Thursday, February 20, 2014

ஜிவநதி

வெப்பத்தால் பரிதவிக்கும் பூமியின் நிலை பற்றிய  க.செல்வனின்    ஓவியம், எழுத்தாளர்  வி. ஜீவகுமாரன், பாரதியாரும், மனைவியும் ஆகியோரின் அட்டைப்படம் ஆகியவற்றுடன் மாசிமாத  ஜீவநதி வெளிவந்துள்ளது. நேற்றைய மனிதப் புதை குழி, இன்றைய மனிதப் புதைகுழி , நாளைய மனிதப்  புதைகுழி என்ற தலைப்புடன் ஆசிரியர் தலையங்கம் நியாயத்துக்கான  குரலாகப் பதியப்பட்டுள்ளது.

தொடர் பாடலிலும், இலக்கியங்களிலும் தேய்வியம்பல் என்ற காலத்தின்  தேவையான கட்டுரையை பேராசிரியர் சபா.ஜெயராஜா தந்துள்ளார். ஊடகத்துறையில் உள்ளவர்கள் கண்டிப்பாக  படிக்கவேண்டிய கட்டுரை இது. 1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை என்ற தலைப்பில்  பேராசிரியை கலாநிதி அம்மன் கிளி முருகதாஸின் தொடர்கட்டுரை பாரதியார் கவிதைகளை புடம்போடுகிறது.
முருகபூபதியின் வீட்டுக்குள் சிறைப்பட்ட நாட்கள் உண்மையிலேயே சொல்லவேண்டிய கதைதான். ம.செல்வதாஸின்  திரைப்பட பாடலாசிரியர்கள் தொடரில் புதுமைப்பித்தன், சுரதா, மேத்தா ஆகியோரின் பாடல்களை தந்துள்ளார்.

விவாத மேடையில் கல்வித்திணைக்கள பிரசுரங்களில் உள்ள  கடந்தகால விவாதங்களுக்கு இ.சு.முரளிதரன் பதிலளித்துள்ளார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உள்ள சில தகவல் பிழைகளைச் சுட்டிகாட்டி அவற்றைப் பரிசீலனை செய்ய வேண்டும் என சாரல்நாடன் வலியுறுத்துகிறார்.

பன்மைத்துவம் பற்றிய புரிதலை முதல் முதலாகத் தருகின்ற கவனிக்கப்படவேண்டிய மூன்று புத்தகங்கள் பற்றி கெக்கிராவ ஸஹானா தனது எண்ணக்கருத்தை வெளியிட்டுள்ளார். எம்.சி.ரஸ்மினின் சமூக வானொலி, போர்க்கால சிங்கள இலக்கியங்கள் ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983-2007) ஆகிய இரண்டு  நூல்கள் பற்றியும் மேமன் கவியின் மொழி வேலி கடந்து நவீனசிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரு பார்வை எனும் நூல் பற்றியும் தன்மதிப்பைத் தந்துள்ளார். எழுத்தாளர் பொலிகையூர் சு.க.சிந்துதாசனின் கடலின் கடைசி அலை எனும் கதை நூலின் விமர்சனத்தை அ.பெளநந்தி தந்துள்ளார்.

எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் நேர் காணல் ஜீவநதிக்குச் சிறப்புச் சேர்க்கிறது. ஜீவநதியின் ஆசிரியர்  பரணியின் கேள்விகளும் ஜீவகுமாரனின் பதில்களும் சிந்திக்கத் தூண்டுபவையாக உள்ளன. பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்ற ஜீவகுமாரன் தன்னடக்கத்துடன் பதிலளித்துள்ளார்.

க.சட்டநாதன், செ.செல்வராஜா, தெணியான்,  ஆகியோரின் சிறுகதைகளும், சு.க.சிந்துதாசன், ஏ.பாரிஸ், நாச்சியாதீவு பர்வீன் கா.தனபாலன், த.ஜெயசீலன், எஸ்.தேனுஷா ஆகியோரின் கவிதைகளும் இம்மாத ஜீவநதியை அலங்கரிக்கின்றன

ஊர்மிளா
 சுடர் ஒளி 16/02/14


No comments: