Friday, October 27, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 84

வசீகரிக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண், அழகான சிரிப்பு  என்பன  ஈ.வி.சரோஜாவை  நினைவு படுத்துபவை. கதாநாயகி, இரண்டாவது கதாநாயகி, தோழி, நகைச்சுவை,  குணசித்திரம் எதுவாக  இருந்தாலும்  ஜமாய்ப்பவர் ஈ.வி.சரோஜா. கலை அரசி என ரசிகர்களால் போற்றப்பட்ட  ஈ.வி.சரோஜா நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். நடனம் தான் அவரை திரை உலகுக்கு அழைத்து வந்தது.

வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் நடனக் கலைகளை கற்றுக் கொண்டு நன்கு தேர்ச்சி பெற்ற சரோஜாவின் நாட்டிய அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டில் சென்னை ரசிக ரஞ்சினி சபாவில் நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் நடந்தேறியபோது, அனைத்து தரப்பினரின் பாராட்டு மாலைகள் ஒருசேர சரோஜாவுக்கு குவிந்தன.இந்த வேளையில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ‘என் தங்கை’ என்ற நாடகத்தை அதே பெயரில் அசோகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தார், எம்ஜிஆரை நாயகனாக்கி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக மீனா என்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு இளம்பெண் ஒருவரை தேடிக் கொண்டிருந்தனர்.நடன நிகழ்ச்சியில் சரோஜாவை பார்த்த இவர்கள், தங்கள் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.பார்வையற்றப் பெண்ணான மீனாவின் நடிப்பு இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடமாகும்.தங்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கும் ஏழை அண்ணன் ராஜேந்திரனாக, எம்ஜிஆரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும், அதற்கு ஈடாக சரோஜாவின் உருக வைக்கும் பாத்திரமும், படத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கின.இதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை எடுத்த எடுப்பிலேயே சரோஜா கவர்ந்தார்.

1935ல் திருவாரூர் மாவட்டம் என்கண் கிராமத்தில் வேணுபிள்ளை, ஜானகி தம்பதியருக்கு 2வது மகளாகப் பிறந்தார். பிறந்த ஊரின் முதல் எழுத்துடன், தந்தையின் பெயரையும் சேர்த்து ஈ.வி.சரோஜா என்று பெயர் வைத்தார். இவருடன் மூத்த அண்ணன், 2 தம்பிகள் உள்ளனர்.வீட்டில் ஒரே மகள் என்பதால் பெற்றோர் இவரை சீரும் சிறப்புமாக மகாலெட்சுமி போல் வளர்த்தனர். சிறுவயது முதலே நடனமாடுவது, பாடுவது என தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இவரது 8 ஆவது  வயதில் தந்தை காலமானார்.

வழுவூர் ராமையாபிள்ளையிடம் ஈ.வி.சரோஜா நடனம் கற்றார். 1952ல் என் தங்கை என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்து இருந்தார்.

பணமின்றி வறுமையில் வாழ முடியாது என்ற நிலையில் இறந்து போகிறார் ஈ.வி.சரோஜா. சோகம் தாங்காமல் தானும் கடலில் இறங்கித் தற்கொலை செய்து கொள்கிறார் எம்ஜிஆர். படம் கதை எதிர்மறையாக வெளியானதால் வெற்றி பெறவில்லை. இதன்பிறகு எம்ஜிஆர் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதே இல்லை.955ல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் கே.ஏ.ராமசாமி, ராஜசுலோச்சனா நடித்த நீதிபதி என்ற படத்தில் இடம்பெற்ற நடனத்தில் ஈ.வி.சரோஜாவும், அவரது தோழி விஜயலெட்சுமியும் இணைந்து அற்புதமாக நடனமாடினர்.

குலேபகாவலியில் குல்சார் என்ற கதாபாத்திரத்தில் சரோஜா தோன்றி நடித்து அசத்தினார். ஜிக்கியின் பின்னணி குரலில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபுன்னு அசத்தலாக பாடி, ஆட்டம் போடுவார்.

பெண்ணரசி என்ற படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துத் தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார். பலே ராமுடு என்ற தெலுங்கு படத்தில் நடனமங்கையாக அறிமுகமானார்.

1956ல் வெளியான அமரதீபம், பாசவலை படங்களில் நடித்து நடிப்பில் தனக்கென தனிமுத்திரை பதித்தார். 1956ல் லேனா செட்டியார் இயக்கத்தில் எம்ஜிஆருடன் இணைந்து பானுமதி மதுரை வீரன் படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் கிள்ளி என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார்.

வாங்க மச்சான் வாங்க என்ற பாடலுக்கு ஆடிப்பாடி எம்ஜிஆரை கலாய்த்திருப்பார். அடுத்து கே.ஏ.தங்கவேலு, பானுமதி இணைந்து நடித்த ரம்பையின் காதலி படத்தில் ஊர்வசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

1957ல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் படத்தில் அபராஜிதா என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார். சந்திரபாபுவுடன் இணைந்து தில்லானா பாட்டுப்பாடி என்ற பாடலுக்கு செம ஆட்டம் போடுவார். ஜெமினிகணேசன், சாவித்ரியின் நடிப்பில் வெளியான கற்புக்கரசியில் சசிகலாவாகத் தோன்றினார்.

எங்கள் வீட்டு மகாலெட்சுமியில் பட்டணம் தான் போகலாமடி பொம்பள என்ற பாடலுக்கு ஆடிப்பாடி ஜமாய்த்திருப்பார். வீரக்கனல், காத்தவராயன், பிள்ளைக்கனியமுது படங்களில் நடித்து முத்திரை பதித்தார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். 1960ல் பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் படிக்காத மேதை படத்தில் நடித்தார்.


 டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் ஆடவந்த தெய்வம் படத்தில் பைரவியாக தோன்றி அசத்தினார். 1961ல் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பாக்ய லட்சுமி படத்தில் ஜெமினியின் 2வது மனைவி ராதாவாகத் தோன்றி அசத்தினார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலில் சௌகார் ஜானகி உடன் வீணை வாசித்தபடி அசத்தலாக நடித்தார்.

நல்லவன் வாழ்வான் படத்தில் இடம்பெற்ற ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா? பாடலில் ஈ.வி.சரோஜா பின்னி எடுத்திருப்பார்.

அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப் படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில்

குமாரி கமலாவுடன் இணைந்து சரோஜா நடித்தார்.தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’ படத்திலும் எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர் நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த ‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.1956இல் தங்கவேலுவுடன் ‘அமரதீபம்’ படத்தில் தோன்றிய சரோஜா, இந்த ஆண்டில் ‘நன்நம்பிக்கை’, ‘பாசவலை’, ‘மறுமலர்ச்சி’, ‘மதுரைவீரன்’, ‘ரம்பையின் காதல்’, ஆகியப் படங்களிலும் திறம்பட நடித்தார்.

‘எங்க வீட்டு மகாலஷ்மி’, ‘கற்புக்கரசி’, ‘நீலமலைத் திருடன்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஆகியப்

படங்கள் 1957ஆம் ஆண்டில் சரோஜாவின் அபார நடிப்புடன் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கடன் வாங்கிக் கல்யாணம்’, ‘காத்தவராயன்’, ‘குடும்ப கௌரவம்’, ‘பிள்ளைக்கனியமுது’, ‘பூலோக ரம்பை’ ஆகியப் படங்கள் 1958இல் சரோஜாவின் நடிப்பு நடனம் இரண்டையும் புலப்படுத்தி வெளியீடு கண்டன.1959இல் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘சுமங்கலி’, ‘தங்கப்பதுமை’, ‘மனைவியே மனிதனின் மாணிக்கம்’ ஆகியப் படங்களிலும் சரோஜா இடம் பெற்றார்.

சரோஜாவின் அற்புத நடிப்பை புலப்படுத்தும் விதமாக 1960இல் ‘

ஆட வந்த தெய்வம்’, ‘மணப்பந்தல்’, ‘பங்காளிகள்’, மற்றும்

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ ஆகியப் படங்கள் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கைதி கண்ணாயிரம்’, ‘படிக்காத மேதை’, ‘பாட்டாளியின் வெற்றி’, ‘இரத்தினபுரி இளவரசி’, ‘ராஜபக்தி’ ஆகியப் படங்கள் இவரின் நடிப்பை பாராட்டும் விதமாக ரசிகர்களை மகிழ்வித்தன.1961இல் ‘பாக்கியலஷ்மி’ படத்திலும், 1962இல் ‘வீரத்திருமகன்’ படத்திலும் சரோஜாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து, ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி 1963ஆம் ஆண்டில் ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தையும் 1969இல் ‘தங்கச் சுரங்கம்’ என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு இணையாக சரோஜாவின் நடிப்பு தரமாக அமைந்திருந்தது.இப்படத்தில் பித்தனாக விடும் எம்ஜிஆரை சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, எம்ஜிஆருடன் நடித்திருந்த ‘கொடுத்து வைத்தவள்’ படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லத்தரசியாகவே தனது வாழ்நாளைக் கழித்தார்.பிரபல இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்கு இரண்டாவது மனைவியான இவருக்கு நளினி என்ற பெயரில் ஒரே ஒரு மகள் உண்டு.சரோஜா 1974ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து கலைமாமணி விருது பெற்றார்.2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய செல்வி’ என்ற விருதையும், 2004ஆம் ஆண்டில் தமிழக அரசின் எம்ஜிஆர் விருதையும் சரோஜா பெற்றுள்ளார்.

No comments: