Thursday, January 30, 2020

சூப்பர் ஓவரில் வென்றது இந்தியா


இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நடந்த மூன்றாவது ரி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. ரி20 போட்டியின் 20 ஆவது ஓவரின் கடசிப் பந்துவரை நியூசிலாந்தின் பக்கமே வெற்றி இருந்தது. ஒரு பந்து ஒரு ஓட்டம் என்ற நிலையில் ஷமியின் துல்லியமான பந்து வீச்சினால் நியுஸிலாந்துன் விக்கெற்றும் வெற்றியும் தகர்ந்ததன.

20 ஆவது ஓவரில் ஷமி இரண்டு விக்கெற்களை வீழ்த்து நியூஸிலாந்தின் வெற்றியைத் தடுத்தார். சூப்பர் ஓவரில் ரோஹித் தொடர்ச்சியாக இரண்டு சிக்கஸ்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.
சூப்பர்  ஓவரில் இரண்டாவதாக இந்தியா துடுப்பெடுத்தாடியது. முதல் நான்கு பந்துகளில் நியூஸிலாந்தின் வசம் வெற்றி இருந்தது. கடைசி இரண்டு பந்துகளிலும் ஹிற்மன் ரோஹித் சிக்ஸார் அடித்ததனால் இந்தியா வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் கடைப் பந்துல் சிக்ஸர் அடித்து இந்தியா வெற்றி பெற்றது. ஆறு சூப்பர் ஓவர்  போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.
 இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 ஆட்டம் ஹமில்டனில்   நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற   நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆக்லாந்தில் நடைபெற்ற இருரண்டு  ரி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என ரி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது.
இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெற் இழப்பின்றி 42  ஓட்டங்கள் எடுத்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு  ஓட்டம் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி  காட்டினார்.  . அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ஓட்டங்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெற் இழப்பின்றி 69 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி.

ரி20 ஆட்டத்தின் பவர்பிளேயில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் ரோஹித் பெற்றார். இதற்கு முன்பு அதிகபட்சமாக தவான் 48 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 
மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக 10,000 ர ஓட்டங்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 
19 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ராகுல் 9-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஓட்டம் குவிக்கும் வேகம் குறைந்து போனது. கோலிக்குப் பதிலாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே,  தடுமாறினார். 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பு ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி சில ஓவர்களுக்குத் தடுமாற ஆரம்பித்தது. அவருடைய விக்கெட்டையும் பென்னட் தான் வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்ததால் அடுத்து வந்த கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார்கள். ஏழு ஓவர்களுக்குப் பிறகு 11 ஆக இருந்த ரன்ரேட் 11 ஓவர்களுக்குப் பிறகு 9 ஆகக் குறைந்தது. இரு ஓவர்கள் நிதானமாக விளையாடிய கோலி, ஓட்டம் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.

16 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலி, 38 ஓட்டங்களில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார் கோலி. 
20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 10, மணிஷ் பாண்டே 14 ஓட்டங்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து அணிக்கு பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்கள் கிடைத்தது. கப்தில் 21 பந்துகளில் 31 ஓட்டங்கள்  எடுத்தார். மன்ரோவை 14 ஓட்டங்களில் வீழ்த்தினார் ஜடேஜா.   அவர் சிறப்பாகப் பந்துவீசியது இந்திய அணிக்கு மிகவும் உதவியது. விரைவாக ஓட்டங்கள் குவிக்கக் களமிறக்கப்பட்ட சான்ட்னர் 11 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கிராண்ட்ஹோம் 12 பந்துகளில் 5 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
எனினும் நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கினார். 28 பந்துகளில் அரை சதமெடுத்த வில்லியம்சன், தொடர்ந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவைக் குறி வைத்து ஓட்டங்கள் குவித்தார். பும்ரா பந்துவீச்சில் 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்கள் எடுத்தார் வில்லியம்சன். அதில் 5 பவுண்டரிகள். 
கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்கிறபோது ஷமி பந்துவீசினார். முதல் பந்திலேயே டெய்லர் சிக்ஸர் அடித்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள். ஆனால், 5 பந்துகளில் 3 ஓட்டங்கள் என்கிற எளிதான நிலையிலிருந்து ஆட்டம் மாறியதுதான் அதிசயம். 3-வது பந்தில் 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 48 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்தார் வில்லியம்சன். 

அடுத்து வந்த சைஃபர்ட், 2 பந்துகளிலும் தடுமாறினார். கடைசிப் பந்தை எதிர்கொண்டார் டெய்லர். அப்போது ஆட்டம் சமனில் இருந்தது. 1ஓட்டம் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசிப் பந்தில் டெய்லரை 17 ஓட்டங்ககளில் வெளீயேற்றுனார். ஷமி. இதனால் ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது. 
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, பும்ராவின் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் எடுத்தது. இந்த முறையும் பும்ராவின் பந்துவீச்சில் 1 ஒரு சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்து அசத்தினார் வில்லியம்சன்.
18 ஓட்டங்கள்  இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, முதல் 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தான் எடுத்தது. பிறகு ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி இரு பந்துகளில்  10 ஓட்டங்கள் தேவை என்கிற பொறுப்பு ரோஹித் சர்மா வசம் சென்றது.
செளதி வீசிய 5-வது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரோஹித். கடைசிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவை என்கிற நிலையில் மற்றுமொரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா.
யாரும் எதிர்பாராதவிதத்தில் 3-வது ரி0 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வென்றுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 
மிகச்சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

Wednesday, January 22, 2020

ஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.


 வாசகர்,அரசியல் கட்சியின் ஆதரவாளர், ரசிகர்,உதைபந்தாட்ட வீரன், நடிகர்,ஓவியர் என பல துறைகளில் தடம் பதித்தவர் பேரின்பநாதன். பேரின்பம், மகேந்திரன் என  அவரை அழைப்பார்கள்.வடமராட்சி  வதிரியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதியின்  மகன். சிறு வயதில் இருந்தே வாசிப்பு இவருடன் பயணிக்கிறது. தேவரையாளி இந்துக் கல்லூரியின்  முன்னாள் அதிபர்   எம்.எஸ்.சீனித்தம்பி அறிமுகப்படுத்திய வாசிப்புக்கு தாய் மாமன் சி.க. இராஜேந்திரன் வலுவூட்டினார். அவர் வாங்கும் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும்  பேரின்பநாதனின் வாசிப்புக்கு உயிரூட்டின.

மாமா, கிளாக்கர் என உறவினர்களால் செல்லமாக அழைக்கப்படும் சி.க.இராஜேந்திரனின் கொம்யூனிச அரசியல் சாயம் பேரின்பநாதனின்  மீதும் படிந்தது. யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் சி.க.இராஜேந்திரனுடன் சென்றதால்  எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரின் நட்பு பேரின்பநாதனுக்குக் கிடைத்தது.

பாடசாலை நாட்களிலும் அதன் பின்னரும் பல நாடகங்களில் நடித்தார். இளம் வயதில் டையமன் விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடினார். பின்னர் விளையாட்டைக் கைவிட்டார். ஆனால், ரசிப்பதை அவர் இன்னமும் கைவிடவில்லை. வடமராட்சியிலும்  யாழ்ப்பாணத்திலும் முக்கியமான உதைபந்தாட்டப் போட்டியென்றால் அவரை  அங்கே காணலாம். கொழும்பிலும், நீர்கொழும்பிலும் அவர் வாழ்ந்த காலத்தில் முக்கியமான உதபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்து ரசித்தவர்.   வெளிநாட்டு உதைபந்தாட்ட அணி விளையாடினால், அவசரமான  வேலையாக  இருந்தாலும் அதனைக் கைவிட்டு விளையாட்டைப் பார்க்கச் சென்று விடுவார்.


 பத்திரிகைகளில் ஓவியம், விளையாட்டு பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் பிரசுரமானால் அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். ஓவியம், நடிப்பு  இரண்டிலும் பாடசாலை நாட்களில் தனது திறமையை வெளிப்படுத்திய பேரின்பநாதன், பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னும் அவற்றைக் கைவிடவில்லை. நடிப்பு அவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. ஓவியம் அவரது வாழ்வை வளப்படுத்தியது.

கேள்வி: ஓவியம் , நடிப்பு இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் தடம் பதித்தீர்கள். இது எப்படிச் சாத்தியமாகியது?

பதில்:   தேவரையாளி இந்துக் கல்லூரியில் படித்தபோது  அங்கு கடமையாற்றிய ஆசிரியர்கள்தான் என்னை வழி நடத்தினார்கள். அதிபர் சீனித்தம்பி, சைவப்புலவர் வல்லிபுரம்,ஆ.ம.செல்லத்துரை, இளவரசு ஆழ்வாப்பிள்ளை,  பெ.அண்ணாசாமி, சூ. ஏகாம்பரம்,சி.திரவியம், பொன்னம்மா ரீச்சர்,மீனாட்சியம்மா ரீச்சர் ஆகியோர் தான் என்னை உருவாக்கினார்கள். பரிசளிப்பு விழாவில் ஆழ்வாப்பிள்ளை மாஸ்ரரின் ஆங்கில நாடகங்களில் பெண் வேடத்தில் நான் நடித்தேன். அந்தக் காலம் நடைபெற்ற நாடகப் போட்டிகளிலும்  நான்  நடித்து பரிசு பெற்றேன். அண்ணாசாமி, ஏகாம்பரம் ஆகிய இருவரும் எனது ஓவியத்தை மெருகேற்றினார்கள். பென்சிலால் வரைவது எப்படி, வோட்டர் கலரால் வரைவது எப்படி, காலையில், மாலையில், இரவில் எப்படி வர்ணம் கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லித்தந்தார்கள். அவர்களின் வழிகாட்டலில் பல போட்டிகளில் பரிசு பெற்றேன்

கேள்வி:  ஓவியம் வரைவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
பதில்:  சிறுவயதில்  பொருள்,உருவம் என்பனவற்றைப் பார்த்து  வரைந்துகொண்டிருப்பேன். அந்தப்பயிற்சியே எனக்கு ஊக்கமாக அமைந்தது. முதலில் படங்களைப் பார்த்து ஆரம்பமான வரைதல் ஒருவரைப் பார்த்து வரையும் படிமுறையை வழங்கியது. கல்கி,கலைமகள், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளை மாமா வாங்குவார்.  அவற்றை வாசித்தபின்னர் அதிலுள்ள படங்களை உன்னிப்பாக அவதானித்து நுணுக்கங்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது வேலையாகப் போனால், தியேட்டருக்குப் போய் மணியத்தின் புதுப்பட கட் அவுட்டைப் பார்ப்பேன். கொழும்பில் வேலை செய்யும்போதும் கட் அவுட் பார்ப்பதற்காகத் தியேட்டருக்குப் போவேன்.

கேள்வி:  பாடசாலைக்கு அப்பால் ஓவியத்தை யாருடம் பயின்றீர்கள்?
பதில்: ராஜேஸ்கண்னனின் தகப்பன் ராஜேஸ்வரன் அண்ணாவுடனும்  கரவெட்டி இளங்கோவனுடனும் இணைந்து ஓவியம் வரைந்ததால்  சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.  வீட்டுக்கு வர்ணம் பூசும் கலையை  இளங்கோவன் அறிமுகப்படுத்தினார். அவருடன் வேலை செய்ததால் வர்ணங்களைக் கலக்கும் முறையை கற்றுக்கொண்டேன்.
கேள்வி:  இயற்கைக் காட்சிகள் தவிர்ந்த வேறு என்ன மாதிரியான படங்களை உருவாக்கினீர்கள்.?

பதில்: பிள்ளையார்,சிவன்,பார்வதி,முருகன் போன்ற தெய்வங்களையும், காந்தி,நேரு,கென்னடி,காமராஜர், அண்ணா, லிங்கன் போன்றவர்களையும் எமது ஊர் பூவற்கரை பிள்ளையார் ஆலயத்துக்கான திரைச்சீலை ஒன்றையும் வரைந்தேன். பூவற்கரை ஆலய கும்பாபிஷேகத்தின்போது அமரர் தெய்வேந்திரத்துடனும் இளைஞர்களுடனும் இணைது வர்ணம் பூசினேன். தவிர நெல்லியடி மஹாத்மா வீதியில்  உள்ள ஐயனார் ஆலயத்தில் தெய்வத்திரு உருவங்களையும் வர்ணப்பூச்சையும் செய்தேன். யுத்தகாலத்தின் போது உயிர் நீத்தவர்களின் கட் அவுட்களை உருவாக்கிக் கொடுத்தேன். நான் வரைந்த பண்டார வன்னியனின் படங்கள் வன்னிப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

கேள்வி: ஓவியத்துக்காக நீங்கள் பயன் படுத்தும் வர்ணம் எத்தகையது?
பதில்:  பென்சில்,ஒயில் பெயின்ற், வோட்டர்  பெயின்ற் இந்தியன் இங்க் என அனைத்திலும் ஓவியம் வரைந்துள்ளேன்.
கேள்வி: மக்கள் மத்தியில் உங்களுடைய ஓவியத்துக்கான வரவேற்பு எப்படி இருந்தது?

பதில்: யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபை நடத்திய கண்காட்சியில் பனை சம்பந்தமாக 100 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நல்லூர் ஆசிரிய கலாசலை கண்காட்சியில் வரலாறு,சரித்திரம், கற்காலம் போன்றவற்றைச் சித்தரித்து ஓவியங்கள் தீட்டினேன். வடமாகாண பாடசாலைகளின் கண்காட்சிக்கு பறவை, காவடி,பொம்மை போன்றவற்றை உருவாக்கினேன். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு ஆசிரியர்களின் கண்காட்சியில் சர்வதேச  உதைபந்தாட்ட மைதானத்தை வடிவமைத்தேன். அதில் மின் கம்பங்கள், விளம்பரங்கள் என்பனவும் இடம் பெற்றன. அண்மையில் காலமான வேதாபரணத்தின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டைமன் மைதானத்தில் சர்வதேச உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைத்தேன்.  இவை எல்லாவற்ரையும் பலர் பாராட்டினார்கள். சித்திரத்தைப் படிக்கும் மாணவர்கள் சந்தேகம்  கேட்பதற்காக வருவார்கள். அவர்களுக்கு என்னாலான உதவிகளை வழங்குவேன்.

கேள்வி: ஈராக்கில் நீங்கள் வரைந்த சதாமின் கட் அவுட்கள் காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எப்படி அமைந்தது?

பதில்:  இஸ் ரீல் ஃபிற்றராக ஈராக்குக்குச் சென்றேன். ஒய்வு நேரங்களில் பலகையில் சோக்கால் படம் கீறுவேன். அதைப் பார்த்த இஞ்ஜினியர் படம் கீறுவதற்கு எனக்குச்  சந்தர்ப்பம் தந்தார். நான் வேலை செய்த நிறுவனத்தில் படம்  கீறுவதற்காக பிலிப்பைன்ஸ்காரர் ஒருவர் இருந்தார். அவர் சொந்த நாட்டுக்குச் சென்றதும், நான் ஓவியரானேன். ஈர்க்கின் யுத்த வெற்றிகளைக் கொண்டாவதற்காக சதாமின் கட் அவுட்களை வீதியெங்கும் காட்சிப்படுத்துவார்கள். அந்த நேரத்தில் சதாமின் படங்களை வரையும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவை அங்கு கட் அவுட்களாக வீதிகளில் காட்சியளித்தன. என்னிடமிருந்த பல படங்கள் பலரிடம் கைமாறி தொலைந்து விட்டன. கைவசம் இருக்கும் சில படங்களுடன் புதிய படங்களையும் வரைந்து ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.


கேள்வி: உங்களுடைய நாடக அனுபவம் எங்கே ஆரம்பமானது?

பதில்: தேவரையாளி இந்துக் கல்லூரியில் படிக்கும்போது ஆழ்வாப்பிள்ளை மாஸ்ரரின் ஆங்கில நாடகங்களில் பெண் பாத்திரத்தில் நடித்தேன். பாடசாலைகளுக்குடையிலான போட்டிகளில் பரிசுகள் பெற்றேன். பெண் பாத்திரம் எனக்குப் பொருதமானதாக இருந்ததால், பாடசாலைக்கு வெளியிலும் எனக்கு பெண்பாத்திரத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. கவிஞர் கோவி நேசன், நகைச்சுவை நடிகர் மாசி ஆகியோருடன் இணைந்து தாள லய, நகைச்சுவை, சமூக சீர்திருத்த நாடகங்களில் நடித்தேன். ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம், இ. யோகராஜா ஆகிய இருவரும் எனக்கு ஒப்பனை செய்வார்கள். அவர்களின் கைவண்னத்தால்தான் நான் பெண்னாகத் தோற்றமளித்தேன்.

கேள்வி: நீங்கள் நடித்த நாடகங்கள்  மேடையேற்றப்பட்ட இடங்கள் எவை?

பதில்: எம்து ஊரில வருடாந்தம் நடைபெறும் நாடக விழாக்களில் எமது நாடகங்கள் நடைபெறும். பஞ் அரங்கு மிக முக்கியமானது. வடமராட்சியில் அல்வாய்,பருத்தித்துறை, கொற்றாவத்தை போன்ற இடங்களிலும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களிலும் எமது நாடகங்கள் நடைபெற்றன. சண்முகநாதனின் சமூக நாடகமான “பாசம்”, கோவிநேசனின் தாள லய நாடகமான   “காலம் கெட்டுப்போட்டு”   மாசியின் நகைச்சுவை நாடகங்களான புறோக்கர் பொன்னையா, நவீன சித்திர  புத்திரன் ஆகியவை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

கேள்வி: நாடக உலகில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?

பதில்: இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தில் நடிகமணி V.V. வைரமுத்து  இலங்கேஸ்வரனாகவும், கலாவிநோதன்  ,  M.P.அண்ணாசாமி   நாரதராகவும் நடித்தனர்.  இலங்கேஸ்வரனின் தாயாக நான் நடித்தேன்.. அதை என்றைக்கும் என்னால் மறக்க்கமுடியாது. ராஜ ஸ்ரீகாந்தனின் தகப்பன் வ, ஐ, இராசரத்தினத்தின் அம்பிகாபதி எனும் நாடகத்தில்  இந்திராணி அம்பிகாபதியாகவும், கலைச்செல்வி அமராவதியாகவும் கொட்டிக்கிழங்கு விர்கும் கிழவியாக நானும் நடித்தேன். ஆண்கள் மட்டும் நடிக்கும் நாடகங்களில்தான் நான் பெண் வேடமிட்டு நடித்தேன். ஆன்களும், பெண்களும் நடித்த நாடகத்தில் நான் பெண் வேடத்தில் நடித்தது மறக்க முடியாத சம்பவம்

Tuesday, January 21, 2020

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா


பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  மூன்றாவது ஒருநாள்போட்டியில் ஏழு விக்கெற்றால் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவும் ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் எதுவித மாற்றமும் இல்லை. அவுஸ்திரேலிய அணி வீரர் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹெசல்வுட் இடம் பிடித்தார்.


டேவிட் வானர், பிஞ்ச் ஆகியோர்  போட்டியை ஆரம்பித்தனர். ஹமியின் பந்தில் மூன்று ஓட்டங்கள் எடுத்த வானர், விக்கெற் கீப்பர் ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் பிஞ்சுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 19 ஓட்டங்கள் எடுத்த பிஞ்ச் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தினால் ரன் அவுட் ஆனதால் பிஞ்ச் கோபமாக வெளியேறினார். மூன்றாவது விக்கெற்றில் இணைந்த ஸ்மித், லபுஷேன் ஜோடி  இந்திய பந்து வீச்சாளர்களை பரிதவிக்க வைத்தனர். 8.5 ஓவரில் இணைந்த இந்த ஜோடி  31.3 ஓவர்வரை விளையாடி 127 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா வீசிய பந்தை அடித்த லபுஷேன் கோலியிடம் பிடிகொடுத்து 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி பிரிந்ததால் இந்திய ரசிகர்கள் ஆறுதலடைந்தனர். ஆனால், ஸ்மித்  தனது அதிரடியால் கலங்க வைத்தார். ஸ்ரக் ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார். ஸ்மித்துடன் இணைந்த கிரே  அவுஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையளித்தார்.  35 ஓட்டங்களில் கிரே ஆட்டமிழந்தார்.  அபாரமாக விளையாடிய ஸ்மித் ஒருநாள் அரங்கில் தனது ஒன்பதாவது சதத்தை  அடித்தார். 131 ஓட்டங்களில் ஸ்மித் ஆட்டமிழந்ததும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசை முடிவுக்கு வந்தது.
50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த அவுஸ்திரேலியா 286 ஓட்டங்கள் எடுத்தது. ஷமி நான்கு விக்கெற்களையும், ஜடேஜ இரண்டு விக்கெற்களையும், சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழத்தினர். இந்திய வீரர்கள் 27 உதிரிகளைக் கொடுத்தனர்.

287  எனும் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, மூன்று விக்கெற்களை இழந்து  289 ஓட்டங்கள் எடுத்து  ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.  களத்தடுப்பின் போது காயமடைந்த தவான் துடுப்பெடுத்தாடவில்லை. ரோகித் சர்மாவும், ராகுலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். 19 ஓட்டங்களில் ராகுல் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த ரோகித் கோலி ஜோடி  வெற்றி இலக்கைத் துரத்தி அவுஸ்திரேலிய வீரகளைத் தடுமாற வைத்தது. ரோகித் ஒரு நாள் அரங்கில்  29 ஆவது சதம் அடித்தார். மறு பக்கத்தில் கோலி 57  ஆவது அரைச் சதத்தை நிறைவு செய்தார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த இந்த ஜோடி 137 ஓட்டங்கள் எடுத்தது. 119 ஓட்டங்களில்  ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
ரோகித் வெளியேற ஸ்ரேயாஸ் அய்யர் களம் புகுந்தார். இந்திய அணியின் பலவீனமான நான்காவது வீரராக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் பதற்றத்துடன் விளையாடினாலும் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். 25  இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பந்துகளில் 13 ஓட்டங்கள் பெறும் நிலையில் இருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். வெற்றி இலக்கைத் துரத்தும்போது துடுப்பெடுத்தாடிய கோலி 7023 ஓட்டங்கள் அடித்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் 44 ஓட்டங்களுடனும், மணிஷ் பாண்டே எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ரோகித் சர்மா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்தத் தொடரில் ஸ்மித் 229 ஓட்டங்கள் அடித்து முதலிடத்திப் பிடித்தார். அடுத்த இடங்களை கோலி 183, ரோகித் 171, தவான் 170  ஆகியோர் பிடித்தனர்.  ஷமி  7 விக்கெற்களையும், சம்பா5 விக்கெற்களையும், ரிச்சட்சன் ஜடேஜா ஆகியோர் தலா விக்கெற்களையும் வீழ்த்தினர்.
 மும்பையைப் பூர்வீகமாகக்கொண்ட இந்திய கிறிக்கெற் வீரரான நட்கர்னி காலமானதால் இந்திய வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.  1964 ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தவர் நட்கர்னி.

Monday, December 30, 2019

வேதா எனும் விளையாட்டு வித்தகன்


விளையாட்டை  பூரணமாக அனுபவித்து அதில் வெற்றியடைந்தவர்களில் ”வேதா” என அன்புடன் அழைக்கப்படுபவர் D.M. வேதாபரணம். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டும் அவருடைய இரண்டு கண்கள்  போன்றவை. சமகாலத்தில் உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டு விளையாட்டுக்களிலும் தடம் பதித்து சாதனை செய்தவர். கரப்பந்தாட்டமும் இவரின் கரங்களுக்குக் கட்டுப்பட்டது. டானியல் முருகேசு,  நகுலாம்புசம் தம்பதியின் மூத்த புதல்வனாக கரவெட்டியில் பிறந்தார்.

வேதாபரணத்தைப் போன்றே அவரது சகோதரர்களும் தடகளம்,உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சாதித்தவர்கள். பாடசாலை சார்பாகவும், ஊர் கழக அணி சார்பாகவும் விளையாட்டுகளில் பங்கெடுத்து தமது அணியை வெற்றி பெறச்செய்தாவர்கள்

கரவெட்டி நாவலர் மடம் அரசினர் பாடசாலை,வதிரி பெதடிஸ்த மிஷன், ஹாட்லிக்கல்லூரி  ஆகியவற்றின் பழைய மாணவராவார். வதிரி பொம்பேர்ஸ் கழகம், ஹாட்லிக்கல்லூரி ஆகியவற்ரின் பல வெற்றிகளுக்கு இவரின் விளையாட்டு உறுதுணை புரிந்தது.


 வேதாபரணத்தின்  விளையாட்டு ஆர்வத்துக்கு ஹாட்லிக் கல்லூரி உத்வேகம் கொடுத்தது.  அவருக்குள்  இருந்த திறமை அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது.  வடமராட்சியில் உதைபந்தாட்டம் கோலோச்சிய  வேளையில் ஹாட்லிக் கல்லூரி மட்டும் கிரிக்கெற்றுக்கும் களம் கொடுத்தது ஹாட்கிக் கல்லூரியில் தென்னம் மட்டையில்  கிறிக்கெற் விளையாடிய வேதாபரணத்தை விக்ரர் துரைசாமி ஆசிரியரும் தனது குரு என அவர் மதிக்கும் டி.ஆர்.அருமைநாயகமும் வியந்து மூன்றாம் பிரிவு கிரிக்கெர் அணியில் விளையாட சிபார்சு செய்தார்கள். வேதாபரணத்தின் திறமையால் அவர்  இரண்டாம் பிரிவு அணியில் விளையாடினார்.

 ஹாட்லிக் கல்லூரியின் முதல் பிரிவு உதைபந்தாட்ட அணியின் தலைவராக வேதாபரணம்  செயற்பட்ட வேளையில் அக்கல்லூரியின் இரண்டாம் பிரிவு உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை ஹாட்லிக் கல்லூரியின், பயிற்சியாளரும் அதிபரும் அவருக்கு வழங்கினார்கள். இது அவரது திறமைக்குக் கொடுத்த சான்றாகும்.  அன்றைய அதிபர்களான பூரணம்பிள்ளை. ஏகாம்பரம் ஆகியோர் வேதாபரணத்தை வழிநடத்தினர்.

சிறுவனான தனது  விளையாட்டை ஊக்குவித்தவர்களில் கரவெட்டி அமரர்  அ.துரைசாமி முக  முக்கியமானவர்என  பேட்டி ஒன்றில் வேதாபரணம் குறிப்பிட்டுள்ளார். பயிற்சியாளர் இரத்தின சிங்கத்தின் நெருக்கம் அவரை புடம் போட்டது. உதைபந்தாட்ட சாதனைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் கிறிக்கெற்றிலும் சாதித்தார். துடுப்பாட்டம்,பந்துவீச்சு,களத்தடுப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்தார். வதிரி பொம்பேர்ஸ் கழகத்துக்கு வேதாபரணம் விளையாடிய காலம் அந்தக்கால ரசிகர்களால் மறக்க முடியாதது.பொம்பேர்ஸின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அபரிமிதமானது.

 விளையாட்டு வீரன் வேதாபரணம் பல சாதனைகளின் சொந்தக்காரன். மத்தியஸ்தர் வேதாபரணம் நடுநிலையான செயற்பாட்டாளர். பயிற்சியாளர் வேதாபரணம் புதிய வீரர்களை உருவாக்கியவர். கிராம சேவகர் வேதாபரணம்  சமூக செயற்பாட்டாளர். உதைபந்தாட்ட லீகின் தலைவர் வேதாபரணம் சிறந்த நிர்வாகி. தான் கால்பதித்த அத்தனை துறைகளிலும் சிறந்த தலைவனாகத் திகழந்தவர் வேதாபரணம்.

சீன உதைபந்தாட்ட அணி இலங்கைக்கு விஜயம் செய்தபோது அதற்கு எதிராக விளையாடிய பருத்தித்துறை தெரிவு அணியில் வேதாபரணமும் ஒரு வீரராக விளையாடினார். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டு போட்டிகளுக்கும் இலங்கையில் பலபாகங்களிலும் மத்தியஸ்தராகக் கடமையாற்றியவர் வேதாபரணம்.  இங்கிலாந்துக்குச்  சென்றபோது இலண்டனில் நடைபெற்ற  கிறிக்கெற் போட்டிகளில் நடுவராகச் செயற்பட்ட பெருமைக்குரியவர் வேதாபரணம்.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக வேதாபரணம் செயற்பட்ட  போது அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை அணி சம்பியனாகியது. இவருடைய தலைமைத்துவத்தில் தமிழ் கழக அணி ஒன்று தேசிய மட்டத்தில் சம்பியனாகியது. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சம்பியன் கிண்ணத்தை வழங்கி கெளரவித்தார்.  2013 ஆம் ஆண்டு வடமராட்சி உதைபந்தாட்ட லீக் உதயமானபோது  அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட வேதாபரணம், ஆயுள் காலத் தலைவராக காலமாகிவிட்டார்.

வேதாபரணத்தின் ஆளுமையால் கவரப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் 2017 ஆம் ஆண்டு அவரை நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராக்கியது. அது மட்டுமல்லாமல் புட்சால் உதைபந்தாட்டத்தின் பொறுப்பையும் அவரிடம் வழங்கியது. உதைபந்தாட்ட லீக்கில் வேதாபரணத்தின்  25 வருட தலைமைத்துவ சேவையை பாராட்டு முகமாக பங்களாதேஷுக்குச் சென்ற இலங்கை அணியில் அவரையும் ஒரு அங்கத்தவராக அனுப்பி  இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் கெளரவம் வழங்கியது. வடமாகாண உதைபந்தாட்டப்  பேரவையின் பொதுச்செயலாளராகக் கடந்த 4 வருடங்களாக வேதாபரணம்   கடமையாற்றினார். 

கண்டியைச் சேர்ந்த அமரசேகர,பசநாயக்க, யாழ்ப்பாண வீரர்களான கனகதுரை, ஸ்ரீபத்மராஜா போன்ற அதி வேக பந்து வீச்சாளர்களுக்கும்,  தெய்வேந்திரம், சச்சிதானந்தம், போன்ற ஔழல் பந்து வீச்சாளர்களுக்கும் எதிராக விளையாடியதை அவர்  பெருமையுடன் நினைவு கூர்வார்
பேராசிரியர் நடராஜ சுந்தரம், கந்தராஜா,ஆனோல்ட்,சிவகுருநாதன், மயில்வாகனம்,அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு விஜயம் செய்தபோது விளையாடிய அமரர் பாலசுப்பிரமணியம், இலங்கை அணிக்காக வெளிநாட்டுக்குச் சென்று விளையாடிய கஜேந்திரன் பாலசிங்கம்,டொனால்ட் கணேசகுமார்.கனகதுரை,வி.ரி.மகாலிங்கம்,டேவிட் தம்பிராஜா, எம்.கருணாகரன் ஆகியோருடன் இணைந்தும் எதிராகவும் விளையாடினார்.

 75 ஆவது வயதில் பவளவிழா கொண்டாடிய வேதாபரணம் விளையாட்டுத்துறையில் மணிவிழாவை அடைந்த வேளையில்  பிரிந்துவிட்டார்.
வர்மா
தினக்குரல்  டிசம்பர் 15