Sunday, December 8, 2024

சச்சின் கைகளை இறுக பற்றி கொண்ட வினோத் கம்ப்ளி

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது பால்ய நண்பர் வினோத் கம்ப்ளியும் டிசம்பர் 3ஆம் திக‌தி மும்பையில்    பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தபோது உணர்ச்சிகரமான மறு சந்திப்பைப் பகிர்ந்து கொண்டனர்.

இருவரும் மேடையில் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான சந்திப்பின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அச்ரேக்கரின் மாணவர்களான டெண்டுல்கர்,கம்ப்ளி ஆகிய  இருவரும் தங்கள் பள்ளி கிரிக்கெட் நாட்களில் உலக சாதனையான 664 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, அவர்களின் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர்.

வைரலான ஒரு வீடியோவில், சச்சின், கம்ப்ளியை வாழ்த்துவதற்காக முன்னே நடந்து வந்தார். கம்பளியோ, தனது பால்ய பருவ நண்பரின் கையை விட்டுவிட விருப்பமில்லாமல் இறுகப் பிடித்தார். இருவரும் சிறிது நேரம் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

டெண்டுல்கர் முன்னேற முயன்ற பிறகும், கம்ப்ளி, டெண்டுல்கரின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தனது பிடியை விடுவிக்கத் தயங்கினார். மற்றொரு வீடியோவில், கம்ப்ளி டெண்டுல்கரை அன்புடன் கட்டித் தழுவி அவரது தலையைத் தொட்டார்.

டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, மிகவும் புகழ்பெற்ற தொழில்முறை வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்ட அதே நேரத்தில், கம்ப்ளியின் வாழ்க்கை மிகவும் ஏற்ற இறக்கமான பாதையை எடுத்தது. ஆயினும்கூட, இருவரும் நெருக்கமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கொல்கத்தாவின் புதிய கப்டன் ரகானே?


 ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கப்டன் யார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் அஜிங்கிய ரகானே நியுமிக்கப்படலாம் என்கிற தகவல்  வெளியாகியுள்ளது.

ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அஜிங்கிய ரகானேவை அவருடைய அடிப்படை விலையான 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரகானே உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரை தற்போது கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நடப்பு சம்பியனான கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி ஏழத்தின் போதே எழுந்தது. சென்ற வருடம் கொல்கத்தா அணியின் வெற்றிக் கப்டனான ஸ்ரேயஸ் ஐயரை இந்த நடந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அவரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு ஒரு புது கப்டன் தேவை என்கிற நிலை உள்ளது.

இதற்கிடையில் கொல்கத்தா அணி ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் அவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் கொல்கத்தா வேறு ஒரு திட்டம் வைத்திருந்தாக கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அஜிங்கியா ரகானேவை கப்டன் ஆக்குவதற்காக தான் கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது. 36 வயதான ரகானேவை ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக கப்டனாக செயல்ப்பட்ட அனுபவம் உள்ளதால் புதிய வீரரை கப்டனாக நியமிப்பதைவிட அனுபவம் வாய்ந்த ரகானேவை கப்டனாக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது நடந்து சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கப்டனாக இருந்தாலும், ரகானேவின் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்த தொடரில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே கொல்கத்தா அணி அவரை கப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற முடிவில் இருப்பதாக தெரிகிறது. 

Saturday, December 7, 2024

சவூதி அரேபியாவில் உலகக்கிண்ணப் போட்டியை நடத்த எதிர்ப்பு

பீபாவின் 211 உறுப்பினர் கூட்டமைப்புகளின் ஆன்லைன் கூட்டத்தில் 2034 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்ட‌ப் போட்டியை நடத்தும் ஒரே நாடாக சவூதி  அரேபியா மட்டுமே உள்ளது.

சவூதியில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளைக் கட்டுப்படுத்தாமல் அடுத்த வாரம் 2034 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும்  உரிமையை சவூதி அரேபியாவுக்கு வழங்க வேண்டாம் என்றுமனித உரிமைகள் ஆணையம்  பீபாவுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

  150க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் தொழிலாளர்களுடனும்,  சவூதி அரேபியாவில் இறந்த சிலரது குடும்பங்களுடனும்  பேசிய பின்னரே மனித  உரிமைகள் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சர்வதேச பார்வையாளர்களுக்கான அணுகல் உட்பட சவூதி உலகக் கோப்பைத் திட்டத்தைப் பற்றி அதிக ஆய்வுக்கு அழைப்பு விடுக்கும் சுதந்திர உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் அழைப்புகளை பீபா எதிர்த்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற குழுக்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், 2022 ஆம் ஆண்டு கட்டாரில்  உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதுபோன்ற பிரச்சினைகளை ஃபிஃபா மீண்டும் மீண்டும் செய்யும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

உலக டெஸ்ட் சம்பியன் இறுதிப் போட்டியில் விளையாட முட்டிமோதும் ஐந்து நாடுகள்

உலக டெஸ்ட் சம்பியனைத்தீர்மானிக்கும்  போட்டிகள்  இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு  புள்ளிப் பட்டியலில் இருக்கும் முதல் ஐந்து நாடுகளானஇந்தியா,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,இலங்கை,நியூஸிலாந்து  ஆகிய ஐந்து நாடுகள் முட்டி மோதுகின்றன.

  2023 - 25 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது கடைசி தொடரில் விளையாடி வருகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது

  அதே நேரத்தில் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறுகின்றன.

 தென்னாபிரிக்கா -இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இதே நாட்களில் நடைபெறுகின்றன.

  இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா,நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு மிகவும் குறுகியதாக உள்ளது. எனினும், அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், பிற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேற சிறிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்

 இலங்கை , தென்னாப்பிரிக்காஆகிய  அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கைக்கு வெற்றி அவசியமாகிறது. ஒருவேளை இலங்கை அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து விலக நேரிடும்.

மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்      ஆஸ்திரேலியாவும் அதே நிலையில் உள்ளது. அவுஸ்திரேலியா இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 90 சதவீதம் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யலாம். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றால் 100 சதவீதம் இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

   இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக மாறி உள்ளது. மேலும், இந்த மூன்று போட்டிகளில் தற்போதைய உலகின் நான்கு முன்னணி டெஸ்ட் விரர்களான  விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ,ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாட உள்ளனர்.

 எதிர்கால டெஸ்ட் நட்சத்திரங்களாக சுட்டிக் காட்டப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து), கமிந்து மென்டிஸ் (இலங்கை), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய இளம் வீரர்களும் விளையாட உள்ளனர். எனவே, இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.

 

ரமணி

8/12/24

Thursday, December 5, 2024

ஐபிஎல் ஏலத்தில் விலைப்படாத ஜாம்பவான்கள்


 ஐபிஎல் 2025 ஏலம் சவூதியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.   இந்த முறை எல்லா அணிகளும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலும் இளம் வீரர்களையே ஏலத்தில் எடுத்தது.  ஐபிஎல்  இலும்,  கிறிக்கெற் உலகிலும் சாதனை  படைத்த பல ஜாம்பவான்களை எந்த அணியும் கண்டு கொள்ளவில்லை.

ஐபிஎல் 205 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்  இரண்டு நாட்களாக நடந்தது. இந்த ஏலத்திற்காக மொத்தம் 1574 வீரர்கள்  விண்ணப்பித்திருந்த நிலையில் மொத்தம் 577 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 283 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் பங்கேற்க எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் நாள் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டித்தீர்த்தது இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாம் நாள் ஏலத்தில் பல அணிகளிடம் குறைவான தொகை மட்டுமே இருந்ததால் பல வீரர்களின் அடிப்படை விலை அதிகமாக இருந்தால் பல அணிகள் வீரர்களை எடுக்க தயக்கம் காட்டினர்.

ஏலம் போகாத வீரர்கள்:

டேவிட் வார்னர்:

 இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர் தனது அடிப்படை விலையாக 2 கோடியை நிர்ணயித்திருந்தார். ஆனால் அவரை ஏலத்தில் இறுதிவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. வார்னர் டெல்லி அணிக்காக அறிமுகமாகி பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கப்டனாக செயல்பட்டு 2016 ஆண்டில் ஐபிஎல் கோப்பையும் வாங்கிக்கொடுத்தார். அதன் பிறகு அணியில் ஏற்ப்பட்ட சின்ன மனகசப்பு காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2023, 2024 சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடினாலும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

                                கேன் வில்லியம்சன்: 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் 2015-2022 சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு வரை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் 2023 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக 2023 சீசனில் இருந்து விலகிய நிலையில் 2024ஆம் சீசனில் ஒரு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இந்த மெகா ஏலத்தில் அடிப்படை விலையாக வில்லியம்சன் 2 கோடி நிர்ணயத்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

ஷர்துல் தாக்கூர்:

  சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூரும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 2 கோடியை அவர் அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதிப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் முக்கிய காரணமாக இருந்தார்.

ஜானி பேர்ஸ்டோ:

 இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ தனது அடிப்படை விலையாக் 2 கோடி நிர்ணயத்திருந்தார். கடந்த சீசன்களில் சரியாக விளையாடத நிலையில் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை

ப்ரித்வி ஷா:

 சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை என்று பெரிதும் பேசப்பட்ட இந்திய வீரர் ப்ரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த முறை ஏலத்தில் தனது அடிப்படை விலையையும் 75 லட்சத்துக்கு  அவர் குறைத்த போதிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கடந்த முறை டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்தார் .

  அன்மோல்பிரீத் சிங் ,யாஷ் துல் -,மயங்க் அகர்வால் , பதும் நிசங்க, , பியூஷ் சாவ்லா,   கிறிஸ் ஜோர்டான் ,  சிக்கந்தர் ராசா,  சர்ஃபராஸ் கான் ,டுவைன் பிரிட்டோரியஸ் , , கே எஸ் பரத்  ஆகியோரும் விலைப்படவில்லை.

ரமணி

1/12/24

Wednesday, December 4, 2024

அதானியால் முடங்கியது இந்திய நாடாளுமன்றம்


 உலககோடீஸ்வரர்களில் ஒருவராகக் கருதப்படும் அதானிக்கு அமெரிக்கா  பிடியாணை பிறப்பித்துள்ளதால்  இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின்  கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய வங்கிகளில்  கோடிக்கணக்கான பணத்தை கடனகப் பெற்ற அதானி குழுமம் அதனை இன்னமும் திருப்பிச் செலுத்தவில்லை. அதானிக்கும் , மோடிக்கும்  இடையிலே நிலவும் நல்லுறவே அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உதவுவதாக எதிர்க் கட்சிகள்   குற்றம் சாட்டியுள்ளன.இந்த நிலையில்  இலஞ்சம் கொடுத்த குற்றச் சாட்டில் அதானிக்கு அமெரிக்கா  பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடியாணை பிறபித்து உத்தரவிட்டுள்ளார்.நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, "இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களுக்காக, தோராயமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை, (கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார்''

''இதனை மறைத்து, அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளது'' என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி, வினித் எஸ் ஜெய்ன் ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா உட்பட 7 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அதானி குழுமம் மட்டுமின்றி அஜூர் என்ற நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பொய்களைக் கூறி அதானி குழுமம் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் இருந்தும் முதலீடுகளைப் பெற முயற்சி செய்துள்ளது," என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

 அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடியாணை  கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்

இந்த நிலையில், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டில் இருந்து அதானி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்காவின் நீதித்துறையின் (US DOJ) குற்றப்பத்திரிகை அல்லது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (US SEC) சிவில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை( FCPA) மீறுவதாகக் குற்றம் சாட்டப்படவில்லை.

பத்திர மோசடி சதி, கம்பி மோசடி சதி மற்றும் பத்திர மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள் மீது தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை  குற்றப்பத்திரிகை மற்றும் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (SEC) சிவில் புகார்களில் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான  ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதானி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் வளங்களை அதானி எனும் தனி நபருக்காக மத்திய அரசு வாரி வழங்குகிறது என்றும், அவரை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் எனவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் அமெரிக்காவில் அதானி குழுமம் மீதும், அதானி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுக்க அதானி முன்வந்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.

 அதானி ஊழல் புகார், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழு இதனை விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழுக்கம் எழுப்பினர். இதனால் இரு அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிப்பதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த கேட்டால், அதை அரசு புறக்கணிக்கிறது என்றும், அவர்கள்தான் நேரத்தை வீணடிக்க எங்களை உந்தி தள்ளுகிறார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற‌ம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடும்போது போராட்டம் வெடிக்கும்.

இதே வேளை தமிழகத்திலும் அதானி விவகாரம் சூடுபிடித்துள்ளது.அதானிக்கு எதிரான வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,'' ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழகம், சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

தமிழக மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 அதானியின் விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 10ம் திஅதி தமிழக முதல்வர் ஸ்டாலினை, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார். 

ராமதாஸின் குற்றச்சாட்டுப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை'   என்று சொன்னார். 

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸின் கட்சித் தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுதும்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர்கள் போராட்டம் ந‌டத்தினர். தமிழக பாரதீய ஜனதாத்  தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை,   சீமான்,  வாசன் ஆகியோரும் ராமதாஸுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள்.அதானி விவகாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

Tuesday, December 3, 2024

பத்திரிகைத் துறையில் சிறந்த ஆளுமை


 இலங்கையில் இன்று அச்சு ஊடகத் துறை பல்வேறு  சவால்களுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்த கடும் பிரயத்தனப்பட்டு வருகையில் இத் துறையில் அவ்வப்போது பலர் கோலோச்சி வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  வாசகர்கள் மத்தியில் என்றுமே தங்களின் ஆளுமையால் சிறப்பான இடத்தை பலர் பிடித்துள்ளனர்.அவர்களில் ஒருவராகவே வடமராட்சி வதிரியின் மைந்தன் சூரன்.ஏ. ரவிவர்மா (ரமணி) தனது பணியை தொடர்கிறார்.    

1997 ஏப்பிரல் 6 ஆம் திகதி ‘தினக்குரல்’ பத்திரிகை கொழும்பில் ஆரம்பமான ஓரிரு தினங்களில் உதவி ஆசிரியராக இணைந்த இவர்  பல வருடங்களாக தினக்குரலில் சேவையாற்றி செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல், குறிப்பாக புதன் வசந்தம் பகுதியில் விளையாட்டு,சினிமா உட்பட பல்வேறு  கட்டுரைகளை எழுதி பத்திரிகையை பலப்படுத்தினார்.
இந்த நிலையில் இவரது  ஆற்றலால் ‘இடி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். அதனைத் தொடர்ந்து சுடரொளிப் பத்திரிகையிலும் அரிய சேவையாற்றினார். அதன் பின்னர் வீரகேசரியில் இணைந்து செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல்  ஆகியவற்றில் தனித்துவத்துடன் மிளிர்ந்தார். ‘மெற்றோ நியூஸ்’, ‘மித்திரன்’, ‘வீரகேசரி வார மலர்’ ஆகியவற்றில் பல கட்டுரைகளைத் திறம்பட எழுதினார்.
அங்கிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட பத்திரிகைத் துறையிலிருந்த ஆர்வம் காரணமாக பல பத்திரிகைகள், இணையத் தளங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் உட்பட வெவ்வேறு துறைகளிலும் பல சிறப்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். அரசியல், விளையாட்டு,சினிமா ஆகியவற்றில் இவர் கொண்டிருக்கும் மிகுந்த ஆர்வம் காரணமாக அத்துறைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் மிகக் கவனிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது.தற்போது சினிமா தொடர்புடையதாக இவரது இந்நூல் வெளிவருகிறது.
மிகவும் நேர்மையான ஒரு பத்திரிகையாளரான இவர், பத்திரிகா தர்மத்திற்காக எப்போதும் பாடுபட்டவர். இப்பொழுதும் தனது வயது மூப்பினையும் பொருட்படுத்தாது இருபத்து நான்கு மணிநேரமும் பத்திரிகைத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தற்போது ‘தீம்புனல்’ மின் இதழின் பிரதம ஆசிரியராக இருக்கும் இவரால் வாசகர்களின் எண்ணங்களுக்கேற்ப பல்துறை இதழாக அது பரிமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

த.சிவகணேசன்
செய்தி ஆசிரியர்  
தினக்குரல்