Monday, February 17, 2014

கூட்டணிக்குழப்பத்தில் பா.ஜ.க


வட இந்தியா எங்கும் மோடி அலை வீசுவதனால் தென் இந்தியாவிலும் வலுவான கூட்டணி அமைக்கலாம் என்ற பாரதீய ஜனதாக்கட்சி யின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. திராவிடக்கட்சிகளுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மேடை தோறும் முழுக்கமிட்ட விஜயகாந்தை வளைத்துப்போட்டால் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற  பாரதீய ஜனதாக்கட்சியின் கனவு தவிடு பொடியாகி விடும் போல் உள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி சேர வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவர் தமிழருவி மணியன். காங்கிரஸ்,  திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பரம எதிரியான இவர் தமிழகத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும் என்று சபதமெடுத்தார். அவரின் முயற்சியினால் பாரதீய ஜனதாக்கட்சி மிகவும்  மகிழ்ச்சியடைந்தது. காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் கதிகலங்கின.

விஜயகாந்தை தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சியும் தூதுக்கு மேல் தூது அனுப்பின. எதற்கும் அசையாது பொறுமையாக சகல கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்திய விஜயகாந்தின் பார்வை இப்போது காங்கிரஸின் பக்கம் சாய்ந்துள்ளது. விஜயகாந்தின் இந்த வியூகம் பாரதீய ஜனதாக்கட்சியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸையும், திராவிட முன்னேற்றக்கழகத்தையும்  அரசியலி இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விஜயகாந்துக்கு தமிழருவி  மணியன் போதித்தார். அவரின் போதனையை புறம் தள்ளிய விஜயகாந்த் சோனியா விடம் கருணாநிதியிடமும் சரணடையும் வகையில்  வியூகம் அமைத்து வருகிறார்.

விஜயகாந்த், வைகோ, டாக்டர், ராமதாஸ் ஆகியோருடன் வலுவான கூட்டணி ஒன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கையை பாரதீய ஜனதாக்கட்சி முன்னேடுத்தது வைகோவும்,டாக்டர் ராமதாஸும் பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைவார்கள். விஜயகாந்த்  விரைவில்  முடிவை அறிவிப்பார் என பாரதீய ஜனதாக்கட்சி நம்பியது. யாருடன் கூட்டணி என்பதை அறுதியிட்டுக் கூறாமல் தனது மதிப்பை உயர்த்தும் விஜயகாந்தின் போக்கு  புரியாமல் அரசியலில் தலைவர்கள் வெறுப்படையத் தொடங்கினர். கூட்டணி  சேர்வதும் சேராததும் விஜயகாந்தின் விருப்பம் என்ற ரீதியில் விஜயகாந்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

மோடி தமிழகத்துக்கு வந்தபோது வைகோவையும்,டாக்டர் ராமதாஸையும் மேடையேற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி விரும்பியது.  அந்த விருப்பத்தை வைகோவும், டாக்டர் ராமதாஸும்  நிராகரித்துவிட்டனர். கூட்டணித்தொகுதி பேரம் முடித்த பின்பே மேடை ஏற வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.  கருணாநிதியும், ஜெயலலிதாவும் கடைசி நேரத்தில்  காலைவாரியதால் சூடுபட்ட வைகோ கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சூன்பே கூட்டணித் தலைவர்களுடன்  மேடை ஏறுவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.வைகோவின் சார்பில் மல்லை சத்யா உட்பட சிலர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  வைகோ வாழ்த்துச செய்தியை வெளியிட்டார். மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்குச்  சென்ற வைகோ தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மோடியை வைகோ சந்தித்ததனால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டுச்சேர முடியாத வைகோவுக்கு மோடியுடன் சேர்வதைத் தவிர வேறு தெரிவுஇல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரப் போகிறேன் என்று தெரியாமலேயே தனது கட்சி போட்டியிடும் தொகுதி களையும்  வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தலையே  கேலிக்கூத்தாக்கிய டாக்டர் ராமதாஸ் தான் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கபடவில்லை என்றால்  கூட்டணி இல்லை  என்று அறிவித்துள்ளார்.தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களின் போது வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும், டாக்டர் ராமதாஸையும்  வருந்தி அழைத்து யாரும் கூட்ட ணியில் சேர்ப்பது இல்லை.அந்த இடத்தை விஜயகாந்த் பிடித்து விட்டார். விஜயகாந்தின் வளர்ச்சி இவர்கள் இருவருக்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜயகாந்த் கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதற்கு மத்திய, மாநில, கட்சிகள் தயாராக இருக்கின்றன. பேச்சாற்றல், செயலாற்றல் மிக்க தலைவர்கள் யாருமே விஜயகாந்தின் கட்சியில் இல்லை. மக்களைக் கட்டிப்போடும் வகையிலான  கவர்ச்சிகர மாகப் பேசும் சக்தி விஜயகாந்துக்கு இல்லை வாக்குகளை சிதறடிக்கும் சக்தி அவருக்குள்ளது.  அதன் காரணமாகத்தான் அவருடன் கூட்டணி சேர வேண்டும் என பலம் மிக்க கட்சிகள் விரும்புகின்றன

விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் பாரதீய ஜனதாக்கட்சியின் எல்லைக்கு வெளியே நின்று கண்ணாமூச்சி   விளையாடுவதனால் அவர்களை கைவிட வேண்டிய நிலைக்கு பாரதீய ஜனதாக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் பலமான கூட்டணி என எதிர் பார்க்கப்படடது. பாரதீய ஜனதாக்கட்சி பலவீனமடைந்துள்ளது.  பாரதீய ஜனதாக் கட்சியின் பலவீனம் ஜெயலலிதாவுக்கு தெம்ப ளித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் விஜயகாந்த் சேர்ந்தால் தமிழகத்தில் பாரதீய ஜனதாக்கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் உண்டு.
வர்மா
 சுடர் ஒளி 16/02/13 

No comments: