Saturday, May 13, 2023

புதிய பாதையில் தடம் பதிக்கும் பன்னீர்


தமிழக அரசியலில் பன்னீர்ச்செல்வம் மீண்டும் தலைப்புச் செய்திகளில்  இடம் பிடித்துள்ளார். பன்னீர்‍ ‍டி.டி.வி.தினகரன் சந்திப்பு, பன்னீர்  சபரீசன் சந்திப்பு எடப்பாடி தரப்புக்கு அவலாகக் கிடைத்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  பரம அரசியல் கட்சியான திராவிட முன்னேறக் கழகத்தின் பிரமுகரான சபரீசனை பன்னீர் சந்தித்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை  தினகரனை பன்னீர்ச்செல்வம் சந்தித்ததால்  அரசியலில்  புதிய கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பதை  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.  ஓ. பன்னீர்ச்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன்   ஆகிய  இருவரும்   டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். வாசல் வரை வந்து வரவேற்ற டிடிவி தினகரனுடனான இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இருவரும், தாங்கள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தனர்.

சசிகலாவுக்கு எதிராகத் தர்மயுத்தம் செய்த  ஓ.பன்னீர்ச்செல்வம் தனது  நிலைப்பாட்டை  மாற்றியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னைக்குப் பிறகு ஓ.பன்னீர்ச்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட வில்  டிடிவி தினகரன் , வி.கே.சசிகலா ஆகியோரைச்  சந்திக்கப் போவதாகக் கூறியிருந்தார். இப்போது தினகரனைச் ச‌ந்தித்துள்ளார்.  விரைவில் சசிகலாவைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

 திருச்சியில்  தனது ஆதரவாளர்களைத் திரட்டி,  ஒன்றை பன்னீர் நடத்தியிருந்தார். பன்னீருக்குப் பின்னால்  இத்தனை பேர்  இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியது.

பன்னீரும், எடப்பாடியும்  இணைந்தால் தென் மாவட்ட வாக்குகள்  பிரிக்கப்படும். இதனால் எடப்பாடி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்படும். 2019 தேர்தலில் திகனரனின் கட்சி 20 இடங்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.  ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் சக்தி தினகரனுக்கு இருக்கிறது.

ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு  தமிழகம்  முழுவதும் செல்வாக்கு இல்லை. அவருக்கென  ஒரு கட்சியும் இல்லை. எடப்பாடியைப் பிடிக்காத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்  பன்னீருக்குப் பின்னால் அணிவகுப்பார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற சபதம் எடுத்த தினகரன்  புதுக் கட்சி தொடங்கி உள்ளார். பன்னீர்  தனிக் கட்சி ஆரம்பித்தால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற முடியாது. இவர்கலின்  இணைவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் அடியாக  இருக்கப் போகிறது.

  அடையாறு கற்பகம் அவென்யூ வீட்டுப் படியேறி, தினகரனைச் சந்தித்திருக்கிறார் பன்னீர். இந்தச் சந்திப்பின் பின்னணியில் பாரதீய ஜனதா  இருக்கலாம் என்ர் சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிற‌து. 

 அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பன்னீரும் தினகரனும் விவாதித்திருக்கிறார்கள்.  சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தினகரனுக்கு அழைப்பு விடுத்தாராம் பன்னீர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலக கலவரம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கம், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு, என்று கடந்த  11 மாதமாக‌   பிரச்னைகள் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்,   ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாரை எதிர்த்து தர்ம யுத்தம் செய்தாரோ அவர்களுடனே தற்போது கைகோர்த்து இருக்கிறார் பன்னீர் அதற்கு மிக முக்கிய காரணம் அரசியலையும் தாண்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் டிடிவி.தினகரனுக்கும் இருக்கக்கூடிய நட்பு.

அதன் அடிப்படையில், கடந்த 6 மாதமாகவே இவர்கள் இருவரின் சந்திப்பு எதிர்ப்பார்த்த ஒன்றாகத்தான் இருந்தது. ஏற்கனவே திருச்சியில் மாநாடு நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்த இருக்கிறது. கோவை அல்லது சேலத்தில் மாநாடு நடத்த வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினகரனும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எடப்பாடி பழனிசாமி தரப்பில் மதுரையில் வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தக்கூடிய மாநாட்டிற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன் இணைந்து மதுரையில் மாநாடு நடத்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே வெகு விரைவிலேயே சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவிருப்பதாகவும் அந்த சந்திப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

மாநாடுகளை முடித்துவிட்டு மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார். ஒருபுறத்தில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முறையீடுகள் இருந்தாலும், மக்களை சந்திப்பதே பிரதான முயற்சியாகவும், இறுதி முயற்சியாகவும் கையில் எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு தினகரன் மற்றும் சசிகலாவின் சந்திப்பு மேலும் கூடுதல் பலத்தை தரும் என்று நம்புகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி,பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர்  ஒன்றாக  வேண்டும் என்பதே பாரதீய ஜனதாவின் விருப்பம். பன்னீரும், தினகரனும்  இணைந்து விட்டார்கள், விரைவில் சசிகலாவும்  அவர்களுடன் கைகோர்ப்பார். டில்லித் தலைமை விரும்பியது நடக்கப் போகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  ஒரே கூட்டணியில் இருக்கின்றன. பன்னீர்,தினகரன், சசிகலா ஆகிய மூவருடனும் சேர்வதற்கு எடப்பாடி விரும்பவில்லை.  நாடாளுமன்றத் தேர்தலின்  போது அவர்களை பாரதீய ஜனதா தனது கூட்டணியில் இணைப்பது தவிர்க்க  முடியாதது.

சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியைப் பார்க்கச் சென்ற பன்னீர்ச்செல்வம் அங்கு சபரீசனைச் சந்தித்த  புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக  பன்னீர் செயற்படுகிறார் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு அதனை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.பன்னீர்ச்செல்வம் ஐபிஎல்  பார்த்தது அரசியலாகி உள்ளது.

No comments: