தமிழ்மொழியின் சொத்துகளில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் அடக்கம். இதில் இசை நாடகம் என்பது சற்று வித்தியாசமானது. இசை நாடகத்தில் பாடத் தெரிந்தவர்களால் மட்டுமே வெற்றி பெறமுடியும். இசை அறிவு உள்ளவர்களினால்தான் இசை நாடகப் பிரதி களை எழுத முடியும். நாடக விழாக்கள், நாடகப்போட்டிகள் என்பன வருடாந்தம் நடைபெற்ற காலம் இருந்தது. நாடகத்தில் அறிமுகமானது நவீன ஒளி, ஒலி அமைப்புகளுடனும் சில நாடகங்கள் மனதில் இடம் பிடித்தன. மேடை நாடகங்கள் பல மாற்றங் களைக் கண்டாலும், இசை நாடகம் தன்னிலை இழக்காமல் தனித்து நின்றது.
சம்பூரண ராமாயணம், சத்தியவான் சாவித்திரி, அல்லி அர்ஜுனா, பவளக் கொடி ஆகிய இசை நாடகங்கள் முதியோரையும் இளையோரையும் கவர்ந்தன. நாடகமும் அரங்கியலும் பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்பட்ட பின் நாடகத்தின் அங்கீகாரமும் மதிப்பும் உயர்ந்தன. இளையோரை ஊக்கப்படுத்துவதற்காக கலாநிதி த.கலாமணியின் ஐந்து இசை நாடகப்பரதிகளை ஜீவநதி நூலாக வெளியிட்டுள்ளது. கலாமணியின் மணிவிழாவை முன்னிட்டு வெளியிட்டப்பட்ட ஐந்து நூல்களின் இளையோர் இசை நாடகம் என்ற நூலும் ஒன்று.
மார்க்கண்டேயர், காத்தவன் கருணை, ஆத்மலிங்கம், பக்தபிரகலாதா, கண்ணப்ப நாயனார் ஆகிய இதிகாசக் கதைகளை இளையோர் விரும்பப்பாடி நடிக்கும் படியாக எழுதியுள்ளார் த. கலாமணி மார்க்கண்டேயர், புத்திர பாக்கியம் இல்லாத மிருகண்டு முனிவருக்கும், மனைவிக் கும் இறைவனின் வரத்தால் பிறக்கிறார் மார்க்கண்டேயர். அவருக்கு 16 வயது மட்டுமே ஆயுள் என்பதால் 16 வயதடைந்ததும் பெற்றோர் கலங்குகின்றனர். பெற்றோரின் கவலையை அறிந்த சிவபக்தனான மார்க்கண்டேயர் இறைவனின் அருளால் என்றும் 16 என்ற வரத்துடன் வாழ்கிறார். 35 காட்சிகள் கொண்டது இந்நாடகப் பிரதி.
காத்தவன் கருணை, பாம்புக்குப் பகைகருடன் என்பர். ஆயினும், ஆதி சேஷனும், கருடனும், விஷ்ணு மூர்த்தியின் தொண்டவர்களாக இருப்பது ஆச்சரியத்துக்குரியது. ஆதியில் சகோதரர்களான நாகர்களும் கருடனும் எவ்வாறு நேசம் பூண்டார்கள் என்பதை விளக்குகிறது இந்த இசை நாடகம்.
இராவணன் தனது தாய் மாயா தேவிக்காக சிவனிடமிருந்து பெற்றுவந்த சிவலிங்கத்தை விநாயகர் கோகர்ணத் தில் நிலை நிறுத்திய கதையையே ஆத்மலிங்கம் என்ற இசை நாடகமாகத் தந்துள்ளார் ஆசிரியர். சிறுவன் விநாயகரின் பாடல்களும் வசனங் களும் சுவையாக உள்ளன.
பெரிய புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கதையையும் . இரணியனின் கொடுமைகளையும் பிரகலாதனின் பக்தியையும் மனதில் நிற்கும்படியாக இசை வடிவில் தந்துள்ளார்.
கலாநிதி த. கலாமணியின் தந்தையார் ச. தம்பிஐயா புகழ்பெற்ற அண்ணாவியார். அவர் வழிவந்த கலாமணி தானும் சிறந்த அண்ணா வியார்தான் என்பதை இலங்கையிலும், அவுஸ்ரேலியாவிலும் நிரூபித்துள்ளார். இளையோரிடத்தில் இசை நாடகத்தை அறிமுகப்படுத்தி பல மேடைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்தார். கலாமணியின் பிள்ளைகளான பரணிதரன், முரளீதரன், மதனா ஹரன் ஆகிய மூவரும் இசை நாடகங்களில் நடித்துள்ளார்கள். த. கலாநிதி யின் ஊரைச் சேர்ந்த வெ.துஷ்யந்தன், வி.குமரன், வி.செந் தூரன், வி.துவாகரன், க.ஜெயதர்சன், செ.அச்சுதன். வெ.நிருத்திகா, சி.விமலன், வெ.சிந்துஜன், செ.சுரேந்திரா, செ.சுபேந்திரா, க.பாக்கியநேசன், இ.இராகேஸ், ப.பரேந்திரா, சி.நிமலன், சி.நவராஜ், ப.நிலானி, ப.நிஷானி, வி.கிருபரன், க.தம்பேஸ், வி.கவிச் செல்வன், சு.கயித்தா, செ.தனேந்திரா, இ.இராஜேந்திரலிங்கம், மு.செந்தூரன், க.குருபரன், வீ.திவ்விய நாதன், சரசாங்கி, இரத்தினாங்கி, து.இராஜவேல், ர.ரதன், து.நிலோஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாடகமும் அரங்கியலும் பல்கலைக் கழகங்களில் பாடமாகத் தொடர்ந்து போதிக் கப்படுகிறது.
பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றான இசை நாடகமும், ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பயில்நெறியை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்த்தினப் போட்டிகளில் இசை நாடகப்போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனாலும், வழமையான ஒரு சில இசை நாடகங்கள் மாத்திரமே போட்டிக்கான ஆற்றுகை செய்யப்படலாம் என்ற வரையறை காணப்படுகின்றது. இந்நிலையில், குறிப்பட்ட சில இசை நாடகங்கள் மாத்திரமே பலரதும் கவனத்தைப் பெறுகின்றன.
இவ்வாறான இசை நாடகங்களில் காணப்படும் கதை அம்சங்களை ஒத்த சிறப்பான கதைக்கூறுகள் புராண இதிகாசங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
ஆனால், அக்கதை அம்சங்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள நாடகப் பிரதிகள் சொற்பமானவையே. எமக்கு நடிப்பதற்குப் போதிய அளவில் நாடகப் பிரதிகள் இல்லை என்று கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் ஆதங்கப்படுவது இவ்விடத்தில் ஞாபகத்துக்கு வருகிறது என தன்னுரையில் நூலாசிரி யர் கலாநிதி த.கலாமணி கவலைப்படுகிறார்.
ஊர்மிளா
சுடர் ஒளி 26/01/14
No comments:
Post a Comment