கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இலக்கிய சஞ்சிகையின் ஜனவரி மாத இதழ், இலக்கியவித்தகர் கலாபூஷனம் கவிஞர் த. துரைசிங்கத்தின் அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது. புதுவருட, பொங்கல் படங்களும் அட்டைப் படத்தை அலங்கரிகின்றன.
இலக்கிய ஆளுமை மிக்க வித்தகர் கலாபூஷனம் கவிஞர் த. துரைசிங்கத்தைப் பற்றிய கட்டுரையை அந்தனி ஜீவா எழுதியுள்ளார். கவிஞர் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிய விவரமும் இணைக் கப்பட்டுள்ளது.
சாதியும் முரண்பாடும் மேலோர்குழாம் உருவாக்கமும் இலங்கையில் கராவ குழாத்தின் தோற்றம் 1500-1931 எனும் கட்டுரையை கந்தையா சண்முகலிங்கம் எழுதியுள்ளார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்த மைக்கல் ரொபேட்ஸின் நூல் பற்றிய தனது பார்வையைத் தந்துள்ளார். சிங்கள மக்களிடையே உள்ள சாதிப்பிரிவுகள் பற்றிய விவரங்கள் தகவல்களாகத் தரப்பட்டுள்ளது.
தமிழ் ஒலி, ஒளி நிகழ்ச்சிகளில் புகுந்துள்ள புற்றுநோயான ஆங்கிலக் கலப்புப் பற்றிய தனது ஆதங்கத்தை ஞானத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப். பேராசிரியர் என்.சண்முகலிங்கன் வெளியிட்ட ஆத்மா இறுவட்டுத் தொடர்பான இரசனைக் குறிப்பை வசந்தி தயாபரன் தந்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டுகாலப் பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் முத்தாய்ப்பாய் நடந்த ராமானுஜர் நாடகம் பற்றிய தொகுப்பை க.ஜெயபரகாஷ் பதிந்துள்ளார்.
ஞானம் ஆசிரியர் ஞானசேகரனின் வெளி நாட்டுப் பயணங்கள் வாசகர்களுக்குப் பெரு விருந்தாக அமைகிறது. வெளிநாட்டுக் குச் சென்றேன், வந்தேன் என்றில்லாமல் தமது பயணங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இலண்டன் பயண அனுபவங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். பாரம் பரியத்தைப் பேணும் பிரித்தானியர் என்ற தகவலை இக்கட்டுரை வாயிலாகத் தருகி றார். 1600, 1700, 1800 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வீடு என பிரித்தானியர் தமது வீட்டை பெருமையாகக் கூறுகின்றார்கள். அந்தப் பெருமைகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
உடுவில் இராமநாதன் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட 1913ஆம் ஆண்டிலிருந்து, சில வருடங்களாக அதிபராகக் கடமையாற்றிய திருமதி புளோறென்ஸ் எமெறிவைப் பற்றி வே.தில்லைநாதன் எழுதியுள்ளார். இங்கிலாந்தில் இவர் செல்வி புளோறென்ஸ் பயட்றிஸ் பார் என அறியப்பட்டார். நாடக நடிகை, நாடக நெறியாளர், நாவலாசிரியர் என்ற சிறப்பு இவருக்குள்ளது. உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான டபள்யூ.பி.யேட்சுன், உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் பெர்னாட்ஷோ ஆகியோருடன் நட்புக்கொண்டவர். அவர்களின் நாடகங்களில் நடித்தவர். சில நாடகங்களை நெறிப்படுத்தியவர் என்பதை இவரது கட்டுரையின் மூலம் அறியமுடிகிறது.
பேராசிரியர் துரை மனோகரன் தனது எழுதத் தூண்டும் எண்ணங்கள் மூலம் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறார்.மண்டேலாவுக்கு அருகில் நிற்கமுடியாதவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியதை வியப்புடன் நோக்குகிறார். இவரது அரசியல் விழிப்புணர்வுக் கருத்துகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. வழமையான நக்கல் நனினத்துடன் படித்ததும் கேட்டதும் பகுதியைத் தருகிறார். விஜயன் என்று தணியும் இந்த சி.த. என்ற தலைப்பில் மருதானையில் நடைபெற்ற மொழி உரிமை மாநாட்டை விவரித்துள்ளார். தமிழகச் செய்திகளை கே.ஜி.மகா தேவா தொகுத்துள்ளார்.
பரணில் கண்டெடுத்த பைந்தமிழ்க் கருவூலங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாலாவின் இந்தப் பக்கம் பழந்தமிழை தூசிதட்டித் தருகிறது.அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நவஜோதி ஜோகரட்ணத்தின் (லண்டன்) கதையும், நடேசன், நெடுந்தீவு மகேஷ் ஆகியோரின் சிறுகதைகளும் ஷெல்லிதாசன் கல்வயல் கே. குமாரசாமி, பாலமுனை பாரூக், ஏ.பாரிஸ், த.ஜெயசீலன், பேரா, கோபன் மகாதேவா ஆகியோரின் கவிதைகள் என்பன ஜனவரிமாத இதழில் உள்ளன.
ஊர்மிளா
சுடர் ஒளி 02/02/14
No comments:
Post a Comment