Friday, October 27, 2023

20 வருடங்களின் பின் நியூஸிலாந்தை வென்றது இந்தியா


  தர்மசாலாவில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய   இந்தியா  நான்கு விக்கெற்களினால்  வெற்றி பெற்ற்தது.  முதலில் துடுப்படுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து  273 ஓட்டங்கள் எடுத்தது.  மிட்சேல் 130 ஓட்டங்கள் அடித்தார்.  முகமட் சமி  5  விக்கெற்களை வீழ்த்தினார். 46  ஓவர்கள் விளையாடிய  இந்தியா  ஆறு விக்கெற்களை இழந்து 274  ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.  கோலி 95  ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியா நியூசிலாந்து போட்டி – படைத்த வரலாற்று சாதனை

தர்மசாலாவில்  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி  கிறிக்கெற்  ஹாட்ஸ்டார் மூலம் 4.3 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்த  போட்டியாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.முன்னதாக இந்தியா,  பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது லைவ் ஸ்ட்ரீமிங்கில் 3.5 கோடி பார்வையாளர்கள் நேரலையில்  பார்த்ததே சாதனையாக  இருந்தது.

வேகமான 2000 ஓட்டங்களைக் கடந்த சுப்மன் கில்

நியூஸிலாந்துக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய  இந்திய வீரர் சுப்மன்  கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அமலாவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. சுப்மன் கில் : 38*  இன்னிங்ஸ்

2. ஹாசிம் அம்லா : 40 இன்னிங்ஸ்

 3. ஜஹீர் அப்பாஸ்/கேவின் பீட்டர்சன்/வேன் டெர் டுஷன்/பாபர் அசாம் : தலா 45 இன்னிங்ஸ்

20 வருட அவமானத்துக்கு முற்றுப்புள்ளி

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் 4 விக்கெற்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 20 வருட அவமானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐசிசி தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக   தொடர்  தோல்விகளை சந்தித்த    இந்தியா 2003க்குப்பின் முதல்  வெற்றியை பதிவு செய்துள்ளது

வெள்ளைப் பந்து தொடரில்  3000  ஓட்டங்கள் கடந்த கோலி

50 ஓவர் உலகக் கிண்ணம், 20 ஓவர் உலகக் கிண்ணம் , சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் கெயில், சங்ககார, சச்சின் போன்ற ஜாம்பவான்களை மிஞ்சிய கோலி 3000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப்  படைத்துள்ளார்.

  1. விராட் கோலி : 3000*

2. கிறிஸ் கெயில் : 2942

3. குமார் சங்ககார : 2876

4. மஹேல் ஜ‌யவர்தன : 2858

5. ரோஹித் சர்மா : 2733*

6. சச்சின் டெண்டுல்கர் : 2719

நியூஸிலாந்துக்கு எதிரான  போட்டியில் 95 ஓட்டங்கள் அடித்த கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 286 போட்டிகளில் 13427 ஓட்டங்களை   எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 4வது வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் ஜயசூர்யவின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

 1. சச்சின் டெண்டுல்கர் : 18426 ஓட்டங்கள்

 2. குமார் சங்ககார : 14234 ஓட்டங்கள் 

 3. ரிக்கி பொண்டிங் : 13704 ஓட்டங்கள்

 4. விராட் கோலி : 13437* ஓட்டங்கள்

 5. சனத் ஜயசூர்ய : 13430 ஓட்டங்கள்

டி வில்லியர்ஸ்ஸை முந்தி கெய்ல்ஸை நெருங்கும் ரோஹித்

 உலகக் கிண்ணத்  தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்களில் கேடன் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையைரோஹித் சர்மா சில வாரங்கலுக்கு  முன்  முறியடித்தார். தற்போது உலகக்கிண்ணத் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளை, உலகக் கிண்ணத்  தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

  22 உலகக் கிண்ணப்  போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 40 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இவருக்கும் முன்  மேற்கு இந்திய  ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 35 உலகக் கிண்ணப்  போட்டிகளில் விளையாடி 49 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 

8 வருடத்துக்கு பின் மிட்சேலின்  வரலாற்று சாதனை

நியுஸிலாந்துக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய டார்ல் மிட்சேல் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 130 (127) ஓட்டங்களை விளாசி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.   இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரர் என்ற பெயரை அவர் பெற்றார்.   உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 48 வருடங்கள் கழித்து சதமடித்த   நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையும் டார்ல் மிட்சேல் படைத்தார்.  1975  ஆம் ஆண்டு உலகக்  கிண்ணப் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில் முதலும் கடைசியாக கிளன் டர்னர் 114* (177)ஓட்டங்கள் குவித்தார்.

பனியால் நிறுத்தப்பட்ட போட்டி

தர்மசாலாவில்  நியூஸிலாந்து, இந்தியா ஆகியவற்றுக்கிடையான  போட்டி நடைபெற்ற போது பனிமூட்டம் காரணமாக  போட்டி இடை நிறுத்தப்பட்டது.

இந்தியாஇரண்டு விக்கெற்களை இழந்து 100  ஓட்டங்கள் எடுத்திருந்த போது தர்மசாலா மைதானத்தில் திடீரென அதிகப்படியான பனிமூட்டம் வந்ததால் பந்தை பார்க்க முடியாமல் இரு அணி வீரர்களும் தடுமாறி   நடுவர்களிடம் புகார் செய்தனர்.

அதன் காரணமாக போட்டி 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு வினோதமாக அமைந்தது. ஏனெனில் இதற்கு முன் நாய்கள், பறவைகள், தேனீக்கள், சூரிய வெளிச்சம், இடி மின்னல் போன்ற பல்வேறு அம்சங்களால் போட்டி தடைப்பட்டது.

  தர்மசாலா மைதானம் கடல் மட்டத்திலிருந்து 1317 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலைப்பகுதிகளில் இருப்பதால் திடீரென மேகக்கூட்டங்களும் பனிமூட்டங்களும் தரை பகுதிக்கு வந்ததால் இப்போட்டி நிறுத்தப்பட்டது வினோதமாக அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் 15 நிமிடங்களுக்கு மேல் பனி விலகிய பின்னர்  போட்டி  ஆரம்பமானது. 

No comments: