Saturday, January 25, 2014

இன்னும் உயிரோடு

சாய்ந்தமருது பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்..எம். அஷ்ரப் எழுதிய கவிதைகளைச் சுமந்து வெளிவந்துள்ளது "இன்னும் உயிரோடு".

தினகரன்,வீரகேசரி,தினமுரசு,தினக்குரல்,சிந்தாமணி,ஜனனி,மெட்ரோ நியூஸ்,பூமி,தாகம்,கலை அமுதம்,நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமான் 38 கவிதைகள் இதிலே உள்ளன.

அன்பு,மனிதம்,இயற்கை,இழப்பு,கல்வி,சோகம்,யுத்தம்,வெள்ளம்,காதல் ஆகியவற்றைத்தனது கவிதைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

"ஏழு நிறங்கள்
வான விற்களுக்கு
மாத்திரம் தானா உண்டு
பச்சோந்திகளும்
காட்டிடுமே
அந்த
நிறங்களை எல்லாம்"

பச்சோந்திகளின் நிறமாற்றத்தை "பச்சோந்தி" என்றகவிதையில் அழகாகப்படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

"சோவெனப்பய்தமழை
சோர்ந்திடாமல் பெய்ததால்
நிரம்பி வழிந்தது
கங்கை குளங்கள்
கடலுடன் சங்கமிக்க
மறுத்துப் போராடி
தகர்த்தது
தங்குதடைகளை
சீறிப் பாய்ந்தது ஊருக்குள்
என ஆரம்பித்து
இந்த இடத்தில்
இனம் மொழி
சாதி சமயமெல்லாம்
மறந்து போனது மனிதம்
ஆம், இத்தோடு
பிழைத்துக்கொண்டது
மனித நேயம்
இன்னும் வாழ்கிறது" என முடித்திருக்கிறார்.

"பிழைத்துக்கொண்டது மனிதநேயம்" என்ற கவிதையின் மூலம் மனிதநேயம் வாழ்கிறது என  வெளிப்படுத்திகிறார்.

அடை மழை பெய்து ஆறு போல வெள்ளம் பாய்ந்தோடியபின் எப்படி இருக்கும் என கற்பனை செய்தால் அழிவுதான் எம் கண்முன்னே வரும்.  "வெள்ளத்தின் எச்சங்கள்" என்ற கவிதையின் மூலம் கவிஞர் எம்மை எச்சரிக்கிறார்.

"நீச்சலடித்த குடம்பிகள்
இயற்கைபெற்று
உணவுக்காய்
எமைத்துரத்த
தலைதெறிக்க ஓடினாலும்
விடேன் என்று விரட்டும்
மலிந்து விட்ட தொற்று
நோய்த்தாக்கங்கள்
சூழலை சின்னா பின்ன மாக்கும்
வெள்ளத்தின் எச்சங்கள்"

என வெள்ளத்தின் பின்னரான உண்மையை ஆவணப்படுத்தி உள்ளார்.

"விரல் மடித்து
எண்ணப்பட்டு
கொண்டிருக்கும்
சுயநலம் மிகுந்த
துயரத்திகதிகள்
விடியலில்
வெறுமையைமாத்திரம்
விதைத்துச்  சென்றது
சலனமற்ற வாழ்வால்
தினமும்
தலயணை
நனைந்து போகும்"

"வெறுமையான பொழுதுகள்" என்ற கவிதையின் மூலம் மனதை உருக்குகிறார்.

"கருவறை சுமந்த
காலங்கள் சுகமானது
பற்றி எரியும் குரோதங்கள்
பண்பற்றா சகவாசங்கள்
பார்த்திடாத
தனிமைப்பொழுதுகள்"

"குருதிப்பன்னீரால்
நாடு
கழுவப்பட்டபோது
கரு மேகத்தை
மறந்துபோனது வானம்"

"விலை மதிப்பற்ற மனிதம்
வேண்டாத சுமை என்று
விபத்துப் பலிபீடம்
எங்கும் வியாபித்திட
மனுச்செய்து
வெற்றி கொண்டது
யுத்தத்தின் அழிவை"

"நிம்மதி தேடிய மனிதம்" என்ற தலைப்பிலே யுத்தத்தின் வடுவை ஆழமாகப் பதிந்துள்ளார் அஷ்ரப்.

"யுத்த மீதங்கள்" என்ற தலைப்பிலான கவிதையில்

"ஏர் உழுத இடங்களெல்லாம்
எரிந்த தழும்பாய் மறியது
போர் மேகங்கள் பூமியைச் சூழ்ந்து
புழுதி யானது பொன்னான வயல்கள்"

என யுத்தத்தின் கோர முகத்தை வெறிப்படுத்துகிறார்.
கவிதை,சிறுகதை,கட்டுரை ஆகியவற்றின் மூலம் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சூரன்

சுடர் ஒளி 19/01/14

No comments: