சுதந்திரமாகவும்,
மனச்சாட்சிப்படியும் இச் சமுதாய அமைப்புக்குள் நடக்கமுடிகிறதா? என ஒரு முறை நினைத்துப்பார்க்கிறபோது
ஒப்புக்காக இந்த இரண்டு விடயங்களைப்பற்றி சொல்லமுடியுமேதவிர நடை முறைக்குச் சாத்தியமில்லாத
ஒன்றாகக் கருத வேண்டியுள்ளது.எத்தகைய அடக்கு முறைகள்.அநீதிகள் மிகச்சாதாரண மக்களின்
மேல் சுமத்தப்பட்டுள்ளது என்பதை சூரன்.ஏ.ரவிவர்மாவின் கதைகள் காட்டுகின்றன.
இவரது கதைகளில்
வாசகனாகிய நான் அதிகமாகக்காண்பது என்னவென்றால்,தீவிரவாதத்தை அடக்க முற்படுபவர்களால்
அப்பாவிகள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதை உணர்வு பூர்வமாக துணிவோடு
சொல்லியுள்ளார்.
இவரது சிறுகதைத்தொகுப்பில்
பதினாறு கதைகள் உள்ளன. "வடக்கே போகும் மெயுல்" வடபகுதியில் வாழும் மக்களைப்பற்றிய
கதை. வடபகுதி மக்கள் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையையே காலம் காலமாக பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள்
என்பதை குறியீட்டுக்கதையாகக்காட்டியுள்ளார்.
வழமைகள் பிரளாமை
இவரது மொழி நடையிலே இருக்கிறது. கிராமிய பேச்சு வழக்கை தேவையான இடங்களில் கொடுத்துள்ளார். "போனால் போகட்டும்" கதையில்
வரும் வேலுச்சட்டம்பியார் சைக்கிளையும் மிசினையும் தொலைத்துவிட்டு அரியண்டப்பட்டுக்கொண்டு
நிற்கிறார். பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு " மனிசனே போறான் இடையில் இது என்னபெரிசா
? அட சீ போனால் போகட்டும்" எனக்கூறுவது வாசகன் நெஞ்சில் நறுக்கென்று தைத்தது போன்ற
உணர்வைத்தான் பெறமுடிந்தது.மரணங்கள் மலிந்து போன
காலப்பகுதியில் சுமந்து வந்த கதை இது.
வயதானவர்களை படுக்கையில் வத்து பராமரிக்கும் பண்பு
கிராமங்களில்மறைந்து விடவில்லை.தமிழர்களின் வாழ்வோடு இப்பண்பாடுகள் கூடப்பிறந்து விட்டது.மகளும்
பேரப்பிள்ளையும் வயதான பேத்தியாருக்குபணிவிடை செய்வதும்,சின்னச்சின்ன ஆசைகளைச் சுமந்து
வாழ்வதும் "பொன்னுக்கிழவி" உணர்த்துகிறது.
தனது கதைகளின் மூலம் வாசகர்களை கலங்க வைக்கும் கதை
ஆசிரியர்,சிலகதைகளினூடாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார்.மிலேனியம் அப்பா,என்னைத்
தெரியுமா?,செல்லாக்காசு,கொக்குவெடி ஆகிய கதைகள் நகைச்சுவை உணர்வைத்தூண்டும் வகையில்
உள்ளன.அப்பாவிகள் மரணபயத்தோடு நாட்களைக்கடத்துவதை தாலிபாக்கியம்,திக்குத்தெரியாத ஆகிய
கதைகள் உணர்த்துகின்றன.
குலதெய்வம்,தண்ணீர்
தண்ணீர் போன்ற குட்டிக்கதைகள் கடுகாக இருந்தாலும் காரமாக உள்ளன.அநியாயத்துக்கு நல்லவனாக
இருக்கக்கூடாது என்பார்கள் அதை "திரைகடல் ஓடியும்" என்றகதை வெளிப்படுத்துகிறது.
என்றுமறையும்,
காவியமா? நெஞ்சில் ஓவியமா?, விடிவைத்தேடி போன் ற கதைகள் படிக்கமுடியாமல்போன என் மன உணர்வுகளையும் சொல்லவைக்கிறது. ஆசிரியர் காட்டுகின்ற
புறநிலைகளை படிக்கிறபோது தூங்கிக்கொண்டுஎன்று சொல்லமுடியாது, மறக்க வேண்டும் என உறுதி
பூண்டுகொண்டிருந்த என் அக உணர்வுகள் என்னைமீறி திறக்கத்தொடங்கியது.அவரது கதையின் ஓட்டம் மறக்க நினைத்ததை நினவூட்டியது.இவரது கதையின் வெற்றி
அநேகமாக வாசகனை தன் உணர்வோடு அழைத்துச்செல்வதாக உள்ளது.
புலவர் சீடன்
தினக்குரல்
05/01/14
No comments:
Post a Comment