Tuesday, March 18, 2014

'ஜி' பிரிவின் சிறந்த வீரர்கள்

   
ஜேர்மனி, போர்த்துக்கல், அமெரிக்கா, கானா ஆகிய நாடுகள் 'ஜி' பிரிவில் தமது பலத்தைக் காட்ட களமிறங்கி உள்ளன.  இந்த நான்கு நாடுகளில் இருந்தும் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணி ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனினியின் ஆதிக்கம் மிக அதிகளவில் உள்ளது. போத்துகலைச் சேர்ந்த இருவர் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர். ஏனைய ஒன்பது பேரும் ஜேர்மனிய  வீரர்கள்.
கோல் கீப்பராக மனுவல் நைட் உள்ளார். ஜேர்மனியின் கடந்தகால வெற்றிகளுக்கு ஷி மேக்கர், ஒலிவர் கான் போன்ற கோல் கீப்பர்களே முக்கிய காரணம். ஆகையினால் மனுவல் நைர் மிக் சிறந்த கோல் கீப்பராக உள்ளார்.
பின்கள வீரர்கள் பிலிப்லஹரம், பெமார்செஸ்கர், மத்ஸ் ஹம்மல்ஸ் மூவரும் ஜேர்மனியைச்  சேர்ந்தவர்கள். போத்துகலைச் சேர்ந்த பபயோ கொன்ரயோ 
மத்திய கள வீரர்களான  மரியோ கொட்டில் பஸ்ரியன், ஸ்வென்ரஜர், ரொனி கரோஸ், மெஸில்  ஒஸில், மார்கோ ரெஷி ஆகிய ஐவரும் ஜேர்மனிய வீரர்கள். முன்கள வீரராக கிரிஸ்ரியானி  ரொனால்டோ.
மேலதிக வீரர்களான ரொனால் அட்லர் (ஜேர்மனி), தோமஸ் முல்லர் (ஜேர்மனி), மரியோ  தோமஸ் (ஜேர்மனி), பெபே (போர்த்துக்கல்),கெவின் பரின்ஸ் கொடாஸ்( கானா).
அமெரிக்க வீரர்கள் எவரும் இந்த அணியில் இல்லை. ஜேர்மனி அசுர பலத்துடன் உள்ளது. சவால் விடும் போத்துகல் வீரர்களை சமாளிக்கும் வல்லமை ஜேர்மனிக்கு உண்டு.


 ரமணி 
சுடர் ஒளி 16/03/14

Wednesday, March 12, 2014

ஜெயலலிதாவை நம்பினால்....

கூட்டணி பேரம் பற்றிய பேச்சில் நாட்கள் கடத்தப்பட்டிருந்த நிலையில்  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது.  ஏப்ரல் ஏழாம் திகதி முதல் மே மாதம் 12ஆம் திகதிவரை 16ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் ஏப்ரல் 24ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 16ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.தமிழகத்தில்  இதுவரையிலும் இரு முனைப் போட்டியே நடைபெற்று வந்தது.  இம்முறை  முதல் முதலாக ஐந்து முனைப் போட்டி நடைபெறும் நிலை உருவாகிவுள்ளது. தமிழகத்தில் வீழ்த்தமுடியாத சக்தியாக இருந்த காங்கிரஸை பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு வீழ்த்தியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி தமிழகத்தில் புதிய அலையைத் தோற்றுவித்தது. எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் சக்தி தி.மு.க. என்ற மூன்றெழுத்தை புரட்டிப்போட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.  ஆரம்பித்த அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியால்  திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ச்சியடைந்தது.தமிழக அரசியல் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான  போட்டியாகவே இருந்தது.  இவர்கள் இருவரையும் நம்பியே காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது. 

எம்.ஜி.ஆர். மறைந்ததும் அவரின் இடத்தை மனைவி ஜானகி பிடித்தார். கட்சி  இரண்டாகியது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.  ஜானகி தலைமையிலும், ஜெயலலிதாவின் தலைமையிலும் இரண்டுபட்ட  கட்சி தேர்தலைச் சந்தித்தது. இரண்டு பெண்மணிகளும் படுதோல்வியடைந்தனர். அப்போது  கருணாநிதியின்  அரசியல் ஆரம்பமானது.ஜெயலலிதாவின் அசுர வளர்ச்சி கருணாநிதிக்கு சவாலைக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதால்  ஜெயலலிதா தனிப்பெரும் தலைவியானார்.  இந்தியத் தேசியக் கட்சிகள்  கருணாநிதியையும், ஜெயலலிதாவையும்  நம்பியே  தமிழகத் தேர்தல்களில் களம் இறங்கின.  இந்தத் தேர்தலில்  கருணாநிதியும், ஜெயலலிதாவும் தேசியக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டனர்.


தேசியக் கட்சிகளுடன்  கூட்டணி சேராமல் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க கருணாநிதியும், ஜெயலலிதாவும் தயாராகிவிட்டனர். தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் தவிர்த்து தேர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கூட்டணிக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு  தேர்தல்  பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. காஞ்சி தேரடியில் கூட்டம் நடத்துவதற்கு  ஏற்பாடுசெய்யப்பட்டது.  இறுதிநேரத்தில்  காஞ்சி பல் நிலையத்துக்கருகில்  கூட்டம் நடைபெற்றது.  2004ஆம் ஆண்டு  தேர்தலின்  காஞ்சி தேரடியில் முதலாவது பிரசாரக் கூட்டத்தை நடத்தினார்  ஜெயலலிதா. அப்போது  நடந்த பொதுத் தேர்தலில்  அவரது கட்சி படுதோல்வியடைந்தது.   ஆகையால்   கூட்டம் நடைபெறும் இடம் இறுதி நேரத்தில் மாற்றப்படடது.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆகிய இரண்டும் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கனவில் இருந்தன. அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த பெரிய கட்சியாக   கம்யூனிஸ்ட் கட்சியும்,  மாக்ஸ்ட்மும் இருந்தன.  ஆகையால் அதிக தொகுதிகளைக்கேட்டு கோரிக்கை விடுத்தன. அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இணைந்திருந்தபோது இடதுசாரிகளுக்கு  குறைந்தளவு தொகுதிகளே ஒதுக்கப்பட்டன. தங்களைவிடப்  பெரிய கட்சிகள் இல்லாமையினால் தாம் கேட்கும் தொகுதிகளை ஜெயலலிதா  தருவார் என இரண்டு கட்சிகளும் அதிக நம்பிக்கையுடன் இருந்தன.  அவர்களின் எதிர்பார்ப்பைத் தடுவி பொடியாக்கிய ஜெயலலிதா தனித்துக் களமிறங்கத் துணிந்துவிட்டார்.
கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போவதாக ஜெயலலிதா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  ஜெயலலிதாவின் அறிவிப்பினால்  இடதுசாரிகள் மகிழ்ச்சியடைந்தன.  தொகுதி பேரப்பேச்சுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுவார் என்று இடதுசாரிகள் காத்திருந்தன.  தனது பிறந்த நாளன்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இடதுசாரிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டியபின்  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட  தொகுதியின் வேட்பாளர் விலகிவிடுவார் என அறவித்தார்கள்.  ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு இடதுசாரிகளுக்கு  மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எவரும் எதிர்பார்க்காத நேரத்தில்  காஞ்சியில் தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா.

2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்திலின்போது இறுதிவரை ஜெயலலிதாவை நம்பியிருந்த வைகோ கைவிடப்பட்டார்.  அதேபோன்றதொரு நிலையே இப்போது இடது சாரிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.  2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார்   வைகோ. 2011ஆம் ஆண்டு வரை சுமுகமாக போய்  கொண்டிருந்த அரசியல் பயணம் சட்டசபைத் தேர்தலின்போது தடம்புரண்டது.35தொகுதிகள் வேண்டுமென வைகோ கேட்டார். ஒன்பது தான் என்று ஜெயலலிதா அறுத்து உறுத்துக் கூறினார்.   கொஞ்சமும் இறங்கவில்லை. கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ.  அன்று வைகோவுக்கு நடந்த அதேநிலைதான் இன்று  இடதுசாரிகளுக்கும் நடந்துள்ளது.இடதுசாரிகள் தலா நான்கு  தொகுதிகள் கேட்டார்கள்.  ஒன்றுக்கு மேல் இல்லை என்று கூறிவிட்டார் ஜெயலலிதா.  போக்குடமின்றி தடுமாறுகின்றன  இடதுசாரிகள். பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ்  ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுடனும் கூட்டுச் சேரமாட்டாத இடதுசாரிகள் திரிசங்கு சொர்க்க நிலையில் உள்ளன.
2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணைவதற்குப் பின்புலமாக  இருந்தவர்களில் இடதுசாரிகளும் அடக்கம். சட்டசபைத் தேர்தல் முடிந்து அரியணை ஏறிய பின் கூட்டணியிலிருந்து விஜயகாந்த் விரட்டியடிக்கப்பட்டார்.  இப்போது இடதுசாரிகள் வெளியேற்றப்பட்டன.



ஜெயலலிதாவின் இந்த அதிரடியினால் தா.பாண்டியன் மிகுந்த மனவிரக்தியடைந்துள்ளார். மாக்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலவேளை ஜெயலலிதாவை எதிர்த்தார்கள்.  ஜெயலலிதா என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று தா.பாண்டியன் கூறுவார். என்ன செய்வது யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாது தடுமாறுகிறார்கள் இடதுசாரிகள்.

2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது விஜகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தனர்.  அப்போதும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை  செய்யாது 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார்  ஜெயலலிதா. இதனால் தொதித்தெழுந்த இடதுசாரிகள் விஜயகாந்தைச் சந்தித்து கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணி அமைப்போம் என்றனர்.   இடதுசாரிகளும் விஜயகாந்தும் எதிர்பார்த்த  தொகுதிகளில் ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார்.
விஜயகாந்தும், இடதுசாரிகளும் போர்க்கொடி பூண்டதனால் கலவரமடைந்த ஜெயலலிதா இறங்கிவந்து தொகுதி பேரம் பற்றிய பேச்சுக்கு உடன்பட்டார்.  எந்தவொரு தருணத்திலும்  இறங்கிவராத ஜெயலலிதா அன்று இறங்கிவந்தது அவரின் பலவீனம் என்பதை வெளிப்படுத்தியது. விஜயகாந்த் இல்லாது தனி மரமாகி நிற்கும் இடதுசாரிகளால் எதுவும் செய்ய முடியாது.  மத்திய அரசமைக்கும் மூன்றாவது அணி என்ற கனவோடு இருந்த இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார்.
ஜெயலலிதாவால் தனிமைப்படுத்தப்பட்ட இடதுசாரிகள் தனித்துப் போட்டிடப் போவதாக அறிவித்துள்ளன.   தமிழகக் கட்சிகளுடன் கூட்டணி  சேராது  போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்தும் வேறுவழியின்றி ரோ­த்துக்காக தனிமையில்  நிற்கின்றன   இடதுசாரிகள். ஜெயலலிதாவின் ஆட்சியிலே நடைபெறும் அத்துமீறல்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரித்த இடதுசாரிகளை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதற்கு தொகுதிப் பங்கீடுதான் காரணம் என்று அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மீது வைகோ கொண்டிருந்த ஆதரவு, ஸ்டெல்லைன் ஆலைக்கு எதிராக வைகோ நீதிமன்றம் சென்றது ஆகியனவே உண்மையான காரணங்கள். இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் எதுவும் பகிரங்கமாகச் சொல்லப்படவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்துடன் இணைந்து  மூன்றாவது அணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சித்ததுதான் காரணம் என்பது வெளிப்படையானது. இடதுசாரிகளுக்கும் இந்த உண்மை தெரிந்துள்ளது. வெளியில் பகிரங்கமாக அறிவிக்க முடியாது குமுறுகின்றனர்.

கூட்டணி அறிவிப்பில் நாளும் பொழுதும் போக்குக் காட்டிய விஜயகாந்த் பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி சேரப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.  விஜயகாந்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம் பங்காளிக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை எட்டியுள்ளது. விடுதலைச் சிறுத்ததைகள் கூடுதல் தொகுதிக்கேட்டு முரண்டு பிடித்து அடங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் விஜயாந்துக்கான கதவு இழுத்து மூடப்பட்டுவிட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைவதற்கு அவர் முடிவெடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக ஜெயலலிதா திகழ்கிறார். ராஜிவ் கொலைக் குற்றவாளிகளான சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா அறிவித்ததும்  காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டது. கடைசி  நேரம்வரை நம்பவைத்து இடதுசாரிகளை கைவிட்டார். இதனால் இடதுசாரிகள் தனிமைப்படுத்தப்பட்டன.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சில தலைவர்களும்,விஜயகாந்தும் காங்கிரஸுடன் கூட்டணி சேரவிரும்பினார்கள். ஏழு கைதிகளின் விடுதலை தொடர்பான ஜெயலலிதாவின் அறிவிப்பினால் அவர்கள் காங்கிரஸ் கட்சியை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பலமான ஒரு கூட்டணி உருவாகும் வாய்ப்பு அடித்து நொறுக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இது ஒரு புதிய தேர்தல் களமாகவே உள்ளது. காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாரதீய ஜனதாக்கட்சி ஆகியன புதிய பாதையில் தேர்தலைச் சந்திக்க உள்ளன.  இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும், மாநில கட்சிகளின் துணையின்றி முதல்முதலாக தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போகின்றன.

பாரதீய ஜனதாக்கட்சி முதல் முதலாக விஜயகாந்துடன் இணைகிறது. இந்தக் கூட்டணியில் வைகோவும் இருக்கிறார். விஜயகாந்த் முதல்முதலாக தேசியக் கட்சியுடன் கைகோக்கிறார்.மாநிலக்கட்சிகளாலும், தேசிய கட்சிகளாலும் கைவிடப்பட்ட டாக்டர் ராமதாஸ் தனது வன்னிய வாக்கு வங்கி அப்படியே இருப்பதாக நம்புகிறார். புதிய சூழ்நிçக்கு முகங்கொடுக்க தமிழக வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.


வர்மா 
சுடர் ஒளி 09/03/14

Sunday, March 9, 2014

வதைபடுகாலப் பிரகடனம்

அவஸ்தைகளின் உச்சம்
நிறைந்து போன
ஒரு கொடுங்காலத்தின்
விம்பத்தை
இனம் புரியாத ஒரு காற்றின்
உஷ்ணம் உணர்த்தத் தொடங்கியது .

யார் யாராலோ
எங்களுக்கென மாத்திரம்
பிரகடனப்படுத்தப் பட்ட
“
வதை படுகாலப் பிரகடனத்தில் ”
பிள்ளைகளை தொலைத்தவர்களின்
மூச்சுக் காற்று
சூறாவளியாய் வார்த்தைக்குள்
அடங்காமல் திமிறத் தொடங்கிற்று .

துயர் நிறை அரங்காடல்
நிறைந்து போன
சாட்சிய வெளியில்
கண்ணீரும் ,ஓலங்களும் மாத்திரமே
அஞ்சாத சாட்சியங்களாய்
விகாரமாய் எழுந்து நிற்கின்றன .

அந்தரத்தில் உலவும்
தொலைத்தலின் வலி
முற்றுபெறாத முடிவிலியாய்
ஊசலாடிக் கொண்டிருந்தது .

இழத்தலின் வலி
சாதாரணமாகிப் போன
எங்கள் நிலத்தில்
தொலைத்தலின் வலி
கொடிதிலும் கொடிதென
வதை படு காலப் பிரகடன
உச்ச வலி குறித்து
தலை அடித்து புலம்பிக் கொண்டிருந்தாள்
மூன்று பிள்ளைகளை தொலைத்த தாயொருத்தி .

மௌனங்களை மொழிபெயர்க்க
முடியாதவர்கள்
உண்மைக் கதறல்களை
மாறுதல்கலாய் மொழிபெயர்த்தார்கள் .

கண்ணீரினால் நனைந்து
அனல் காற்றாய் நிறைந்து
ஓலங்களின் வெளியே
உருப்பெறத் தொடங்கிற்று
இந்த
“
வதை படு காலப் பிரகடனம் ”

- வெற்றி துஷ்யந்தன் –

சுடர் ஒளி 02/03/14

Saturday, March 8, 2014

மேற்கு ஜேர்மனி 1974

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்தபின் மேற்கு ஜேர்மனியில் நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ணப் போட்டி. ஜேர்மன் என்ற பலம்மிக்க நாடு கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி என இரண்டாகப் பிளவுபட்டபின் இரண்டு நாடுகளும் எதிரெதிராக உதை பந்தாட்டத்தில் மோதிக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம். 
1974ஆம் ஆண்டு நடைபெற்ற இப் போட்டியின் மூலம் புதிய உலகக்கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
ஜூன் 13ஆம் திகதி முதல் ஜூலை 07ஆம் திகதிவரை நடைபெற்ற இத்தொடரில் 38 போட்டிகள் நடைபெற்றன. தகுதிகாண் போட்டி யில் 99 நாடுகள் விளையாடின. 16 நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியில்  விளையாடத் தகுதிபெற்றன. 38 போட்டிகளில் 97 கோல்கள் அடிக்கப்பட்டன. 18,65,753 பேர் பார்வையிட்டனர். சராசரியாக ஒரு போட்டியை 49,098 பேர் பார்த்துள்ளனர்.
இங்கிலாந்து, பரான்ஸ், ஹங்கேரி, ஸ்பெய்ன், சோவியத் ரஷ்யா ஆகியன தகுதிபெற வில்லை. அவுஸ்திரேலியா, யஹய்ட்டி, ஆபரிக்கா நாடான ஸரே ஆகியன உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.

பல்கேரியா, மேற்கு ஜேர்மனி, வட ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, யூகஸ்லோவியா, இத்தாலி, போலாந்து, சுவீடன் ஆகியன ஐரோப் பாக் கண்டத்திலிருந்து தெரிவாகின. தென்னமெரிக்காவிலிருந்து பிரேஸில், ஆர்ஜென்ரீனா, சிலி, உருகுவே ஆகியன தகுதி பெற்றன.உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்ற 16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒரு குழுவில் தலா நான்கு நாடுகள் இடம்படித்தன.

குழு 1இல் கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி, சிலி, அவுஸ்திரேலியா ஆகியன இடம் பிடித்தன. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கிழக்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. இக்குழுவிலிருந்து கிழக்கு ஜேர்மனியும், மேற்கு ஜேர்மனியும் முறையே முதல் இரு இடங்களைப் பெற்றன.
குழு இரண்டில் யூகஸ்லோவியா, பிரேஸில்  ஸ்கொட்லாந்து, ஸரே ஆகியன மோதின. பலம் குறைந்த ஸரேக்கு எதிரான போட்டியில் 9-0 என்ற கணக்கில் யூகஸ்லோவியா வெற்றி பெற்றது. ஸரேக்கு எதிராக 14 கோல்கள் அடிக்கப்பட்டன. யூகஸ்லோவியாவும், பிரேஸிலும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.
குழு மூன்றில் விளையாடிய நெதர்லாந்து, சுவீடன், பல்கேரியா, உருகுவே ஆகியவற்றிலிருந்து முதல் இரு இடங்களைப்பிடித்த நெதர் லாந்தும், சுவீடனும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.
போலாந்து, ஆர்ஜென்ரீனா, இத்தாலி, யஹய்ட்டி ஆகியன மோதின.  யஹய்ட்டிக்கு எதிரான போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் போலாந்து வெற்றிபெற்றது. நெதர்லாந்தும், ஆர்ஜென்ரீனாவும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.

குழு ஒன்றிலும், குழு மூன்றிலும் முதலிடம் பிடித்த கிழக்கு ஜேர்மனி, குழு மூன்றிலும் நான்கிலும்  இரண்டாம் இடம் பிடித்த பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகியன ஏ பிரிவிலும், குழு இரண்டிலும், நான்கிலும்  முதலிடம் இடம்பிடித்த யூகோஸ்லாவியா, போலாந்து, குழு இரண்டிலும், மூன்றிலும் இரண்டாம் இடம் படித்த மேற்கு ஜேர்மனி, சுவீடன் ஆகியன பீ பரிலும் மோதின.
குழு ஏயில் முதலிடம் பிடித்த கிழக்கு ஜேர்மனியும், பி பிரிவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடின. 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மனி  சம்பியனானது. பிரேஸிலுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலாந்து மூன்றாம் இடம்பிடித்தது.

ஏழு கோல்கள் அடித்த காஸிகோரிஸ் லடோ (போலாந்து) கோல்டன் ´ விருது பெற்றார். தலா ஐந்து கோல்கள் அடித்த ஜெஹான் நீஸ்கென்ஸ் (நெதர்லாந்து), அன்டர ஸாமா  (போலாந்து) ஆகியோர் கோடன் ´ விருதுக்குப் போட்டியிட்டனர்.
மூன்று கோல்கள் அடித்த வல்டிஸ்லாங் (போலாந்து) சிறந்த இளம் வீரர் விருதை வென்றார். போலாந்து 16, நெதர்லாந்து 15, மேற்கு ஜேர்மனி 13, யூகஸ்லாவியா 12 கோல்கள் அடித்தன. அவுஸ்ரேலியா, ஸரே ஆகிய நாடுகள் கோல்கள் அடிக்கவில்லை.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற் றில் சிலி வீரரான காலோஸ் கஸ்வி எனும் வீரர் முதல்முதலாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இத்தொடரில் ஐந்து வீரர்கள்   சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப் பட்டனர். யஹய்ட்டியைச் சேர்ந்த ஏனஸ்ஜுன் ஜோஸப் ஊக்கமருந்து சோதனை யில் சிக்கிய முதலாவது  வீரராவார்.
ரஷ்யாவுக்கு எதிரான  போட்டியில் சிலி விளையாட மறுத்தது. போலாந்து அணியின் மாற்று வீரராக தொடர்ந்து ஆறு போட்டிகளில் களம் இறங்கிய லெசாவ் சிமிக்கெற் விஷ் புதிய  சாதனை படைத்தார்.
 ரமணி 
சுடர் ஒளி 02/03/14

Friday, March 7, 2014

இரும்புக் கதவுக்குள் இருந்து....

சிறைத்தண்டனை  அனுபவிக்கும் அனைவருமே குற்றவாளிகள் அல்லர். சந்தர்ப்ப சாட்சியங்களால் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பலர் உலகெங்கும்  சிறைகளில் வாடுகின்றனர். உலகத்தலைவர்களில் பலர் சிறைக்குள் இருந்தே பல சிந்தனை களை வெளிக்கொணர்ந்தனர். அவற்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபல்ய மானவை. 

இரும்புக் கதவுக்குள் இருந்து.... எனும் கவிதைத் தொகுப்பைத் தந்துள்ள விவேகானந்தனூர் சதீஷ் அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவிக்கிறார்.  சிறைத்தண்டனை  அனுபவிக்கும்போது கூட சற்றும் தளர்வு பெறாது கவிதைகள் மூலம் தன் கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்கிறார். பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும்  பிரசுரமான கவிதைகளை இரும்புக் கதவுக்குள் இருந்து.... எனும் தலைப்பில் தந்துள்ளார்.

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் உணர்வுகளைப் பிழிந்து பிரசவமாகியுள்ளன. மனிதம், இரக்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு, விடுதலை, சுதந்திரம், தியாகம், பரிவு, துயரம், அலைச்சல் என்பவற்றைத் தனக்கே உரிய நெகிழ்ச்சியுடன் தந்துள்ளார். இத் தொகுப்பில் 66 கவிதைகள்  உள்ளன. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், க.சத்தியசீலன், பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆகியோரின் ஆசியுரை, வாழ்த்துரை, அணிந் துரையுடன் சக கைதியான  மாநகர சபை உறுப்பனர் மு.கோமகன் படைப்புலகில் பார்போற்ற என கவிதையால் வாழ்த்தியுள்ளார்.இறைவணக்கமாக  காத்தருள்வாய் கிளிநகர் கந்தா என முருகனை விழித்து கவிதைகளை ஆரம்பக்கிறார். முதலாவது கவிதை விடிவு என்ற தலைப்பில் உள்ளது.

என்தன் அம்மாவுக்கு
சின்ன மகன் வரையும் - சில
சிந்தனை சிதறல்கள் என ஆரம்பித்து
எந்தத் துன்பமும்
முடியாமல் போனதில்லை
எந்த வெள்ளமும் 
வடியாமல் நின்றதில்லை
சதிராடிய நம் வாழ்வில்
சிறைவாழ்வு குறுக்கிட்டு
திசை மாறிய புயலொரு நாள்
நிச்சயம் தணியுமம்மா
கிழக்கு மொருநாள்
சிவக்குமம்மா
எனக்குமொரு நான்  விடிவு
கிடைக்குமம்மா

என தாய்க்கு ஆறுதல்  கூறுவது போல் முடித்துள்ளார். சிறையில் இருப்பவர்களுக்குத்தான் வெளியில்  உள்ளவர்கள் ஆறுதல் கூறுவார்கள். இங்கே சிறையிலிருக்கும் சின்ன மகன் தாய்க்கு ஆறுதல் கூறுகிறான்.
அனல் மழை என்ற தலைப்பிலான கவிதையில் ,

நேற்று எரித்துப் போன
ஆயிரமாயிரம் அனல் குண்டுகளில்
அகோரத்தினத்தில்
உற்சாகம் மறைவதற்குள்
ஆழப் பொழியும் அடை மழையே
நில்

என்று ஆணையிடுகிறார். குண்டுகள் அனைத்தையும் அனல் குண்டுகள் என அதன் தாக்கத்தை உணர்த்துகிறார்.
உணர்வூட்டிய வன்னி மண் எனும் கவிதையின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார் விவேகானந்தனூர் சதீஷ். தான் பிறந்து வளர்ந்த ஊர்,  அடைக்கலம் தந்த ஊர்,  மனைவியைத் தந்த  கிராமம்,  மகள் பற்றிய விவரங்களை கவிதையாய் வடித்துள்ளார்.

வெள்ளை உடைதரித்து
வேதனையில் வாழ்கிறேன்
சோதனைகள் வந்தபோதும்
சோராத எந்தன் மனம்
என்னினத்தின்
கலாசாரம், பண்பாடு
கலையப்பட்டதைக் கண்டபோது
வெளிவராத கண்ணீருடன்
வெந்து போனது

சிறைக்குள் இருந்தபோதும் வெளியே நடக்கும் கலாசாரச் சீரழிவை வேதனை என்ற கவிதையின் மூலம் வேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.
துப்பாக்கி என்ற தலைப்புடன் ஒரு கவிதை எதிர்பார்ப்புடன் சென்றபோது இளைஞர்களுக்கு  அறிவூட்டும் அருமையான ஒரு கவிதை என்பது புலனாகிறது. 

துப்பாக்கியால்
துயரப்பட்டு
துர்ப்பாக்கிய நிலையில்
தமிழனெதிர்காலம்
இளையதளபதியின்
துப்பாக்கியால்  இன்று
குடாநாட்டு இளசுகள்
கொண்டாட்டம்
பெற்றோர் வீட்டில்
திண்டாட்டம்
மூத்த தளபதி
முளைத்த
ஊரில்
இளைய தளபதிக்கு
இளைஞர் சங்கம்
என்ற அக்கவிதை பல

 அசிங்கங்களை புட்டு வைக்கிறது.  கட்அவுட் பாலாபிஷேகம் என்பவற்றையும் கவிஞர் விட்டு வைக்கவில்லை.
கையடக்கக்காதல் சிக்கென மனதில்  ஒட்டிக்கொள்ளும் தலைப்புடனான கவிதையின் மூலம் கைத்தொலைபேசிக் காதலைக் தருதுகிறார்.

வார இதழில்
நல்ல வரன்தேடி
மணமகன் பதவிக்கு
விளம்பரமிட்டான்
அவளோ
கட்டிய வாழ்வுக்கு 
கட்டுண்டு
இளைஞனொருவன் மனைவியாய்
இல்லறம் புரிகிறாள்.

என அற்புதமாக முடிக்கிறார்.
சிறைக்குள் சென்று நீண்ட நாட்களாகி விட்டது. உற்றார், உறவினர், நண்பர்கள்  ஆர்வமாக விசாரிப்பார்கள். இவர்களைத் தவிர,  என்னை வேறு யார் விசாரிப்பார்கள் என சிந்தித்த கவிஞரின் மனதில்  பிறந்த கவிதையை கேட்கவில்லையா? என்ற தலைப்பல் தந்துள்ளார். 

கால் நீட்டியமர்ந்து- கொஞ்சம்
சத்தமாய் கொட்டாவி விட்டு
சோம்பல் முறித்த - என்
சொந்த வீடு கேட்கவில்லையா?
நான் எங்கே என்று?
கட்டுடைத்த கட்டுக்கிணறு, 
சிறுநீர் கழிக்கப்போகும் கிழுவைவேலியோரம், 
வீட்டுக்கோடியுமே
 என்னைக் கேட்க வில்லையா 
என ஏக்கத்துடன் கேட்ட கவிஞர்.
அயல் வீட்டு 
உதயா, வசந்தி, சாந்தி
அன்ரியவையும்
உண்மையா கேட்கவில்லையா?
ஓ...
மறுக்கப்பட்ட உரிமைபோல்
இவையளும் - என்னை
மறந்துவிட்டனரா

என முத்தாப்பு வைக்கிறார். விவேகானந் தனூர் சதீஷ்.

ஆண்டுகள் பல கடந்தன
அரசுகள்  சில மாறின . ஆனால்
மாறவில்லை இன அழிப்பு மட்டும்
  பேச்சுக்கள் பல மேசைகளில்
வட்ட மேசை சந்திப்பு
நீட்டுமேசை மாநாடு
ஆகியதொன்று மில்லை, ஆனால்
கடலுணவு பொரியலும்
போத்தல் தண்ணீரும்
தீர்ந்ததுதான் மிச்சம்


 சமாதானப்பேச்சு  எப்படி நடந்து முடிந்தது என்பதை பேச்சு என்ற இக்கவிதை  துலாம் பரமாக வெளிப்படுத்துகிறது.
புது+இன+பத்திரிகை தலைப்பே வித்தியாசமாக உள்ளது. பத்திரிகைகளின் திகிடு தத்தங்களை வருத்தத்துடன் வெளிப் படுத்துகிறார்.   பாதிப் பக்கததில் பாலியல் வல்லுறவு, இரண்டாம் பக்கத்தில் அரசியல் அரியண்டங் கள், மூன்றாம் பக்கத்தில்  முடிந்துபோன முள்ளிவாய்க்காலின் எச்சங்கள், நான்காம் பக்கத்தில் இலங்கையில் ஈழத்தமிழரும் நீண்ட கட்டுரையும், ஐந்தாம் பக்கத்தில்  கடத்தல், ஆறாம் பக்கம் விபத்து, ஏழாம் பக்கம் சினிமா, எட்டாம் பக்கம் குட்டிக்கதை, குடும்பத்தகராறு, ஒன்பதாம் பக்கம் விளம் பரம், பத்தாம் பக்கம் விளையாட்டு என ஒரு பத்திரிகையில் வரும் செய்திகள் அனைத்தை யும் பட்டியலிட்டுள்ளார்.

நான்கு வழக்குகளுக்காக சிறையில் இருப்பவனுக்கு ஐந்தாவது வழக்காக மனைவியிடமிருந்து விவாகரத்து வருகின்ற தென்பதை நேசிப்பு என்ற கவிதை சொல்கிறது.  இடம்பெயர்வு என்ற கவிதையின் மூலம் வன்னி மக்கள் இறுதி யுத்தத்தில் பட்ட அவஸ்தையையும் மெனிக்பாம் முகாம் முடக்கத்தையும் விவரித்துள்ளார்.
காதலர் தினம், கிறிஸ்மஸ், தைத்திரு நாள் அனைத்துலக  பெண்கள் தினம், கிளிநொச்சி வைத்தியசாலை, வடஇந்து மகளிர்  கல்லூரி, உலக உணவு தினம், போதைப்பொருள் பாவனை, புகைத்தல், ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி, மருத்து வர் த.சத்தியமூர்த்தி போன்ற சிறப்புக் கவிதைகள் பலவற்றை தனது புதுமை ன பாணியில் தந்துள்ளார்.
புகை வேண்டாம், காதலர் தினம் ஆகியன பரிசுபெற்ற கவிதைகள். இறைவ னின் கொடை (உலகமாற்றுத் திறனாளி கள் தினம்) சிறையிலிருந்து அம்மாவுக்கு (கிறிஸ்மஸ் தின கவிதைப் போட்டி) ஆகியன சிறப்புச்சான்றிதழ் பெற்ற கவிதைகள்.

இனங்கள் இணைந்து
மனங்கள் மகிழ
கைகோப்போம்
சமயங்கள் மதிப்போம்
ஒற்றுமை, சமத்துவம்
ஓங்கிடச் செய்வோம் 
இனபேதம்
இல்லா தொழிப்போம் 
சாக்கடை அரசியலில்
சீர்கெட்டு நிற்கும்
தாயகத்தை மீட்போம்.
கைகோப்போம் 
என்ற தலைப்பிலான கவிதையுடன் நிறைவடைகிறது இக் கவிதைத் தொகுப்பு.
இத்தொகுதியிலுள்ள கவிதைகள் அனைத்தும் வலியுடன் எழுதப்பட்டவை. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கமுடியாத ஒரு சிறைக்கைதியின் மனவடுக்கள் இவை. இந்தப் புறா வெளியே வந்தால் இலக்கிய உலகம் உவகையுறும்.

சூரன்

சுடர் ஒளி 02/03/14

Thursday, March 6, 2014

உலகக்கிண்ணம் 2014

  ஆர்ஜென்ரீனா 
ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, ஈரான், நைஜீரியா ஆகியன குழு எப் இல் தமது பலத்தைக்  காட்டப் போகின்றன. தரவரிசையில் ஆர் ஜென்ரீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. பொஸ்னியா இரண்டு இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தில் உள்ளது. ஈரான் ஏழு இடங்கள் கீழிறங்கி 38ஆவது இடத்திலும் நைஜீரியா ஆறு இடங்கள் கீழிறங்கி 47ஆவது இடத்திலும் உள்ளன. கடந்த உலகக்கிண்ணப் போட்டியில்  ஒரே குழுவில் இருந்த ஆர்ஜென்ரீனாவும், நைஜீரியாவும் இந்த ஆண்டும் ஒரே குழுவில் உள்ளன.

                      ஆர்ஜென்ரீனா
தென்னமெரிக்காவிலிருந்து தகுதிபெற்ற ஆர்ஜென்ரீனா மிகுந்த சந்தோஷத்தில்  உள்ளது. இந்தப் பிரிவிலிருந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலி, வெனிசுவெலா, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவடோர், பெரு, உருகுவே ஆகியவற்றுடன் 16 போட்டிகளில் விளையாடிய ஆர்ஜென்ரீனா   ஒன்பது போட்டிகளில்  வெற்றி பெற்று, ஐந்து போட்டிகளைச் சமப்படுத்தி, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.     ஆர்ஜென்ரீனா 35 கோல்கள் அடித்தது. எதிராக 15 கோல்கள் அடிக்கப்பட்டன. 32 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக 31 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

அலஜன்ரோசபலா ஆர்ஜென்ரீனாவின் பயிற்சியாளராக  உள்ளார். ஜவியர் மஸ்ஹொரானோ அணித்தலைவராக உள்ளார். இலட்சக் கணக்கான  ரசிகர்களைக் கவர்ந்த லயனல் மேஸி இருப்பது அணிக்குப்   பலமானது. நான்கு முறை தொடர்ந்து பலன் டி ஓ விருது  பெற்றார். இம்முறையும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இரண்டுமுறை சம்பியனான ஆர்ஜென்ரீனா  இரண்டு  முறை  இறுதிப் போட்டியில் விளையாடி சம்பியன் பட்டத்தைத்தவறவிட்டது.  மேஸியின் உதவியுடன் சம்பியனாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். உதைபந்தாட்ட உலகின்  பலம்மிக்க வீரர்களான பெக்கம், ரூனி, ரொனால்டோ ஆகியோர் விளையாடியும் இங்கிலாந்து, போலாந்து ஆகியன சம்பியன் பட்டம் பெறவில்லை. ஆர்ஜென்ரீனாவும்  மேஸியின் காலத்தில் சம்பியனாகவில்லை என்ற குறை உள்ளது. 
                                    
காலோஸ்ராவஸ், அஞ்சல் டிமரியா, பப்லோ கபரெலா, சேர்ஜியோ, ஆகுரோ, எரிக்லாமெலா, பப்ரிகோ, கொலசினி ஆகியோர் ஆர்ஜென்ரீ னாவின் நம்பிக்கைக்குரிய வீரர்களாவர். மேஸி 10 கோல்களும், அகுரோ 5 கோல்களும் அடித்துள்ளனர்.
மரியோ கெம்பஸ், டானியல் பஸரெல் லா, டியூகோ மரடோனா, பஸ்ரிடா ஆகியோர் ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் வீரர்களாவர். 1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 
20 வயதுக்குட் பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஆறு முறை சம்பயனானது. பீபா கொன்பரேடகள் கிண்ண  சம்பிபயன். இவைதவிர  இரண்டு முறை ஒலிம்பக் சம்பியனானது.
பொஸ்னியா, அண்ட் ஹொஸகோவியா 
                                   பொஸ்னியா, அண்ட் ஹொஸகோவியா
உலகக்கிண்ண உதைபந்தாட்ட வர லாற்றில் முதல்முதலாக  விளையாடத் தகுதி பெற்றுள்ளது. மிக நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின்பன் இந்த நாடு உருவாகியது. பொஸ்னிய, சேபிய, குரோஷிய இன மக்களைக்கொண்ட  நாடு இது.
லிசென்ஸ்ரின், லட்வியா, கிறீஸ், லிதோனியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுடன் தகுதிகாண் போட்டியில் விளையாடிய பொஸ்னியா எட்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில்  விளையாடத் தகுதிபெற்றது. பொஸ்னியா 30 கோல்கள் அடித்தது. எதிராக ஆறு கோல்கள்   மட்டும் அடிக்கப்பட்டன. நான்கு போட்டிகளில் பொஸ்னியாவுக்கு எதிராககோல் அடிக்கப்பட வில்லை.
லாசன்ஸ்ரினுக்கு எதிரான முதல் போட்டியில்   8d1 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டி யில் 4d1 என்ற கோல் கணக்கிலும்   வெற்றிபெற்றது. லட்வியாவுக்கு எதிராக போட்டியில் 5d0 கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பொஸ்னியாவுக்கு எதிராக ஒன்பது  மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

சபெல்சுசி பொஸ்னியாவின் பயிற்சியாளராக உள்ளார். 350இற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர். பரிஸ் சென் ஜேர்மனியின் முன்னாள் வீரர். பரான்ஸ், துருக்கி ஆகியவற்றின் பயிற்சியாளராக இருந்த இவர், 2009ஆம் ஆண்டு பொஸ்னியாவின் பயிற்சியாளரா னார். எமிர்ஸ்பாச்சி அணித்தலைவராக உள்ளார். ரஷ்யா, ஸ்பெய்ன் கழகங்களில்  விளையாடிய  அனுபவம் உள்ளவர்.
எடின் டெஸ்கோ, பொஸ்னியாவின் நட்சத்திர வீரராக  உள்ளார். 27 வயதான இவர், 58 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார். உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் இவர் 10 கோல்கள் அடித்துள்ளார். வெடட் இப்ஸிபக் எட்டு கோல்களும், ஸாவெட்டன், மிஸ்மோவிக் ஐந்து கோல்களும்  அடித்துள்ளனர். பரேஸிலில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில்  எதிரணிகளுக்கு சவால்விடும் அணியாக பொஸ்னியா விளங்கப்போகிறது.

ரமணி 
சுடர் ஒளி 23/02/14

Tuesday, March 4, 2014

விஜயகாந்துக்கு கடிவாளம் போட்ட ஜெயலலிதா

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என அறிவிக்காது அரசியல் கட்சிகள் அனைத்தையும் திக்கு முக்காடவைத்த விஜயகாந்துக்கு செக் வைத்துள்ளார் ஜெயலலிதா. அதிக தொகுதிகளுக்காக ஆசைப்பட்டு பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் இரகசிய பேரம் நடத்திவந்த  விஜயகாந்த்,  கூட்டணி பற்றிய முடிவை  அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின்  விடுதலையை தமிழக அரசின் தலையில் நீதிமன்றம் சுமத்தியது.  நீதிபதி தீர்ப்பு எழுதிய மை காய்வதற்கிடையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா. சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததனால் காங்கிரஸ் கட்சி கொந்தளித்து எதிர்ப்புக்காட்டியது. காங்கிரஸுடன் இணைவதற்காக   பேரம்பேசிய விஜயகாந்த், பேச்சை இடையில் கைவிட்டார்.  

ஜெயலலிதாவின் இந்த அதிரடி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகிரி, கனிமொழி, கலாநிதி மாறன் ஆகியோர் காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். காங்கிர ஸுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்டாலின். ஸ்டாலினின்  பிடி வாதத்துக்கு அடங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில்  உள்ள கருணாநிதியும் வெளிப்படையாக காங்கிர ஸை  விமர்சிப்பதில்லை. ஜெயலலிதாவின் அறிவிப்பால் ஸ்டாலினின் கை ஓங்கியுள்ளது. காங்கிரஸை கைவிட்ட விஜயகாந்த் பாரதீய ஜனதா  கட்சியா, திராவிட முன்னேற்றக் கழகமா என்பதை விரைவில் முடிவுசெய்யவேண்டிய நிலையிலுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல்வர் என்ற கனவில் மிதக்கும் விஜயகாந்த்,  பாரதீய ஜனதாவையே தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயலலிதாவின் வெற்றியைத் தடுக்கும் வல்லமை   விஜயகாந்துக்கு உண்டு என்பதால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால் ஜெயலலிதா எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது.



தமிழகம், கோவை உட்பட  40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்  ஜெயலலிதா. தற்போதைய  நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு மட்டும்தான் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். படித்துப் பட்டம் பெற்ற புதியவர்களையே ஜெயலலிதா களமிறக்கி உள்ளார். பழம் பெருச்சாளிகள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். வாரிசுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் நம்பர் ரூ என்று பெருமையாகப் பேசப்படும் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் மகனுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
 ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பழைய தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  நந்தம் விஸ்வநாதன்,  பி.எச். பாண்டியன் ஆகியோரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடுவதற்கு  வேட்பாளரை அறிவித்து,   அவரை நீக்கிவிட்டு புதிய ஒருவரை அறிவிப்பது ஜெயலலிதாவின் வழமையான பாணி என்பதனால் இது இறுதியான வேட்பாளர் பட்டியல் அல்ல என்ற கருத்து உள்ளது.
முன்னைய தேர்தல்களில் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர்களின் மீது குற்றஞ்சாட்டப்பட்டதனால்  அவர்களை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமித்த அனுபவமும் அவருக்கு உண்டு.  ஆகையால்,  குற்றப்பின்னணி உள்ளவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள்  அறிவிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது. 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை  ஜெயலலிதா அறிவித்ததனால்  கூட்டணிக் கட்சிகள் திகைத்துப் போயுள்ளன.இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியுடனும், மா சிஸ்ட் கட்சியுடனும்  தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்போவதாக ஜெயலலிதா அறிவித் தார்.  இந்நிலையில்,  அவர்களுடன் ஆலோசனை செய்யாது தன்னிச்சையாக 40 தொகுதி களுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டார். இடது சாரிகளுடன் தொகுதி உடன்படிக்கை செய்யப்படும்போது  ஜெயலலிதாவால்  அறிவிக்கப்பட்ட சிலர் வாபஸ் பெறுவார்கள்.

திராவிட முன்னேற்றக்கழகமும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. 40 தொகுதிகளுக்கும் வேட்புமனு  பெற்று நேர் காணலை  நடத்துகிறது. நேர்காணலுக்குச் சென்ற அனைவரும் காங்கிர ஸுடன் கூட்டணி வேண்டாம் என ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.
வாரிசுகளுக்கு இடமில்லை என்று நேர் காணலில் கூறப்பட்டதனால் மூத்தத் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். தாம் இருக்கும் போதே வாரிசுகளைக் களமிறக்கிவிட்டு அவர்களை வளர்க்கவேண்டும் என நினைத்த  பழைய  தலைவர்கள் நொந்துபோயுள்ளனர்.
பழைய தலைவர்களை ஒதுக்கிவிட்டு புதிய வர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றே ஸ்டாலின் விரும்புகிறார். புதியவர்களின் புதிய அலை,   தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார். ரி.ஆர்.பாலு, ஆர். ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகிய  பழைய தலைவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படும். ஏனையவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். 

இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகள் போலியானவை. அரசியல் கட்சிகளிடமும், தலைவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு அவர்களின் விருப்பத்துக்கேற்றவகையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருப்பதாக நியூஸ் எக்ஸ்பரஸ் என்ற ஹிந்தி தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக நிரூபத்துள்ளது. இதன் காரணமாக இந்தியா  ருடே தனது கருத்துக் கணிப்பு முடிவை வெளியிடுவதை இடைநிறுத்தி யுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள மா நிலங்களில் பாரதீய ஜனதாக் கட்சி பெரு  வெற்றி பெறும். மோடி அலை அபாரமான வீசுகிறது  என வெளியான கருத்துக்கணிப்புகள் பொய் என்பத னால் காங்கிரஸ் உற்சாகமாக உள்ளது. தமிழத் தில் திராவிட முன்னேற்றக் கழகமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது

வானதி
 சுடர் ஒளி 02/03/14