Monday, May 22, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 68


 கதாசிரியர்,ஒளிப்பதிவாளர், எடிட்டர், இயக்குநர்  போன்ர பலவற்றித் திறம்படக்  கையாண்டவர் கே.ராம்நாத.  1930 ஆம் ஆண்டு தொழில் நிட்பம் எதிவுமற்ற காலத்தில்  தமிழ் சினிமாவில் பல புதுமைகளை அரிமுகப்படுத்திய வல்லவன் கே.ராம்நாத். கே.ராம்நாத்தின்  புதுமைகளால்  ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரே  மிரண்டனர்.

‘பக்தி’ (1938) என்ற படத்தில் ஒரு காட்சியில் பஞ்சத்தால் வறண்டுகிடக்கும் பூமியில் நெல் மழை பொழிய வேண்டும். அதை எப்படிப் படமாக்குவது என்று பலரும் யோசித்து யோசித்துக் குழம்பிக்கிடந்தார்கள். அப்போதுதான் ராம்நாத்தின் சிந்தையில் அந்த எண்ணம் தோன்றியது. அதன்படி மினியேச்சர் முறையில் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார் ராம்நாத். அசந்துபோனார்கள் உடனிருந்த திரைத்துறையினர்.

படம் வெளிவந்ததும் ரசிகர்களுக்கு அது நம்பமுடியாத காட்சியாக ஆச்சரியத்தைத் தந்தது. ரசிகர்கள் பல திரையரங்குகளில் அந்தக் காட்சியின்போது அதை ஏதோ தெய்வச்செயல் போலக் கருதி மெய்சிலிர்த்துப்போய் கற்பூரம் ஏற்றித் திரைக்குக் காட்டிக் கும்பிட்டார்களாம். தென்னிந்திய சினிமா வரலாற்றில் மினியேச்சர் முறையில் எடுக்கப்பட்ட முதல் காட்சியாக அது வரலாற்றில் குறிக்கப்பெற்றது.

  ஜெமினி தயாரிப்பில் ‘தாசி அபரஞ்சி’ (1944) படம் உருவானது. அதன் துவக்கக் காட்சியில் ஒரு கோயில். அதன் கோபுரமும் உள்புறமும் மிகவும் தாழ்வானதாக இருக்க, அதன் உள்ளே இருக்கும் தெய்வம் அபரஞ்சி. அந்தப் புராணக் கதையில் வரும் கோயில் உண்மையில் எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை. அந்தக் காட்சியை எப்படித் தத்ரூபமாக எடுப்பது? எங்கேபோய் அப்படியொரு கோயிலைத் தேடுவது? அதற்கும் ஒரு மினியேச்சர் கோயில் செட்டை வடிவமைத்தார் ராம்நாத். கதையில் சொன்னவாறு மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்ட அந்த செட்டில் சிறிய உருவம் கொண்ட ஏ.கே.சேகர் படுத்தபடி கேமராவுடன் உள்ளே ஊர்ந்துபோய் அதைப் படம்பிடித்தார். ராம்நாத்தை அவர் கலைமேதை என்று புகழ்ந்தார்.

ராம்நாத்தின் வியக்க வைக்கும் தொழில் மேதைமைக்கு இன்னொரு சிறந்த சம்பவத்தையும் சொல்லலாம். அது 1939-ம் ஆண்டு. ஒருநாள் சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் பாடல் பதிவு ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடும் பாடகன் ஒரு சிறுவன். அங்கிருந்த மைக் அவனுக்கு அச்சத்தை உண்டாக்கிவிட்டது. அதனால் அவனால் பாடவே முடியவில்லை. இசைக்கலைஞர்கள் குழுமியிருக்க இந்த நிலைமையைச் சமாளிக்க ராம்நாத் ஒரு முடிவெடுத்தார். அது பின்னாளில் ஒரு தொழில்நுட்பமாகவே மாறப்போகிறது என்பதை அவர் அன்று அறிந்திருக்கமாட்டார். அன்றைய நிலைமைக்கு ஏற்ப அதையொரு தற்காலிக உபாயமாகத்தான் அவர் நினைத்தார்.

அந்தச் சிறுவனால்தானே பாட இயலவில்லை. எனவே, அவனை இன்னொரு நாள் பாட வைத்துக்கொள்ளலாம் அல்லது பின்னொருநாள் வேறு எவரையேனும் பாட வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்த ராம்நாத், அந்தப் பாடலின் இசைக் கோவையைமட்டும் பின்னிசையோடு பதிவு செய்தார். முழு பாடலின் இசை மட்டும் பதிவாகியது. குரலெடுத்துப் பாடவில்லை அந்தச் சிறுவன்.

அதாவது, இன்றைக்குக் கரோக்கி என்கிறார்களே அதுபோல. இப்போது டிராக் பாடுகிறார்கள் அல்லவா அதுபோல. இரண்டு டிராக் ஆகப் பதிவு செய்து இரண்டையும் இணைத்து ஒரு பாடலாக்கிடலாம் என்று அவர் எடுத்த அந்த முடிவு காலத்தால் மிகமிக முன்னோடியானது. அதுவும் இன்றைய வளர்ச்சியை நினைத்துக்கூடப் பார்க்க இயலாத ஒரு காலத்தில். அப்படி அவர் மேற்கொண்ட அந்தச் செயல்பாட்டால் விளைந்த அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனதாம்.

அதுதான் ராம்நாத் என்ற அந்த மேதையின் கலை மேன்மை. அவரது ஒவ்வொரு படத்திலும் இதுபோன்ற ஏதாவதொரு சின்னச் சின்னப் புதுமையை முயன்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது அந்தக் காலத்து திரைப்பட ஆக்கச் செயல்பாடுகளில் அவர் காட்டிய நுண்ணறிவை நினைத்தால் இப்போதும் வியப்பாக இருக்கிறது.

சென்னையிலிருந்து ‘சவுண்ட் அண்ட் ஷேடோ’ என்ற சினிமா ஏடு வெளிவந்து கொண்டிருந்தது. அதை முத்துசாமி ஐயர் என்ற முருகதாசாவும் ஏ.கே.சேகர் என்பவரும் நடத்திவந்தார்கள். திருவனந்தபுரம் பூஜைபுராவில் 1912-ல் பிறந்த ராம்நாத் பி.ஏ. படித்துவிட்டு சென்னைக்கு வந்தார். அங்கே கோடாக் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அந்தசமயத்தில், புகைப்படக்கலை குறித்த கட்டுரை ஒன்றை எழுதி ‘சவுண்ட் அண்ட் ஷேடோ’வுக்கு அனுப்பினார் ராம்நாத். கட்டுரையைப் படித்துவிட்டு பத்திரிகையின் ஆசிரியர்கள் முருகதாசாவும், ஏ.கே.சேகரும் ராம்நாத்துக்கு நண்பர்களானார்கள். அதனால் ‘சவுண்ட் அண்ட் ஷேடோ’ பத்திரிகையில் ராம்நாத்தும் இணைந்தார்.

அந்த சமயத்தில்தான் அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு கோலாப்பூர் சமஸ்தானப் பகுதியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், தமிழில் எடுக்க இருக்கும் ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்திற்கு உதவ இயலுமா? என்று கேட்டிருந்தது. கடிதத்தை எழுதியவர் பிரபாத் பிலிம்ஸ் நிறுவனத்தின் பார்ட்னரான வி. சாந்தாராம்.  அதே பிரபல இயக்குநர் சாந்தாராம்தான்.

அதன்படி ‘சீதா கல்யாணம்’ படத்தின் உதவி இயக்குநராக ராம்நாத் பணியில் சேர்ந்தார். அந்தப் படத்தை பாபுராவ் பெந்தார்கர் இயக்கினார். கே.ராமநாதன் என்றுதான் ராம்நாத் முதலில் படவுலகில் அறியப்பட்டார். ‘சீதா கல்யாணம்’  1933-ல் வெளிவந்தது .

முருகதாசாவும், ஏ.கே.சேகரும், ராம்நாத்தும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இயங்கிவந்த வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவின் தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பை ஏற்றார்கள். அங்கு ‘மார்க்கண்டேயா’, ‘பாதுகா பட்டாபிஷேகம்’ போன்ற தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் முதன்முதலில் கே.ராம்நாத் என்ற அந்த அற்புதத் தொழில்நுட்பக் கலைஞனைத் திரையுலகம் கண்டு வியந்தது.

1942-ல் இரண்டாம் உலகப்போரின்போது சினிமாத் தொழில் ஸ்தம்பித்துப்போனது. ஸ்டூடியோக்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அப்போதுதான் ராம்நாத்தும் சேகரும் ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்திருந்தார்கள். விரைவிலேயே ராம்நாத் தயாரிப்பு நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பேற்றார். ‘கண்ணம்மா என் காதலி’, ‘மிஸ் மாலினி’ போன்ற படங்களின் தயாரிப்பாளரானார். பின்னர் ராம்நாத்தும் சேகரும் ஜெமினியைவிட்டு விலகி ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்கள். அங்கிருந்தும் விலகி கோவை பட்சிராஜா பிலிம்சில் சேர்ந்தார்கள். ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்ஜிஆர் இயக்குவதற்கு முன்னர் கே.ராம்நாத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் ராம்நாத் இயக்க இயலாமல் போகவே எம்ஜிஆர் அந்தப் படத்தை இயக்க நேர்ந்தது.

எம்ஜிஆரை ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்த்திய ‘மர்மயோகி’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோது அதனை அற்புதமாக இயக்கியவர் கே.ராம்நாத். அதன்பின்னர் சிறிது காலத்திற்கு எம்ஜிஆரின் விருப்ப இயக்குநராக ராம்நாத் இருந்தார். அந்த ‘மர்மயோகி’ படம்தான் தமிழில் தணிக்கைக் குழுவால் முதல் ‘ஏ’ சான்று பெற்ற படம். படத்தில் பேய் ஒன்று வரும். அதை மிகவும் உயிரோட்டமாகப் படமாக்கியிருந்தார் ராம்நாத். அதனால் குழந்தைகள் அதைப் பார்த்து பயப்படக்கூடும் என்று கருதி அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றளிக்கப்பட்டது.


அதன் பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திற்காகவும் சில படங்களில் பணியாற்றினார் ராம்நாத். தனது வாழ்வில் ஒரு வேண்டாத முயற்சியாக தனது சொந்தத் தயாரிப்பில் ‘விடுதலை’ என்ற படத்தை எடுத்தார் கே.ராம்நாத். அது ஜான் கால்ஸ்ஒர்த்தியின் ‘முதலும் முடிவும்’ புதினத்தைத் தழுவியது. அதுவே அவரது முதலுக்கு - முதலீட்டுக்கு முடிவு கட்டியது. ராம்நாத்தை அந்தப் படமுயற்சி கடுமையான பொருளாதாரச் சிக்கலிலும் உளவியல் பிரச்சினைகளிலும் ஆழ்த்தியது. அதுவே அவரை மரணப்படுக்கையில் வீழ்த்தியது. 1956-ல் தனது 44-வது வயதில் அகால மரணமடைந்தார் ராம்நாத். 

கே.ராம்நாத் தமிழ் திரையுலகின் முத்திரை இயக்குநர்கள் வரிசையில் முக்கியமானவர் மட்டுமல்ல... தனித்துவமானவரும் ஆவார். அவரளவிற்குப் பல்திறன் மிக்க இன்னொரு திரைக்கலைஞரைக் காண்பது அரிது என்பதுதான் திரைவிமர்சகர்கள் பலரது கருத்து. அவரை ‘ஒரு நபர் நிறுவனம்’ என்பார்கள்.

புதிய முயற்சிகளின் மேதைகளில் ஒருவர் இயக்குநர் கே.ராம்நாத். மற்றவர்கள் அளவுக்கு அதிகம் பேசப்படாத - அறியப்படாத கலைஞர் கே.ராம்நாத்.

இயக்குநராக மட்டுமல்லாது ஒரு கதாசிரியராகவும், கேமராமேனாகவும் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் முத்திரை பதித்தவர் ராம்நாத். அப்படிப்பட்ட கலைமேதையை எத்தனை கொண்டாடியிருக்க வேண்டும் நாம்? ஆனால், அவர் குறித்து இன்றுகூட அதிகம் பேசுவோர் இல்லை என்பது வருந்தத் தக்கது.

  

No comments: