Monday, February 10, 2014

வார்த்தை தவறிய தலைவர்கள்


இந்திய நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்து நிற்போம். நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்  என்று வீறாப்பு பேசிய ஜெய லலிதா, இடது சாரிகளின் முதுகில் சவாரி விடத் தயாராகி விட்டார். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று சினிமாப்பாணியில் அறை கூவல் விடுத்த விஜயகாந்த் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் மண்டியிட்டார். ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்திய விஜயகாந்த் திராவிட முன்னேற்றக்கழகத்துடனும், காங்கிரஸ் கட்சியுடனும் இரகசிய     பேரம் நடத்துகிறார். திராவிட முன்னேற்றக்கழகத்துடனும், தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி சேரமாட்டேன் என்று சத்தியம் செய்த டாக்டர் ராமதாஸ் பாரதீய ஜனதாக்கட்சிக்கு தூது அனுப்பயுள்ளார்.

இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கிடையில் கூட்டணி பேரத்தை முடித்துவிட தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் முனைப்புக்காட்டத் தொடங்கிவிட்டன.செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகள், தேசியக்கட்சிகளை ஆட்டிப்படைக்கின்றன. தேர்தல்கால வாக்குறுதி போன்று வாக்குத் தவறிய தலைவர்கள் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் கூட்டணிசேரத் துடிக்கின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தயவில் நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடலாம் என்று காத்திருந்த கூட்டணித் தலைவர் களை உதாசீனம் செய்து, நாப்பதும் நமக்கே என்ற கோஷத்துடன் நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்துப் போட்டிபோடப்போவதாக ஜெயலலிதா அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும்போது அவர் இறங்கிவருவார் என்று கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
கூட்டணித் தலைவர்களின் நம்பிக்கை வீண்போக வில்லை. இடது சாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகார பூர்வமாக அறிவித்து ஜெயலலிதா. இடது சாரி களின் எதிர்பார்ப்பில் பாலை வார்த்தார் ஜெயலலிதா. சிறு பிள்ளைத் தனமான முன்னைய அறிவிப்பை அவருடைய கூட்டணித் தலைவர்கள் மறந்துவிட்டனர். தமிழகத்தில் கால்பதிப்பதற்கு அவர்களுக்கு கொளுகொம்பு ஒன்று தேவைப்பட்டது. நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஜெயலலிதாவால் வெற்றிபெற முடியாது என்பதை இடது சாரித்தலைவர்கள் நன்கு அறிவார்கள்.காங்கிரஸ், பாரதீய ஜனதாக்கட்சி ஆகியவற்றுக்குப் போட்டியாக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வட இந்திய அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். அவர்களின் ஆசையைப் பூர்த்திசெய்யும் முகமாக தமிழகத்தில் மூன்றாவது அணியை ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்சிஸக் கட்சி ஆகியவற்றுடன் கைகோத்துள்ள ஜெயலலிதா தனது பிரதமர் கனவுக்கு அடித்தள மிட்டுள்ளார்.
பாரதீய ஜனதாக்கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டுச் சேர முடியாத இடதுசாரிகள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகரிப்பதற்காக ஜெயலலிதாவின் உதவியை நாடியுள்ளனர். தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட இடதுசாரிகள் விரும்புகின்றனர். ஆனால், இரட்டை இலக்கத் தொகுதிகளை ஜெயலலிதா கொடுக்கமாட்டார். ஐந்துக்கும் குறைவான தொகுதிகளையே ஜெயலலிதா கொடுப்பார். இடதுசாரிகளின் உதவியுடன் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் திட்டம்.பிரதமர் யார் என்பதை முன்னிலைப்படுத் தாமலே  ஜெயலலிதாவும் இடதுசாரிகளும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டனர். காங்கிரஸ்  கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் தம்முடன் இணையும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். ஜெயலலிதாவை நம்பியிருக்கும் சரத்குமாரும் முஸ்லிம் தலைவர்களும் ஜெயலலிதாவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதைத் தவிர வேறுவழி இல்லை. ஜெயலலிதா மனம் இரங்கி அவர்களுக்கு தலா ஒரு தொகுதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள். அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் இரட்டை இலைச்சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும்  என்பார்.ஆனாலும் அப்படி ஒரு விஷப்பரீடசையை செய்வதற்கு ஜெயலலிதா தயாராகவில்லை.

