Sunday, April 5, 2026

தமிழக அரசியலில் தடுமாறும் தேசியக் கட்சிகள் தேர்தல் போட்டியில் முந்தும் தமிழகக் கட்சிகள்

தமிழக அரசியலில் தடுமாறும் தேசியக் கட்சிகள்

தேர்தல் போட்டியில் முந்தும் தமிழகக் கட்சிகள்

  

அதிக தொகுதி கேட்ட தேசியக் கட்சிகள் வேட்பாள‌ரைத் தேர்வு செய்வதில் குழம்பி உள்ளன.

விஜய் அறிவித்துள்ள வேட்பாளர்களில் 32 பேர் அதிமுகவினர் 9 பேர் திமுகனர்.  பிறகட்சிகளில் இருந்து கடந்த 2 மாதத்தில் இணைந்த 21 பேர்

பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியைச் சிதைக்க சில வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவும், பாஜகவும் நேரடியாக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 5 தொகுதிகளில்   அமைச்சர்களை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்குகிறது பாஜக,.

தமிழகத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை   இரண்டு திராவிடக் கட்சிகளும்  இழுபறிப்பட்டு முடித்துள்ளன.  அதிக தொகுதி வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், அமைச்ச்ரவையில் இடம்  வேண்டும் என காங்கிரஸும், பாரதீய ஜனதாவும்  கறார் காட்டின. ஸ்டாலினும், எடப்பாடியும்  இறுக்கமாகச்  செயற்பட்டு தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்துள்ளனர்.

ஆட்சியில் பங்கு வேண்டும், அமைச்சரவையில் இடம்  வேண்டும் என காங்கிரஸும், பாரதீய ஜனதாவும்  கறார் காட்டின. ஸ்டாலினும், எடப்பாடியும்  இறுக்கமாகச் செயற்பட்டு தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்துள்ளனர். 

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம், என நான்கு பிரதான போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ராமதாஸ் சசிகலா கூட்டணி, டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணி என தனித்து களமிறங்கும் அணிகளும் இருக்கிறன.

திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து, அதில் 13 கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 28 தொகுதிகளை வாங்கி இருக்கிறது. 11 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் தயார் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மீதமுள்ள 17 தொகுதிகளில் யாரை நிறுத்துவது என காங்கிரஸ் தலைமை மிகுந்த குழப்பத்தில் இருக்கிறது.  தமிழ்கக காங்கிரஸ் கொடுத்த பட்டியலை ராகுல் ஏற்கவில்லை என்றும் தகவல் கசிந்துள்ளது. உசிலம்பட்டி, பெண்ணாகரம், மேலூர், சோளிங்கர், பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, நாங்குநேரி, சிவகாசி, குளச்சல், கடலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்பதால் அதனை உறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் தலைமை தவித்து வருகிறது.

234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட உள்ளது.

பாரதீய ஜனதா   27 தொகுதிகள், பாமக  18 தொகுதிகள் ,அமமுக   11 தொகுதிகள் ,தமாகா  5 தொகுதிகள்  , இந்திய ஜனநாயகக் கட்சி  2 தொகுதிகள், தமமுக   1 தொகுதி ,புரட்சி பாரதம்   1 தொகுதி

எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அதிருப்தி நிலவுகிறது. முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை , கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது சூலூர் தொகுதிகளை விரும்பிய நிலையில், அதிமுக அதை எடுத்துக் கொண்டதால் மொடக்குறிச்சியில் போட்டியிட வற்புறுத்தியபோதும் தேர்தலில் ஒதுங்கிக் கொண்டார் என சொல்லப்படுகிறது.  அண்ணாமலை போட்டியிட வேண்டும் என டெல்லித் தலைமை விரும்புகிறது.


 ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 5- ஐ மாற்றித் தருமாறு பாஜக மேலிடத் தலைவர்கள் அதிமுகவை வலியுறுத்துகின்றனர். அதிமுகவோ, ஏற்கனவே 165 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆகையால் அது சாத்தியமில்லை.

164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 70 தொகுதிகள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற து.. 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 10 தொகுதிகளில் தேமுதிகவும் போட்டி போட உள்ளது

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். இந்த தேர்தலில் பல அமைச்சர்களே கழற்றி விடப்பட்டிருக்கின்றனர். 60க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே இரண்டு இடங்களில் மட்டும் தான் தந்தையும் மகனும் போட்டியிடுகின்றனர்.   சென்னையில் ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல்லில் ஐ பெரியசாமி - ஐபி செந்தில்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தில் இருந்து போட்டியிடுகின்றனர்.

இந்த முறை திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கல்வியறிவு பெற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, திமுக வேட்பாளர்களில் 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.  7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 15 பேர் மருத்துவர்கள் ,125 பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  28 அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, காந்தியின் மகன்கள் கவுதம சிகாமணி, வினோஜ் காந்தி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டது.

சென்னையில் மொத்தம் 15 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் தற்போது 6 சட்டசபை தொகுதிகளில்   எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவில் இருந்து  திமுகவுக்குத் தாவியவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸும் ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியனும், ஒரத்தாநாடு தொகுதியில் வைத்திலிங்கமும், பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பனும், பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலமும் போட்டியிடுகிறார்கள்.இவர்கள் 5 பேரும் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்றவர்கள்.   அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு சீட் வழங்கப்படவில்லை.

அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், ராணிப்பேட்டை காந்தி, மனோ தங்கராஜ் ஆகியோருக்கு இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

234 தொகுதிகளிலும் தவெக கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவார் என சபதம் செய்த விஜய் திமுகவிலும், அதிமுகவிலும்  போட்டியிட சந்தர்ப்பம்  மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்ப்பளித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி  இரண்டு நாட்களுக்கு முன்னர் தவெகவில்  இணைந்தவரும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விஜய் வெளியிட்ட வேட்பாளர் படியலில்  அதிமுகவின் முன்னாள்   நிர்வாகிகள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது கவனம் பெற்றுள்ளது.

234 வேட்பாளர்களில் 32 பேர் அதிமுகவில் இருந்தும், 9 பேர் திமுகவில் இருந்தும், 21 பேர் பிற கட்சிகளில் இருந்தும் வெளியேறியவர்கள்.  போதைவஸ்தை தமிழகத்தில் ஒருந்து ஒழிக்கப்போவதாக மேடை தோறும் பரப்புரை செய்யும் விஜய்,  போதை  வஸ்து  குற்றவாளியை அரவணைத்துள்ளார்.  . பாலியல்   குற்றம் சுமத்தப்பட்டவரும் தவெக வேட்பாளராக உள்ளார்.   தவெக மகளிர் அ ணி யைச் சேர்ந்தவரே அவருக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளார்.

போதையில்லா தமிழகம் அமைப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்த விஜய், கஞ்சா வழக்கில் கைதாகி 10 நாட்களுக்கு முன்பு  பிணை வெளியே வந்த நபரை பேராவூரணி தொகுதி வேட்பாளராக அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாக இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் விஜய். முதல் வாக்குறுதியாக, "போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்" என்று அறிவித்தார் தவெக தலைவர் விஜய்.

போதைப்பொருட்கள் உள்வரவை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களை கொண்டு வருவோம். சமூக காவல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம். போதைப்பொருட்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை எதிர்ப்பு மன்றங்களை நிறுவுவோம் என்று அறிவித்தார் விஜய்.

இந்நிலையில், விஜய் வேட்பாளராக அறிவித்த பேராவூரணி தொகுதி வேட்பாளர் சந்திரகாண்டீபன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இவர், 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து  பிணையில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பிணையில் வெளிவந்த சில நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அவர் சீட் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

கவுண்டம்பாளையம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, அக்கட்சியின் நிர்வாகி ஆர்.டி.கனிமொழி சந்தோஷ் பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் அபத்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். கன்சர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை எப்போது தேவை என்பதை ஜோதிடம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று அவர் பேசியிருந்தார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கேன்சர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. முறையான சிகிச்சைதான் இதை காப்பாற்றும். ஆனால், ஜோதிடம் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என்று அவர் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது

கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா, பேசியதை கேட்டால் சாமானிய மக்கள் அனைவருக்கும் கோபம் வரும். தன்னை சாதி வெறியன் என்று ஜெகநாத் மிஸ்ரா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

பூந்தமல்லி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் குட்டி மீது, கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த பெண், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாலியல் சீண்டல் புகார் அளித்திருக்கிறார். பாலியல் சீண்டல் குறித்து கட்சித் தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பெண் கூறியிருக்கிறார். மாற்றத்திற்கான கட்சி, பெண்களின் பாதுகாப்புக்கான கட்சி என்று குறிப்பிடும் விஜய், 6 மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவருக்கு எதற்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அதிமுகவும் இல்லை திமுகவும் இல்லை. எங்கள் கட்சி மாற்றத்திற்குரிய கட்சி என்று சொல்லிதான் விஜய் அரசியல் களத்திற்கு வந்தார். ஆனால், அவரது கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிற்கவைக்கப்பட்டவர்களில் கணிசமானோர் அதிமுக, திமுகவிலிருந்து வந்தவர்கள்தான். அவரது பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது. தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்களில், சுமார் 106 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து  தவெகவில் இணைந்தவர்கள். இவர்கள் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

திமுகவும், பாஜகவும் நேரடியாக 18 சட்டசபை தொகுதிகளில் மோதுகிற ன.. அதிமுக சார்பில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 18 இடங்களில் திமுகவின் வேட்பாளர்களை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை களமிறக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இதில் 5 தொகுதிகளில் பாஜகவினர்  அமைச்சர்களை எதிர்கொள்ள உள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எவ வேலு, திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.திமுகவின் பலம் வாய்ந்த கோட்டைகளுக்கு பாரதீய ஜனதாவை எடப்பாடி தள்ளி விட்டுள்ளார். இதனால் அமித்ஷா  உட்பட பாரதீய ஜனதாவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாகச் சிதற  வாய்ப்பு  உள்ளது. பன்னீர் உட்பட அதிமுகவின் பலம் வாய்ந்த தலைவர்கள் திமுகவின் பக்கம் போய்விட்டார்கள். தவெக சார்பில்  முன்னாள் அதிமுகவினர்  32  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சசிகலா  புதிய கட்சியை ஆரம்பித்து ராமதாஸுடன் இணைந்து  தேர்தலைச் சந்திக்கிறார். அதிமுகவின்  வாக்குகள்  இந்த மூன்று பக்கமும் சிதறும் நிலை உள்ளது. அன்புமணியின் வாக்குகளை ராமதாஸ் கவருவார். இது அதிமுகவுக்குப் பாதகமான நிலையைத் தோற்றுவிக்கும்.

அதிமுகவின் வாக்க்குகளைப் பிரிப்பதற்காகவே ராமதஸும், சசிகலாஅவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். தமது வேட்பாளர்கள் கட்டுப்பனத்தைத் திரும்பப் பெற மாட்டார்கள் என்பது தெரிந்தும் அதிமுகவை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். 500,1000 வாக்குகள் சில வேளை வெற்றி  தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதுணடு.

திமுக,அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் வேட்பாள‌ர் பட்டியல் வெளியானதும்   கட்சிகளுக்குள் கலகம் ஏற்பட்டுள்ளது. உசுப்பி விடப்பட்ட ஆதரவாளர்கள்  போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்தப் பிரச்சனையால் தவெக  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் செயற்பட்டவர்கள்  புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் வேட்பாளர்களாகி விட்டனர். அவர்களைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு கட்சித் தலைமைக்கு இருக்கிறது.

 

ரமணி

5/4/2026 

 

 

No comments: