Saturday, May 25, 2024

எல்லை மீறிய தேர்தல் பிரசாரம் குறுக்கே வந்த தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்  தேர்தல் பரப்புரையில், அரசியல் கட்சி தலைவர்கள் மதம், சாதி ரீதியிலான பேச்சுக்கள் கூடாது என்றும்அரசியலமைப்பு ஒழிக்கப்படும் என்று  பரப்புரை செய்ய கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 அரசியல் கட்சியினர் மதம், சாதி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜேபி நட்டா , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பரப்புரையாளர்கள், தங்கள் பேச்சுக்களை கவனத்துடனும் கண்ணியமான முறையில் பேசுமாறும், பரப்புரையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

  தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

சாதி, சமூகம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி பரப்புரை செய்வதை பாஜக , காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தவிர்க்க வேண்டும். இரு கட்சிகளின் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் தங்கள் பரப்புரையில் மத மற்றும் வகுப்புவாத கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவின் நீடித்து நிலைத்திருக்கும் சமூகப் பண்பாட்டுச் சூழலானது, தேர்தலால் பாதிக்கப்படக் கூடாது . இந்திய வாக்காளர்களின் தேர்தல் அனுபவத்தின் பாரம்பரியத்தை, பலவீனப்படுத்த பாஜக , காங்கிரஸை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் வரம்பற்ற வகையில் செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் போன்ற தவறான கருத்துகளை நட்சத்திரப் பிரச்சாரகர்கள் வெளியிடக் கூடாது என்று காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்னிவீர் திட்டம் குறித்து பேசும் போது, பாதுகாப்பு படைகளை அரசியலாக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு படைகளின் சமூக-பொருளாதார அமைப்பு குறித்து பிளவு படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் காங்கிரஸ் பரப்புரையாளர்கள் மற்றும்  வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மூத்த தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தில்  காணப்பட்ட கண்ணியம்  இப்போது காணாமல் போய்விட்டது. முகம் சுழிக்க வைக்கும் தலைவர்களின்  பிரசாரத்தால் கட்சி சார்பற்ற வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர்.ஃபேஸ்புக்,வைபர்,வட்ஸ் அப், இன்ரர்கிராம் ,யூரியூப்  போன்ற சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. சமூக அவலைத்தளங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் வல்லமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை.


 அக்னிப் பரீட்சையான  டெல்லி, பஞ்சாப், ஹரியானா தேர்தல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடை பெற்று வருகிறது. கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை 6 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்றதுடெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற எட்டு மாநிலங்களில் உள்ள    49 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. பாரதீய ஜனதாவின் கோட்டையாக இருந்த டெல்லி இப்போது  அரவிந்த் கெஜ்ரிவாலின் கையில் உள்ளது. அவரைப்பற்றி பாரதீய ஜனதா என்ன சொன்னாலும் டெல்லி மக்கள் நம்பப்போவதில்லைடெல்லியைப் பிடிப்பதற்காகவே  கெஜ்ரிவாலை சிறைக்கு பாரதீய ஜனதா அனுப்பியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

அந்தத் தடைகளை உடைத்து கெஜ்ரிவால் வெளியே வந்துவிட்டார். ஆகவே, போட்டி டெல்லியில் கடுமையாக இருக்கும்.

 டெல்லியில் கெஜ்ரிவால் திறமையான ஒரு நிர்வாகத்தை அவர் செய்துவருகிறார். நேர்மையான அரசாங்கம்இலஞ்சக் குற்றச் சாட்டுகள்  இல்லை போன்றவை கெஜ்ரிவாலுக்குச் சாதகமாக  இருக்கிறது.

 2019 ஆம் ஆண்டு எதிர்க் கட்சிகள்  திதறுப்பட்டிருந்ததால் பாரதீய ஜனதா வெற்றி  பெற்றதுஇந்தியக் கூட்டணி  இப்போது  டெல்லியில் மிகவும் வலிமையாக இருக்கிறது. காங்கிரஸுடன் கெஜ்ரிவால் சேரமாட்டார் என  பாரதீய ஜனதா சொல்லியது பொய்யாகிப் போனது.

  பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களும் பாரதீய ஜனதாவுக்கு சவாலான மாநிலங்கள்ஹரியானாவில் விளையாட்டு வீரர்கள் பாலியல் புகார் முன்வைத்த போது பாரதீய ஜனதா அரசு கண்களை மூடிக்கொண்டிருந்தது. ஒலிம்பிக் பதக்கம்  பெற்ற வீரர்கள் அவமானப் படுத்தப்பட்டர்கள். பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக வந்த போது காவல்படைகளை வைத்து மத்திய அரசு எப்படித் தாக்கியது? அவர்கள் வீதியில்  பயணம் செய்யவிடாமல் எப்படி எல்லாம் தடுத்தது? துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைப் பஞ்சாப் மக்கள் மறக்க மாட்டார்கள்.    பஞ்சாபிலும் ஹரியானாவிலும் விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.    6 ஆம் கட்டத் தேர்தல் களம் பாரதீய ஜனதவுக்கு அக்கினிப் பரீட்சைதான் என்பதில் ஐயம் இல்லை.

 இனவாதத்தை கையில் எடுத்த  அமித்ஷா

நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறதுஇந்த  நிலையில்பாரதீஜ ஜனதாவின் முக்கிய குறியாக இருக்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பாண்டியனை குறி வைத்து பாரதீய ஜனதாத் தலைவர்கள் பல்வேறு விமர்சனக் கணைகளை தொடுத்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஒடிஷாவின் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடக்கிறதுஇதுவரை இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் ஒடிசா மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவின் பார்வை தற்போது ஒடிசா மாநிலத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. அங்கு ஏற்கனவே மூன்று முறை பிரசாரம் மேற்கொண்டார்  பிரதமர் நரேந்திர மோடி.   ஒடிஷாவில்  25 ஆண்டுகளாக முதலமைச்சராக நவீன் பட்நாயக் தொடர்கிறார். இந்த முறையும் அவருக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. நவீன் பட்நாயக்கன் நம்பிக்கைக்குரிய வலதுகரமாகவும் தளபதியாகவும் திகழ்பவர் தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பஞ்சாப் கேடர் ஐஏஎஸ்அதிகாரியாக இருந்த அவர் ஒடிசா மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு மக்களின் நன்மதிப்பை பெற்று அவர் முதலமைச்சரின் தனி உதவியாளராகவும் இருந்தார்நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையை பெற்ற அவர் தனது ஐஏஎஸ் பதவியை இராஜினாமா செய்துவிட்டு கட்சியிலேயே இணைத்துக் கொண்டார். தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியின் நம்பிக்கை தளபதிகளில் ஒருவராக இருக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார். அவரது வியூகத்தின்படியே தற்போது ஜனதா தளம் தேர்தலை சந்திக்கிறது. நவீன் பட்நாயக் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரது வாரிசாக விகே பாண்டியனே இருப்பார் என கூறப்படுகிறது.

 ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது எனவும், பூரி ஜெகநாதர் கோயிலில் பொக்கிஷ அறையில் காணாமல் போன சாவி தமிழகத்தில் இருக்கிறது என விகே பாண்டிய மறைமுகமாக விமர்சித்து பேசினார். இது பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இருந்து பலத்த கண்டனங்களை பெற்று தந்தது. அதுமட்டுமல்லாமல் அமித்ஷாவும் விகே பாண்டியனே குறிவைத்து பேசினார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமித் ஷா ஒடிசாவை ஒரு தமிழர் ஆள வேண்டுமா அல்லது ஒடியா மொழி பேசும் இளைஞர் ஆள வேண்டுமா? பெருமைமிக்க இந்த மாநிலத்தை ஒரு தமிழர் வழிநடத்தி செல்லலாமா? என கேட்டதோடு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடிய மொழி பேசும் ஒரு இளைஞர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசினார். ஒடிஷாவில் பரதீய ஜனதாத் தலைவர்கள்  இன வாத்தைக் கையில் எடுத்துள்ளனர்அவர்களின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்துகிறது .

தமிழ்நாட்டில்  தமிழ்மொழியின் பெருமை, திருக்குறளின் சிறப்பு என்று பேசும் பிரதமர் மோடி, ஒடிசாவில் ஒரு தமிழரை வைத்து அரசியல் செய்யத் துணிந்திருக்கிறார்.   மாநிலம் தாண்டி மாநிலம் சென்று அரசியலில் ஈடுபடுவது தவறா? டெல்லியிலிருந்த இந்திரா காந்தி ஏன் ரேபரேலிக்குப் போய் போட்டியிட்டார். டெல்லியில் பிறந்து வளர்ந்த ராகுல் ஏன் வயநாட்டுக்கு வந்து போட்டிப் போடுகிறார் என  பாரதீய ஜனதாவின்  மூத்த தலைவர்கள்  கேள்வி எழுப்புகின்றனர். குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி ஏன் வாரணாசியில் போய் போட்டியிடுகிறார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஏன் உபிக்கு முதல்வராக இருக்கிறார் என்ற எதிர்க் கட்சிகளின்  கேள்விகளுக்கு பாரதீய ஜனதாவிடம்  இருந்து  பதில் இல்லை .  

"நான் கடவுள்" மோடி வாக்கு மூலம்

 எனது தாயார் இறந்த பின்னர் நான் யோசித்துப் பார்த்தேன். நிச்சயம் நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை.. நான் மனிதப் பிறவியாக இருக்கவும் வாய்ப்பில்லை.. கடவுள்தான் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்காக என்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்துக்கு பிரச்சாரத்திற்காக சென்ற பிரதமர் மோடி, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். நியூஸ் 18 செய்தியாளர் பிரதமர் மோடியிடம் எத்தனையோ வேலைகளைச் செய்கிறீர்கள்.. பல மாநிலங்களுக்கும் செல்கிறீர்கள்.. ஓய்வெடுப்பதே இல்லை.. உங்களுக்கு சோர்வே ஏற்படாதா என்று கேட்டார். அதற்கு மோடி அளித்த பதில் இதுதான்:

எனது தாயார் இருக்கும் வரை நான் எல்லோரையும் போலத்தான் பிறந்தேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு எனக்குக் கிடைத்த சில அனுபவங்களை வைத்துப் பார்த்தபோதுதான் எனக்குப் புரிந்தது நிச்சயம் நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுநிச்சயம் என்னிடம் உள்ள ஆற்றல் சாதாரண மனிதர்களிடம் இல்லாதது. கடவுளால் மட்டுமே இதைத் தர முடியும். இந்த கருத்தில் நான் உடன்படுகிறேன்.

கடவுள்தான் என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்.. அவரது சக்தியை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவரது கருவி நான். என் மூலமாக அவர் எதையோ செய்ய விரும்புகிறார். அதற்காகவே நான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். அவர்தான் இந்த சக்தியைக் கொடுத்துள்ளார். அப்படித்தான் நான் கருதுகிறேன். நிச்சயம் இதை பலர் கேலி செய்வார்கள், கிண்டலடிப்பார்கள்.. ஆனால் நிச்சயம், இது மனித உடல் அல்ல. ஒரு சாதாரண மனித உடலிலிருந்து இத்தகைய ஆற்றல் வர வாய்ப்பில்லை.

இது அவரது வேலை. அதனால்தான் இத்தகைய சக்தியை அவர் அளித்துள்ளார். இரக்கத்தைக் கொடுத்துள்ளார். எல்லாவற்றையும் செய்து முடிக்கும் தன்மையைக் கொடுத்துள்ளார். நான் ஒன்றுமே இல்லை. இது கடவுளின் வடிவம். எனது உருவில் அவர் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

கிட்டத்தட்ட "நான் மனிதன் அல்ல.. கடவுள்" என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் இந்தப் பேட்டியை பாஜகவினர் பல்வேறு தளங்களிலும் பரப்பி வருகின்றனர். தற்போது லோக்சபா தேர்தல் வட மாநிலங்களில் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் இந்த பேட்டி விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

மதவாத பிரசாரத்தைத் தாண்டி இனவாத,     அவதாரப் பிரசாரம்  தேர்தலில் கைகொடுக்கும் என பாரதீய ஜனதா நம்பிக்கை வைத்துள்ளது.

ரமணி

No comments: