Monday, January 31, 2011

இரகசியமாகக் கூட்டணிப் பேச்சு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணிக் கனவில் மிதக்க தமிழக முதல்வர் கருணாநிதி தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சூசகமாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவர் விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரது ஓய்வை தள்ளிப் போகச் செய்கிறது. தலைவர் கருணாநிதியா? முதல்வர் கருணாநிதியா? என்று கேட்டால் முதல்வர் கருணாநிதி என்றுதான் அதிகமானவர் கூறுவார்கள் என்று அண்மையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
பெரியார், அண்ணா காலத்தில் அரசியலில் நுழைந்தவர்களில் இன்றும் அதீத செல்வாக்குடன் விளங்குபவர் கருணாநிதி. தொண்டனாக கட்சியில் இணைந்து போராட்டங்களின் மூலம் கட்சியின் மதிப்பைப் பெற்று தொண்டர்களின் ஆதரவுடன் தலைவராகியவர். ஓய்வு வெறும் வயதையும் கடந்து ஓய்வில்லாமல் பணியாற்றும் தனக்கு ஓய்வு வேண்டும் என்று பல தடவை அவர் சூசகமாக அறிவித்தும் அவர் விரும்பும் ஓய்வு அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழக அரசியலில் மிகவும் நெருக்கடியான காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கைகோர்ப்பதற்குத் தயாராக உள்ளனர். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தால் மிகப் பெரிய சவாலை கருணாநிதி எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எதிர்க்கட்சிகள் பலமடையும். இவ்வேளையில் தனது ஓய்வு பற்றி கருணாநிதி அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலமடைந்த வேளையில் தமிழகம் எங்கும் சூறாவளிப் பிரசாரம் செய்ய வேண்டும். ஆகையால் தேர்தலில் போட்டியிடுவதை முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் ஒரு சேரக் கவனிப்பதற்கு விரும்புகிறார் கருணாநிதி. இதேவேளை கட்சியின் பொறுப்பை தன் வசம் வைத்துக் கொண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மகன் ஸ்டாலினிடம் கொடுக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதை திரõவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். தமிழகத்துக்கு அதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கான களமாக தமிழக சட்ட சபைத் தேர்தல் களத்தைத் தேர்வு செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாது கட்சியைத் தலைமையேற்று வழி நடத்த விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள். கருணாநிதி தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும். வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகும். இறுதியில் கட்சித் தலைவர்களினதும் தொண்டர்களினதும் விருப்பத்துக்கு இசைய வேண்டிய நிலைமை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமது கூட்டணி பற்றிய விபரத்தை உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணையப் போகும் கட்சிகள் எவை? இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை போன்ற விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, இடதுசாரிகள் உட்பட 18 கட்சிகள் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட இலக்கம் ஒன்பது. ஆகையினால் 18 கட்சிகள் என்ற கூட்டணி இலக்கம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்தும் தனித் தனியாகப் போட்டியிட்டால் கருணாநிதியை வீழ்த்த முடியாது என்பதே காலம் கடந்து இருவரும் உணர்ந்துள்ளனர். 70 முதல் 80 தொகுதிகள் வரை விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். அவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. கடந்த நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவின் படுதோல்விக்கு விஜயகாந்தான் காரணம். ஆகையினால் அதிக தொகுதிகளை விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். தமிழக சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதல்வராவார். ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றால் அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்க்கிறார்.
ஜெயலலிதா, விஜயகாந்த் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இருவரும் தயாராகி விட்டனர். தேர்தல் காலத்தில் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா உதாசீனம் செய்ததும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அவமானப்படுத்தியதும் கடந்த கால வரலாறு. அந்த வரலாறுகளை கூட்டணிக்கு எதிரானவர்கள் அவ்வப் போது நினைவுபடுத்துகின்றனர்.
ஜெயலலிதா கேட்காமலே அவருக்காக பிரசாரம் செய்ய விஜய் ரசிகர்கள் தயாராகி விட்டனர். விஜய் நடித்த காவலன் படம் வெற்றி பெறுவதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர அதனைக் களைவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. சினிமாக் கலைஞர்களுக்கு உதவி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதி, விஜய் படும்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விஜயின் அரசியல் பிரவேசத்தில் முதல்வர் கருணாநிதி வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. சுமார் 600 மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டனர். இலங்கைக் கடற்படை மீது ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படும் போது கண்டன அறிக்கைகளையும், கடிதங்களையும் எழுதுவதுடன் தன் பணி முடிந்து விட்டதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி நினைக்கிறார். கொல்லப்பட்ட மீனவரின் வீட்டுக்கு சென்ற, ஜெயலலிதா ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகையைக் கொடுத்து பிள்ளைகளின் படிப்புச் செலவையும் கழகம் பொறுப்பேற்கும் என்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் மீனவர் பிரச்சினையை பெரிதாக்குவதற்கு ஜெயலலிதா முன்வந்துள்ளார். நான் ஆட்சியில் இருந்தால் மீனவர்கள் இப்படிப்பட்ட அவல நிலையைச் சந்திக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா. பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது திரõவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பாரிய சவாலைக் கொடுக்க உள்ளது.
வர்மாசூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு 30/01/11

Thursday, January 27, 2011

விருதுபெற்றமேஸி

சர்வதேச உதைபந்தாட்டக் கூட்டமைப்பின் (பிஃபா) சார்பில் வழங்கப்படும் ஆண்டின் பலன் டி' ஓர் (Fifa's Ballon d' or) சிறந்த வீரருக்கான விருதைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பெற்றுள்ளõர் ஆர்ஜென்ரீனா வீரரான லியோனல் மேஸி. கடந்த ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேஸி நிறைவேற்றவில்லை. பாஸிலோனா அணிக்காக அவர் சிறந்த முறையில் விளையாடியதே இவ் விருது கிடைக்கக் காரணமாகும்.
மேஸி (ஆர்ஜென்ரீனா), ஷேவி (ஸ்பெயின்) இனியன்டா (ஸ்பெய்ன்) ஆகிய மூவரின் பெயர் ஆண்டின் சிறந்த வீரருக்காக அறிவிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பர்ஸிலோனா அணி வீரர்கள் என்பதனால் ஒரு சிலர் இதில் செல்வாக்கு ஆதீக்கம் செலுத்தியதாகக் கருத்து தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள், அணித் தலைவர்கள் ஆகியோரின் வாக்கெடுப்பு மூலமே சிறந்த வீரர் தெரிவு செய்யப்படுவார்கள்.
லியனல் மேஸி 22.65 சதவீத வாக்குகளைப் பெற்று 2010 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். இனியன்டா 17.36 சதவீத வாக்குகளையும் ஷேவி 16.48 சதவீத வாக்குகளையும் பெற்றனர். பெக்கம், கிறிஸ்ரியானி கரானால்டோ, ரொனால்டோ, ரொனால்டினோ, ரூனி மேஸி ஆகியோருக்கு உலகெங்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் கைகளில் பந்து கிøடத்து விட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். எதிரணி வீரர்களுக்குத் திண்டாட்டம்.
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி மேஸி பிறந்தார். 1995 ஆம் ஆண்டு நியூவெல்ஸ் ஓல்ட் போய்ஸ் அணியில் இணைந்தார். 2000 ஆம் ஆண்டு 13 ஆவது வயதில் பர்சிலோனா அணியில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி 16 ஆவது வயதில் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் முதன் முதலில் விளையாடினார். 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதன் முதலாக மட் பர்ஸிலோனா அணிக்காக என்பனியோல் அணியை 17 ஆவது வயதில் எதிர்த்து களமிறங்கினார்.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் ஹொலன்டில் விளையாடினார். அப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆர்ஜென்டீன அணிக்காக சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் இடைவேளைக்குப் பின் களமிறங்கி இரண்டு நிமிடங்களில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு மேஸிக்கு குடியுரிமை வழங்கியது. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா அணியின் வயது குறைந்த வீரராகக் களமிறங்கினார். சேர்பியா அன்ட் மொன்ராக்கோ அணிக்கு எதிராக ஆறு கோல்கள் அடித்தார். 6 0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேஸி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய ஐந்தாவது வயது குறைந்தவராவார்.
2007 ஆம் ஆண்டு கோபா அமெரிக்க கிண்ண இறுதிப் போட்டியில் பிரேஸிலை எதிர்த்து விளையாடிய ஆர்ஜன்ரீனா தோல்வி அடைந்தது. சிறந்த இளம் வீரராக மேஸி தேர்வு செய்யப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆம் திகதி பீஃபாவின் பலன் டி' ஓர் வீரராக பிரேஸில் காகா தெரிவு செய்யப்பட்டார். போர்த்துகல் வீரர் கிறிஸ்ரியானி ரொனால்டோ இரண்டாம் இடத்தையும் மேஸி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி பீஃபாவின் சிறந்த உதைபந்தாட்ட வீரராக காகா தெரிவு செய்யப்பட்டார். மெஸி இரண்டாவது இடத்தைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் பீஜிங்கில் நடைபெற்ற நைஜீரியாவுக்கு எதிரான ஒலிம்பிக் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா சாம்பியனானது.
2008 டிசெம்பர் 2 ஆம் திகதி பலன் டி' ஓர் வாக்களிப்பில் இரண்டாமிடம் பெற்றார். போர்த்துகல் வீரர் கிறிஸ் ரியானி ரொனால்டோ முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். 2009 டிசெம்பர் 1 ஆம் திகதி பலன் டி' ஓர் விருதைப் பெற்றார். 2010 மே மாதம் பிரிமியர் போட்டிகளில் ரொனால்டோ அடித்த 34 கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
2011 ஜனவரி 10 பலன் டி' ஓர் விருதை பெற்றார்.
அல்படோ டி ஸ்ரீபனோ, ஜோஹன் கிரிப், பெக்கன் பெரர், கெவின் கீகன், மைக்கல் பிளட்டின், மார்தேவான் பஸ்ரின், கார்லா ஹென்ய ரம்மெனிகி, ரொனால்டோ ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 28/01/11

Wednesday, January 26, 2011

கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும், விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட வேண்டும், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் நெருங்கி வருவதனால் சகல பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய இக் கட்டான நிலைக்கு இரண்டு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஓரணியில் நிற்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்வதற்கு துடிக்கிறது. மறுபுறத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகிய உள்ளன. விஜயகாந்தின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது இக் கூட்டணி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தக் கட்சிகளைச் சேர்ப்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட பங்கீடு என்பனவற்றை கருணாநிதியே கையாண்டார். சோனியா காந்தியும் ஏனைய டெல்லி, தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிடாது கருணாநிதிக்கு பூரண சுதந்திரம் கொடுத்தனர். ஆனால், தமிழகத் தேர்தலின் போது அப்படி ஒரு நிலை ஏற்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழக அரியாசனத்தில் அமர்த்தி விட்டுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த காலம் மலை ஏறிவிட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அதிகதொகுதிகளைக் கொடுத்து ஆட்சியிலும் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக தயாராக இல்லை. காங்கிரஸ் கடசிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியே உள்ளே கொண்டு வரும் முனைப்பில் உள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி பற்றி தமிழகக் காங்கிரஸின் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறிவருகின்றனர். சோனியா காந்தியுடன் விரிவாகக் கதைத்து உறுதியாக முடிவெடுப்பதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.
உள்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதல்வர் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து கூட்டணிபற்றிய முதல் கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தேர்தலின் போது சோனியா, மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் திராவிடமுன்னேற்றக்கழக மேடைகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
தமிழகத்துக்குப் பல தடவை விஜயம் செய்த ராகுல் காந்தி ஒருமுறை கூட தமிழகமுதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழக விஜயங்களின் போது முதல்வர் கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களையும் சந்திப்பதை திட்டமிட்டே தவிர்த்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலை இன்னமும் தொடரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. டில்லி விஜயத்தின் போது ராகுல் காந்தியுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன் உரிமை எடுக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. கட்சிக்குள் உள்ளவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஆழகிரி அடங்கி விட்டார்போல் தெரிகிறது. ராசாவை வெளியேற்றவேண்டும், கட்சிக்குள் தனக்கு முக்கியபதவி வேண்டும் என்று அழகிரி வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த அழகரி இப்போது வாய்மலர்ந்து அப்படிப்பட்ட கோரிக்கைகள் எதனையும் தான் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படமுயற்சிக்கும் இவ்வேளையில் காங்கிரஸில் திராவிட முன்னேற்றக்கழகமும் தமக் கிடையேயுள்ள முரண்பாடுகளை பெரிதாக்க விரும்பவில்லை. கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளையும் அவை விவாதிக்க விரும்பவில்லை. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அடிக்கடி போர்க்குரல் எழுப்பும் அழகிரியும் அமைதியாகி விட்டார் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிடும் என்பதை அழகிரி உணர்ந் துள்ளார். கழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தால் ஜெயலலிதாவின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்பது சகலரும் அறிந்த ஒன்று.
கருணாநிதி மாறன் குடும்பங்களில் அரசியல் வாழ்வு மட்டுமல்ல வியாபார நிலையங்களில் அனைத்திலும் கை வைத்து விடுவார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடமிருந்து தப்புவதற்கு ஒரேவழி ஆட்சியைத் தக்கவைப்பதுதான். அதற்கான விலையைக் கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.
சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்லாத மோசமான கலாசாரம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது சட்டசபைக்குச் செல்வதில்லை என்று ஜெயலலிதா சத்தியப்பிரமாணம் செய்தது போல் நடந்து கொள்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை. இதே உரிமையை விஜயகாந்தும் பின்பற்றுகிறார்.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சட்டசபைக்குச் சென்று ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. சட்டசபைக்கு தொடர்ந்து செல்லாத உறுப்பினர்களின் பதவியைப் பறிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஜெயலலிதா விஜயகாந்த் ஆகியோர் பதவிகளைப் பறித்தால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமான போராட்டங்களை நடத்தி அதனை தமக்குச் சாதகமாக்கி விடும் எனப் பயந்த திராவிடமுன்னேற்றக் கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின்போது சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதுள்ளது தமிழக அரசாங்கம்.
தமிழகம் எங்கும் சூறாவளியாக சூழன்று அரசாங்கத்தை எதிர்த்து கூட்டம் நடத்தும் ஜெயலலிதா, விஜயகாந்த் மேடைகளில் அனல்பறக்கப் பேசுகிறார். ஆனால், தமிழக சட்டசபைக்குச் சென்று அரசாங்கம் விடும் தவறுகளைக் கேட்பதற்கு தயங்குகிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சட்டசபைக்குச் செல்லாததினால் தம் சொந்தமக் களின் எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறார்கள்.
இந்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இராஜினாமாச் செய்த ராசாவுக்குப் பதிலாக டி.ஆர். பாலு அமைச்சராக்கப்படலாம் என்ற செய்தி பிரபல்யமாக வெளியானது. புதிய அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடம் வழங்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் இதணைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.
அமைச்சர் பதவி பெற்றால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அமைச்சுப் பதவி பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக ஆர்வம் காட்டவில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 23/01/11

Thursday, January 20, 2011

இந்தியா வெற்றி பெற்றது.

களமிறங்கினார். இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் மூன்றாவது போட்டி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். முதல் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய பந்து வீச்சாளர்களான சஹீர்கான், முனாப் பட்டேல் ஆகியோரின் அனல் பறந்த பந்துவீச்சில் தென்னாபிரிக்க வீரர்கள் தடுமாறினர். சஹீரின்பந்தில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் அம்லா. ஹர்பஜனின் பந்தை கோக்லியிடம் பிடி கொடுத்த இங்ரம் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். யூசுப் பதானின் பந்தை தூக்கி அடித்த டிவிலியர்ஸ் 16 ஓட்டங்களுடன் சஹீர்கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஸ்மித் ஹர்பஜனின் சுழலில் சிக்கி 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
23.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த தென்ஆபிரிக்கா 90 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்த போது ஐந்தாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து டுமினி, பிளசிஸ் இணை 110 ஓட்டங்கள் சேர்த்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. அறிமுக வீரரான பிளசிஸ் முதலாவது அரைச் சதமடித்தார். 60 ஓட்டங்கள் எடுத்த பிளசிஸ் முனாப்பட்டேலின் வேகத்தில் வீழ்ந்தார். 52 ஓட்டங்கள் எடுத்த டுமினியை சஹீர்கான் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்ற தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்கள் எடுத்தது.
சஹீர்கான் மூன்று விக்கெட்டுகளையும் முனாப்பட்டேல், ஹர்பஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பியுசவ்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
221 என்ற சுலபமான இலக்கை எட்டிய இந்தியா ஆரம்பத்தில் தடுமாறியது. ஸ்டைனின் பந்தை அவரிடமே பிடி கொடுக்க ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர் முரளி,விஜய். கோஹ்லி அடுத்தடுத்து பவுண்டரிஸ் அடித்த போதும் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 23, டோனி 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா, யூசுப்பதான் ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டியது. போத்தா வீசிய ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்து உற்சாகமூட்டினார் யூசுப்தான். 37 ஓட்டங்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். 59 ஓட்டங்களில் யூசுப்பதான் ஆட்டமிழக்க இந்தியா ரசிகர்கள் சோகமாகினர்.
ஹர்பஜன், சஹீர்கான் ஜோடி இந்தியாவின் வெற்றிக்காகப் போராடியது. 14 ஓட்டங்களில் சஹீர்கான் ஆட்டமிழந்தார். பர்னல், மார்கல் ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டினார். ஹர்பஜன். போத்தாவின் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் நெஹ்ரா.
மோர்கல் மூன்று, ஸ்ரைன் 2, பேஜா, டிசபேபட்,டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். யூசுப் பதான் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சூரன்.ஏ.ரவிவர்மா

Tuesday, January 18, 2011

கருணாநிதிக்கு எதிராகதேர்தலில் குதிக்கிறார் சீமான்

விஜயகாந்த், சீமான் ஆகிய இருவரினாலும் தமிழக அரசியல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று அவரது மனைவி பிரேமலதா கூறியதால் இந்திய அரசியல் வாதிகளின் பார்வை அனைத்தும் சேலத்தை நோக்கியே இருந்தன. ஆளும் கட்சிப் பிரமுகர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் விஜயகாந்தின் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கினர். தமிழக சட்ட சபைக்கான தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் கூறாத விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வழமையான பல்லவியையே பாடினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் மிகவும் நெருங்கி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணையப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தாமதமாவதால் பலமான கூட்டணியுடன் இணைவதற்கு ஆர்வமாக இருக்கும் சிறிய கட்சிகள் முடிவு எடுக்க முடியாது தவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தின் கணிசமான வாக்கு வங்கியைப் பங்கு போட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பெருமளவு சரிவடையவில்லை. விஜயகாந்துடன் இணைந்தால் வாக்கு வங்கி இன்னமும் அதிகரிக்கும் என்று அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் நினைக்கிறது.
சேலத்தில் கூடிய பிரமாண்டமான மக்கள் கூட்டத்தைக் கண்டு சகல தரப்பினரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
விஜயகாந்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கும் ஜெயலலிதாவும் இக் கூட்டத்தைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்திருப்பார். தனித்துத் தனித்து நின்றால் கருணாநிதியைத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காலம் கடந்து ஜெயலலிதாவும் கருணாநிதியும் உணர்ந்து கொண்டுள்ளனர். விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதனை சூசகமாகத் தெரிவித்துள்ளது.
சேலம் மாநாட்டை வாழ்த்தியும், கருணாநிதியின் அரசியலைப் பழித்தும் பத்திரிகையில் விளம்பரங்கள் பிரசுரமாகின. ஒரே ஒரு விளம்பரம் மட்டும் கொடநாடு ராணியே என்று ஆரம்பித்து, கொட நாட்டுக்கு விரட்டியடிக்கும் வரை தூங்காது எங்கள் விழி என்று இருந்தது. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் நெருங்கி வருவதாக செய்திகள் கசியும் வேளையில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்தின் ஆதரவாளர் விளம்பரம் வெளியிட்டதைப் பார்த்த விஜயகாந்தின் கண்கள் மேலும் சிவந்தன. கட்சித் தலைமை விசாரணை செய்ததில் அந்தப் பெயரில் உள்ள எவரும் அந்த விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைவதை விரும்பாத சிலரின் சமயோசித விளம்பரம் என்ற உண்மை வெளியானது.
கொட நாட்டுக்கு விரட்டுவோம் என்ற விளம்பரத்துக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் ஜெயலலிதாவுடன் தான் நெருங்குவதாகச் சூட்சுமமாகத் தெரிவித்துள்ள அதேவேளை காங்கிரஸ் கட்சிக்கும் தனது முடிவை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் விஜயகாந்த். தமிழகத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் வெளியே வந்து விடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இல்லை. கலைஞர் கருணாநிதியை தேர்தலில் தோல்வியடையச் செய்யும் பலம் வாய்ந்த வேட்பாளரை எதிர்க்கட்சிகள் இதுவரை நிறுத்தவில்லை. அண்ணாதுரை, காமராஜர், ஜெயலலிதா, வைகோ போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள். போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே ஒரு கட்சித் தலைவராகத் திகழ்கிறார் கலைஞர் கருணாநிதி. அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்ய களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சீமான்.
கலைஞரின் பிரசாரம் தமிழகத்துக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளிப் பிரசாரம் செய்வதில் வல்லவர். தனது தொகுதியைப் பற்றிக் கவலைப்படாது எதிர்க்கட்சிகளின் செல்வாக்குள்ள தொகுதிகளில் கூடுதல் பிரசாரம் செய்வார். அவரை எதிர்ப்பதற்குப் பலம் வாய்ந்த ஒருவரை நிறுத்தினால் அவர் தொகுதியை விட்டு வெளியே செல்லத் தயங்குவார் என்ற எண்ணத்தில் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் இயக்குனர் சீமானைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சீமானும் வைகோவும் கலந்து பேசி முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது. வைகோவுடனான சந்திப்பின் பின்னர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் பொது வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். தனது இயக்கத்தின் சார்பிலேயே போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். ஜெயலலிதா, வைகோ, இடதுசாரித் தலைவர்கள், இதற்குப் பூரண ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பாரதீய ஜனதாக் கட்சி இதுபற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை. சீமானுக்கு ஆதரவாக கூட்டத்துடன் இணைந்து செயற்பட பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகமா அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா என்ற முடிவு எடுக்காது மறைந்திருக்கும் டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு முடிவு எதனையும் கூற மாட்டார். விஜயகாந்துடனான இணைப்பு இல்லையென்றால் போக்கிடம் எதுவும் இல்லாது திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. யாராலும் அசைக்க முடியாத கருணாநிதியை அசைத்துப் பார்க்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அரசியல் ஜாம்பவான்கள் எல்லோரையும் வீழ்த்தி வெற்றி வீரனாய் பவனி வரும் வேளையில் அவரை எதிர்த்து களமிறங்குகிறார் சீமான்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 16/01/11

வட்சனின் அதிரடியால்வென்றது அவுஸ்திரேலியா

இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே மெல்போர்னில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சகலதுறை வீரர் வட்சனின் அதிரடியினால் அவுஸ்திரேலியா ஆறு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணித் தலைவர் ஸ்டிராஸ், ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தினர். 12.1 ஓவர்களில் இவர்கள் இருவரும் இணைந்து 90 ஓட்டங்கள் எடுத்தனர். 42 ஓட்டங்கள் எடுத்த டேவிஸ், ஹஸியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ட்ராட் 6, இயன் பெல் 23, மேர்கன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்டிராட்ஸ் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் விக்கட்டுக்கள் வரிசையாக விழுந்து கொண்டிருக்கையில் பீட்டர்ஸன் களத்தில் நின்று நம்பிக்கையளித்தார். 78 ஓட்டங்களில் பீட்டர்ஸன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணியின் வேகம் முடிவுக்கு வந்தது.
பிரட் லீ, டேவிட் ஹஸி, ஜோன்ஸன், ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் பொலிஞ்சர் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்.
295 என்ற ஓட்ட எண்ணிக்கையுடன களமிறங்கிய அவுஸ்திரேலியா 49.1 ஒவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 297 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷேன் வட்சன், பிராட் ஹடின் ஜோடியின் ஆரம்பத் துடுப்பாட்டம் அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை இலகுவாக்கியது. 19.4 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 110 ஓட்டங்கள் எடுத்தனர். 39 ஓட்டங்களில் ஹாடின் ஆட்டமிழந்தார். கிளார்க் 39, ஸ்மித் 5, ஹஸி 21 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினர்.
45 பந்துகளில் 53 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வட்சனுடன் இணைந்தார் கமரூன் வைட். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலியாவின் வெற்றியைஉறுதி செய்தனர். கமரூன் வைட் 25 ஒட்டங்கள் எடுத்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷோன் வட்சன் ஆட்டமிழக்காது 161 ஓட்டங்கள் எடுத்தார்.
150 பந்துகளுக்கு முகம் கொடுத்து சிறப்பாக நான்கு சிக்ஸர் 12 பௌண்டரிகள் அடங்கலாக 161 ஓட்டங்கள் எடுத்த வொட்சன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 18/01/11

Monday, January 17, 2011

ஒரு ஓட்டத்தால் வென்றது இந்திய அணி

இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையே ஜொஹன்னஸ்÷பர்க்கில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 190 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான விஜயும் சச்சினும் மிக மெதுவாக ஓட்டங்களைச் சேர்த்தனர்.
முரளி 16, டெண்டுல்கர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். யுவராஜ் சிங்கும் டோனியும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உய ர்த்தினர். ஒருநாள் அரங்கில் 45 ஆவது அரைச்சதம் கடந்த. யுவராஜ் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐந்தாவது அரைச் சதம் கடந்தார். டோனியும் யுவராஜ் இருவரும் 83 ஓட்டங்கள் அடித்தனர். 53 ஓட்டங்களில் யுவராஜ்சிங் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரெய்னா 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டோனி 38 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த வந்த இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
ஐந்து ஓவர்கள் கொண்ட பவர் பிளேயில் 14 ஓட்டங்கள் மட்டும் எடுத்த இந்தியா நான்கு விக்கட்டுக்களை இழந்தது. டிசோச பேடி 4 விக்கெட்டுக்களை யும் ஸ்டைன், மோர்க்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
191 என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க வீரர் அம்லா ஏமாற்றினார். இவர் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 77 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்களின் போராட்டம் வீணாகியது. தென் ஆபிரிக்கா 43 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
சஹீர்கான் இரண்டு விக்கட்டுகளையும் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர். 29 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்திய முனாப் பட்டேல் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 16/01/11