Friday, May 17, 2024

கெஜ்ரிவால் போட்ட குண்டால் அதிர்ந்தது பாரதீய ஜனதா

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக  நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. எதிரணிகள்  மீதான  குற்றச் சாட்டுகளை சகல கட்சிகளும்  முன் வைக்கின்றன. பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தி பாரதீய ஜனதாக் கட்சி தேர்தலைச் சந்திக்கிறதுபிரதமர் வேட்பாளரின்  பெயரை அறிவிக்காமல் எதிர்க் கட்சிக் கூட்டணி தேர்தலில் களமாடுகிறது.

மூன்றாவது முறை மோடியைப் பிரதமராக்க  வாக்களிக்குமாறு  பாரதீய ஜனதா வேண்டுகோள்  விடுத்துள்ளது. மோடியைப் பிரதமராக்குவோம் என பாரதீய ஜனதாக் கட்சியினர் வரிந்து கட்டி வேலை செய்கிறார்கள். பாரதீய ஜனதா வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றாலும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் அவர்  இராஜிநாமாச் செய்து விடுவார். அமித்ஷா  பிரதமராவார் என கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் போட்ட குண்டால் பாரதீய ஜனதாக் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் கெஜ்ரிவாலின்  குரல்  ஒலிக்கக் கூடாது என்பதற்காக இலஞ்ச  ஒழிப்புத் துறையால்  கைது செய்யப்பட்ட அவர்  சிறையில் அடைக்கப்பட்டார்.உச்ச நீதிமன்ர்த்தின்கதவைத் தட்டி நீதிகோரிய கெஜ்ரிவாலுக்கு 21  நாட்கள் தற்காலிக  பிணை வழங்கப்பட்டது. அதேவேளை, தேர்தலில் பிரசாரம் செய்ய  கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிணையில் வெளிவந்த கெஜ்ரிவாலின் முதல் பிரசாரத்தால் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கெஜ்ரிவாலின்  பிரசாரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமித்ஷா தான் பிரதமராகப் போவதில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் அனைத்தும் பெரும்பாலும்  ஒற்றைத் தலைமையின்  கீழ் செயற்படுவதையே வழக்கமகக் கொண்டுள்ளன. விதி விலக்காக  சில கட்சிகள்  இரட்டைத் தலைமையில் செறப்பாகச் செயற்பட்டன.பாரதீய ஜனதாக் கட்சிக்கு வாஜ்பாய் தலைவராக  இருந்த போது  இன்னொரு தலைவாரான அத்வானி அவரது வலது கரமாகச் செயற்பட்டார். கருணாநியும், இனமானப்  பேராசிரியர் அன்பழகனும்   திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்தினர். வாஜ்பாய்க்குப் பின்னர் கட்சித்தலைமை அத்வானியிடம் செல்லும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் மோடி, அமித்ஷா கூட்டணி  பாரதீய ஜனதாவைக் கைப்பற்றியது.  

வாஜ்பாயும், அத்வானியும் இந்தியர்களுக்கு பாரதீய ஜனதாவை அடையாளம்  காட்டியவர்கள்.ரத யாத்திரை, கரசேவை  என்பனவற்றை வாஜ்பாயும்,அத்வானியும் முன்னின்று நடத்தினார்கள். வாஜ்பாய்க்குப் பின்னர் அத்வானி  பிரதமராவார் எனக் கருதிய வேளை பாரதீய ஜனதாவில் இருந்து முதியவர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்ற  எழுதப்படாத விதியால்  மூத்த அரசியல்வாதிகள்  மூலையில் குந்த வைக்கப்பட்டார்கள். 73 வயதாகும்  பிரதமர் மோடியின் தலையின் மேல் தொங்கும் கத்தியாக இந்த சட்டம்  இருக்கிறது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர்  75 வயதாகும் போது மோடியும் ஓரம் கட்டப்படுவார். அமித்ஷா பிரதமராவார் என கெஜ்ரிவால் அடித்துச் சொல்கிறார். அமித்ஷா வெளிப்படையாக மறுத்தாலும் 75 வயது வரம்பு மோடியின் மீதும் பாயும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

 ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக 1980களில் பிறப்பெடுத்ததுதான் பாரதீய ஜனதாக் கட்சி. வாஜ்பாயும் அத்வானியும்தான் அதன்  நிறுவனத் தலைவர்கள். பாரதீய ஜனதாவின்  முகங்களாக இருந்தவர்கள்தான் இருவரும். முதன் முதலில் பாஜகவை சேர்ந்த ஒருவரை பிரதமராக்கியதும் இந்த இரட்டை குழல் துப்பாக்கிகள்தான். வாஜ்பாய் பிரதமராக, அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தனர்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்  தேர்தலுக்குப் பின்னர் எல்லாமே   தலைகீழாகிவிட்டது. பாரதீய ஜனதாவின்  முதுபெரும் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் 2014-ம் ஆண்டு தேர்தலில் கடைசியாகப் போட்டியிட்டனர். அப்போது அத்வானிக்கு 86 வயது; முரளி மனோக ஜோஷிக்கு 70 வயது; சுமித்ரா மகாஜனுக்கு 71 வயதுஅத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார். பிரதமராகவும் மோடி பதவி ஏற்றார். அவரது வலது கரமாக உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவியேற்றார்.   முதுபெரும் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்தவர்கள்   துரத்திவிடப்பட்டனர். இதன் பின்னர் பாரதீய ஜனதாவின்  சட்ட திட்டத்தில் இடம் பெறாத- எழுதப்படாத ஒரு விதியாக 75 வயதை கடந்தவர்களுக்கு கட்சி, ஆட்சியில் பதவி கிடையாது என்பது நடைமுறைக்கு வரத் தொடங்கியது. மத்திய அமைச்சர் பதவிகளுக்கும் இந்த 75 வயது   நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

நாடறிந்த  முகங்களில் ஒருவரான நஜ்மா ஹெப்துல்லா 76 வயதை தொடுவதற்கு முந்தைய நாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து 2016-ல் ராஜினாமா செய்தார். 2017-ல் மூத்த   தலைவர் கல்ராஜ் மிஸ்ராவுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. இன்று வரை இந்த 75 வயது வரம்பு  மத்திய அமைச்சர்கள் பலருக்கும் புளியை கரைக்கிற ஒன்றுதான். இப்படி 75 வயதை எட்டிவிட்டதாலேயே ஒதுக்கப்பட்ட சில  தலைவர்கள் பின்னாளில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

2019-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்  தேர்தலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன்  போன்ற பல மூத்த தலைவர்கள்  போட்டியிட வாய்ப்புக் கொடுக்காது   ஒதுக்கி வைக்கப்பட்டனர். மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் இதனை அமுல்படுத்தியது பாரதீய ஜனதா இதனாலேயே 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'தேர்தல் அரசியல்என்பதில் இருந்து 'சந்நியாசம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  கர்நாடகாவில் வயதை காரணம் காட்டியே எடியூரப்பா, முதல்வர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார் என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கறிவார்கள். வயதை காரணம் காட்டி எங்கே தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்பதற்காகதீவிரதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக 'கெளரவமாகஅறிவித்து தங்களது அரசியல் வாழ்க்கைக்கு தாங்களே முற்றுப்புள்ளி வைத்தபாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களின் பட்டியல்  நீளமானது.      பாரதீய ஜனதாவின்  75 வயது வரம்பு  அஸ்திரத்தை கெஜ்ரிவால் கையில்  . எடுத்திருப்பது அக் கட்சிக்கு எதிரான அஸ்திரமாகவே  பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு 73 வயதாகிறது. தற்போதைய தேர்தலில் மோடி மூன்றாவது  முறையாக பிரதமரானாலும்  இரண்டு  ஆண்டுகளுக்குப் பின்னர்  75 வயதை எட்டும் போது இயல்பாகவே பிரதமர் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. அப்படி மோடி பிரதமர் பதவியை இழந்தால் அடுத்த பிரதமர் அமித்ஷா என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். பிரதமர் மோடியை முன்னிறுத்திநாடாளுமன்றத்ப்தேர்தலை எதிர்கொண்டுள்ள பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் வகையில்தான் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த பாஜக கூடாரமும் இப்போது அலறிக் கொண்டிருக்கிறதுமோடிதான் 5 ஆண்டுகாலமும் பிரதமர் என்கின்றனர் பாஜக தலைவர்கள். ஆனாலும் நாம் மேலே குறிப்பிட்ட பழிவாங்கப்பட்ட பாஜக தலைவர்களின் பட்டியலைப் போட்டு காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இன்ன பிறஇந்தியாகூட்டணி கட்சிகளும் பாஜகவை விமர்சிக்கின்றன. 75 வயது முதுமைக்கே உரிய தடுமாற்றத்தை அந்த கட்சி  தேர்தல் களத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

                                    பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு:

 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வரும் 20ஆம் திகதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவும் 25ஆம் திகதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் திகதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 1ஆம் திகதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது கல்வித்தகுதி தொடர்பான தகவல்களையும் சொத்து மதிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் என எதுவுமே இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவை, அதாவது 2.86 கோடி ரூபாய் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக (fixed deposit) உள்ளது.

ரொக்கமாக அவரிடம் மொத்தம் 52,920 ரூபாய் உள்ளது. காந்திநகர் மற்றும் வாரணாசி என இரண்டு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 80,304 ரூபாய் உள்ளது. தேசிய சேமிப்புச் சான்றிதழில் 9.12 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். 2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் பிரதமரிடம் உள்ளன.

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்ன?

2018-19 ஆண்டில் 11.14 லட்சமாக இருந்த அவரது வருமானம் 2022-23ஆண்டில் 23.56 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கல்வித்தகுதியை பொறுத்தவரையில், கடந்த1978ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், 1983ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் முடித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த முறை, உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், அவரை எதிர்த்து களம் காண்கிறார்.

வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் மோடி, வெள்ளை நிற குர்தா பைஜாமா மற்றும் நீல நிற சாத்ரி அணிந்திருந்தார். அப்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து அன்புமணியும், வாசனும் கலந்து கொண்டனர். பன்னீரும், தினகரனும் வாரணாசிக்குச் செல்லவில்லை.

ஜூன் மாதம் 4 ஆம் திகதி இந்தியத் தேர்தல் முடிவு தெரிந்துவிடும்.   அரசியலில் இருந்து மோடி ஓரம் கட்டப்படுவாரா  இல்லையா என்பதை அறிய  இன்னும்  இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ரமணி

No comments: