சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் இன்னொன்று எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனவரி,பெப்ரவரி 2014 இதழாக வெளிவந்துள்ள இச்சஞ்சிகை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் எனத் தெரியவருகிறது. இன்னொன்று என்ற இச்சஞ்சிகை ஒன்றைப் பற்றி மட்டுமல்ல என்ற மகுடத்துடன் வெளிவந்துள்ளது.
எல்லாவற்றையும் பேசுவது பற்றி எனும் தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. சமூக மாற்றத்திற்கான அனைத்துத் தளங்களிலும் போராட வேண்டியிருக்கிறது. இயங்கு தளங்களும் அவை செயற்படுவதற்கான இடைவெளிகளும் சுருங்கி வருகின்றன. வாசிப்பதும், கலந்து பேசுவதும் சமூகத்தின் அடிப்படையான பண்புகள். அதை வளர்த்தெடுத்து சமூக மாற்றத்துக்கான பாதையில் பயணிக்க வேண்டியே இன்னொன்று இதழ் வெளி வருகின்றது என தமது சஞ்சிகையின் நோக்கத்தை வெளிப்படுத்தி வாருங்கள்; சேர்ந்து வாசிப்போம்; கலந்து பேசுவோம்; சமூக மாற்றத்துக்காய் உழைப்போம் என ஆசிரியர் குழு அறைகூவல் விடுத்துள்ளது.
எங்கள் கிணறுகளும், குளங்களும் எங்களுக்குச் சொந்தமில்லாமல் போகும் ஒருநாளில் எனும் கட்டுரை தண்ணீர்ப் பிரச்சினையை தெளிவுபட விளக்குகிறது. தண்ணீருக்கு ஏற்படப்போகும் தட்டுப் பாட்டை கட்டியம் கூறுகிறது.
தேர்வு எனும் கொடுங்கனவு மாணவரின் பரீட்சைப் பயத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் உளவு நடவடிக்கை, மின் தட்டுப்பாட்டுக்கு ஒரே தீர்வு அணுசக்திதான, பசுமைக்குடிலும் பறிபோகும் மனித நலமும், முன்னாள் யுத்த வலயங்களிலிருந்து ஒலிக்கும் குரல்கள், உங்கள் தொட்டியில் கலந்திருக்கும் கண்ணீர், வண்ண மயமான அபிவிருத்தி பாசிஸத்தின் அரசியல் முகமுடி ஆகிய பயனுள்ள கட்டுரைகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒரு சில கவிதைகளும் இந்த இதழை அலங்கரிக்கின்றன.
சூரன்
சுடர் ஒளி 23/02/14
No comments:
Post a Comment