தீவிரமடையும் அரசியல் பழிவாங்கல்கள் நீதிமன்றத்தை நாடும் திமுகவினர்.
திருமாவளவனுக்கு எதிராகக் கடுமையாகக்
குரல் கொடுக்கும் வைகோ.
அதிமுகவில் இருந்து ஊடுருவியவர்களின் செல்வாக்கும்,
பணபலமும் தங்களை விழுங்கி விடுமோ என தவெகவின் விசுவாசிகள் அச்சமடைகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தவெகவைத் தேடிச்செல்லும் அரசியல்வாதிகளின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக தவெக ஆரம்பமானபோது தோள் கொடுத்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காங்கிரஸ்,விசிக,கொம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் என்பன தவெகவுக்குள் ஐக்கியமாகின. அதிமுகவில் இருந்து சார சாரயாக தவெகவை நோக்கிச் செல்கின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதச் சம்பளம் பெற முன்னரே இராஜினாமாச் செய்ததனால் மக்கள் மத்தியில் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் வேறு ஏதேனும் டீல் இருக்குமா எனவும் கேட்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர். எந்த வித பொறுப்பையும் எதிர் பார்க்காமல் தவெகவில் இணைந்திருப்பார்களா என்ற கேள்விக்கு பதில் இன்னமும் கிடைக்கவில்லை.
எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட நான்கு எம்எல்ஏக்கள் அமைச்சர் கனவில் தவெகவில் இணைந்துள்ளதாக பேசப்படுகிறது. இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் வலுவான இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்றும் மனக்கோட்டை கட்டுகின்றனர்.பேச்சுவார்த்தை இணக்கம் ஏற்படாததன் காரணமாகவே இணைப்பு கால தாமதமானது.
அதிமுகவிலிருந்து தற்போது தவெகவில் தஞ்சம் புகுந்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள்,வயதில் மூத்தவர்கள், உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்கள். அதேவேளை கையில் பசை உள்ளவர்கள். தமது வருமானத்தைப் பெருக்கவும், ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடவும் தவெகவை அவர்கள் பயன் படுத்துவார்கள். விஜய் ரசிகர் மன்றம் , மக்கள் இயக்கம் ஆகியவற்றில் ஆரம்பம் முதலே இருந்து காலம் காலமாக விஜய்க்கு உழைத்து, தவெகவுக்கு முதுகெலும்பாக இருக்கும் தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிமுகவினரின் படையெடுப்பால் கலக்கமடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், ஒன்றிய குழுத் தலைவர், ஊராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவி கனவுடன் இருக்கும் தவெகவினருக்கு அதிமுகவினரின் வருகை பேரிடியாக விழுந்துள்ளது.
அடுத்து நடைபெறும் சிறிய தேர்தல்களில் சுமார் 10 ஆயிரம் பதவிகள் நிரப்பப்ப்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய ஊராட்சி என கட்சி ரீதியான பதவிகள் உள்ளன கட்சி சார்பற்ற தேர்தல் நடக்கும் கிராம ஊராட்சிகளிலும், கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும். எனவே, அதிகாரமிக்க இந்த ஆயிரக்கணக்கான பதவிகள் தங்களுக்கு கிடைத்தால் கட்சியை வலுப்படுத்த இன்னும் உதவும் என தவெகவினர் நம்புகின்றனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஊடுருவியவர்களின் செல்வாக்கும், பணபலமும் தங்களை விழுங்கி விடுமோ என தவெகவின் விசுவாசிகள் அச்சமடைகின்றனர்.
மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாக பொறுப்புகளில் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் நியமிக்கப்படுவார்களோ என தவெகவினர் கலவரமடைந்துள்ளனர்.
எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்துவிட்டு வந்த அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி கொடுப்படும் என்றே சொல்லப்படுகிறது.
வந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் அவர்களின் செல்வாக்கு என்றைக்கும் சரிவடையாது என அமைச்சர் ஆனந்த் பகிரங்கமாகத் தெரிவித்ததனால் தவெகவினர் கலக்கமடைந்துள்ளனர். உள்ளுராட்சித் தேர்தலில் அதிமுக அணி, தவெக அணியை விழுங்கி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் தாவிவிட்டனர். இ்ந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் தவெக-விற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.வைகோவும் விஜய்யின் கூடாரத்தில் இணைந்து விட்டார்.
வெறும் ஆதரவு இல்லாமல் கூட்டணியாகச் செயற்பட்டால் தவெகவின் பிடி இறுகும் என எதிர்பார்த்த விஜய், கூட்டணியின் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார். கூட்டணியின் பெயர் என்ன?, ஒருங்கிணைப்பாளர் யார்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்பாளர் பெயருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அல்லது விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரில் இருவரில் ஒருவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை நியமிக்க சிலர் பரிந்துரைத்தனர்.
இந்த விவகாரத்தால் கூட்டணி கட்சியினர் இடையே புகைச்சல் ஏற்பட்டது. விசிக-வினர் திருமா-வை நியமிக்க வேண்டும் என்றும், மதிமுக-வினர் வைகோ-வை நியமிக்க வேண்டும் என்றும், காங்கிரஸார் சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதால் இழுபறி நீடிக்கிறது.
இந்தப் போட்டியில் சிதம்பரத்தை விஜய் தேர்ந்தெடுக்க மாட்டார். தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க ராகுல் காந்தி முடிவு செய்தபோது இடையில் புகுந்து குழப்பியடித்தவர் சிதம்பரம். தவெகவுடன் காங்கிரஸ் இணைந்திருந்தால் அறுதிப் பெரும்பன்மை கிடைத்திருக்கும். அதனால் சிதம்பரத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காது.
எந்த கட்சியினரும் மனம் சங்கடப்படாமல் இருக்கும் வகையில், மூவரையும் தவிர்த்து வேறு ஒருவரை நியமிக்கவிஜய் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணியில் உள்ள மூத்த தலைவரான காதர் மொய்தீன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பதாலும், அவருக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி அளித்தால் சிறுபான்மையினர் மத்தியிலும் விஜய்யின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்றும் தவெக தரப்பில் கருதப்படுகிறது.
இதேவேளை தவெக கூட்டணியின் முக்கிய தலைவர்களாக உள்ள திருமாவளவனும், வைகோவும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவது தவெகவுகு பின்னடைவாக உள்ளது. அடுத்து நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் தற்போதைய தவெக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுக அரசின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் அரசுப் பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கு 'மகளிர் விடியல் பயணம்' என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் பெயரிலிருந்து 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, இனி வெறும் 'மகளிர் பயணம்' என்ற பெயருடன் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசு பஸ்களில் இந்தத் திட்டப் பெயர் மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பேருந்துகளின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பழைய டிஜிட்டல் ,சாதாரணப் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு, புதிய பெயரான 'மகளிர் பயணம்' என்பது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், அவர் முதன்முதலில் கையெழுத்திட்ட முக்கியக் கோப்புகளில் இந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டமும் ஒன்றாகும். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும், வேலைக்குச் செல்லும் பெண்களின் பயணச் செலவைக் குறைப்பதற்கும் இத்திட்டம் பெரும் உதவியாக இருந்தது. திமுக அரசு தனது சாதனையாகவும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றமாகவும் இந்த 'விடியல்' பயணத் திட்டத்தை முன்வைத்து வந்தது. பெண்களுக்கு விடியல் இல்ல்லையா என்ற க விமர்சனம் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களில் முக்கியமானது 'நான் முதல்வன்'. 2022 அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டமாக துவங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. இதனிடையில் ஆட்சி மாறியதற்கு பின்பாக 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது.
அதன் பெயர் 'TN Skill Corporation' என மாற்றப்பட்டது. அதோடு முகப்புப்படம், பேனர் ஆகியவற்றிலும் இந்த புதிய பெயரே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டம் சமபந்தமாக பதிவிடப்பட்டு இருந்த வீடியோக்கள் ஆகிய பழைய தரவுகளும் நீக்கப்பட்டது.
புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு மே 15 ஆம் தேதியில் இருந்தான பதிவுகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. மாணவர்கள் சாதனைகள் அடங்கிய ஆவணங்கள் எப்படி நீக்கலாம் என பலரும் சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழுப்பினார்கள். அதோடு மு.க. ஸ்டாலினின் பெயர் இல்லாத போது, நான் முதல்வன் எனும் பெயரினை எதற்காக மாற்ற வேண்டும். இந்த பெயரை சொன்னாலே மு.க. ஸ்டாலின் பெயர் தான் நியாபகம் வரும் என்பதால் மாற்றி இருக்கிறீர்களா எனவும் திமுகவினர் கேள்வி எழுப்பினார்கள்.
எ.வ.வேலு, செந்தில் பாலாஜி,அவருடைய தம்பி ஆகியோரைக் கைது செய்தும் தவெகவின் திட்டங்களை திமுக தற்போதைக்கு முறியடித்துள்ளது. அரசியல் பழிவாங்கல்களிலும், ஆய்வு என்ற பெயரில் மீறப்படும் மரபை நடுநிலையாளர்கள் ரசிக்கவில்லை. விஜய் யிடம் இருந்து எதிர்பார்த்த மாற்றம் இது அல்ல என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இவற்றை எல்லாம் சமாலிக்க வேண்டிய பெரும் பொறுப்பு முதல்வர் விஜய் யிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரமணி
12/7/26


No comments:
Post a Comment