Tuesday, August 25, 2026

மத்திய அரசைக் கவர தமிழக அரசின் இணக்க அரசியல்


 தவெக ஆரம்பிக்கப்பட்டபோதும்தமிழக தேர்தல் பிரசாரத்தின் போதும்  பாரதீய ஜனதாவை பெருமெடுப்பில் விஜய் எதிர்க்கவில்லை. திமுகவை நெருக்கியது போல  பாரதீய ஜனதாவுக்கு எதிராகக் கிளர்ந்து எழவில்லை.

தமிழக ஆட்சி பீடம் ஏரியதும் முதல்வர் விஜய்யுடைய நிலைப்பாட்டில் மெது மெதுவாக மாற்றம் ஏற்பட்டது. கர்நாடகத்தில் நடந்த   தென் மண்டல முதல்வர்களின் மாநாட்டில்    அமித்ஷாவுடன்  விஜய் மிக நெருக்கமாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தென் மண்டல முதல்வர்களின் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்குச் சென்றபோது அவரை அமைச்சர்கள் சென்று வரவேற்பார்கள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் முதல்வர் விஜய் முன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாகவே மத்திய அரசுடன் இணக்கமான போக்கில் இருப்போம் என்று காட்டும் வகையில் விஜய் செயல்பட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்போம் என்று கூறி வருகிறது. முதல்வர் விஜய்யும் ஒவ்வொரு மேடைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதேபோல் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று பேசி வருகிறார். இதனை பாஜகவினரும் வரவேற்றனர்

 டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற லோக் ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று இருந்தார். இருப்பினும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை விஜய்யால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் கோவளத்தில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு  நடைபெற்றது.  நான்கு  மாநில முதல்வர்கள், தெலங்கானா துணை முதல்வர்  புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  ஆகியோர் பங்கேற்றனர்.

 இந்த மாநாட்டில் பங்கேற்க அமித்ஷா சென்னை விமான நிலையத்தில்  சென்று இறங்கியபோது அவரை தமிழக அரசு அதிகாரிகளும், பாஜக நிர்வாகிகளும் வரவேற்றனர். இதன்பின் கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்யில்  அமித்ஷாவை  முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.

தன்னை வரவேறக் விஜய் வருவார் என்பதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை  என்று அக்கட்சியினர் சொல்லுகின்றனர்.  அமித்ஷாவை வரவேற்க முதலில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை அனுப்பவே திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக இணக்கமான போக்கை கடைபிடிப்போம் என்று விஜய் கூறி இருந்திருக்கிறார். இதனால் கடைசி நிமிடத்தில் விஜய் நேரடியாக வரவேற்கச் சென்றது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக டெல்லியின் கோபத்திற்கும் ஆளாக தேவையில்லை என்ற எண்ணமும் தவெக தலைமை மத்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெரும்பான்மை இல்லாததால் தவெகவும் அரசியல் ரீதியாக இணக்கமான போக்கை கடைபிடிக்க முடிவு செய்துவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நேற்றிரவு அமித்ஷாவுடன் சில நிமிடங்கள் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு என்று பிரத்யேகமாக வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தவெக - பாஜக இடையில் உறவு உருவாகி இருக்கிறதா என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.

நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று சுதந்திர தின உரையில் கூறியிருந்தார் விஜய். மத்திய அரசின் இணக்கம் வேண்டுமென்றால், அமித் ஷாவின் பார்வை நிச்சயம் வேண்டும். அந்தப் பார்வையை... அந்த இணக்கத்தை அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு ஏற்படுத்தித் தருமா என்பதைப் பார்க்க வேண்டும்.

தென்மாநிலம்என்று பெயர் குறிப்பிடுவது போலவே, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகியவற்றின் முதலமைச்சர்களும், உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதலமைச்சரான பிறகு, இதுவரை அமித் ஷாவை விஜய் சந்திக்கவே இல்லை. அதனால் இந்த மாநாட்டை தமிழகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

கர்நாடகாவுடன் காவிரி அணைப் பிரச்னை, தமிழர்கள் மூவரைச் சுட்டுக் கொன்றப் பிரச்னை மிகத் தீவிரமாகத் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியல் களத்தில் களமாடி வருகிறது. இந்தப் பிரச்னை இந்தக் கூட்டத்தில் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதற்கு அமித் ஷாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் உற்று நோக்குகிறார்கள்.

காங்கிரஸ் கேரளத்தை ஆளுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், விஜய்யும் இணக்கமான உறவில் இருக்கிறார்கள். தெலங்கானாவை ஆளுவதும் காங்கிரஸே.தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆளும் ஒரே மாநிலம் ஆந்திரா.

  விஜய்யை நம்பி தவெக உடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளதாம். விஜய்யின் எழுச்சியை பார்த்து ராகுல் காந்தி கடுமையாக அப்செட் ஆகி உள்ளாராம். தேசிய அரசியலில் காங்கிரஸ் மேலிடம் வகுத்த கணக்குகள் ஒவ்வொன்றாகத் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.. ஸ்டாலினின் செல்வாக்கு ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளுவதாக காங்கிரஸ் தரப்பில் நீண்டகாலமாக ஒரு புகைச்சல் இருந்துவந்தது

 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளையும் கைப்பற்றி, மோடி-ஷா கூட்டணிக்குத் தென்முனையில் இருந்து சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்டாலின், தேசியக் கூட்டணியின் தவிர்க்க முடியாத முகமாக மாறினார். இந்திய கூட்டணியின் தேசிய முகமாக ராகுலை விட ஸ்டாலினே முன்னிலையில் இருந்தார். திமுகவின் இந்த அதீத ஆதிக்கத்தால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சிறிய கட்சியாகவே சுருங்கிப்போனது.தேசிய அளவிலும் ராகுலுக்கு பெரிய முகம் இல்லாமல் போனதாக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கருதியது. இதன் காரணமாகவே ராகுல் - ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டது.

 ஸ்டாலினின் நிழலில் இருந்து விடுபட்டு, புதிய கூட்டணிக் கணக்கு மூலம் தென் இந்தியாவில் தனது இருப்பைத் தக்கவைக்க ராகுல் காந்தி போட்ட திட்டம் தற்போது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே, விஜய் தலைமையிலான தவெக எடுத்துவரும் தேசிய அளவிலான முன்னெடுப்புகள் காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெறும் மாநில அளவிலான ஆட்சியாக மட்டுமே தவெகவை மட்டுப்படுத்த விஜய் தரப்பு தயாராக இல்லை என்பதையே தற்போதைய நகர்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக, தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ,அவருக்கு நெருக்கமான ஐடி விங் அமைப்புகள் சில விஜய்யை வடஇந்தியாவில் பிராண்டு செய்து வருகின்றனர். இந்தி பேசும் வட மாநிலங்களிலும் பெருநகரங்களிலும் செல்வாக்கு மிக்க இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் பிம்பத்தை கட்டமைத்து வருகிறது.

தென் மாநிலத்தில் இருந்து பிரதமர் உருவாகவேண்டும் என ஆதவ் அர்ஜுனா                             சபதம் ச் எய்ததால் ராகுல் காந்தி அதிர்ச்சியடைந்துள்ளார். காங்கிரஸ் காரர்களே தயங்கியவேளையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி  என வழி மொழிந்தவர் ஸ்டாலின். இப்போ  பிரதமர் கனவில் விஜய் இருப்பதால் ராகுலுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் முக்கிய ஆலோசகரான ராதன் பண்டிட் உள்ளிட்டோரும் விஜய்யை 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். வட இந்தியாவில் பாஜகவை வீழ்த்தும் அளவுக்கு விஜய்க்கு பான்-இந்தியா அளவில் ஒரு கவர்ச்சிகரமான பிம்பம் உள்ளதாகவும், காங்கிரஸின் வழக்கமான முகங்களைவிட விஜய் போன்ற ஒரு புதிய முகம் தேசிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் ராதன் பண்டிட் தரப்பு அழுத்தமாக முன்வைத்து வருகிறது. இந்த நகர்வு ராகுல் காந்தியின் தேசியத் தலைமையை, அவரின் பிரதமர் ஆசையைப் உரசிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிரான தேசிய கூட்டணியின் ஒற்றை முகமாக ராகுல் காந்தியை நிலைநிறுத்த நினைத்த காங்கிரஸ் தலைமைக்கு, விஜய்யின் இந்த அதிரடி தேசிய அரசியல் புதிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

  இந்த விவகாரத்தில் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அகில இந்தியத் தலைமையும் கடுமையான தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளன. தமிழகத்தில் தவெக கூட்டணியில் அங்கம் வகிப்பதால், விஜய்யின் தேசிய ஆசைகளை பகிரங்கமாக எதிர்க்கவும் முடியாமல், அதேநேரம் ராகுல் காந்தியின் பிரதமர் கனவை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவித்து வருகின்றனர்.

ஸ்டாலினின் ஆதிக்கத்தைத் தவிர்க்க நினைத்து விஜய்யுடன் கைகோர்த்த ராகுல் காந்தி, இப்போது அதைவிடப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். விஜய்யின் இந்த அரசியல் நகர்வு காரணமாக 2029- நோக்கிய களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ், தவெக ஆகியவற்றுக்கு  இடையே ஒரு மறைமுக அதிகாரப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

ரமணி

23.8.26

 

No comments: