Thursday, July 2, 2026

எம்பாப்வே இரட்டைக்கோல் வென்றது பிரான்ஸ்


 நியூயார்க் நியூ ஜெர்சியில்  சுவீடனை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்  3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி ,   உலகக்  கிண்ண  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  

முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, 65-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ், பிராட்லி பார்கோலாவுக்கு பந்தை வழங்க, இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது.

74-வது நிமிடத்தில் எம்பாப்பேவுக்கு ஓலிஸ் மற்றொரு கோலை அடிக்க உதவினார். இதன் மூலம், பட்டத்தை வெல்லும் தகுதி தனக்கு உண்டு என்பதை பிரான்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.     

இப்போட்டியில் அடித்த  இரண்டு கோல்களின் மூலம் உலகக் கிண்ண  வரலாற்றில் எம்பாப்பே தனது கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியின் 19 கோல்கள் என்ற சாதனையை நெருங்கியுள்ளார். மேலும், உலகக் கிண்ண நொக்கவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (9 கோல்கள்) அடித்த வீரர் என்ற தனது சாதனையை எம்பாப்பே மேலும் நீடித்துள்ளார்.நான்கு போட்டிகளில் இது அவரது மூன்றாவது இரண்டு கோல்கள் ஆகும்.

தனது சக வீரர்களுக்குப் பல உதவிகளைச் செய்தபோதிலும், ஒலிஸால்  கோல் அடிக்கவில்லை.முதல் பாதியில் அவர் அடித்த அபாரமான பைசைக்கிள் கிக், கோல் கம்பத்தில் பட்டது.மைக்கேல் ஒலிஸ் ஐந்து கோல்களுக்கு உதவியுள்ளார்.

இந்தத் தொடரில் 6 கோல்களுடன் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்திலும் அவர் முதலிடத்தில் உள்ளார்.  இந்தத் தொடரில் பிரான்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 13 கோல்களை அடித்து, 2 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது.

 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். விரிவாக்கப்பட்ட 104-போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் மொத்த பார்வையாளர் எண்ணிக்கையை 5 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியது.

ஜூலை 4 ஆம் திகதி நடைபெறும் அடுத்த சுற்றில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொள்ளும்.

  

 

No comments: