Monday, February 3, 2014

மதுரைக்கு வந்த சோதனை

ஓர் உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதைக் கருணாநிதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஸ்டாலினா,அழகிரியா முக்கியம் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்த கருணாநிதி காலம் கடந்து உறுதியான முடிவை எடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியபோது மதுரைக்கு  எம்.ஜி.ஆரை வரவிடமாட்டேன் எனச் சபதம் செய்த மதுரை முத்து பின்னர் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வைகோ விரட்டியடிக்கப்பட்ட போது தமிழகத்தில் தென்பகுதியில் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக களம் இறக்கப்பட்ட அழகிரி மதுரையில் தன்னை வளர்த்துக்கொண்டார். அழகிரியின் செயற்பாடுகளினால் துவண்டுபோன கருணாநிதி மீண்டும் சென்னைக்கு வரும்படி அவருக்கு விடுத்த கெஞ்சல்கள்  எல்லாம் நிராகரிக்கப்பட்டன.
மதுரையில் இருந்தபடியே சென்னையை ஆட்டிப்படைக்கும் சக்தி அழகிரிக்கு உள்ளது. அழகிரியின் அதிரடியான நட வடிக்கைகளினால் அஞ்சா நெஞ்சன் என்ற பட்டத்தை தகப்பன் கொடுத்தார். அழகிரி கோபிப்பதும், கருணாநிதி சாந்தப்படுவதும்  வழமையான நடவடிக்கைகள்தான். இம் முறையும் அப்படித்தான் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். குடும்பமா கழகமா என்ற கேள்வி வந்தபோது குடும்பத்தைவிடக் கழகம்தான் முக்கியம் என்று முடிவெடுத்துள்ளார் கருணாநிதி.  எதையும் எதிர்பார்க்காமலே அரசியலில் தனது ஆளுமையைப் பதித்தவர் ஸ்டாலின்; தகப்பனைப்போல் அஞ்சாது இளம் வயதிலேயே அரசியலில் கால்பதித்தவர் ஸ்டாலின். கருணாநிதிக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று இரண்டாம்கட்டத் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தனது வாரிசு ஸ்டாலின்தான் என்று கருணாநிதி பட்டம் சூட்டாமலே இளவரசராக  வலம் வருகிறார் ஸ்டாலின்.
அரசியலில் உயர்ந்த நிலைக்கு ஸ்டாலின் வந்தபின்னர் மகன் அழகிரியை யும் மகள் கனிமொழியையும் நாடாளு மன்ற உறுப்பனராக்கியது கருணாநிதி செய்த பெரும் தவறு. தமிழக அரசியல் வேறு. மத்திய அரசியல் வேறு  என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஆனால், அழகிரி அதனை சரிவரப்புரிந்து கொள்ளவில்லை.அதன் காரணமாக முட்டல்கள், மோதல்கள், உரசல்கள் தொடர் ந்தன.


கறிவேப்பிலை போன்று கருணாநிதி தன்னைத் தூக்கி எறிந்து  விடுவார் என்று அழகிரி கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
தமிழக அரசியலில் தனிமையாக இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம், விஜயகாந்த்துடன்  கூட்டணி சேரத் துடித்தது. அந்தத் துடிப்பு  அழகிரிக்குப் பதற்றத்தை உண்டாக்கியது.  விஜயகாந்த் தலைவரே  அல்ல. அவருடன் கூட்டணி சேரக் கூடாது. கருணாநிதியைத் தவிர வேறு யாரையும்  தலைவராக  ஏற்க மாட்டேன் என்று  தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்தார். கருணாநிதியும், ஸ்டாலினும் இதனைக் கண்டித்தார்கள். குமுறிக்கொண்டிருந்த பிரச்சினை அழகிரியின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டாலி னின் ஆதரவாளர்களுக்கு எதிராக அழகிரியின் ஆதரவாளர்கள் பொலிஸில் புகார் செய்ததால் உட்கட்சிப் பிரச்சினை வெடித்துச் சிதறியது.மதுரையில் உள்ள அழகிரியின் ஆதர வாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அப்போது அழகிரி வெளி நாட்டில் இருந்தார். அழகிரி  நாடு திரும்ப யதும் பரச்சினை தீர்க்கப்பட்டுவிடும்  என்றே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட் டவர்கள் நினைத்தார்கள்.தன் ஆதரவாளர்களுக்காக நியாயம் கேட்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்ற அழகிரி, தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.  பரச்சினையை முடித்து விட்டார் கருணாநிதி. ஆனால், இருவரும் வரம்பு மீறி  தமது தரப்பு நியாயங்களைத் தொலைக்காட்சிகளுக்கு வழங்கி குடும்பச் சண்டையை உலகறியச் செய்துள்ளார்கள்.

எம்.ஜி.ஆரும், வைகோவும் கழகத்திலிருந்து வெளியேறியபோது முக்கியமான தலைவர்களும் தொண்டர்களும் அவர்களின் பின்னால் சென்றனர். திராவிட முன்னேற்றக்கழகத்தின்  தலைவர்கள் எவரும் அழகிரியுடன் நெருக்கமாக இல்லை. மதுரையில் செல்வாக்குச் செலுத்தும் அழகிரியின் பின்னால் மதுரையின் தலைவர்கள்  எவருமேயில்லை.
1989ஆம் ஆண்டு கட்சியை முன்னேற்றுவதற்காக மதுரைக்கு அழகிரியை அனுப்பியது கழகம். பதவி எதுவும் இல்லாத நிலையில் மதுரையில் தனக்கென்று ஒரு கோஷ்டி யைஉருவாக்கி  படிப்படியாக மதுரையைத் தனது கைக்குள் கொண்டுவந்தார் அழகிரி. அழகிரியுடன் கலந்தாலோசனை செய்தபின்பே மதுரையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பக்கவேண்டிய நிலை கழகத்துக்கு ஏற்பட்டது.
தென் மண்டல திராவிட முன்னேற்றக் கழக அமைப்பின் பொதுச் செயலாளராக  அழகிரி 2008ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரானார். அமைச்சரான பின்னர் அழகிரியின் வாழ்வில் மாறுதல் ஏற்படும் என்று  கருணாநிதி எதிர்பார்த்தார். அழகிரியின் துடுக்குத்தனம் கூடிக்கொண்டே போனது.

மதுரையின் திராவிட முன்னேற்றக்கழகப் பிரமுகரானதா.கிருஷ்ணன் கொலை, தினகரன் மதுரை அலுவலகம் எரிந்து மூவர் கருகி மரணம் ஆகிய சம்பவங்கள் நடைபெற்ற போது அதனைக் கண்டும் காணாததும் போல் இருந்தார் கருணாநிதி. அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்ற அடியாட்கள்தான் அழகிரியின் பின்னால் நின்றார்கள். பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டபின் அட்டாக் பாண்டி தலை மறைவானார்.
அரசியலில் முன்னேறக்கூடிய பல சந்தர்ப்பங்களை  அழகிரி தவறவிட்டுள்ளார். அழகிரியின் பிறந்தநாளன்று மதுரையில் போஸ்டர் ஒட்டி உற்சாகப்படுத்துவார்கள்  அவரது  ஆதரவாளர்கள். நக்கலும் நளின மும் நிறைந்த போஸ்டர்தான் அழகிரியின் அரசியலில் புயலைக் கிளப்பயுள்ளது.
2001ஆம் ஆண்டு அழகிரியை கட்டம் கட்டி ஒதுக்கிவைத்தது கழகம்.அப்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் அழகிரி பேரவையின் பெயரில் தேர்தலில் போட்டியிட்டு  திராவிட முன்னேற்றக் கழகத்தைத்  தோல்வியடையச் செய்தனர். மதுரையின் செல்வாக்குமிக்க பி.ரி.ஆர். பழனிவேல்ராஜனே தேர்தலில் தோல்வியடைந்தார். அன்றைய செல்வாக்கு இன்றைய அழகிரியிடம் இல்லை. அன்று நடந்தது  தமிழக சட்டசபைத்  தேர்தல். இப்போது நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல். ஆகையினால், அழகிரியின் வெளி யேற்றத்தால் பாதிப்பு ஏற்படாது என நம்புகிறார் கருணாநிதி.

வர்மா 
 சுடர் ஒளி 02/01/14

4 comments:

Amudhavan said...

சரியான தகவல்களுடன் எழுதியிருக்கீறீர்கள். நீங்கள் சொல்வதுபோல் மத்திய அமைச்சராக வந்தபிறகாவது அவர் தமது போக்கை மாற்றிக்கொள்வார் என்பது கலைஞர் எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர் மாறவே இல்லை.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க திமுக தலைகாட்டவே முடியாது; மதுரை என்பது எம்ஜிஆர் பூமி என்ற ஒரு சித்திரம் அன்றைக்கு வரையப்பட்டிருந்தது.

இதனை மொத்தமாக மாற்றிக்காட்டினார் அழகிரி என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

'அழகிரியின் சாம்ராஜ்யம்' அங்கே கொடிகட்டிப் பறந்தவரை அதிமுக பெரிதான வெற்றி மட்டுமல்ல சாதாரண பொதுக்கூட்டம் போடக்கூட யோசிக்கவேண்டிய அளவு மதுரையைத் தமது கைக்குள் கொண்டுவந்தார் என்பது ஒரு சாதனைதான்.

ஆனால் அதன்பிறகு வன்முறை, அட்டகாசம் என்றெல்லாம் திசை திரும்பி தற்சமயம் தந்தைக்கும் சகோதரருக்குமே எதிரியாய் வந்து நிற்கிறார் என்பதுதான் சோகம்.

goopaalan said...

படித்தவர்களின் மத்தியில் பைசாகூடப் பெறாதவரை மத்திய அமைச்சராக்கி சாதனை புரிந்தார் தலைவர். அதை ஏற்றுக்கொண்டு அனுமதித்த கட்சியினரும் அவரோடு சேர்ந்து வேதனைப்படுகிறார்கள்.

கோபாலன்

வர்மா said...

Amudhavan


வளர்த்த கடா மார்பில் பாய்கிறது.அழகிரி த்னது மதிப்பை நினைத்து மாறி இருக்கவேண்டும்.விதி யாரை விட்டது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி
அன்புடன்
வர்மா

வர்மா said...

கோபாலன்
திருந்தாத மனிதர்கள் இருந்தென்ன லாபம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி
அன்புடன்
வர்மா