விஜயகாந்தின்  கட்சியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவிடம் சரணடைந்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் தமது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கு காட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலை  எழுந்துள்ளது. தாம் வெற்றிபெற்றது தமது செல்வாக்கினாலா? விஜயகாந்தின் செல்வாக்கினாலா? ! என்பதை நாடாளுமன்றத்  தேர்தலின் பின்னர் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.கூட்டணி என்ற சொல்லைக் கேட்டதும் சிங்கம் போல்   சிலிர்த்து எழுந்து தாண்டவமாடிய விஜயகாந்த் அரசியலைப்பற்றி ஞானம் பிறந்ததும் ஜெயலலிதாவுடன் கூட்டணியமைத் தார். தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில்  தோன்றி  வாக்குக்கேட்டபோது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் எதிரும் புதிருமாக மேடையேறி பிரசாரம்  செய்தார்கள்.
ஜெயலலிதாவினால் ஓரம்கட்டப்பட்டதால் கூட்டணி அரசியல் புளிக்கும் என்று காலம் கடந்த ஞானத்தின் பின்னர் தனிவழி போகத் தொடங்கினார் விஜயகாந்த். நாடாளுமன்றத்  தேர்தலில் தன்னை நாடிவருவார்கள் என விஜயகாந்த் எதிர்பாத்தார். அவரது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. பாரதீய ஜனதாக்கட்சியும், திராவிட முன்னேற்றக்கழகமும் அவருக்குத் தூது விட்டன.  தனது மதிப்பு உயருவதை  அறிந்த விஜயகாந்த் அதிக தொகுதிகள் பெறும் நோக்குடன் இரண்டு கடசிகளுடனும் பேரம் பேசினார்
திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் பாரதீயஜனதா இரகசியப் பேச்சு நடத்தியவாறே காங்கிரஸ் கட்சியுடனும் விஜயகாந்தின் பிரதி நிதிகள் பேச்சு நடத்தினர். உளுந்தூர் பேட்டையில்  நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் தனது முடிவை அறிவிப்பதாக விஜயகாந்த் அறிவித்தார். இதன் காரணமாக உளுந்தூர்  பேட்டை மாநாடு முக்கியத்துவம் பெற்றது.இலட்சக்கணக்கான மக்களின் முன்னலையில் நடைபெற்ற உளுந்தூர் பேட்டை மாநாட்டில் முடிவை அறிவிக்காது ஏமாற்றினார் விஜய காந்த். கூட்டணியா, தனியாகவா போட்டியிடுவது என மக்களிடம் கேட்டார் விஜயகாந்த். தனித்து என்றே மக்கள் கோஷமிட்டனர். மக்கள் தீர்ப்பைக் கேட்டதும் மக்களின் விருப்பம் தனித்துப் போட்டியிடுவது. தலைமையின் முடிவை மக்கள் ஏற்பார்கள் என்று அறிவித்தார் விஜயகாந்த். அரசியல் ரீதியான முடிவை மக்கள் கூட்டத்தில் எதிர்பார்க்கும் சிறுபிள்ளைத்தனமான அரசியலை விஜயகாந்த் அரங்கேற்றினார். அரசியல்  தெரிந்த அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களுடன் எடுக்கவேண்டிய முக்கியமான  முடிவை மக்களிடம் விஜயகாந்த் எதிர்பார்ப்பது தவறு.
விஜயகாந்தின் கட்சியை வழிநடத்திய அரசியல் அனுபவம் நிறைந்த பன்ருடடி ராமச்சந்திரன் வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவு. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மைத்துனன் தீம் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். விஜயகாந்த் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். அவரது மனைவி கைதட்டல் வாங்குவதற்காகப் பேசுகிறார். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் விமர்சித்து தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.யாருடன் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தடுமாறுகிறார் விஜயகாந்த். நல்லதொரு  முடிவை விரைவில் எடுப்பது அவருக்குத்தான் நல்லது. கூட்டணியில் உள்ள மற்றைய கட்சிகள் வெறுப்படையும் வரை காலதாமதம் செய்வது விஜயகாந்துக்கு நல்லதல்ல. விஜயகாந்தின் முடிவிலேதான் ஜெயலலிதாவின் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது.  

திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்து அலுத்துப் போன  டாக்டர் ராமதாஸ் திராவிடக்  கட்சிகளும் வேண்டாம், தேசியக் கட்சிகளும் வேண்டாம் என்று ஞானோபதேசம் செய்தார். 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற கோஷத்துடன் ஜாதிகட்சிகள் சிலவற்றைத் தன்னுடன் இணைத்தார். கொஞ்சக் காலம் தனது அரசியல் சித்துவிளையாட்டைக் காட்டிய டாக்டர் ராமதாஸ் களைத்துப்போய் பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேரத்துடிக்கிறார்.பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே பேச்சு நடைபெற்றதே தவிர இன்னமும் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை. நாடாளுமன்றத்  தேர்தலுக்கு  முன்னர் தனது மகன் அன்புமணியை எம்.ஷ யாக்குவதற்கு முயற்சிசெய்கிறார் டாக்டர் ராமதாஸ். கூட்டணிக் கட்சியின் உதவியினால் வெற்றி பெற்றபோது அதைத் தனது தனிப்பட்ட செல் வாக்கு என்று நினைத்த ராமதாஸ் ஏதாவதொரு வகையில் அரசியலில் முன்னேறத்துடிக்கிறார்
கருணாநிதியும், டாக்டர் ராமதாஸும்  ஒன்றாக இருந்தபோது ராமதாஸின் மகன் அன்புமணி அமைச்சராக இருந்தார். கருணா நிதியைக்  கைவிட்டதால் மகனின் அரசியல் எதிர் காலமும் சூனியமாகிப்போனது. காங்கிரஸ் கட்சியின் நிலையும்  இதுதான். தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதியை விமர்சிப்பார்கள். எம்.பியாக்க வேண்டும் என்றால் கருணாநிதியின் உதவிதேவை என்பதைக் கடந்த ராஜ்ய சபை  தேர்தலின் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர்.ராஜ்ய சபை எம்.பி.பதவியை இழந்த வாசன் மீண்டும் எம்.பியாவதற்கு முயற்சி செய்தார்.  காங்கிரஸை விட்டு வெளியேவந்தால்  உதவி செய்யலாம் என திராவிட முன்னேற்றக் கழகம் கூறியது. கட்சியை விட்டு வெளியேறும் துணிவு இல்லாததனால் வாசனால் எம்.பியாக முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்து  நாடாளுமன்றத்  தேர்தலைச் சந்திக்கத் தயாராகியது திராவிட முன்னேற்றக்கழகம். முறிந்த உறவை ஒட்டவைக்க முயற்சிசெய்கிறது காங்கிரஸ். காங்கிரஸுடன் கூட்டுச்சேர தமிழகக் கட்சிகள் எவையும் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் வேறு வழி இல்லை என்று காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்ளது. பூட்டிய கதவைத் திறப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்து வருகிறது காங்கிரஸ். ராகுல், திருமாவளவன் சந்திப்பு அரசியலில் பரபரப்பான செய்தியாக உள்ளது. பழைய கூட்டணியைப் புதுப்பிக்கும் சந்திப்பாக  இருக்கலாம் என்று நோக்கப்படுகிறது. மன்மோகன்சிங், சோனியா உள்ளிட்ட டில்லித் தலைவர்கள் சிலர் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கருணாநிதியை, ராகுல் மதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவதற்கு ராகுல் முயற்சி செய்ததாக  கடந்த வாரம் செய்தி வெளியானது. அந்தப் பின்னணியில்  திருமாவளவன் ராகுலைச் சந்தித்தது அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று  ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.  காங்கிரஸுடன் சேரவேண்டும் என்று அழகிரியும் கனிமொழியும் விரும்புகின்றனர்.ஸ்டாலினின் பார்வை விஜயகாந்தை நோக்கித் திரும்பயுள்ளது. விஜயகாந்த் வேண்டாம் என்று குமுறுகிறார் அழகிரி. சகோதரர்களின் பாசப்போராட்டத்தில் சிக்கித்தவிக்கிறார் பாசக்காரத் தந்தை கருணாநிதி. 
திராவிட முன்னேற்றக்கழகம் தனது பலத்தைக் காண்பிப்பதற்காக  திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. 10 இலட்சம் பேர் இந்த மாநாட்டில் கூடுவார்கள் என்று திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.  விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உட்பட 13 கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  நாடாளுமன்றத்  தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளன. அதிக கட்சிகள் இருந்தாலும் தேர்தலில் வெற்றிபெறுவதற்குரிய பலம் இக்கட்சிகளுக்கு இல்லை
ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பெயரை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி, கனிமொழிக்கு எதிரான வழக்கின் முக்கியமான ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு உண்மை என நிரூபக்கப்பட்டால் கனிமொழி கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அறிவித்துள் ளது. தேர்தல் நெருங்குகையில்  திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு  எதிரான 2ஜி வழக்கை தூசுதட்ட எதிரணிகள் தயாராகிவிட்டன.
அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எதிரான ஊழல் வழக்குகளும் விசாரணைக் கமிஷன்களும் காலம் சென்ற பன்னர் மங்கிப்போயுள்ளன. வரலாறு போபஸ் ஊழல் பரசாரத்தில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றது. கருணாநிதிக்கு எதிரான வர்மா கமிஷன், விடுதலைப் புலிகளைக் தப்பவைத்த  குற்றம் என்பன காலப்போக்கில்  காணாமல் போய் விட்டன. வருமானத்துக்கு மீறிய சொத்துச்சேர்த்த வழக்கு, டான்சி நிலபேர ஊழல் போன்ற வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதா இரண்டாவது முறை முதல்வராகிவிட்டார். அடுத்த தேர்தலின் பின
பிரதமராகும் கனவில் மிதக்கிறார், வழக்கு இன்னமும் முடியவில்லை.
2ஜி வழக்கில் ஒரு இலட்சம் கோடி ஊழல் என்ற குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது 200 கோடி ஊழல் எனச் சுருங்கிவிட்டது. இந்தச் சிக்கலில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் தப்பிவிடும் என்று கருணாநிதி நம்புகிறார்.
வர்மா 
சுடர் ஒளி 09/02/14  


No comments: