Friday, October 26, 2018

எடப்பாடியைக் காப்பாற்றிய நீதிமன்றம்



ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை ஆட்டம் காணத்தொடங்கியது. கட்சித் தலைமையைப் பிடிப்பதற்கும் தமிழக  முதல்வராவதற்கும் ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான சசிகலா முயற்சி செய்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றதால் அது பலனளிக்கவில்லை. தர்ம,  அதர்ம யுத்தங்களினால் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.தினகரன், கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தனக்கு விசுவாசமான தமிழக சட்டசபை உறுப்பினர்களின் உதவியுடன் முதல்வர் கதிரையில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்கு தினகரன் எடுத்த முயற்சியும் நீதிமன்றத் தீர்ப்பினால் தகர்ந்தது
.
முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை  அடைந்துள்ளது. முதலமைச்சர் கதிரையில் இருந்து பன்னீரை இறக்கிவிட்டு தான் ஏறி அமர்வதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் பன்னீர்ச்செல்வம். சட்டப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்றுவதற்காக எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் எதிரான ஊழல் புகார்களுடன் நீதிமன்றத்தின் துணையை நாடுகிறார் ஸ்டாலின். பன்னீருக்கும் ஸ்டாலினுக்கும் மத்தியில் எடப்பாடியை அகற்றியே தீருவேன் என அதிரடி காட்டுகிறார் தினகரன். எந்த நேரமும் புன் சிரிப்புடன் காட்சியளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி,   சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு  அரசியற் காய்களை அகற்றி தனது பதவியைக்  காப்பாற்றுகிறார்.

அரசியல் அரங்கில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்காக தினகரனின் விசுவாசிகள் போர்க்கொடி உயர்த்தினர். அதன் உச்சக் கட்டமாக அன்றைய தமிழக பொறுப்பு ஆளுநரான வித்தியாசாகர் ராவைச்  சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை. அவருக்குப் பதிலாக வெறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  நாங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கூறிய  19 சட்டசபை உறுப்பிர்களின் செயலால் எடப்பாடி கடும் சீற்றமடைந்தார்.  விளக்கம் கோரி 19 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அவரலில் கமபம் தொகுதி உறுப்பினர் ஜக்கையனின் விளக்கம் ஏற்றுக்கொண்ணப்பட்டது ஏனைய  18 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக சபாநாயகர் தனபாலின் உத்தரவால் 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 18  ஆம்  திகதி முதல்  18 தொகுதிகள் காலியாகின. அதை எதிர்த்து மறு நாள் தினகரன் தரப்பு  உயர் நீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் இந்திரா பார்னஜி, சிந்தர் ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதிருப்தியடைந்த தினகரனின் ஆதரவாளர்கள் உச்ச நீதின்றத்தை நாடினர். 18 உறுப்பிஅர்களின் தகுதி நீக்கம் செல்லும்  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எடப்பாடியின் பதவி காப்பாற்றப்பட்டுவிட்டது.

எடப்பாடியை எதிர்த்ததனால் 18 உறுப்பினர்கள் பதவி இழந்தனர். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தொகுதிகளை எட்டியும் பார்க்கவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும் தொகுதிப்பக்கம் செல்லவில்லை.  18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் அந்தத் தொகுதி மக்களின் மனநிலை  தெரிந்துவிடும். கருணாநிதி, போஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய எடப்பாடியின் அரசு ஒரே ஒரு மேலதிக உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல்  நடந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் வெற்றி பெறும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் ஜெயலலிதாவே பிரதான காரணி. ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சாத்தியமற்றது என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல்   நிரூபித்துள்ளது. ஆர்கே நகர் போன்றதொரு இன்னொரு வெற்றியை தினகரனால் செய்துகாட்ட முடியாது. எடப்பாடி, தினகரன் ஆகிய இருவருக்கும் 18 தொகுதிகள் மிகவும் முக்கியமானவை. அனைத்துத் தொகுதிகளும் இருவருக்கும் கெளரவப் பிரச்சினையானவை. ஜெயலலிதா என்ற நட்சத்திரம் இல்லாமல் இருவராலும்  வெற்றியைப் பெறமுடியாது.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது,  இடைத் தேர்தலைச் சந்திப்பது, வழக்கை எதிர்கொண்டு இடைத்தேதலைச் சந்திப்பது ஆகிய மூன்ரு தெரிவுகள் தினகரனின் முன்னால் உள்ளன. தினகரனின் முடிவைப் பொறுத்துத்தான் தமிழக அரசியலின் அடுத்த காய் நகர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அதிரடி காட்டாமல் அமைதியாக அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கும் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகும்.  20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு எடப்பாடிக்குப் பாதகமாகத்தான் அமையும் ஆகையால் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் காத்திருக்கிறார்.

Wednesday, October 17, 2018

ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு


அரசியல்வாதிகள் மீது   சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். சிலர் வழக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.  தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டவும் ஊழல் புகார் கைகொடுக்கிறது. மிக நீண்ட கால நீதி விசாரணையின் பின்னர் சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அதில் சம்பந்தபப்ட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தம்மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தி தப்பியவர்களும் உண்டு. பொய்யான புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சம்பவங்களும் உண்டு.

முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறத்தண்டனை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது தமிழகம். இப்போது முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. ஊழல் புகார் எல்லம் பொய் அரசியல் பழிவாங்கல் என  அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்  உள்ளன. தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் நிலுவையில் உள்ளது. அதற்கான பனம் கொடுக்கல் வாங்கலுல் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட முன்னாள் இந்நாள் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அதற்காக விஜயபாஸ்கர்  அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கைச்  சந்தித்து நான் குற்றமற்றவனென்பதை நிரூபிப்பேன் என்கிறார். அமைச்சர் வேலுமணி மீதும்  புகார் உள்ளது. அதிகார துஸ்பிரயோகம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 3000 பக்க அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது. இவற்றை சிபிஐ விசாரித்து வருகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவிக்கிரார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின்  கீழ் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் 4800 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாலர் எஸ்.ஆர்.பாரதி இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். அந்தப் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை ஹைகோட்டில் புகார் செய்தார் பாரதி.

நெடுஞ்சாலை சீரமைக்கும் ஒப்பந்தங்களை, எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர், நண்பர்கள், பினாமிகள்  பெற்றதால் 4800 கோடி ரூபா ஊழல் நடந்ததாக பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை என முதல்வரின் கீழுள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை  நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனி ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பதவிக்காக எடப்படியும் பன்னீரும் முட்டி மோதுகிறார்கள். முதல்வர் பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்ச்செல்வத்துக்கும் இடையில் பனிப்போர் நடைபெறுகிறது.  அண்ணா திராவிட முன்னேற்றக் க்ழக அதிகாரத்தைக் கைப்பற்றும்போட்டியில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் தற்காலிகமாக இணைந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பத்தை  இருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான தினகரனைச் சந்தித்த விவகாரம் பகிரங்கமானதால் பன்னீர் பரிதவிக்கிறார். தனுடன் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தினகரனை, பன்னீர்ச்செல்வம் சந்தித்த விவகாரம் எடப்பாடிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் புகார்  எடப்பாடிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

பாரதீய ஜனதாவின்  ஆதரவில் இயங்கும் தமிழக அரசுக்கு நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Thursday, October 11, 2018

நக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்


தமிழக ஆளுநராக பன்வரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்து பல வேறு பிரச்சிகளில் சிக்கிவருகிறார். மத்திய அரசின் எல்லையை மீறாமல் மாநில அரசைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையே பெரும்பாலான ஆளுநர்கள் செய்கிறார்கள். ஆனால், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், ஆய்வு செய்கிறேன் என்ற போர்வையில்  தமிழக அரசை வெளிப்படையாகக் கண்காணிக்கிறார். எதிர்க் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. தமிழகத்தை ஆட்சி செய்யும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுநரின் செயற்பாட்டை வர வேற்கிறது.
ஆளுநரின் ஆய்வை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியது. கறுப்புக்கொடி காட்டிய கழகத்  தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

 ஆய்வு செய்யச்சென்ற ஆளுநர்  குளியலறையை எட்டிப்பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இளம் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை வருடி  பின்னர் மன்னிப்புக் கேட்டார். தமிழக அரசின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஆளுநரிடம் கையளித்தன. அதற்கு எந்த விதமான  நடவடிக்கையும்  இதுவரை எடுக்கப்படவில்லை. இலஞ்சம் வாங்கிக்கொண்டு உதவிப் பேராசிரியர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நான் நியமித்த ஒன்பது புதவிப் பேராசிரியர்களும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழக ஆளுநர் வெளிப்படையாகத்  தெரிவித்துள்ளார்.


ஊழல் இலஞ்சம் என்பன தமிழகத்தில் மலிந்து விட்டதாகத் தெரிவிக்கும் ஆளுநர் தமிழக அரசின் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காது மெளனமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இந்த நிலையில் ஆளுநர் அலுவலகத்தின் முறைப்பாட்டின் பிரகாரம் காலையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை  மாலையில் விடுதலை செய்த   செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்தது, பணி செய்யவிடாமல் தடுத்தது எனத் தேசத்துரோக குற்றச்சாட்டில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா இருக்கும் வரை நக்கீரன் மீது ஏதாவது ஒரு  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும். தமிழகத்தில் ஒரே நாளில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட இடங்களில் நக்கீரன் கோபல் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை எல்லாம் சட்ட ரீதியாக எதிர்கொண்டு பதிலளித்தார் கோபால்.

நக்கீரனையும் கோபாலையும் முடக்கும் நோக்கோடு சட்டப்பிரிவு 124 இன் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநரையும் ஜனாதிபதியையும்  மிரட்டுபவர்கள்மீதும் அவர்களைப் பணி செய்யவ் இடாமல் தடுப்பவர்கள் மீது இந்தச்சட்டம் பாயும்.  அவர்களை உஅட்னடியாகக் கைது செய்யலாம். நீதிமன்ற உத்தரவில்லாமல் விசாரனை செய்ய முடியாது. பிணை வழங்கப்பட மாட்டாது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் எழு வருட சிறைத்தண்டனை. இதிலிருந்து நக்கீரன் வெளியே வரமாட்டார் என நினைத்துத்தார் இந்தச் சட்டப் பிரிவின் பிரகாரம் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப்பேராசிரியை நிர்மலாவைப் பற்றிய பரபரப்பான ஒலிப்பதிவை நக்கீரன் வெளியிட்டது. அந்த ஒலிப்பதிவு ஆளுநர் மாளிகையை அதிரவைத்தது. மாணவிகளைத் தவறான நடத்தைக்கு அழைத்த நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்தேனொன்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை ஆளுநர் மாளிகையால் ஜீரணிக்க முடியவில்லை. நிர்மலாவைப்ய  தகவல்களை நக்கீரன் அடிக்கடி வெளியிட்டு வருவதால் ஆளுநர் மாளிகை நெருக்கடியை எதிர் நோக்கியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.இதம் மூலம் ஏனைய ஊடகங்களையும் அச்சுறுத்தும் நோக்கம் இருந்தது.

ஆளுநருக்கு அச்சுறுத்தல் விடுத்து பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய ராம்  நீதிமன்றத்தில் ஆஜராகி தவறான ஒரு குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நீதித் துறையி முன்மாதிரியாக இருக்க வேண்டாம் என்று தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ஏற்க மறுத்து கோபாலை விடுதலை செய்தார்.

பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் தமிழகத்துக்கு புதியதல்ல.
1987 ஏப்,இ 4: எம்.எல்..இக்கள் பற்றி,இ 'கார்ட்டூன்' வெளியிட்டதற்காக 'ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைது

1989: தமிழக சட்டசபை பற்றி எழுதிய கட்டுரைக்காக  'இல்லஸ்டிரேடட் வீக்லி' பத்திரிகையின் சென்னை செய்தியாளர்  கே.பி.சுனிலை, கைது செய்யும்படி  சபாநாயகர் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம்  அதற்கு தடை விதித்தது
2003: சட்டசபை மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  செய்தி வெளியிட்டதாக  'தி இந்து' ஆசிரியர்  என்.ராமை கைது செய்ய  அப்போதைய சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார். அதற்கும்  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2003 ஏப் . 11: கொலை வழக்கு  தனி தமிழ்நாடு கோரிக்கை  'லைசென்ஸ்' இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 'பொடா' சட்டத்தில்இ 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் கைது. செப்., 19ல், பிணையில்வெளிவந்தார்

2009 அக்.  7: நடிகையர் குறித்து அவதுாறு செய்தி வெளியிட்டதாக  'தினமலர்' நாளிதழ் செய்தி ஆசிரியர் லெனின் கைது. அக்.  9ல்  பிணையில் விடுதலை

2018 அக்  9: கவர்னர் மீது அவதுாறு செய்தி வெளியிட்டதாகஇ 'நக்கீரன்' கோபால், பிரிவு, 124ன் கீழ் கைது. 'இது செல்லாது' என நீதிபதி தீர்ப்பு அளிக்க விடுதலையானார்.
கோபாலைச் சந்திக்கச்சென்ற வைகோ தடுக்கப்பட்டார். அதை எதிர்த்துப் போராடியதால் அவர் கைது செய்யப்பட்டார்.  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வைத்தியசாலையில் சந்தித்தார். கோபாலுக்கு எந்த உதவியும் கிடைக்கக்கூடாது என்பதில் யாரோ அக்கறை காட்டினார்கள்.
கருத்துச் சுதந்திரத்தை காவல் துறையின் உதவியுடன் அடக்கிவிட முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


Saturday, September 29, 2018

கருணாஸை அச்சுறுத்தும் தமிழக அரசு



ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் தமைழக சட்டசபை உறுப்பினரானவர் கருணாஸ்.நகைச்சுவை நடிகராகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கருணாஸை அரசியல்வாதியாக  உருவாக்கியவர்  ஜெயலலிதா. ஜெயலலிதா செய்த அரசியல் தவறுகலில் இதுவும் ஒன்று. மக்களின் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் செல்வாக்கில்லாத கருணாஸை இரட்டை இலைச்சின்னம் சட்டசபை உறுப்பினராக்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினரான கருணாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தியாகநகர்  பொலிஸ் கமிஷ்ச்னர் தியாகராஜன் ஆகியோரை விமர்சித்ததால்  கருணாஸ் கைது செய்யப்பட்டார்.  கருணாஸைக் கைது செய்த பொலிஸார், கருணாஸுக்கு எதிரான  பழைய    பழைய புகார்களைத் தூசு தட்டத் தொடங்கியது.   கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஐபிஎல் போட்டிக்கு எதிராகத் தடையை மீறி கருணாஸ், ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது  கருணாஸைக் கைதுசெய்த பொலிஸார்  பின்னர் விடுதலை செய்தனர். இப்போது அதற்காகவும் அவரைக் கைது செய்த பொலிஸார் மொத்தமாக எட்டுப் பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.  
 
ஜெயலலிதா மரணமானதும்,  சசிகலாவின் தலைமையிலும் ஓ.பன்னீர்ச்செல்வம்       தலமையிலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. அந்த நேரத்தில் கருணாஸ், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.  சகிகலா சிறைக்குச் சென்றபின்னர் அவரால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமையை ஆதரித்த கருணாஸ், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழக அரசை எதிர்த்துக் குரல்கொடுத்தார். கூவத்தூர் கூத்து எல்லாம் எனக்குத் தெரியும் எனவும் மிரட்டினார். சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்த பின்னர் கருணாஸ் கைது செய்யப்பட்டதால் அது அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் கருணாஸ் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்துக்காகக் கைது செய்யப்படலாம்.

பாரதீஜ ஜனதாக் கட்சியின் செல்லப் பிள்ளைகள் என்பதால் எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறது. பெண்களை இழிவுபடுத்திய, பொலிஸ் அதிகாரியை அவமானப்படுத்திய, நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய, மதங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கிய குற்றங்களைப் புரிந்த   எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டும் இதுவரை இருவரும்  கைது செய்யப்படவில்லை. பெண் ஊடகவியலாளரையும் பெண்களையும் அவமானப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். கைதுக்குப் பயந்து தலைமறைவானவர் மீண்டும் வெளியே தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். முஸ்லிம்களின் பகுதியினூடாக தடையையும் மீறி விநாயகர் ஊர்வலம்   நடத்த முற்பட்ட எச்.ராஜாவை பொலிஸார் தடுத்தனர். அப்போது பொலிஸ் அதிகாரியையும் நீதிமன்றத்தையும் அவமானப்படுத்தினார்.  பாரதீஜ ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளரான எச். ராஜாவை பொலிஸாரால் நெருங்க முடியவில்லை.

பொதுக் கூட்ட மேடையில் எச். ராஜா வீற்றிருக்கையில் அங்கு உரையாற்றிய ஒருவர் “சிங்கம் ராஜா மேடையில் இருக்கிறார். முடியுமானால் கைது  செய்என சவால் விடுத்தார்.தமிழக ஆளுநரை எச். ராஜா சந்தித்தார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மே 18 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி  ஐம்பது நாட்களுக்கும் மேலாக வைத்திய வசதி இன்றி வாடுகிறார். தமிழக அரசாங்கத்துக்கு வேண்டப்படாதவர்    என்பதால் திருமுருகன் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும்  மத்திய அரசுக்கும் வேண்டியவர்கள் என்பதால் சேகரும் ராஜாவும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். தமிழக அரசை எதிர்ப்பதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் நடந்ததை வெளிப்படுத்துவேன் என கருணாஸ் மிரட்டுகிறார். மிரட்டல் மிரட்டலாகத்தான் இருக்கும் உண்மையை கருணாஸ் வெளிப்படுத்தமாட்டார்.

Sunday, September 16, 2018

மறுக்கப்படும் நீதியால் காவுகொள்ளப்படும் உண்மை



இலங்கைத் தமிழர்களை உலக நாடுகளில் இருந்து அந்நியப்பட வைத்த அந்தத் துயர சம்பவம் நடைபெற்று இருபத்தேழு வருடங்கள் கடந்துவிட்டன. குற்றமற்றவர்கள் விடுதலையாகி வெளியே வருவார்கள் என்ற பெற்றவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் இலங்கைத் தமிழர்களுக்கும்  தமிழகத் தலைவர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு துண்டிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெறும் அநீதிகளைத் துயரத்துடனும்  அனுதாபத்துடனும் பார்த்த இந்தியா பகை உணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியது.

 1991 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மே மாதம் 21 ஆம் திகதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக் குண்டுதாரியால் இலக்கு வைக்கப்பட்டதால்  ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என புலன் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலைக் குண்டு என்ற கோணம் விடுதலைப் புலிகள் மீது நேரடியாகக் குற்றம் சாட்டியது. இலங்கைக்குச் சென்ற அமைதிப் படை வடக்கு ,கிழக்கில் செய்த கொடுமைகளால் கோபமடைந்த பிரபாகரனின் உத்தரவில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தி இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இருந்த பாசப் பிணைப்பை அறுத்தெறிந்தது.

விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த ஒற்றைக் கண் சிவராசன், தணு, சுபா என்ற கோணத்தில் விசாரனையை ஆரம்பித்த இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் சிவராசனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்தனர்.  இந்தியத் தலைவர், நேரு குடும்பத்தின் வாரிசு கொல்லப்பட்டதால் குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசரம்  புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக உண்மையான குற்றவாளிகளை நெருங்காது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களைக் குற்றவாளியாக்கினார்கள். 26 பேர் மீது 1992 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேன்முறையீட்டின் பின்னர்  1991 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி  நளினி ,சாந்தன், முருகன்,பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார்,ரொபேட், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  2014 ஆம் ஆண்டு  பெப்ரவரி 14 ஆம் திகதி மூவரின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம் மூவரின்  விடுதலையை தமிழக அரசு முடிவு செய்யலாம் எனப் பரிந்துரைத்தது.

தமிழக அரசு, தமிழக கவர்னர், தமிழக முதலமைச்சர்கள், ஜனாதிபதி,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையில் அரசியல் காரனங்களுக்காகச் சிக்கித் தவித்த எழு பேரின் விடுதலை கைக்கெட்டியதூரத்தில் இருக்கிறது.

பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: ராஜிவ் கொலை தொடர்பான விசாரணை முழுமையடையவில்லை. இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கவர்னருக்கு 2015 டிசம்பரில் கருணை மனு அனுப்பினேன். இரண்டு ஆண்டுகளாகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லைஎன அவர் அதில் கூறியிருந்தார்.

மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மற்றும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்குகளை இணைத்து விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு   இந்த வழக்கை முடித்து வைத்தது. 'பேரறிவாளன் கொடுத்துள்ள கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்க வேண்டும்' என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வழக்கை முடித்து வைப்பதாக கூறியுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேருக்கும் நேரடியாக எந்த நிவாரணத்தையும் உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் 'பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக கவர்னர் பரிசீலிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஆறு பேரும் தங்களை விடுதலை செய்யும்படி கவர்னருக்கு கருணை மனுவை அனுப்பும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஆளுநரின் கையில் ஏழு பேரின் தலைவிதி தங்கி உள்ளது.     விடுதலை செய்யலாம், மறுக்கலாம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம், மாநில அரசுக்குட்பட்ட வழக்குகளில் ஆளுநரின் முடிவு செல்லுபடியாகும் தேசிய வழக்குகளில் ஆளுநர் தலையிட முடியாது என்ற குறிப்பும் உள்ளது. பாரதீஜ ஜனதாவின் பிரதிநிதியான ஆளுநரின் தலயில் ஏழுபேரின்  விடுதலையை சுமத்திவிட்டு தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலையைப் பற்றிபல புத்தகங்களும் திரைப்படங்களும் ஆவணப் படங்களும்  வெளிவந்துள்ளன. அவற்றில் காணப்படும்  பல சந்தேகங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.  சிபிஐ தலமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமன், வெளியிட்ட புத்தகத்தில் சாந்தனிடம் மன்னிப்புக் கேட்டுளார். சிபிஐ தேடிய சாந்தன் , கைது செய்யப்பட்டு  சிறையில் இருப்பவர் அல்ல என்ற உண்மையை வெளியிட்டதுடன் சாந்தனுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டில்லிப் பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத்  எழுதிய புத்தகத்தில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.
''இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன். இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன்,ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ்,பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளார். பாதிகாப்புக் குறைபாடு வெளிநாட்டுச்சதி என்பன பற்றி யாரும் விசாரிக்கவில்லை என பெரோஸ் அஹ்மத் குறைபட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் நளினி எழுதிய புத்தகத்தின் மூலம் அவர் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையாரும் பதிலளிக்கவில்லை. ஒற்றைக்கண் சிவராசனுடன் ராஜீவின் கூட்டத்துக்குப் போனது குற்றமா?. எதற்கெனத்தெரியாமல் பற்றி வாங்கிக் கொடுத்தது குற்றமா? சாந்தன் என்ற பெயரில் வாழ்வது குற்றமா? என சாதாரணமானவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத சிபிஐயினால், துறைசார் நிபுணர்களின் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிக்க முடியும். விடுதலையானாலும் கொலைக்குற்றவாளிகள் என்ற அவப்பெயருடன்தான் அவர்கள் வாழப்போகிறார்கள். 27 வருட அவலவாழ்க்கையை ஈடு செய்ய யாராலும் முடியாது.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் கைது செய்யப்பட்டது முதல் அவர்களை விடுவிக்க தீர்மானம் போட்டது வரை 

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். முருகன், நளினி, சாந்தன்,பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்,ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மே 20 1992: பூந்தமல்லியில் தடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிறப்பு விசாரணை குழு.

1998 ஜன 28: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

1999  மே 11: இதில் நளினி, சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையையும், மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனையையும் மீதமுள்ள 19 பேரை விடுவித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1999  அக்டோபர் 8- முருகன்இ நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஒக்.17: தமிழக ஆளுநருக்கு 4 பேரும் கருணை மனு அளித்தனர்.

ஒக் .27: கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார்

நவ.25: கருணை மனுக்களை ரத்து செய்து ஆளுநர் உத்தரவை சென்னை ஹைகோர்ட் நிராகரித்தது. மேலும் சட்டபேரவையின் கருத்துகளை பெற்று புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட்டது ஐகோர்ட்.

2000  ஏப். 19- நளினியின் தூக்கு தண்டனையை குறைக்குமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்தார்.

ஏப். 21- கருணாநிதியின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றார்.

ஏப். 28: அதே போல் சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.
2008 மார்ச் : நளினியுடன் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் சந்திப்பு

ஆகஸ்ட் 12, 2011- கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் தெரிவித்தது.

ஓகஸ்ட் 26: கடந்த 2011-செப்டம்பர் 9-ஆம் தேதி சாந்தன்இ முருகன்இ பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 30: மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தமிழக அரசு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த கருணை மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியது.

2012 மே 1: மூவரின் பேரின் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

2014 பிப்.14- மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையடுத்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.

பிப். 19: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ,ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

மார்ச்: தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு .இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 2015: 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என உச்சநீதிமன்றம் கருத்து

மார்ச் 2016- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
ஏப்ரல் 2016- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
ஜனவரி 2018- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018  செப் 6: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தது.

செப். 9: தமிழக அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடியது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.