளியேறி விடும். அந்தப் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறவேண்டும் என்றே ஹொண்டூராஸ் மக்கள் விரும்பினார்கள். அமெரிக்காவுக்கும் ஹொண்டூராஸுக்கும் இடையே அரசியல் பிரச்சினை இருந்தாலும் அமெரிக்காவின் வெற்றியை ஹொண்டூரஸ் மக்கள் விரும்பினார்கள்.
அமெரிக்காவுக்கும் கோஸ்ரரிக்காவுக்கும் இடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட ஹொண்டூராஸ் தகுதி பெற்றது. ஹொண்டூராஸைப் போன்றே கோஸ்ரரிக்காவும்
10 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. ஹொண்டூராஸ், கோஸ்ரரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் தலா 16 புள்ளிகளைப் பெற்றன. விகிதாசார அடிப்படையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட ஹொண்டூராஸ் தகுதி பெற்றது.
டேவிட் அசோ, வில்சன் பலதியோல் ஜுலியோ லியோன், அமோடோடுவாரா ஆகியோர் ஹொண்டூராஸின் நட்சத்திர வீரர்களாவர். கார்லோஸ்பவல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஸ்பெயின், சிலி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுடன் "எச்' பிரிவில் ஹொண்டூராஸ் உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, December 22, 2009

உலகக்கிண்ணம்2010


மெக்ஸிக்கோ
வட அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற இரண்டாவது நாடு மெக்ஸிக்கோ. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் அணியைத் தேர்வு செய்யும் மூன்றாவது சுற்றில் 18 போட்டிகளில் விளையாடிய மெக்ஸிக்கோ 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்தது. ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. மெக்ஸிக்கோ 36 கோல்கள் அடித்தது. மெக்ஸிக்கோவுக்கு எதிராக 18 கோல்கள் அடிக்கப்பட்டன. மெக்ஸிக்கோவுக்கு எதிராக 32 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. மெக்ஸிக்கோவுக்கு எதிராக நான்கு சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டன. பெலிஸ் நாட்டுக்கு எதிரான போட்டியில் 7 0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்ற ஆறு நாடுகளில் மெக்ஸிக்கோவும் ஒன்று. 10 போட்டிகளில் விளையாடிய மெக்ஸிக்கோ ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. மூன்று போட்டிகளில் மெக்ஸிக்கோ தோல்வி அடைந்தது. மெக்ஸிக்கோ 18 கோல்கள் அடித்தது. மெக்ஸிக்கோவுக்கு எதிராக 12 கோல்கள் அடிக்கப்பட்டன. 19 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட மெக்ஸிக்கோ தகுதி பெற்றது.
கியூட்ட, மெக்பிளாங்கோ அகூரி குளேரிமோர் அக்கோயா, ஏப்ரயன், யுயா ரெஸ், அன்ரஸ் குயிட்டடோ, ஜியோ வொனிடூஸ் சாந்தோஸ், நாவல் மாதிஸ்ப் ஆகியோர் மெக்ஸிக்கோவின் பிரபல்யமான வீரர்களாவர். ஜாபீர் சுக்குனியின் பயிற்சியில் மெக்ஸிக்கோ பல வெற்றிகளைப் பெற்றது.
2005ஆம் ஆண்டு பெருவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மெக்ஸிக்கோ சம்பியனானது. அந்த அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் இன்றைய மெக்ஸிக்கோஅணியில் பெரும் பலத்தைக் கூட்டியுள்ளது.
தென்ஆபிரிக்கா உருகுவே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஏ பிரிவில் மெக்ஸிக்கோவும் இடம்பிடித்துள்ளது

Monday, December 21, 2009

தமிழகத்தை பிரிக்கும் ராமாதாஸின் கனவு நனவாகுமா






ஆந்திராவில் இருந்து புறப்பட்ட தெலுங்கானா என்ற புயல் இந்திய அரசியலை பதற வைத்துள்ளது. தெலுங்கானா கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு காங்கிரஸ் தலைவி சோனியாவின் மனதை உருக்கியதால் தெலுங்கானா பற்றிய பரீட்சைக் காலம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பினால் கர்நாடகா முதல் காஷ்மீர் வரை உறங்கிக் கிடந்த தனி மாநிலப் போராட்டங்கள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தையும் இரண்டாக்க வேண்டும் என்ற தனது பழைய அறிக்கையை தூசி தட்டி வெளிப்படுத்தினார் டாக்டர் ராமதாஸ். ""தமிழகத்தின் வட பகுதி முன்னேற்றமடைந்துள்ளது. தென் பகுதி இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. தமிழக அரசின் செயற்திட்டங்கள் தென்பகுதிக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆகையினால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு வட தமிழகத்தையும், மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தையும் உருவாக்க வேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தின் தென்பகுதியில் மிக அதிகளவில் இருப்பதனால் தமிழகத்தை இரண்டாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் முனைப்புக் காட்டுகிறார். மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தை உருவாக்கினால் பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாகலாம் அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கு தலைமை வகிக்கலாம் என்ற நம்பிக்கை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் எத்தனை காலத்துக்கு அரசியல் நடத்துவது. பாட்டாளி மக்கள் கட்சியின் தயவில் ஏனைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தைப் பிரிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் வேண்டுகோளை தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவும் ஒருமித்த குரலில் எதிர்த்துள்ளார்கள். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்ற இவர்களின் குரலால் டாக்டர் ராமதாஸ் குரல் சற்று அடங்கி விட்டது. டாக்டர் ராமதாஸுக்கு ஆதரவாக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒருவரும் விரும்பவில்லை. ஆகையினால் டாக்டர் ராமதாஸின் கனவு பலிக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், அழகிரி ஆகியோர் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகின்றனர். இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்துக் கூறிய டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்காத வகையில் கட்சிக்குள் இருந்து சலசலப்பு எழுந்துள்ளது.
இதேவேளை, திருச்செந்தூர் வந்தவாசி ஆகிய தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கின்றனர். கட்சி நிறுவுனரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காமல், பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் பிரசாரம் செய்வது கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைமைப் பீடத்தின் ஆசியுடன் தான் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியினர் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலமான வாக்கு வங்கியை உடைய ஒரு கட்சியாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனி மரமாக நிற்கிறது.
பலமான கட்சியுடன் கூட்டு சேர்ந்தால்தான் அக்கட்சி வளர்ச்சி அடையும். இல்லையேல் ஒரு கட்சியின் வெற்றி விகிதாசாரத்தைக் குறைத்த பெருமை மட்டும் தான் கிடைக்கும். வெற்றி என்பது எட்டாக்கனி என்பதை டாக்டர் ராமதாஸ் நன்றாக உணர்ந்துள்ளார். ஆகையினால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் தாம் வெளியேறியதால் மீண்டும் அக்கட்சியுடன் இணைவதற்குரிய சாத்தியக் கூறு இல்லை. இந்தியத் தேசியக் கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் முடங்கிப் போயுள்ளது. பலமில்லாத பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் ஒருபோதும் விரும்ப மாட்டார்.
காங்கிரஸுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் பகீரதப் பிரயத்தனம் செய்தார். முதல்வர் கருணாநிதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள சோனியா தயாராக இல்லாததனால் டாக்டர் ராமதாஸின் முயற்சிகள் பலிக்கவில்லை. கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் காங்கிரஸில் சேரும் திட்டம் டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
நொந்து போயிருக்கும் டாக்டர் ராமதாஸுக்கு அவருடைய "அன்புச் சகோதரியான ' ஜெயலலிதா புதியதொரு தலையிடியை உருவாக்கி உள்ளார். புதுக்கோட்டையிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 4000 உறுப்பினர்கள் ஒரே நாளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததாக வெளியான பத்திரிகைக் குறிப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
இடைத் தேர்தல் சமயத்தில் நடைபெற்ற கட்சி மாற்றம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது போல் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதிகளவில் கட்சி மாறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் வாக்குகளைக் கவர்வதற்காகவும் ஜெயலலிதாவிடமிருந்து நல்ல பெயரைப் பெறுவதற்கு திட்டமிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலர் நடத்திய மோசடி நாடகம் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது உண்மை. ஆனால் அக்கட்சி அறிவித்தது போல் 4000 பேர் இணையவில்லை.
இதேவேளை, திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான கௌரவப் போட்டியை உருவாக்கி உள்ளது.
திருச்செந்தூரில் ஸ்டாலினின் தலைமையிலும் வந்தவாசியில் அழகிரியின் தலைமையிலும் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை வந்தவாசி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தொகுதி எது என்ற போட்டி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் ஸ்டாலினின் செயற்பாடுகள் உள்ளன. அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பது உறுதியாகி விட்டது. கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார்.
கருணாநிதி ஓய்வு பெற்றதும் ஸ்டாலின் முதல்வராகி விடுவார். ஸ்டாலினுக்கு இணையான ஒரு பதவியை தமிழகத்தில் பெறுவதற்கு அழகிரி முயற்சி செய்கிறார். ஆகையினால் திருச்செந்தூரைவிட அதிக பெரும்பான்மையுடன் வந்தவாசியில் வெற்றி பெற வேண்டும் என்று அழகிரி சபதமெடுத்துள்ளார்.
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போட்டி ஆரோக்கியமானதாக இருந்தால் இருவருக்கும் நல்லது.
வர்மா

உலகக்கிண்ணம்2010



அமெரிக்கா
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து 35 நாடுகள் போட்டியிட்டன. அமெரிக்கா, பர்படாஸ், கௌதமாலா, கியூபா, ரினிடாட் அன்ட்டுபாக்கோ, எல்சல்வடோர், கொஸ்ரிக்கா, மெக்ஸிக்கோ ஹொண்டூராஸ் ஆகிய ஒன்பது நாடுகள் மூன்றாவது சுற்றுக்கு தெரிவாகின. 13 வெற்றியுடனும் இரண்டு தோல்விகளுடனும் மூன்று போட்டியை சமப்படுத்தியதுடனும் நான்காவது சுற்றுக்கு அமெரிக்கா தெரிவானது. பர்படாஸுக்கு எதிராக எட்டு கோல்களும், கியூபாவுக்கு எதிராக ஆறு கோல்களும் அடித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
மூன்றாவது சுற்றில் அமெரிக்கா 42 கோல்கள் அடித்தது. அமெரிக்காவுக்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 24 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. ஒருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்கா, மெக்ஸிகோ, ஹொன்டூராஸ், கோஸ்ரிக்கா, எல்சல்வடோர், ரினிடாட் அன்ட் டுபாக்கோ ஆகிய ஆறு நாடுகள் நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன. அமெரிக்கா 19 புள்ளிகளுடனும் மெக்
ஸிகோ 16 புள்ளிகளுடனும் உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஹொண்டூராஸ், கோஸ்ரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் தலா 16 புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஹொண்டூராஸ் உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அமெரிக்கா, மெக்ஸிக்கோ, ஹொண்டூராஸ், கோஸ்ரிக்கா, எல்சல்வடோர், ரினிடாட் அன்ட் டுபாக்கோ ஆகிய ஆறு நாடுகள் நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
நான்காவது சுற்றில் ஆறு வெற்றிகளைப் பெற்ற அமெரிக்கா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தியது. அமெரிக்கா 19 கோல்கள் அடித்தது. அமெரிக்காவுக்கு எதிராக 13 கோல்கள் அடிக்கப்பட்டன.
டொனோவான் அமெரிக்க உதைபந்தாட்ட அணித் தலைவராக உள்ளார். ஒடுசி ஒன்யோ மைக்கல் பிரட்வே, யோகி அல்டி டோரி, டிம் ஹோவாட், கிளின்ட் டெம்சே ஆகியோர் அமெரிக்க உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்களாவர்.
தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொப் பிரட்வே நிரந்தரப் பயிற்சியாளராகக் கடமையாற்றுகிறார்.
ரமணி
மெட்ரோநியூஸ்