Tuesday, February 25, 2014

தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள்

இலங்கை, இந்திய தமிழ் இளைஞர்களை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறது  தென் இந்திய சினிமா. சிவாஜி - எம்.ஜி.ஆர்., கமல்-! ரஜனி, விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என்று காலம் காலமாக தமிழ் இளைஞர்களில்  சிலர் இக்கதாநாயகர்களின் அடிமையாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். என்ற  மூன்றெழுத்து மந்திரம் தமிழக அரசியலில் இன்னும் செல்வாக்குச் செலுத்துகிறது.
கலை அம்சம் உள்ள படங்களை ஒருபுறம் ஓரம் கட்டிவிட்டு வியாபார ரீதியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்கின்றனர். உலகெங்கும் வாழும்  இலங்கைத்  தமிழ்ர்களை  நம்பி  பல  படங்கள் வெளிவந்தன. சில படங்களில் வசனங்களும்,  பாடல்களும்  தமிழர்கள் மீது பச்சாதாபம் கொள்வது போல் வியாபார நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டன என்பதை வலியோடு வெளிப்படுத்தியுள்ளார் இ.சு.முரளிதரன்.

இ.சு.முரளிதரன் எழுதிய தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள் என்ற இப்புத்தகம் ஜீவநதியின் 27ஆவது வெளியீடாக வந்துள்ளது.இதில் உள்ள 16 கட்டுரைகளில் 15 கட்டுரைகள்  ஜீவநதியில் பிரசுரமாகின. தமிழ், சிங்களம், ஈரான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இத்தாலி, ஆங்கிலத் திரைப்படங்கள் பற்றிய இவரது பார்வை வித்தியாசமானவையாக உள்ளது.
தமிழ்த் திரைப்படத் தலைப்புகள் ஒரு குறும்பார்வை என்ற முதலாவது கட்டுரையில் திரைப்படத் தலைப்புகள் பற்றி அலசுகிறார். வட மொழித் தலைப்பு, ஆங்கிலத் தலைப்பு என்பன  பற்றியும் இத்தனை எழுத்துகளில் தலைப்பிட்டால் படம் வெற்றிபெறும் என்ற சினிமா  நம்பிக்கையையும் கூறுகிறார். இரண்டு எழுத்துப்படங்கள், புதிய காதல், சின்ன என்ற சொற்களில் ஆரம்பிக்கும் தலைப்புகள் கோட்டை என்ற சொல்லில் முடியும் படங்கள் பற்றிய பட்டியலைத் தந்துள்ளார்.
ஆங்கிலப்படக் கதையை தமிழில் சுட்ட விவரத்தைத் தந்துள்ளார். கமலின் வெற்றி பெற்ற அதிகமான படங்களின் கதை ஆங்கிலப் படங்களில் இருந்து அப்படியே நகலெடுத்தது  என்பதை திரைப்படங்களில் நகலெடுப்பு என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுத்துள்ளார். அன்பேசிவம்,  மகளிர் மட்டும், நளதமயந்தி,  அவ்வைசண்முகி என்பன ஆங்கிலப் படங்களின் அப்பட்டமான பிரதி என்பது பல  இரசிகர் களுக்குத் தெரியாது.

தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையின் மூலம் இலங்கையின் விடுதலைப் போராட்டம் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளதாகக் குமுறுகிறார். ஈழத்தை முதன்மைக் கருவாகக்கொண்டு  வெளிவந்த திரைப் படங்கள் எமது துயரத்தை வணிகமாக்கியுள்ளதை வலியோடு விவரிக்கிறார்.காற்றுக்கென்ன வேலி, உச்சிதனை முகர்ந்தால், இராமேஸ்வரம், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுதப் போராட்டம், நந்தா, தொனாலி, நான் அவனில்லை 2, பில்லா2-, புன்னகை மன்னன், ஆயிரத்தில் ஒருவன், பாலை, ஏழாம் அறிவு ஆகிய படங்களின் கதை காட்சிகள், வசனங்கள் என்பன இலங்கை மக்களின் வலிகளை வெளிப்படுத்தவில்லை.
இலங்கையில் நடக்கிற யுத்தம் நிறுத்து, ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை, பூப்பூத்து, ஸ்ரீலங்கா நீயானால் எல்.ரி.ரி. நானால், அய்யய்யோ அய்யய்யோ மூடு, அந்த சந்திரிக்காவும், பரபாகரனும் சம்பந்தியாகனும், நிலவு சாயும் நேரம்,  மீன்கள் பாடும் தேன் நாடு, நல்லூரின் வீதி  திரிந்தோமடி, விடை கொடுங் கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே போன்ற பாடல்கள் இலங்கைத் தமிழர்களைக் குறிவைத்து எழுதப்பட்டன.
தமிழ்த் திரைப்படங்களில் குறியீடு ஆழமறியாத ஒரு  தேடல். தமிழ்த் திரைப்படங்களில் கலை இயக்குநர்களின் வகிபாகம், மணிரத்தினம் சினிமாவில்  நிஜமாந்தர்களின் நிழல், கனதியான முயற்சிகளில் கால் கோள், பதேர் பாஞ்சாலி கனவுருவரைபுகளால்  கருத்தியல் திருட்டு ஆகிய கட்டுரைகள் இவரின் சினிமாத்தேடலை வியப்புறச் செய்கின்றன.
ஸ்ரேயா கோஐல், முரளிதரனை கிறங்க வைத்துள்ளார். ஸ்ரேயா கோஐலின் குரல், வசீகரம், உச்சரிப்பல்  மயங்கியவர்கள்  தமிழில் அவரின் தவறான உச்சரிப்பைக் கண்டுகொள்ள வில்லை என்பதை முரளிதரன் வெளிப்படுத்தி யுள்ளார். நகைச்சுவை நடிகரான நாகேன் குணசித்திர நடிப்பை  வியப்புடன் வெளிப்படுத்து கிறார்.
 சிங்கள மக்களும் விழிப்புணர்வைத் தந்த புறஹந்த களுவளு என்ற சிங்களப்படத்தை யும் தன் பாணியில்  விமர்சித்துள்ளார். நுங்கு விழிகள், நளதமயந்தி, புழுவிற்கும் சிறகு முளைக்கும் ஆகிய கவிதைத் தொகுப்புகளைத் தந்த இ.சு.முரளிதரனின் காத்திரமானப் படைப்பு இப்புத்தகம். 

சூரன்  
சுடர் ஒளி 09/02/14

No comments: