தேர்தல் கால பரபரப்பு இந்தியாவில் ஆரம்பமாகிவிட்டது.பாரதீய ஜனதாக்கட்சி கம்பீரமாக தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டது. நம்பிக்கை வைத்த கூட்டணிக் கட்சிகள் வெளியேறுவதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது காங்கிரஸ் கட்சி தடுமாறுகிறது.இலவு காத்தகிளி போல் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்திய வைகோவும், டாக்டர் ராமதாஸும் ஓய்ந்து போயுள்ளனர்.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் விஜயகாந்த்தைச் சுற்றியே வட்டமிடுகின்றன. தனது மதிப்பை நன்கு உணர்ந்துள்ள விஜயகாந்த் பிடிகொடுக்காது பேச்சு வார்த்தை நடத்துகிறார். தனது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணிவைக்க இழுபறிப்பட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பாரதீய ஜனதாக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதனால் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தமிழக பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்கள் விரும்புகின்றனர்.மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ள கூட்டணிக்குத்தான் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதனால் தமிழக பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.ஆகையினால்,கருணாநிதி, ஜெய லலிதா ஆகிய இருவரையும் தவிர்த்து விஜயகாந்த்தைத் தம்பக்கம் இழுக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
ஜெயலலிதாவைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.மோடிக்குப் போட்டியாக பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதாவைத் தோற் கடிக்க வேண்டும் என விரும்புகின்றனர். பாரதீய ஜனதாக்கட்சிக்குள் கருணா நிதிவந்தால் தமது செல்வாக்குப் போய்விடும் என அஞ்சு கிறார்கள்.விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்தால் தமது செல்வாக்கைத் தக்கவைக்கலாம் என்று கருதுகிறார். ஆகையினால்,சில விட்டுக் கொடுப்புகளுடன் விஜயகாந்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அரசியல் என்றால் என்னவென்று விஜயகாந்த் நன்கு புரிந்து கொண்டுள்ளார். யாருக்கும் பிடிகொடுக்காது நழுவியபடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.எந்தவொரு தலைவரையும் சந்திக்காது மைத்துனர் சுதீஷ் மூலம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். தனது கட்சிக்கு 19 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரியுள்ளார். எந்தக் கட்சியும் அவருக்கு 19 தொகுதகளைக் கொடுக்கத் தயாராக இல்லை.தமிழகத் தேர்தல் தொகுதிகளில் விஜயகாந்துக்கு கணிசமாச செல்வாக்கு உள்ளது. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற் குரிய வாக்கு வங்கி விஜயகாந்திடம் இல்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போதும் விஜயகாந்தின் நிலை இதுதான்.தனித்து போட்டியிட்டால் எந்த தொகுதியிலும் விஜயகாந்தின் கட்சி வெற்றி பெற முடியாது. பலம் மிக்க கூட்டணியில் சேர்ந்தால்தான் விஜய காத்துக்கும் கூட்டணிக் கட்சிக்கும் பிரயோசனமாக இருக்கும்.
விஜயகாந்தின் கட்சியிலே அவரைத் தவிர செல்வாக்கு மிக்க தலைவர்கள் யாருமே இல்லை.தனக்கு அடுத்த இடத்தில் மனைவி யையும், மைத்துனர் சுதீஷையும் வைத்தருக்கிறார். கட்சிக்கு வெளியே அவர்களுக்குச் செல்வாக்கு இல்லை.
யாருடனும் கூட்டணி இல்லாது வெல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ள விஜயகாந்த் கூட்டணிக்கான கதவைத் திறந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதும் அதிக தொகுதி களை ஒதுக்க வேண்டும்.என்பதனால் அவருக்கு குறைந்த தொகுதிகளைக் கொடுப்பதில் தான் பிரதானக் கட்சிகள் குறியாக உள்ளன.
பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி என்பதை வைகோ உறுதிப்படத் தெரிவித்து விட்டார்.பாரதீய ஜனதாக்கட்சியுடன் சேர்வதற்கான வாய்ப்பை டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்கிறார்.கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தனது கட்சிபோட்டியிடும் தொகுதிகளையும் டாக்டர் ராமதாஸ் அறிவித்து விட்டார். கூட்டணித் தர்மத்துக்கு விரோதமான இந்த நடவடிக்கையை கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார்.
கூட்டணிப் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் போது ராமதாஸ் அறிவித்த பத்து தொகுதிகள் பிரச்சினையை உருவாக்கலாம். கூட்டணிக் கட்சியின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை விட்டுக்கொடுக்கும் நிலை வரலாம். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு அண்மையில் நடைபெற்றபோது திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துடனும் கூட்டணி சேரக்கூடாது என்று பலரும் கருத்துக்கூறினர். பாரதீய ஜனதாக் கட்சியின் உறவை பலரும் விரும்பினர்.
விடுதலைச் சிறுத்தைகள் முஸ்லிம் லீக், மனிதநேயக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ள கருணாநிதியின் பார்வை விஜயகாந்தின் மீதும் விழுந்துள்ளது விஜயகாந்தும் தன்னுடன் இணைந்தால் பலமான கூட்டணி அமையும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார்.எந்த இடத்திலும் வாய்திறக்காது மெளனமாய் இருக்கிறார் விஜயகாந்த்.
இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகம் என்ற தனது கட்சியைக் கலைத்து விட்டு கருணாநிதியுடன் சங்கமமாகியுள்ளார். ரி. ராஜந்தர்.கட்சி கலைக்கப்படவில்லை.கட்சி இயங்குகிறது.ராஜேந்தர் மட்டும் தான் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டார். என்கிறார்.ரி.ராஜேந்தரின் சகோதரர். கூட்டணி பற்றி உறுதியான முடிவு இன்னமும் எட்டப்பட வில்லை.திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு நல்லதொரு பிரசாரப் பீரங்கி கிடைத்துவிட்டது.
வர்மா
சுடர் ஒளி 05/01/14
No comments:
Post a Comment