விஜயகாந்தின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கருணாநிதி. விஜயகாந்தை வரவேற்க தாமரைப் பூவுடன் தயாராக இருக்கிறது பாரதீய ஜனதா கட்சி. யாருடன் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தமிழக அரசியல் தலைவர்கள் குழம்பிப்போயுள்ள நிலையில், தனது முடிவை வெளியிடாது மர்ம முடிச்சுப் போடுகிறார் விஜயகாந்த்.
தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதில் காலதாமதம் செய்யும் விஜயகாந்த் தனது கோரிக்கையை அதிகரிக்கிறார். விஜயகாந்த் தனது கட்சியின் பொதுக்குழுவை கடந்த வாரம் கூட்டினார். அன்று கூட்டணி பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனைய அரசியல் கட்சிகளைப்போன்று கூட்டணி பற்றி பேச்சு நடத்துவதற்கு ஆறுபேர் கொண்ட குழுவை அமைத்ததுடன் பரபரப்பன்றி கூட்டம் முடிவடைந்தது.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில் விஜயகாந்தின் கட்சியினர் மிகவும் உறுதியாக உள்ளனர். வடிவேல் மூலம் விஜயகாந்தை கேலி பண்ணியதை பிரேமலதாவால் ஜீரணிக்க முடியவில்லை. ஆகையால், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைவது சந்தேகமாக உள்ளது.
விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நிற்பதனால் விஜயகாந்தின் நிலையும் அதுவாகத்தான் இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் விஜயகாந்துடன் பேச்சு நடத்துகிறார்கள். ஆனால், அவர்களை முற்றுமுழுதாக நம்பிப சிபாரிசு செய்ய எவரும் விஜய காந்தின் கட்சியில் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த வியூகத்தை கருணாநிதியின் மகன் அழகிரி விரும்பவில்லை. விஜயகாந்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் இணைவதை அழகிரி ஏற்றுக்கொள்ள வில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது தனித்துத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும் என்று அழகிரி கருதுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பதை விஜயகாந்த் அறிவார். கடந்த தேர்தலின்போது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் இருந்துள்ளார். 2005ஆம் ஆண்டு விஜயகாந்த் கட்சியை ஆரம்பத்தார். 2006ஆம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 27 இலட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது விஜயகாந்த் கட்சி. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 31 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இது சட்டசபைத் தேர்தலை விட 1.75 சதவீதம் அதிகமானது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் விஜயகாந்தை ஆதரித்ததனால் இரண்டு கட்சிகளினதும் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்பட்டது. விஜயகாந்தின் வளர்ச்சியை உற்றுக் கவனித்த ஜெயலலிதா, அவருடன் கூட்டணி அமைத்தார். கருணாநிதியைப் பழிவாங்குவதற்காக விஜயகாந்த் முரசு கொட்டி ஜெயலலிதாவை முதலமைச்சராக்கினார்.
ஜெயலலிதாவின் தயவால் எதிர்க்கட்சித் தலைவராகிய விஜயகாந்த் இப்போது அவரையே பழிவாங்கத் துடிக்கிறார். அதே வேளை, தனது கட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை விஜயகாந்தின மனைவி பிரேமலதா விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்வதையே அவர் விரும்புகிறார்.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்வதற்கு டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் சேர்வதை அவர் விரும்பவில்லை. டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சிக்கு சம அளவு அல்லது அதிகமான செல்வாக்கு உள்ளது. விஜயகாந்த் இருக்கும் கூட்டணியில் சேர்ந்தால் தனக்குரிய செல்வாக்கு குறைந்துவிடும் என்று ராமதாஸ் கருதுகிறார். அவரை ஓரம் கட்டி முன்னிலை பெறவேண்டும் என்று விரும்புகிறார் விஜயகாந்த்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 15 தொகுதிகளை இனம் கண்டுள்ளார் விஜயகாந்த். கூட்டணி சேர்ந்த பின்பே தொகுதிப் பங்கீடு நடை பெறுவது வழமை. காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் எவ்வித நிபந்தனையும் இன்றி பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் வைகோ. கூட்டணி பற்றிய முன்னேற் பாடாக பாரதீய ஜனதா கட்சித் தலைவரை அன்புமணி சந்தித்தார்.ஆனால், விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் எவரும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் எவரையும் இது வரை சந்திக்கவில்லை. இடைத்தரகர்கள் மூலம் பேச்சு நடைபெறுகிறது. இடையிடை யே விஜயகாந்தின் சார்பாக பாரதீய ஜனதாவிலிருந்து கருத்துகள் வெளிவருகின்றன.
கூட்டணிப் பேச்சுக்கு முன்பே தொகுதிப் பங்கீடு பற்றி விஜயகாந்தின் தரப்பு அறிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் இதற்கு ஒப்புதல் வழங்குவது கடினம். விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அரசியல் அரங்கிலே இது மிகமிகச் சிரமமான வேண்டுகோளாகும். மாற்றுக் கட்சிகள் இதற்கு ஒப்புதல் வழங்கமாட்டா. ஏனைய கட்சிகளும் தமது முக்கியஸ்தருக்கு இரண்டு தொகுதிளை ஒதுக்க முன்வந்தால் கட்சிக்குள்ளேயே பிரச்சினை வெடிக்கும். கூட்டணி பலமானதாக இருக்கவேண்டுமானால் விஜயகாந்த் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். இல்லையேல், விஜயகாந்த் தனித்து விடப்படலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது வரைகாலமும் மெளனமாக இருந்த கருணாநிதி இம்முறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலையிடியாக இருப்பது மதுரை. கழகத்துக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி கழகத்தின் முடிவுகளை உதாசீனம் செய்யும் அழகிரிக்குப் பாடம் படிப்பக்க களம் இறங்கியுள்ளார் கருணாநிதி. கழக நிகழ்ச்சிகள் எதிலும் ஒட்டாது ஒதுங்கியிருக்கும் அழகிரியின் பேட்டியும், அழகிரியின் ஆதரவாளர்கள் வெளியிட்ட சுவரொட்டியும் திராவிட முன் னேற்றக்கழகத்தைக் கொதிப்படைய வைத் துள்ளது.
விஜயகாந்துக்கு அரசியல் தெரியாது. விஜயகாந்த் தலைவரே அல்ல. கருணாநிதி மட்டும்தான் எனது தலைவர். அவர் இருக் கும்வரை இன்னொருவரைத் தலைவராக ஏற்கமாட்டேன். என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். விஜயகாந்த் , ஸ்டாலின் ஆகிய இருவரையும் தனது பேட்டியில் சாடியுள்ளார். அழகிரியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் வெளியிட்ட சுவரொட்டிகள் சென்னையில் சலசலப்பை உண்டாக்கின. கிங் ஒவ் தமிழ் நாடு, ஜன. 30 பொதுக்குழுக் கூட்டம் என்ற சுவரொட்டிகளால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
விஜயகாந்தை வளைப்பதற்குத் திராவிட முன்னேற்றக்கழகம் தீவிர முயற்சிசெய்து வருகிறது. இந்நிலையில், கட்சியின் மிக முக்கிய பிரமுகர் அவரை அவமானப்படுத்தியதை கருணாநிதியால் தாங்கமுடியவில்லை. சுவரொட்டிகள் மதுரையின் விபரீதப்போக்கை வெளிப்படுத்தியுள்ளன. மதுரையின் நடவடிக்கைகள் சென்னையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. யாராவது ஒருவர்மீது நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தலைமை, மதுரையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகள் அனைத்தையும் அதிரடியாகக் கலைத்தது.
மதுரையில் அழகிரியின் ஆட்டத்துக்கு ஆப்பு வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதனை இப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள ஏனைய கோஷ்டித் தலைவர்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதையும் அழகிரி விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த அழகிரி, திடீரென கடந்த புதன்கிழமை சென்னைக்குச் சென்று தாயாரைச் சந்தித்துள்ளார். ஜெயலலிதாவின் பரம எதிரிப்பட்டி யலில் முதலிடத்தில் இருப்பவர் அழகிரி. அரசியல் ரீதியாக கருணாநிதி எதிரி என்றா லும் அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் மதுரையில் அண்ணா திராவிட முன்னேற் றக்கழகம் கால்பதிக்க முடியாதநிலை இருந் தது. அழகிரி சிக்குவாரா என்று தமிழக அரசு கண்கொத்திப் பாம்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் பாதுகாப்பு இல்லையென்றால் அழகிரி தனி மரமாகிவிடுவார். ஆகையால், நாடாளு மன்றத் தேர்தல் வரை அவர் மெளனமாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஸ்டாலினின் கை ஓங்கிவிட்டது. கருணாநிதிக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிவிட்டது.
வர்மா
சுடர் ஒளி 12/01/14
No comments:
Post a Comment