Friday, February 28, 2014

ரசிகர்கள் சிரிப்பதனால் சந்தோஷப் படுகிறேன் ஆர்.யோகராஜன்

இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்திப் பிரிவின் உதவியாளராகப் பொறுப்பேற்று தென்றல் நிகழ்ச்சிப் பணிப்பாளராக உயர்ந்திருப்பவர் இராஜபுத்திரன் யோகராஜா. வி.என்.மதியழகன், சற்சொரூபவதி நாதன், எழில்வேந்தன், சர்வானந்தா, ஜோர்ஜ் சந்திரசேகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, நடராஜசிவம், அப்துல் ஹமீத்  போன்றவர்களுடன் பணியாற்றிய இவர், இன்று புதிய தலைமுயினருடன் தனது கடமையை மேற்கொள்கிறார். வதிரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியைக் கற்றார்.

தொழில் நிமித்தம் நீண்டகாலமாகக் கொழும்பிலே வசித்தாலும் ஊரின் மீது மாறாத பாசம்  பற்று கொண்டதனால் வதிரியைச் சேர்ந்த யோகராஜா என்பதில் பெருமிதம் கொள்கிறார். வானொலியில் பல பதவிகளைப் பெற்றிருந்தாலும் இவரது  நகைச்சுவைப் பாத்திரங்களே இவரை அடையாளப்படுத்தின. அப்பாவியான தோற்றமும், கதை பேசும் கண்களும்  இவரைப் பார்த்ததும் சிரிப்பை உண்டாக்கிவிடும்.
இவர் நடித்த பல பாத்திரங்களில் மறக்கமுடியாத டவுட்டு கணேசன், நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுஜாதா தியனி எனும் கொரிய நாடகத்தில் டுக்கு மாமாவாக சிறியவர்களையும், பெரியவர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறார். 

கே: நாடகம் நடிப்பதற்குரிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?  நடிகனாக வரவேண்டும் என விரும்பினீர்களா?

ப: நடிப்பில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைதான் என்னை நடிகனாக்கியது. கொழும்பிலே எனது பெரியத்தான் சடகோபனின் வீட்டிலே இருந்தபோது திருகோணமலை துறைமுகத்தில் வேலை கிடைத்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் உதவி ஆசிரியர் பதவிக்கு ஆள் தேவை என விளம்பரம் வந்துள்ளதாக வி.ஏ. சிவஞானம் கூறி  என்னை விண்ணப்பிக்கத் தூண்டினார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன், இலக்கிய ஆளுமை உள்ள  சில்லையூர் செல்வராஜா, இசைப்புலமை மிக்க எல்.கே.பரராஜசேகரம் ஆகியோர் நேர்முகத் தேர்வு செய்தனர்.  நேர்முகம் முடிந்தபின், தம்பி உன்னால் ஏன் நடிக்கமுடியாது? நிச்சயமாக நடிக்கமுடியும் என்று எஸ்.கே.பரராஜசிங்கம் கூறினார். அப்போது நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. இன்று அது உண்மையாகியுள்ளது.



கே: உங்களுடைய முதல் நாடக அனுபவம் எப்படியிருந்தது?

ப: கிராமிய சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.ஏ. சிவஞானசுந்தரத்தின் வழிகாட்டலில் சில கவிதைகள் வாசித்தேன். அப்போதுதான் நாடகத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  கே.சண்முகத்தின் நாடகம் ஒன்று புதன்கிழமை ஒலிப்பதிவானது. ~~முகூர்த்த நேரம் முடியப்போகுது. தாலியைக் கட்டுங்கோ  கெட்டிமேளம்  கெட்டிமேளம்.|| இதுதான் நான் முதலில் பேசிய வசனம். வானொலி நாடகம் என்றாலும் நான் நன்றாகச் செய்தேனா என்று பயம் ஏற்பட்டது. அவர் எதையும் கூறமாட்டார்.  இரண்டு நாட்களின் பின்னர் ரைமிங் நல்லா இருக்கு என்றார். அதுவே எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அகளங்கனின் ~அம்மா நான் வெளிநாடு போறன்| என்ற நாடகமும் எனக்குப் புகழைத் தந்தது.

கே: மேடை நாடகத்தில் எப்படி அறிமுகமானீர்கள்?

ப: சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம் நூல் வெளியீட்டு விழாவுக்கு திருகோணமலைக்குச் சென்றபோது எஸ்.எஸ். கணேசபிள்ளையிடம் என்னை  சில்லையூர் செல்வராஜா அறிமுகப்படுத்தினார். மேடையிலே ஒத்திகையின்றி எஸ்.எஸ். கணேசபிள்ளை, ஏ.எம்.சி. ஜெயசோதியுடன் நானும் இணைந்து சில காட்சிகளில் நடித்தேன். கொழும்பிலே அசட்டு மாப்பிள்ளை| நாடகத்துக்கான ஒத்திகைக்குப் போனபோது  எனக்கு வேலைக்காரன் பாத்திரம் தந்தார். எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக நடித்தேன்.மறுநாள் சற்றுத் தாமதமாகப் போனேன். என் மனநிலையைப் புரிந்துகொண்ட எஸ்.எஸ். கணேசபிள்ளை என்னைத் தனியாக அழைத்து அந்தப் பாத்திரத்தின் தன்மையைக் கூறினார். எனது தம்பியின் பாத்திரம் இது. உன்னை எனது தம்பியின் இடத்தில் வைத்து இதனைத் தந்துள்ளேன். உனக்குத்தான் அதிக கைதட்டல் கிடைக்கும் என்றார். அவர் கூறியது போன்று அந்த நாடகத்தில் எனக்குத்தான் அதிக கைதட்டல் கிடைத்தது.

கே: எத்தனை நாடகங்களில் நடித்துள்ளீர்கள்? 

ப: நூறுக்கும் அதிகமான வானொலி நாடகம், 10 தொலைக்காட்சி நாடகம், 15 மேடை நாடகம்.

கே: உங்கள் தயாரிப்பில் அதிக ரசிகர்களைக் கவர்ந்தது எது?

ப : ~வயலோடு வசந்தம்| அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ~வீடே நாடகம்|, ~முகத்தார் வீடு| ஆகியவை ரசிகர்களை வசீகரித்த நாடகங்கள். அவை முடிவுக்கு வந்ததும் எனது தயாரிப்பில் ~வயலோடு வசந்தம்|  ஒலிபரப்பானது. அதனைக் கேட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி என்னை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டினார்.

கே:  உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?

ப : அன்று எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்னைப் போன்றவர்களை வளர்த்தது தான் முக்கிய காரணம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டோம். இன்றும் அப்படித்தான் இருக்கிறோம்.  சார்க் நாடுகளின் ஊடகப் பிரிவு, பீ.பீ.சி., ஜேர்மனிய  வானொலி ஆகியவற்றின் பயிற்சிப் பட்டகள் எங்களை மிளிரச் செய்தன.

கே: திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?

ப : எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் தம்பியின் மகன் ரவி அச்சுதனின்  ~மெதுவாக என்னைத் தொடு|  என்ற திரைப்படத்தில் நடித்தேன். கனடா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் படப்பிடிப்பு நடைபெற்று கனடாவில் முழுமையான படமாக எடிட் செய்து வெளியிட்டார்கள். அதுவும் நகைச்சுவைப் பாத்திரம்தான். நான் வேறு பாத்திரம் கேட்டபோது,  ~~இதை  உங்களால் மட்டுமே செய்யமுடியும்|| என்றார். படம் வெளியான பின்னர் கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ~மெதுவாக என்னைத்தொடு| படத்தில் நடித்ததற்கு பாராட்டிய அவர், தானும் அப்படத்தில் நடித்ததாகவும்  எனது உறவினர் என்றும் கூறினார். அவருடைய பெயர்  துரைமணி.






கே: சிங்கள நாடங்களில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா?

ப : என்னுடைய மீசைக்காக சிங்கள நாடகத்தில் நடிக்க அழைத்தார்கள்.  நான் மறுத்துவிட்டேன்.

கே:  ஏன் மறுத்தீர்கள்?

ப : அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் பயங்கரவாதியாக நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்து விட்டேன். எத்தனையோபேர் இருக்க என்னை மட்டும் ஏன் பயங்கர வாதியாக நடிக்கத் தெரிவுசெய்தீர்கள் எனக் கேட்டேன். உங்கள் உடல் அமைப்பும் மீசையும் பொருத்தமாக இருக்கிறது என்றார்கள்.

கே: வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் உங்களுக்குச் சந்தர்ப்பம் தந்தவர்கள் யார்?

ப : எஸ்.எஸ். கணேசபிள்ளை, எஸ். சண்முகம், அகளங்கன், ஜோர்ஜ்   சந்திரசேகரன், எஸ். ராமதாஸ், சி.சண்முகம், சில்லையூர் செல்வராஜா,  பி.விக்னேஸ்வரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்தேன். வி.ஏ.சிவ ஞானசுந்தரம் எனது வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

கே:  உங்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் பற்றி?

ப : அது நீண்ட பட்டியல். மயில்வாகனம்சர்வானந்தா, வி. என். மதிஅழகன்,  சற்சொரூபவதி நாதன், எழில்வேந்தன், எஸ்.புண்ணியமூர்த்தி, நடராஜசிவம், எஸ்.ராமதாஸ், அப்துல் ஹமீத், ஏ.எம்.சி.ஜெயஜோதி, உடுவை தில்லை நடராஜா, கலிஸ்ராலூக்கஸ் பெர்னாண்டோ, வேதநாயகம் சக்திதரன் (இவர்தான் அசட்டு மாப்பிள்ளையாக நடித்தவர்) சோக்கல்லோ சண்முகம், ரஞ்சனி ராஜ்மோகன்,  ராஜசேகர், கமலினி செல்வராஜா, இரா.ரவீந்திரன், பி.விஸ்வநாதன், பி.விக்னேஸ்வரன் ,லோஷன்,வாமதேவன், இளையத்தம்பி தயானந்தா, அருணா செல்லத்துரை, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.பாலசந்திரன் என மிக நீண்ட பட்டியல். இப்போது புதியவர்களுடன் சேர்ந்து கடமையாற்றுகின்ன். நாம் ஒரு குடும்பம் போலவே அன்றும் பணியாற்றினோம் இன்றும் பணியாற்றுகிறோம். 





கே: உங்கள் தயாரிப்பில் வெளியான நாடகங்கள் எவை?

ப :  புத்திஜீவிகள் வெளியேற்றத்தை மையமாக வைத்துத் தயாரித்த நாடகம் தான் ~பிறந்தமண்| இது வெள்ளவத்தை இராமக்கிருஷ்ண மிஷனில் நடைபெற்றது. இந்நாடகம் பற்றி அப்போது தினகரனில் ~பல விழாக்களை மிஞ்சிய நாடக விழா| என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியது. 

கே: உங்கள் நடிப்பைப் பாராட்டி விருதுகள் கிடைத்தனவா?

ப : அரச நாடக விழாவில் சிறந்த நடிகருக்கான விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
  
கே: உங்கள் நடிப்புக்கு வீட்டில் எப்படி வரவேற்பு உள்ளது? வீட்டிலும் நடிப்பீர்களா? 

ப :  எனது முதல் ரசிகை மனைவிதான்.  நான் நடித்துப் பார்க்கையில் சில திருத்தங்களைக் கூறுவார். மேடையில் நடிக்கும்போது என்னையே  அவதானிப்பார். வீட்டுக்கு வந்தபின் நான் குனிந்து, கூனிக்கொண்டு நின்றதாகக் கூறி  அடுத்த மேடையேற்றத்தின்போது எப்படி நிற்கவேண்டும் என அறிவுரை கூறுவார். ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் வரும் ஜோக்குகளை வாசித்து நடித்துப் பார்ப்பேன்.

கே:  நடிப்பில் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். சிறுவயதில்  நாடகத்தில்  நடித்த அனுபவம் உள்ளதா?

ப :   இல்லை. படிக்கும் காலத்தில் ஒரே ஒரு  நாடகத்தில் நடித்துள்ளேன். ஜனககுமார், ரகு, பேரின்பம், ஆகியோருடன் சிறுவனாக  இருக்கும்போது பெண் வேடமிட்டு நடித்தேன்.  அதன்பின் நடிக்கவில்லை. பாடசாலையில் நாடகம், பேச்சுத் போட்டி எதிலும் கலந்துகொண்டதில்லை.



கே:  சிறுவயதில் நாடகங்களை விரும்பிப் பார்ப்பீர்களா?

ப :  நாடகம் பார்ப்பதிலும் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை. வதிரிகோவி நேசனின் ~காலம் கெட்டுப் போச்சு|  என்ற தாளலய நாடகத்தையும், வதிரி கிருபாவின் ~அலீமா| எனும் நாடகத்தையும்  தேடிப் பார்த்தேன். கோவிநேசனின் தாளலய நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கிருபாவின் அலீமா ஆச்சரியப்படவைத்தது. பின்னணி இசை நடிப்பு  என்பன அன்று புதுமையாக இருந்தன. லெப்டினன் கேணலாக நடித்த ராஜதுரையின் நடிப்பு  என்னைக் கவர்ந்தது.

கே: உங்களைக் காண்பவர்கள்  டுக்கு மாமா என்கிறார்களே! இந்தப் பெயர் எப்படி வந்தது?

ப :    ~சுஜாதா தியனி| என்ற கொரிய நாடகம் நேத்ரா தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிறது. அந்த நாடகத்தில் டுக்கு மாமா என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன்..

கே:  டுக்கு மாமாவுக்கு குரல் கொடுப்பதற்கு உங்களைத் தேர்வு செய்தது யாது?

ப :     சுஜாதா தியனியை தமிழில் ஒளிப்பரப்புச் செய்வதற்கு குரல் தேர்வு செய்வதற்கு என்னையும் அழைத்தார்கள்.  அந்தப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான குரலுடைய சிலரைநான் சிபாரிசு செய்தேன். டுக்கு மாமா என்ற நகைச்சுவைப் பாத்திரத்துக்கு யாருடைய குரல்  பொருந்தும் என யோசித்தேன்.  அப்போது டுக்குமாமாவுக்கு குரல்கொடுக்க ஒருவரைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறினர். அது யாராக இருக்கும் என இரண்டு நாட்களாக யோசித்தேன். சுஜாதா தியனி ஒலிப்பதிவு நடைபெறுவதாகவும்  என்னை வரும்படியும் தொலைபேசியில் அழைத்தார்கள். அங்கு போனதும் நீதான் டுக்கு மாமா என்றார்கள்.
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். ஆனால், அந்தப் பாத்திரம் எனக்கு பல ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளது.

கே:  அன்று உங்களுக்குப் பெருமை தேடித் தந்த பாத்திரம் டவுட்டு கணேசன். இன்று தொலைக்காட்சியில் டாடீ எனக்கொரு  டவுட்டு சினிமாவில் மட்டக்களப்பு யோகராசு எனக் கொரு டவுட்டு, கணேஷ் டவுட்டு என்று  நடிகர்கள் நடிக்கும்போது என்ன நினைக்கிறீர்கள்
.
ப :    நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் கேட்பார்கள். ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரம். புகழ்பெற்ற ~~அடங்காப்பிடாரி|| நாடகப் பாத்திரத்தை மனதில் வைத்துத்தான் டவுட்டு கணேசன் உருவாகினான்.

கே:   நகைச்சுவைப் பாத்திரத்தை விரும்பி நடிக்கிறீர்களா?

ப :    குணசித்திர பாத்திரங்களில் நடிக்க விரும்புகின். உருவத்தை மாற்றி நடிக்கவும் ஆசைப்படுகிறேன். நகைச்சுவை நடிகர் என்றும் முத்திரை குத்திவிட்டார்கள். கவலையை மறந்து மற்றவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

கே:    தனிநடிப்பில் கவனம் செலுத்தினீர்களா?

ப :   இலங்கை வானொலியின் பவளவிழா நிகழ்ச்சியின் போது அன்றைய  பணிப்பாளர்  திருமதி அருந்ததி 
ஸ்ரீரங்கநாதன்  எனக்கொரு சந்தர்ப்பம்  தந்தார். சுமார் அரைமணி நேரமாக நடந்த அந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. என்னுடன் பணியாற்றும் அனைவரையும் நகைச்சுவையாகக் கிண்டல் செய்தேன். தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் ஊழியரை நான்  சந்திப்பதாக ஒரு காட்சி. அவரைப்பார்த்து நான் நான் கேட்ட கேள்விகள் சபையோரைக் குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்தன.
நீங்களே அந்தத் ரி.வி.  பெட்டியிலை வாறது. ரீ.வியிலைவரேக்கை  பவுடர் எல்லாம் போட்டு வடிவா இருக்கிறியள். ரேடியோவிலை அடிக்கடி நல்லூருக்கு அழைத்துப் போகிறம். என்று சொன்னியள். அது தான் நல்லூருக்குப் போறதுக்குப் பாயும் கொண்டு வந்தனான். எப்ப எங்களை அழைச்சுப்போகப் போறியள் என அவரைக் கேட்டேன். நல்லூர் தேர் தீர்த்த நேரடி ஒலிபரப்பு பற்றிய  விளம்பரத்தையே தான் அப்படிக் குறிப்பிட்டேன். இது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தர்ப்பம்.

ரவி
 சுடர் ஒளி 23/02/14 

No comments: