Monday, January 20, 2014

கூட்டணிக் குழப்பத்தில் தமிழகத் தலைவர்கள்


இந்தியப் பொதுத் தேர்தலில்யாருடன் கூட்டணி சேர்வது என்ற கூட்டல் கழித்தலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்புக்காட்டி வரும் நிலையில், பெப்ரவரி 7ஆம் திகதி மேலவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மேல்சபையில் 235 நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சட்ட சபை உறுப்பினர்கள் இவர்களைத் தேர்ந் தெடுப்பார்கள். 16 மாநிலங்களின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவதனால் புதியவர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்திலிருந்து மேல்சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆறு உறுப்பனர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்திலிருந்து 16 உறுப்பினர்கள் மேலவையில் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கொரு முறை இத்தேர்தல் நடைபெறுகிறது. சட்ட சபையின் ஆட்சி மாறும்போது நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஜின்னா, வசந்தி ஸ்டாலின், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பால கங்கா, மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. திராவிடமுன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி ஆகியவற்றிலிருந்து தலா மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இந்த எண்ணிக்கை மாறிவிடும். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தது. கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டுக்கு ஒன்றை விட்டுக்கொடுத்தது. காங்கிரஸின் தயவில் கனிமொழியை எம்.பியாக்கினார் கருணாநிதி.


மேலவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியின் ஆதரவின்றி நான்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வல்லமை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு உண்டு. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையினால் கூட்டணிக் கட்சியில் உள்ள ஒருவர் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற மேலவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு வழங்கினார். இம் முறை மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு அவர் சந்தர்ப்பம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் புகழ்பாடும் நிறுவனமாகவே கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. மார்க்ஸிஸ்ட் சற்றுத்தள்ளியே நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதனால் ஜெயலலிதா என்ன முடிவு எடுப்பார் என்பது இரகசியமாக உள்ளது. விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த ஒருவரை எம்.பியாக்கலாம்.
தமிழகத்திலிருந்து மேலவைக்கு ஐந்து உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது. ஆறாவது உறுப்பினர்  யார் என்பது அரசியல் அரங்கின் பெறுமதி மிக்க கேள்வியாக உள்ளது. கடந்த ஜூன் மாதம் கனிமொழியை வேட்பாளராக்கிவிட்டு காங்கிரஸிடமும் விஜயகாந்திடமும் ஆதரவு கோரினார் கருணாநிதி. கடைசிநேரம் வரை இழுத் தடித்துவிட்டு கனிமொழியை எம்.பி யாக்கியது காங்கிரஸ். ஆனால் விஜயகாந்த் அப்போதும் பேரம்பேசினார். தனது மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஸை களமிறக்க விரும்பிய விஜயகாந்த் தனது கட்சிக்கு முதலில் சந்தர்ப்பம் தரும்படி கோரிக்கை விடுத்தார்.
 விஜயகாந்தின் கோரிக்கையை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஆறாவது இடத்துக்குப் போட்டி நடந்தால் தனது கட்சி வே பாளர் வெற்றிபெறுவார் என்று உறுதியாக நம்பினார் கருணாநிதி. தனது வேட்பாளர் தோல்வியடைவார் எனத்தெரிந்தும் வீம்புக்கு வேட்பாளரை நிறுத்தினார் விஜயகாந்த். 34 சட்டசபை உறுப்பினர்களின் வாக்கின் மூலம் மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்வுசெய்யப்படுவார். திராவிடமுன்னேற்றக்கழகம் 23. காங்கிரஸ் 5 விஜயகாந்தின் கட்சி 21 உறுப்பினர்களையே கொண்டுள்ளது. விஜயகாந்தின் ஏழு உறுப்பினர்கள் ஜெயலலிதாவிடம் சரணடைந்து விட்டனர். கட்சியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெறுப்பினால் சட்டசபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துவிட்டு வெளியேறி விட்டார்.  ஒரு உறுப்பினர் உள்ள மனிதநேயக்கட்சி,  புதிய கழகம் ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸுடன் கைகோர்த்தாலும் விஜயகாந்தினால் வெற்றிபெறமுடியாது.

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த கருணாநிதி என்னசெய்யப் போகிறார் என்பதை அறிய அரசியல் உலகம் ஆவலாக உள்ளது. கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததனால் நன்றிக் கடனாக ஆதரவு தெரிவிக்குமா? அல்லது தனது கட்சி வேட்பாளரைக் களம் இறக்குவாரா? தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சனம் செய்தாலும் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை கருணாநிதியின் கையைப் பிடிக்கத் துடிக்கிறது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆதரவு இல்லாமல் தமிழககாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகமுடியாது என்பதை இப்போது ஒரு சிலர் உணர்ந்துள்ளனர்.
தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் இன்னமும் வெளிவிடாது மர்மமாக வைத்துள்ளார். மேலவைத் தேர்தலைப் பொறியாக வைத்து அவரைத் தம் பக்கம் இழுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் முயலக்கூடும். ஜூன் மாதத்தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே விஜயகாந்தின் கட்சிக்கு ஒரு எம்.பி. கிடைத்திருப்பார்.

நாடாளுமன்றத் தேர்தலின் புதிய கூட்டணி எது என்பதை மேலவைத் தேர்தல் மூலம் அறிந்துகொள்ளலாம். அவசரப்படாது ஆறுதலாக முடிவெடுக்கக் காத்திருக்கும் விஜய காந்த் இந்தப் பொறியில் அகப்பட்டால் தமிழகத்தின் கூட்டணிக் கணக்குத் தெரிந்து விடும். மேலவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராது அவர் தனித்து நின்றால் இன்னமும் அதிகமான தொகுதிகளை எதிர்பார்க்கிறார் என்பதை சூகமாக வெளிப்படுத்துகிறார் என்பதை அவருடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜூன் மாத மேலவைத் தேர்தலில் காங்கிரஸிடம் திராவிட முன்னேற்றக் கழகம் தூது சென்றது. இப்போது திராவிடமுன் னேற்றக்கழகத்தை நோக்கி காங்கிரஸ் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுளள்ளது.
 வர்மா 
சுடர் ஒளி 19/01/14

No comments: