Thursday, April 29, 2021

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது சென்னை

டில்லியில் நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில்   ஹைதராபாத்தை எதிர்த்து  விளையாடிய  சென்னை  7  விக்கெட்களால்  வெற்றி  பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  ஹைதராபாத் அணித்தலைவர்  துடுப்பாட்டத்தைத் தேர்வு  செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய  சன்ரைசர் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் அடித்தது.  172 ஓட்டங்கள் எனும் வெற்றி  இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையி்ல் 3 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர்  களமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 7 (5) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ஓட்டங்களை சேர்த்தது. ஆனால், ஓட்ட சதவிகிதம்  அதிகரிக்கவில்லை.  மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தநிலையில் 57 (55) ஓட்டங்களில் வெளியேறினார். மணிஷ் பாண்டேயும் 61(46) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

வானர், மணிஷ் பாண்டே ஜோடி 87 பந்துகளில் 106  ஓட்டங்கள்  எடுத்தது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்து  வீச்சும் துரிதமான களத்தடுப்பும்  இந்த  ஜோடியைக்  கட்டுப்படுத்தியது.

கடைசி  4  ஓவர்களில் அதிரடி  காட்டிய    கேன் வில்லியம்சன், கேதார்  யாதவ் ஜோடி ஹைதராபாத்தின்  ஓட்ட  எண்ணிக்கையை  உயர்த்தியது. கேன் வில்லியம்சன் 26(10) ஓட்டங்களும், கேதர் ஜாதவ் 12 (4) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 2 விக்கெட்டுகளும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர்  களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ஓட்ட சதவிகிதத்தை  அதிரடியாக உயர்த்தியது. பவர் பிளேயில்  தொடர்ந்து  மூன்றாவது முறையாக விக்கெட் இழப்பின்றி 50  ஓட்டங் எடுத்தனர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், டூ பிளஸ்சிஸ்   ஜோடி தங்களது அரைசதத்தை பதிவு செய்தது

தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 75 (44) ஓட்டங்களில் ரஷித்கான் பந்துவீச்சில் விக்கெட்டை  இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 15 (8) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மொயின்  அலியைத் தொடர்ந்து   டூ பிளஸ்சி 56 (38) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா, ஜடேஜா ஜோடி  அதிரடியாக விளையாடி  வெற்றி  எட்டியது.


 சுரேஷ் ரெய்னா 17 (15) ஓட்டங்களும், ஜடேஜா 7 (6) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்கள்  அடித்து வெற்றி  பெற்றது. ஹைதராபாத் அணியின் சார்பில்  ரஷித்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 56 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், தவானை விட ஐந்து ஓட்டங்கள் பெற்று ஒரேஞ்ச் தொப்பியை கைப்பற்றினார் டு பிளிஸ்சிஸ்.


நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவரும் இல்லாதது ஹைதராபாத்துக்கு  பாதகமானதாக‌  உள்ளது. 

 இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி மீண்டும் புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியது. 6 போட்டிகளில் ஒரு தோல்வி, தொடர்ந்து 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. 5 தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் இந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் அணி வருவது சந்தேகம்தான்.

ருதுராஜ்  கெய்க்வாட்  தொடர்ச்சியாக  மூன்றாவது அரைசதம் அடித்தார். இப்போட்டியில் ருதுராஜ் ஒரே ஒரு சிக்ஸரும் 12  பவுண்டரிகளும் அடித்தார்.

ரெய்னா 202 சிக்ஸரும் வானர்  200 ஆவது சிக்ஸரும் அடித்தனர். கெய்ல்ஸ் 354, டிவில்லியஸ் 245, ரோஹித் 222 டோனி 217 ,பொலட் 202 சிக்ஸர்கள் அடிட்துள்ளனர்.


வானர் ரி20யில் 10000 ஓட்டங்கள் அடித்த  முதலாவது அவுஸ்திரேலிய  வீரரானார். கெய்ல்ஸ்  13839, பொலட் 10694, ஷிப் மாலிக் 10488, டேவிட் வானர் 10015 கோஹ்லி 9894,  ரோஹித் 9266  ஓட்டங்கள் அடித்துள்ளனர்.



 

 

No comments: