Tuesday, May 2, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி


 தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகிய  இரண்டு ஜான்பவான்களின் கட்டுப்பாட்டில் ஆடம்பகால தமிழ் சினிமா  இருந்தது. தியாகராஜ பாகவதரை, சூப்பர் ஸ்டர் என்றும், பி.யு.சின்னப்பாவை சகலகலாவல்லவன் என்றும் ரசிகர்கள்  கொண்டடினார்கள். 

பி.யு.சின்னப்பாவின் திரை உகல வாழ்க்கை மிகக் குறுகியது. ஆனால், அவரின் சாதனைகள் அளப்பரியன.  ஒரு படத்தில் 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பா. 1936-ஆம் ஆண்டு  சந்திரகாந்தாவில் தொடங்கிய சின்னப்பாவின் திரையுல வாழ்க்கை சுதர்ஸன் (1951) படத்துடன் முடிவுக்கு வந்தது.  15 வருடங்களில் 26 படங்களில் மட்டுமே நடித்தார்.  ஆர்யமாலா, கண்ணகி, மனோன்மணி, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், விகடயோகி ஆகிய படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தனர். அளவுக்கதிகமான மதுப் பழக்கம், கட்டுப்பாடில்லாத  உணவு முறை ஆகியவற்றால் உடல் பெருத்து நடிப்பைக் கைவிட்டார். பி.யு.சின்னப்பா கடைசியாக நடித்த சுதர்ஸன்  அவரின் மறைவுக்குப் பின்னரே திரைக்கு வந்தது.

பி.யு சின்னப்பா இரு வேடங்களில் தோன்றி நடித்த உத்தம புத்திரன் படத்திலிருந்துதான்  திரை உலகில் இரட்டை வேடம் தொடங்குகின்றது. மூன்று வேடங்களில் முதன்முதலில் நடித்தவரும் சின்னப்பாதான். படத்தின் பெயர் மங்கையர்க்கரசி. ஆர்யமாலா என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார் பி.யு. சின்னப்பா.

1965- ஆம் ஆண்டு வெளிவந்த ''திருவிளையாடல்" படத்தில் வரும் ''பாட்டும் நானே" என்ற பாடலை பாடிய சிவாஜிக்கு முன்னோடியாக ஜெகதல ப்ரதாபன் என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் 5 வேடங்களில் நடித்தவர் பி.யு.சின்னப்பா.   

. ‘12 அமைச்சர்களின் கதை’ என்ற நாட்டுப்புற மாயாஜாலக் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த ‘ஜெகதலபிரதாபன்’ திரைப்படம்.இந்தப் படத்தில் சின்னப்பா பாடிய ‘தாயைப் பணிவேனே...’ என்று தொடங்கும் பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடல்தான் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ‘பாட்டும் நானே பாவமும் நானே...’ பாடலின் முன்னோடி. இந்தப் பாடலில் சின்னப்பாவே கச்சேரியில் பாடுவார். சின்னப்பாவே மிருதங்கம்  ,  வயலின்  ,  கஞ்சிரா,   கொன்னக்கோல் ஆகியவற்றை வாசிப்பார்.

 

ஒரே ஃபிரேமில் 5 இசைக் கலைஞர்களாக சின்னப்பாவையே பார்த்து வியந்துபோனார்கள் ரசிகர்கள்.  தொழில் நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத  அக் காலத்தில் ஒளிப்பதிவாளர் வி.கிருஷ்ணனின் அற்புதமான படப்பிடிப்பால் இந்தக் காட்சி  அதிசயமாக விளங்கியது. இந்த ஒரு காட்சிக்காகவே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்தார்கள். அது தொழில்நுட்பம் அதிகம் முன்னேறாத கறுப்பு - வெள்ளை காலம். இதே உத்திதான் பிறகு ‘திருவிளையாடலில்’ வண்ணத்தில் ஜொலித்தது.

நவராத்திரி [1964 ]படத்தில் 9 வேடங்களில் சிறப்பாக நடித்த நடிகர் திலகம் சிவாஜிக்கும் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் தோன்றிய கமல்காசனுக்கும் முன்னோடியாக ஆர்யமாலா என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார் பி.யு. சின்னப்பா.

பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் ஆறு படங்கள் தமிழ் திரையுலகில் மீண்டும் தயாரிக்கப்பட்டன.   உத்தம புத்திரன் (1940), ஆர்யமாலா (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944) ஆகிய சின்னப்பா நடித்த படங்கள் முறையே, உத்தம புத்திரன் (1958 சிவாஜி), காத்தவராயன் (1958 சிவாஜி), பூம்புகார் (1964 எஸ்.எஸ்.ஆர்) ராணி சம்யுக்தா (1962 எம்.ஜி.ஆர்.), ஜெகதல ப்ரதாபன் (1963 என்.டி.ராமாராவ்), ஹரிச்சந்திரா (1968 சிவாஜி) ஆகிய பெயர்களில் வெளிவந்தன.பி.யு.சின்னப்பாவின் வெற்றிப் படங்களில் கண்ணகியில் அவருக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.  கண்ணகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்டது.

பாரதியார் பாடல்களில் சின்னப்பாவுக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு முதன் முதலில் தமிழ் திரையில் பாரதியின் பாடல்களை பாடியவரும் இவர்தான். ''உத்தம புத்திரன்" என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ' செந்தமிழ் நாடேனும் போதினிலே' என்ற பாடல் தமிழகமெங்கு,  புகழ்  பெற்றது.  இப்பாடலுக்கு அன்றைய ஆங்கிலேய அரசு (1940 ஆம் ஆண்டு) தடை விதித்தது. சுதந்திரம் பெற்ற பின்தான் அத்தடை நீக்கப்பெற்றது.


எட்டைய புரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்ட ரூ.1000/- நிதியுதவி செய்தார். பிருதிவிராஜ் படத்தில் ''அச்சமில்லை" "பாரத சமுதாயம் வாழ்கவே" "வெற்றியெட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே" ஆகிய மூன்று பாடல்களை பாடினார். தயாளன் படத்திலும் பாரதியார் பாடலை பாடியுள்ளார். தமிழ் நடிகர்களில், அதிக எண்ணிக்கையில் பாரதி பாடல்களை திரையில் பாடி சாதனை படைத்துள்ளார் சின்னப்பா."கட்டபொம்மு" என்ற படத்தை தயாரிப்பதாக 1948ஆம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் விளம்பரம் வெளியிட்டனர். பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடிக்க போகிறார் என்றும் விளம்பரபரபடுத்தப்பட்டது. ஆனால், தயாரிக்கப்படவில்லை.

மக்கள் திலகம்  எனப் போற்றப்படும் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதர்கு முதன் முதலில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தவர் பி.யு.சின்னப்பா.   

ஜுபிடரின் மஹாமாயா (1944) படத்தில் கதாநாயகனாக வில்லன் உருவில் பி.யு. சின்னப்பா நடித்தார். கண்ணம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி..மதுரம், எம்.எல்.சரோஜா, சஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்கரபாணி ஆகியோர் நடித்தனர். சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சோமுவை பார்ப்பதற்காகவும், படப்பிடிப்பை கண்டு களிப்பதற்காகவும் எம்.ஜி.ஆர். ஜூபிடரின் படப்பிடிப்பு தளத்திற்கு அப்பொழுது வருவதுண்டு. தனது பழைய சீடர் எம்.ஜி.ஆரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்த சின்னப்பாவுக்கு அவரை எப்படியாவது அந்த திரைப்படத்தில் (மஹாமாயா) நடிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.

எம்.ஜி.ஆருக்கு அப்படத்தில் ஒரு வேடம் கொடுக்கும்படி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார். ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும், பி.யு. சின்னப்பாவின் ஏற்று ஒரு சிறு வேடம் எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கித் தரப்பட்டது. படத்தில் ''அஸ்வபாலன்" என்ற வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். 1942 ஆம் ஆண்டு வெளியானகண்ணகி  படத்தின் வசனங்களை அன்றைய ஜாம்பவான் இளங்கோவன் எழுதினார். ‘கண்ணகியில் சின்னப்பா பேசிய வசனங்களையும் கண்ணகியாக நடித்த பி.கண்ணம்மா பேசிய வசனங்களையும் ரசிகர்கள் கேட்டுக்கேட்டு மெய்சிலிர்த்தார்கள். “ ‘கண்ணகிபோன்ற படங்களில் இளங்கோவனின் வசனங்களே நாமும் திரைப்படங்களுக்கு வசனமெழுத வேண்டும் என்ற ஆவலை எனக்குள் ஏற்படுத்தினஎன்று கலைஞர் கருணாநிதிகூட குறிப்பிட்டிருக்கிறார்

தான் நடிக்கும் படங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின்போது எல்லா தொழிலாளர்களுக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறதா, அதில் பாக்கி ஏதும் நிற்கிறதா என்பதையெல்லாம் கேட்டறிந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே ஒத்துழைப்பாராம். யாருக்காவது சம்பள பாக்கி இருந்தால் முதலில் அதனை நேர்செய்துவிட்டுப் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று கறாராகச் சொல்லிவிடுவாராம்.

பி.யூ.சின்னப்பாவின் இந்த அருங்குணத்தை அப்படியே கற்றுக்கொண்டு தானும் அதன்படி நடப்பதாக எம்ஜிஆர் சொன்னதுண்டு. தனது மானசீக முன்னோடிகளாக பி.யூ.சின்னப்பாவையும், எம்.கே.தியாகராஜ பாகவதரையும் எம்ஜிஆர் குறிப்பிடுவது வழக்கம். ஒரு நடிகன் என்பவன் தனது ரசிகர்கள் முன்னிலையில் மிடுக்கோடு தோற்றமளிக்க வேண்டும் என்பதை எம்கேடி-யிடம் கற்றதாக எம்ஜிஆர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருமுறை மதுரைக்கு சென்ற  பி.யூ.சின்னப்பாவும், டி.எஸ்.பாலையாவும், கே.ஆர். ராமசாமியும்   அறை ஒன்றில் தங்கினார்கள். அங்கே அவர்கள் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்து அறையில்  இளைஞரான டிஎம்எஸ் இருந்தார். அது அவர் பாடகராகப் புகழ்பெறாத காலம். டிஎம்எஸ் உரத்த குரலில் பாடினார்.இதைக் கேட்டுவிட்டு, "இவன் ஏன் இப்படிக் கத்துறான்?" - என்று பக்கத்து அறையில் இருந்த டி.எஸ்.பாலையாவும், கே.ஆர்.ராமசாமியும் எரிச்சலாகி விமரிசித்திருக்கிறார்கள். அதைக் கேட்ட சின்னப்பாவோ, "யார் கண்டது? இப்படிக் கத்திக் கத்தியே நாளைக்கு அவனும் ஒரு பெரிய புகழ்பெற்ற பாடகனாக - இசைவாணனாக ஆனாலும் ஆகிவிடலாம்!" என்றாராம். பின்னாளில் பெரும் பாடகரான பின்பு இதை அறிந்துகொண்ட சௌந்தரராஜன் மகிழ்ச்சியோடு பலருடன் பகிர்ந்து கொண்டாராம்

ஆர்யமாலா படத்தில் நடித்த .சகுந்தலாவுவிடம் மனதைப் பறிகொடுத்த  பி.யு.சின்னப்பா அவரைக் காதலித்தார்.சகுந்தலாவின் தாயார்விருப்பப்படாத போதிலும்  சகுந்தலாவைக்  கரம் பிடித்தார் பி.யு.சின்னப்பா.

 1951 பெப்ரவரி 9-ல், அவர் நடித்தவனசுந்தரிவெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் 23 அன்று அந்தப் பெருங்கலைஞன் பி.யூ.சின்னப்பா தனது 35-வது வயதில் மரணமானார். 

 

 

No comments: