Sunday, October 15, 2023

கூட்டணிக் கதவைத் திறந்து வைத்த எடப்பாடி திரும்பியும்பாராத கட்சிகள்

பாரதீய ஜனதாக் கட்சியுடனான  கூட்டணியை  ஒரு தலைப் பட்சமாக முறித்த எடப்பாடி பழனிச்சாமி, புதிய கட்சிகளின் வரவை ஆவலாக எதிர்  பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் பெயரைச் சொல்லி  பாரதீய ஜனதாவுடனான கூட்டணிக்கு ஆப்பு வைத்தர் எடப்பாடி. ஆனால்,  உண்மையான காரணம் அது அல்ல என்பதை அரசியல் உலகம் அறியும்.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என கழகத்தில் மூத்த தலைவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள்.  அப்போதெல்லாம் அடக்கி வாசித்த எடப்பாடி இப்போது  பொங்கி  எழுந்துள்ளார். பாரதீய ஜனதாவுடனான  கூட்டணியை முறிப்பதற்கு முடிவு செய்த எடப்பாடி, அதற்கான காரணியாக அண்ணாமலையை பலியாக்கி உள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மிக  மோசமாகத் தாக்கிப் பேசிய  போதெல்லாம் எந்த விதமானஎதிர் வினையும் எழவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  முடிவால் அண்ணாமலை கவலைப்படவில்லை. எடப்பாடியின்   முடிவு  டெல்லியைக் கலங்கடித்தது. அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தை விமர்சிக்க வேண்டாம் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணாமலை கப்சிப்பாகிவிட்டார். நான்  முகவரல்ல,  முடிவெடுக்கும்தலைவர் என  பிதற்றியவர் டெல்லி முடிவு செய்யும் எனக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

 இன்றைய நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணைவதற்கு எந்தக் கட்சியும்தயாராக  இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ராமதாஸும், விஜயகாந்தும் எடப்பாடியைத் திரும்பியும் பார்க்கவில்லை.

திராவிட முன்னேற்றக்  கூட்டணிக்  கட்சிகள் வரலாம் என்ற நம்பிக்கையில் எடப்பாடி காத்திருக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சிக்கு சவால் விடும்  கூட்டணியாக   I-N-D-I-A உருவாகிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் உள்ள கட்சிகள்  அதிலிருந்து வெளியேறுவதற்குத் தயாராக  இல்லை. அதிக   தொகுதிகளில் போட்டியின் திராவிட முன்னேற்ரக் கழகம் விரும்புகிரது. அதன் கூட்டணிக் கட்சிகளும் அதே மன நிலையில் இருக்கின்றன. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டால் ஏதாவது ஒரு கட்சி வெளியேறும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.

பாரதீய ஜனதாக் கட்சியுடன்  இணக்கமாக  இருந்தபோது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளை ஏறெடுத்தும் பார்க்காத எடப்பாடி இன்று அவைகளை வலிந்து அழைக்கிறார்.திராவிட முன்னேற்றக் கூட்டணியில்  தற்போது 12 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். காத்திருப்போர் பட்டியலில் கமல்  இருக்கிறார்.   கூட்டணித் தொகுதிப் பங்கீடு பற்றிய அறிவித்தல் எவையும் வெளியாக வில்லை. ஆனால், இத்தனை தொகுதிகளைக் கேட்கப் போகிறோம்  என சில கட்சிகள்  அறிவித்துள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகத்தை   மிரட்டி அதிக தொகுதிகளில்  போட்டியிட  கூட்டணிக் கட்சிகள் முயற்சிக்கின்றன. 25 தொகுதிகளில் போட்டியிட  திராவிட முன்னேறக் கழகம் விரும்புகிறது. ஆகையால், கடந்த முறை  கொடுத்ததைவிட அதிக தொகுதியைக் கொடுப்பது சாத்தியமில்லை. ஒரு தொகுதி காணாது என  கோபித்துக்கொண்டு   கூட்டணிக் கட்சி  வெளியேறினால், திராவிட முன்னேற்றக் கழகம் அதற்காக வருத்தப்படாது.

ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கூடுதலாக  ஒரு தொகுதியைப் பெற விரும்புகிறது. கடந்த தேர்தலில்  மூன்ரு தொகுதிகளுக்காக  முட்டி மோதிய சி.பி.எம்   கொடுக்கப்பட்ட இரண்டு  தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இம்முறை மூன்று தொகுதிகளிப் பெறும் முனைப்பில் இருக்கிறது.  

புரட்சி பாரதம் கட்சி மட்டுமே   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இருப்பதாக அறிவித்துள்ளது.   தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்   ஆகியோர் தமது நிலைப்பாட்டை  இன்னமும் அறிவிக்கவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணக்கமாக  இருந்த  போது 25 தொகுதிகளில் வெற்றி பெறப்போவதாக  முழக்கமிட்ட அண்ணாமலை  இப்போது ஒன்பது தொகுதிகளை  இனம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்  தேர்தலுக்கு முன்பாக ஐந்து  மாநிலங்களுக்கான  மினித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவுறுகிறது. அந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17 ஆகிய திக்திகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் திக‌தி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் திக‌தியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம்திக‌தியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ஆம் திக‌தியும் என ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் திக‌தி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

மத்தியப் பிரதேசம்

மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம் இப்போது சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதாவின் ஆட்சியில்  .   கடந்த 15 ஆண்டுகளாக  பாரதீய ஜனதாக் கட்சிஆட்சி செய்து வருகிறது. இங்கு போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா

தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. இங்கு சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

 

தெலுங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகள் உள்ளன. அங்கு புபேஷ் பகேஸ் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜக, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளே காங்கிரசுக்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளே உள்ளன. அங்கு மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட உள்ளன.

ராஜஸ்தான்

மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளே முக்கிய கட்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்படும் 5 மாநில தேர்தல்களின் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஐந்து மாநிலங்களிலும்  முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல்  பாரதீய ஜனதாக் கட்சி  தேர்தலைச் சந்திக்கப்போகிறது. எதிர்க் கட்சிகள்  ஓரணியில் இருப்பதால் ஐந்து மாநிலத் தேர்தல் மிக முக்கியமானதாக நோக்கப்படுகிறது.

No comments: