ஒருநாள் உலகக் கிண்ண கிறிக்கெற் திருவிழா, அக்டோபர் 5-ஆம் திகதி அகமதாபாத்தில் தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட இருப்பதோடு, ஏற்கனவே உள்ள பல சாதனைகளும் முறியடிக்கப்பட உள்ளன. அதேநேரம், எதிர்பாரத விதமாக வலுவான அணிகள் கூட சில சிறிய அணிகளிடம் தோல்வியை சந்திக்கலாம். உலகக் கிண்ணத் தொடரில் கத்துக்குட்டிகளிடம், வலுவான அணிகள் தோல்வியுற்ற முதல் 5 சம்பவங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
இங்கிலாந்தை வீழ்த்திய ஸிம்பாப்பே:
1992ம் ஆண்டு உலகக்கிண்ணத்
தொடரில் மார்ச் 18 ஆம் திகதி அல்பரியில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, ஸிம்பாப்பே
அணிகள் மோதின. இதில் முதலில் களம் இறங்கிய ஸிம்பாப்பே அணி 46.1 ஓவர்களில் 134 ஓட்டங்கள்
எடுத்தது. இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
ஸிம்பாப்பேயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 49.1 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸிம்பாப்பே வெற்றி
பெற்று, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
ஒருநாள் போட்டிகளில் ஸிம்பாப்பே அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி அதுவாகும்.
மேற்கிந்திய தீவுகளை அலறவிட்ட கென்யா:
1996ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் பிப்ரவரி 29ம் திகதி கென்யாயும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யா அணி, 49.3 ஓவர்களில் 166 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, கென்யா பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 35.2 ஓவர்களில் 93 ஓட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கென்யா அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுதான்.
03. பாகிஸ்தனை வீழ்த்திய
பங்களாதேஷ்
1999ம் ஆண்டு உலகக்கோப்பை
தொடரில் மே மாதம் 31ம் திகதி பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்பாக பங்களாதேஷ் அணி, ஸ்காட்லாந்திற்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே
வெற்றி பெற்று இருந்தது. அதேநேரம், பாகிஸ்தான் அணி தான் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும்
வெற்றி பெற்று இருந்தது. இதனால், பங்களாதேஷ்
அணியையும் பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி,
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி
50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்களை சேர்த்தது. ஆனால், இலக்கை நோக்கி
களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சீட்டுக்கட்டைப் போல
சரிந்தது. இதனால், 161 ஓட்டங்கள் எடுத்தது பாகிஸ்தான்.பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
04. இலங்கையை வீழ்த்தி கென்யா
வெற்றி:
2003ம் ஆண்டு உலகக் கிண்ணத்
தொடரில் பிப்ரவரி 24ம் திகதி நடைபெற்ற போட்டியில், இலங்கை, கென்யா அணிகள் மோதின. இந்த
போட்டிக்கு முன்பாக விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
இதனால், கத்துக்குட்டியான கென்யா உடனான இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய
எதிர்பார்ப்பு இல்லை. முதலில் துடுப்பெடுத்தாடிய
கென்யா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள இழந்து, 210ஓட்டங்கள் எடுத்தது. . இந்த இலக்கை இலங்கை அணி எளிதில் எட்டிவிடும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 45 ஓவர்களில் 157 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் இலங்கை
அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. கென்யா சார்பில் சிறப்பாக பந்துவீசிய
காலின் ஒபுயா 10 ஓவர்களில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து
5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
05. பாகிஸ்தானை அடித்து
அயர்லாந்து வெற்றி:
2007ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் மார்ச் 17ம் திகதி நடைபெற்ற லீக் போட்டியில்,
கட்டாயம் வெற்றி தேவை என்ற சூழலில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில்
வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை
தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி, அயர்லாந்தின்
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால்,
45.4 ஓவர்களில் வெறும் 132 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி விளையாடிய
அயர்லாந்து அணி நிதானமாக விளையாடி, 41.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. டெஸ்ட் போட்டி
விளையாடும் ஒரு நாட்டிற்கு எதிரான, ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வென்றது அதுவே
முதல்முறையாகும்.
No comments:
Post a Comment