கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் காங்கிரஸுக்கு வாழ்வா சாவா என்ர போராட்டமாக இருந்தது. மோடி என்ற துருவ நட்சத்திரத்தின் கவர்ச்சியால் வென்று விடலாம் என பாரதீய ஜனதா கனவு கண்டது.தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு வாழ்வு கொடுத்தது. பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்டியது.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 10 ஆம் திகதி பலத்த
பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில்
113 இடங்களில் பிடிக்கும் கட்சி பெரும்பான்மை பலத்து ஆட்சியை பிடிக்கும். கடந்த மே
13 ஆம் திகதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்று
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவின் 14 அமைச்சர்களும், சபாநாயகரும்
தோல்விடைந்தனர். தென்னிந்தியாவில் கர்நாடகாவை
மட்டுமே பாரதீய ஜனதா நம்பி இருந்தது. அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. ராகுலின்
பாதயாத்திரை, ராகுலின் பதவி பறிப்பு என்பனவற்றுக்கான பதிலாக கர்நாடக தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா அரசின்மீதான ஊழல், கமிஷன், வகுப்புவாதப் பிரச்னைகள்
மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. கடந்த 2022-ம் ஆண்டு, பெலகாவியைச்
சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரரின் தற்கொலை வழக்குக்குப் பிறகு, `அனைத்துத்
துறைகளிலும் 40 சதவிகித கமிஷன் பெறுகிறது பா.ஜ.க ஆட்சி’ என்ற கோஷத்தை முன்னெடுத்தது
காங்கிரஸ். `Pஅய்CM’ என்று Qற் கோடில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முகத்தைச் சேர்த்து
ஒட்டப்பட்ட போஸ்டர் பிரசாரம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன
கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக்கியது,
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பிரசாரம்
செய்தது, பணபலமும் செல்வாக்கும் பெற்ற டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்கியது என
காங்கிரஸ் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. மேலும்,
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியதும் காங்கிரஸுக்கு
சாதகமாக அமைந்தது. அமைந்தது. வியாபாரிகள் சங்கம், ஒப்பந்ததாரர்கள் சங்கம் எனச் சங்கங்களைத்
தங்கள் வசம் இழுத்ததும், லிங்காயத் மடாதிபதிகள், இஸ்லாமிய அமைப்புகள் எனச் சமூகரீதியான
ஆதரவைப் பெற்றதும் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டன.
`தி கேரளா ஸ்டோரி’, `ஜெய் பஜ்ரங் பலி’ என மதம் சார்ந்த விஷயங்களை
முன்னிறுத்தி மோடி செய்த பிரசாரங்களையும் கர்நாடக மக்கள் காதில் வாங்கவில்லை. லிங்காயத்
சமூகத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த தலைவரான எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியபோதே
கர்நாடகாவில் சரிவு தொடங்கிவிட்டது. பசவராஜ்
பொம்மை பதவியேற்ற பிறகு கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட மதவாதப் பிரச்னைகளால்
பதற்றமான சூழலே நிலவியது. அரசுத் துறைகளில் தலைவிரித்தாடிய லஞ்சம், ஊழல் உள்ளிட்டவையும் பாரதீய ஜனதாவை
ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியிருக்கின்றன. மோடியும், அமித் ஷாவும்கர்நாடகாவில் முகாமிட்டு
பிரசாரம் செய்தும் வெற்றி பெற முடியவில்லை.
கர்நாடகத் தேர்தல் முடிவு
தமிழகத்தில் எதிரொலிக்கிறது. கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்
அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கர்நாடகத்தில்
பாரதீய ஜனதாவின் தோல்வியை அண்ணாமலையின் தோல்வியாகவே தமிழகம் கொண்டாடுகிறது.
தமிழ்நாடு பாரதீய ஜனதாவின் மேலிட பொறுப்பாளர்
சி.டி.ரவி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனையும் தமிழகம் கொண்டாடுகிறது. சி.டிரவி தனது சிஷ்யனிடம் தோல்வியடைந்தார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பரதீய ஜனதா தோல்வியடைந்துள்ளது. தமிழர்கள் வசிக்கும் தொகுதியில் அதிகமான வாக்குகளை
பெற்று காங்கிரஸ் வெற்றி முகம் கண்டுள்ளது. அதேபோன்று கர்நாடக தமிழர்கள் பாரதீய ஜனதாவுக்கு
எதிரான மனநிலையில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்பார்ப்பை சட்டசபைத் தேர்தல் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசியக் கட்சிகளான காங்கிரஸும்,
பாரதீய ஜனதாவும் நேரடியாக மோதிய கர்நாடகத் தேர்தலை அரசியல் கட்சிகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானித்தன.
காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதேநேரம் தேர்தலில் வெற்றிபெற மோடியின் பிம்பம் மட்டுமே போதும் என்ற பாரதீய ஜனதாவின் விம்பம் தகர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் பாரதீய ஜனதா
தோல்வியடைந்ததால் எடப்பாடி நிம்மதிப் பெருமூச்சு
விட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்கத்தில் பாரதீய ஜனதா கேட்கும் தொகுதிகளின் தொகையைக் குறைக்க எடப்பாடி காரணத்தைக் கண்டறிந்துள்ளார்.
கர்நாடகத் தேர்தல் வெற்றியை நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் கொண்டாடி
வரும் வேளையில் முதலமைச்சர் யார் என்பதில் போட்டி
நிலவியது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும்,
டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதாவின்
ஆட்சியை அகற்றுவதற்கு டி.கே. சிவகுமார் முழுமூச்சாகச்
செயற்பட்டார்.
டிகே சிவக்குமார் தனக்கு
முதலமைச்சர் பதவியை கொடுத்தால் ஏற்பதாகவும், இல்லாவிட்டால் துணை முதலமைச்சர், அமைச்சர்
என எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முதலமைச்சர்
சித்தராமையா என்றும், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் எனவும் குறிப்பிட்டு கர்நாடகா
மாநில உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு
பிறகு தற்போது சித்தராமையாவை கர்நாடகா மாநில முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.சோனியா காந்தி கேட்டதற்கிணங்க முத்ல்வர் பதவியை டி.கே.சிவகுமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
காங்கிரஸின் எதிர்கால வெற்றிக்கு கர்நாடகம் அடித்தளம் இட்டுள்ளது.
No comments:
Post a Comment