Monday, February 17, 2014

நந்தாப்புகழ் பெற்ற நடிகமணி வி.வி.வைரமுத்து -வி.என்.மதியழகன்


வெண்கலக்குரலால் ரசிகர்களின் மனதில்  வாழும் நடிகமணி வி.வி.வைரமுத்துவுக்கு  இலங்கையில்  சிலை வைக்கவேண்டும் என்கிறார் சிரேஷ்ட ஒலி,ஒளி பரப்பாளரான வி.என்.மதியழகன் இவர்,  தற்போது கனடாவில் உள்ள தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகக் கடமையாற்றுகிறார்.
வைரமுத்துவைப் பற்றிப் பேசுகையில்,  தன்னை மறந்து உணர்ச்சி வசப்படுகிறார் வி.என்.மதியழகன். நந்தாப்பு புகழ்பெற்ற  நாயகன் வி.வி.வைரமுத்து என்ற புத்தகத்தை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளார். இப் புத்தகம் முதலில் கனடாவில் வெளியிடப்படும். அதன்  பின்னர் இலங்கை,  ஐரோப்பிய நாடுகள் உட்பட தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும்  வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் உள்ளது.அரிச்சந்திரா, அல்லி அர்ஜுனா, பக்தநந்தனார், பவளக்கொடி, அருணகிரிநாதர், பூதத்தம்பி, கண்டி அரசன் ஆகிய நாடகங்கள் மூலம் மங்காப் புகழ்பெற்றவர் நடிகமணி வி.வி.வைரமுத்து. இவர் நடித்த மயானகாண்டம் 3,000 தடவைக்கு மேலாகவும்,  பக்த நந்தனார் 1,000 தடவைக்கு மேலாகவும் மேடையேறியது.

 யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒலிப்பதிவு நிலையத்தில் ஒருநாள் இரவு ஏழு மணிக்கு வி.வி.வைரமுத்துவின் மயானகாண்டம்  ஒலிபரப்பனார்கள். அதைக் கேட்க கூட்டம் கூடியது. முதியவர்கள் தலையாட்டி  ரசித்ததைப் பார்த்த அக்கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், அதனை நிறுத்திவிட்டு அக் காலத்தில் பிரபலமான சினிமாப் பாடல்  ஒன்றை  அலறவிட்டார். சிறிது நேரம் நின்று பொறுமை இழந்தவர்கள் மெதுவாகக் கலையத்தொடங்கினார்கள். அந்தக் குறும்புக்கார ஊழியர் வை முத்துவின்  மயானகாண்டத்தை விட்ட இடத்தில் இருந்து ஒலிபரப்பனார். கலைந்த கூட்டம் கூடத்தொடங்கியது.
இரசிகர்கள் தம்மை மறந்திருந்த வேளையில்  அந்த ஊழியர், இரண்டு தடவைகள்  வைரமுத்துவின் பாடலை நிறுத்தி சினிமாப்பாட்டை ஒலிபரப்பினார். பொறுமை இழந்த ஒருவர் கடைக்குள்ளே சென்று, வைரமுத்துவின் பாட்டை போடு. இல்லையென்றால்  விடிய கடை இருக்காது என்று மிரட்டினார். அந்த மிரட்டல் கைகொடுத்ததனால் தடைப்படாது வைரமுத்துவின் மயானகாண்டம் ஒலிபரப்பானது.

கேள்வி: நடிகமணி வைரமுத்துக்கு சிலை வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

பதில்: நான் வாழும் கனடாவில் சுமார் 150 நாடுகளின் மக்கள்  உள்ளனர். பல மொழி, மதம், கலாசாரம், கலை, பண்பாடு உள்ள  நாடு  கனடா. கனடாவில் வாழ்பவர்கள் தம் தாய்நாட்டின் அறிஞர்கள், கலைஞர்கள்,  தலைவர்கள், சமூகத்தின் சாதனையாளர்கள் ஆகியோரை கனடா மக்களுக்கும், இளைய சமூகத்துக்கும்  அறிமுகப் படுத்துகிறார்கள். இல்ங்கையின் இரண்டு தேசியக் கலைஞர்கள் கவனிக்கப்படாமல் உள்ளனர். ஒருவர் நடிகமணி வி.வி.வைரமுத்து. மற்றையவர் லயஞான சிரோன்மணி தட்சிணாமூர்த்தி.
கனடாவில் மூன்றாம் வகை புதிய கலாசார விழிப்பொன்று ஏற்பட்டுள்ளது. இளம் சந்ததிக்கு தம் கலாசாரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.  அதன் பாதிப்புத்தான் இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டியது.

கே: வைரமுத்துவின் மீது  அபிமானம் ஏற்படக் காரணம் என்ன?

ப: அவரது குரலின் ஆளுமை. நவீனதொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் தனது வெண்கலக் குரலில் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். அவர் பால பண்டிதர். இந்தியாவில் நாடகம் கற்றவர். தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். காத்தான், வடமோடி, தென்மோடி, காமன் கூத்துகளுக்கு  ஒரு கட்டுக்கோப்பு உண்டு. திறமை உள்ளவர்கள் அதற்குள் நடித்து கைதட்டல் பெறலாம். சங்கரதாஸ் சுவாமிகளின் அடியொற்றிய இந்திய நாடகங்களை தனக்கென ஒரு பாணியில் அமைத்து நடித்தார். அது வைரமுத்துவின் பாணியாக பரிணமித்தது.

கே: வைரமுத்துவுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?  

ப: அவருடைய மணிவிழா காங்கேசன்துறை ராஜேஸ்வரி தியேட்டரில் நடைபெற்றபோது அதை ஒலிப்பதிவு செய்தேன். அது ஒலிபரப்பானபின் தொடர்பு நெருக்கமானது. அதன்பின் வானொலியில்   நாடக மேடைப் பாடல்கள் ஒலிபரப்பானபோது நெருக்கம் அதிகமானது. அவர்  தனது  கைப்பட பல நாடக மேடைப் பாடல்களை எழுதித் தந்துள்ளார். அவற்றைப் பொக்கிஷமாகப்  பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கே! வைரமுத்துவைப் பற்றிய தகவல்களை இளம் சமுதாயத்துக்கு எப்படி வெளிப்படுத்தப் போகிறீர்கள்?

 ப:! நந்தாப்பு புகழ்பெற்ற  நாயகன் வி.வி. வைரமுத்து என்ற புத்தகம் ஒன்றை முதலில் வெளியிடப்போகிறேன்.சுமார் ஒரு வருடமாக இந்தப் புத்தகத்துக்காக  பல ஆய்வுகளை மேற் கொண்டேன். பேராசிரியர் எஸ்.தில்லைநாதன்,  குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரியர் சு.வித்தியானந்தன், பி.விக்னேஸ்வரன் ஆகியோரின் கட்டுரைகள் வைரமுத்துவின் கையெழுத்துப் பிரதிகள் என்பனவும் இப் புத்தகத்தில் இடம்பெறும். அடுத்ததாக அவரது வெண்கலச்சிலை ஒன்றை இலங்கையில் நிறுவவேண்டும். ஒரு குழுவாகச் செயற்பட்டு இதனைச் செய்ய வேண்டும்.



கேவைரமுத்துக்குரியமுக்கியத்துவம்இலங்கையில்கொடுக்கப்படவில்லை என நினைக்கிறீர்களா?

ப:புதிய சமுதாயத்துக்கு வைரமுத்து வைப்பற்றி அதிகம் தெரியாது. வைரமுத்து, தட்சணாமூர்த்தி,  டானியல். டொமினிக் ஜீவா போன்றவர்களின் வாழ்க்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும்.

கே: கனடாவில் வைரமுத்துவின் நாடகங்களை மேடையேற்ற முயற்சி எடுத்தீர்களா? 

ப:! அங்கு நடிகர்களை சேர்த்து ஒத்திகை பார்ப்பது சற்றுச் சிரமமானது. அங்கு வாழும் நாடகக் கலைஞர்கள்  ஒன்றிணைத்து நாடகங் களை  ஏற்பாடுசெய்ய விரும்புகிறேன். ஜேர்மனியில் அவரது   மகன் சாரங்கன் தனது பிள்ளைகளுடன் வசந்தகான சபா மூலம் நாடகங்களை மேடையேற்றுகிறார்.   கனடாவின் வானொலி,  தொலைக்காட்சிகளில் கலை கலாசார நிகழ்ச்சிகளின்போது நமது  மரபுவழிக்  கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறோம்.   நடமாடி ராஜரத்தினத்தின் மகள் பூங்கொடி ராஜரத்தினம் சில நிகழ்ச்சிகளை செய்கிறார்.  

கே: உங்கள் மனதில் அடிக்கடி தோன்றும் பழைய சம்பவங்கள் எவை?

ப: பல சம்பவங்கள் அடிக்கடி வந்து போகும். வைரமுத்து என்னை செல்லத் தம்பி என்று அழைப்பார். கே.எம். வாசகரை பெரிய தம்பி என்பார்.  திருமதி நவநீதகிருஷ்ணன் தம்பதிகளின் பேட்டியை ஒலிபரப்பு செய்தபின் தினகரனின் அன்றைய ஆசிரியர் ஆர்.சிவ குருநாதன் அதைப் பற்றி ஆசிரிய தலையங்கம் எழுதினார். கலை கலாசாரங்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இளைஞர்களும் அரசியல்வாதி களும்  சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று குறிப்பட்டார்.

கே: வைரமுத்துவை கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்?

ப:!  சங்கீத கோவலன் நாடகத்தை ஒலிப் பதிவு செய்வதற்காக கொழும்புக்கு வந்தார். ஒலிப்பதிவுக்கு  முதல் நாள் மஹியங்கனையில் கம்உதாவ நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபவாஹினி ஒளிபரப்புக்காக  நான் மஹியங்கனைக்குச் செல்லவேண்டிய நிலை. தயாரிப்பாளர் சோம சுந்தரம், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர்  ஒலிப்பதிவு செய்வார்கள் எனக் கூறினேன். நான் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கடிதம் கிடைக்க முதல் கொழும்புக்கு வந்துவிட்டார். வீட்டுக்குப் போய் கடிதத்தைப் பார்க்கிறேன் என்றார். கடிதத்தைப் படிக்காமலே போய் விட்டார். இலங்கை ரூபவாஹினியில் ஒலிபரப்பான முதல் மரபு வழி நாடகம் அவருடையது.

கே: வைரமுத்துவின் உங்கள் கருத்துக்கு இலங்கையில் வரவேற்பு உள்ளதா?

ப ஆம், பலரும் வரவேற்றார்கள். ஊடகங்கள் அனைத்துக்கும்  முக்கியத்துவம் கொடுத்தன.  கலைகளை வளர்க்க வேண்டியது ஊடகங்களின் கடமை. எந்தையும் தாயும் ரசித்து மகிழ்ந்து இரசித்த  கலையை நாம் பாது காக்க வேண்டும். இலத்திரனியல் ஊடகங்கள் மண்வாசனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது மக்கள் மனதில் ஆழமாகப் பதியும். ஈழத்து மெல்லிசைப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன அன்று வானொலியில் ஒலிபரப்பான போது  மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. நமது கவிஞர், பாடகர், நமது இசை என்று நாம் பெருமைப்படவேண்டும்

ரவி
 சுடர் ஒளி 16/02/14 

No comments: