Friday, May 3, 2024

மோடிக்கு எதிராக முன் நிறுத்தப்படும் ராகுல் களம் மாறும் இந்தியத் தேர்தல் பரப்புரை


 இந்தியத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வெற்றிக் களிப்பில் இருந்த பாரதீய ஜனதா, தற்போது நம்பிக்கையை இழக்கத் தொடங்கி விட்டது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்,  மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார் என்ற கோஷங்கள்  இன்று  வறண்டு  போய் விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி கரை சேருமா என்ற  கேள்வி எழுந்தது.

இந்தியக் கூட்டணி உறுதியாகும் வரை பாரதீய ஜனதா வெற்றி பெறும் நம்பிக்கையில் இருந்தது. காங்கிரஸை எதிரியாகப் பார்க்கும்  மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் கைகோர்க்குமா  என்ற சந்தேகம் இருந்தது.  பிரிந்து கிடந்த எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டதால் இந்தியத் தேர்தல் களம் பரபரப்பானது.

காங்கிரஸ் கட்சி தனக்கு சமமான எதிரி அல்ல என நினைத்த மோடியின் தேர்தல்  பிரசாரத்தில் ராகுலுக்கு எதிரான  பிரசாரம் மிக அதிகமாக  இருந்தது. ராகுல் குழந்தைப் பிள்ளை என எள்ளி நகையாடிய பாரதீய ஜனதாத் தலைவர்கள் ராகுலுக்கு எதிரான  பிரசாரங்களை  முன்னிலைப்படுத்துகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில்  எந்த ஒரு பதவியிலும் ராகுல்  இல்லை. எதிர்க் கட்சித்தலைவராகவும் ராகுல் இல்லை. ஆனால், ராகுல்  கேட்கும்  கேள்விகளுக்கு  மோடி பதிலளிப்பதில்லை.  இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து ராகுலை அப்புறப்படுத்தியது பாரதீய ஜனதா. இந்திய உச்ச நீதிமன்றம்  ராகுலை நாடாளுமன்றத்தில் அமர்த்தியது.

மோடியின் தேர்தல் பரப்புரை வழமைபோல்  உற்சாகமாக  இல்லை.பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்ற வெளிநாடு சதி செய்வதாகக் கடந்த வாரம் மோடி அறிவித்தார். அந்த நாடு எது என அவர் சொல்லவில்லை. பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகல்  மீது விமர்சகர்கள் சந்தேகப் பட்டனர்.  ராகுலைப் பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புவதாக இந்த வார தேர்தல் பரப்புரையில்  மோடி  வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், அதர்குரிய ஆதாரம் எதனையும் மோடி வெளிப்படுத்தவில்லை. பரம அரசியல் எதிரியான நாடு ராகுலை விரும்புவதாக அறிவித்து வாக்குப் பெறுவதற்கு மோடி முயற்சிக்கின்றார்.இந்தியாவின்  பிரதமராகும் ஆசை ராகுலுக்கு இல்லை

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம்  இருக்கும் எருமைகளில்  ஒன்றஒ எடுத்து  விடுவார்கள். அதனை  முஸ்லிம்களுக்குக் கொடுப்பார்கள் என மதவாத விஷமப் பிரசாரத்தை  மோடி வெளிப்படுத்துகிறார். 10 வருடங்கள் ஆட்சி செய்த மோடியின்  பிரசாரம் தரமானதாக  இல்லை.

பாலியல் வீடியோக்களால் பாரதீய ஜனதா அதிர்ச்சி

முன்னாள் பிரதமர் தேவே கெளடவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான சுமார் 3000 வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இதுவரை ரேவண்ணா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலக அதிகாரி ஒருவர் இதை மறுத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் போலியானவை என்று கூறியிருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் மாமாவுமான ஹெச்.டி.குமாரசாமி, இந்தச் சம்பவத்திற்காக ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட முடிவு செய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை (ஏபர்ல் 29) தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கர்நாடக மாநில காவல்துறை .ஜி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரும் அக்குடும்பத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் சதி என்று கூறியுள்ளார்.

ரேவண்ணா தலை மறைவாகி விட்டார். பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாடு சென்ற தகவல் கிடைத்ததை அடுத்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லுக்அவுட் நோட்டீஸ் குறித்து அனைத்து துறைமுகங்கள்,விமான நிலையங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம்" என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா வியாழக்கிழமை பி.டி.. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கர்நாடக அரசு ஏப்ரல் 28 ஆம் திகதி  குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கீழ் ஒரு எஸ்ஐடியை அமைத்தது. பல பெண்களின் புகார்களைத் தொடர்ந்து, அதே நாளில் அவர் மீது எஃப்..ஆர் பதிவு செய்யப்பட்டது. மக்களவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான ரேவண்ணா ஏப்ரல் 27 அன்று உடனடி கைது செய்யப்படுவதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் வெளிநாடு செல்வதாக கூறப்படுகிறது.

ரேவண்ணாவுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள்  போராட்டங்களை நடத்துகின்றன. கர்நாடகத்தில் மட்டுமல்லாது   தேசிய அளவிலும்  இந்தப் பிரச்சனை தேர்தலில் அதிர்வலையை ஏற்படுத்தும்.

மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பால்  பிரிஷ் பூஷனை  கைவிட்ட  பா..

பாலியல் புகாரில் சிக்கிய பாரதீய ஜனதா எம்.பி பிரிஷ் பூஷன் மகன் தேர்தலில்  போட்டியிடுகிறார். இதனை  வேதனையுடன் தெரியப்படுத்தியுள்ளார்.

 மே 20ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் .பி மாநிலம் கைசர்கஞ்ச்   தொகுதியும் ஒன்று. இங்கு பாரதீய ஜனதாவின் சார்பில்  சார்பில் போட்டியிடுவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்திருந்தது. அந்தத் தொகுதி எம் பியான   பிரிஜ் பூஷன் சிங்,  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த  போது  2016 - 2019 வரையிலான காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் வலுவடைந்தது.

கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து பொலிஸார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆறு முறை எம்.பியான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக மீண்டும்சந்தர்ப்பம் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை. பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்கள் நாட்டையே அதிர வைத்த சூழலிலும் அவரது மகனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது பாஜக. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் சிங்குக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பாக கொந்தளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.

 பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்குக்கு சீட் இல்லை.. மகனை களத்தில் இறக்கும் பாஜக! சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் மகள்கள் தோற்றனர், பிரிஜ் பூஷன் வென்றார். நாங்கள் அனைவரும் எங்கள் உயிரைப் பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம். கைது செய்வதை விடுங்கள், இன்று அவரது மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள். ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக உள்ளதா நம் நாட்டு அரசு? ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்னானது?" என்ன கொதித்துப் போய் பதிவிட்டுள்ளார்.

பாரதீய ஜனதாவின் பத்து வருட சாதனைகளை பாலியல் புகார்கள்  மூழ்கடிக்கின்றன.

ரமணி

No comments: