அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிறிக்கெற் சேர்க்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிக்கெற், பேஸ்பால், ஃபிளாக் ஃபுட்பால், லுக்ராஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளைச் சேர்க்கப் பரிந்துரைத்திருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் குழு அறிக்கை ஒன்றில் உறுதிசெய்துள்ளது. இந்த வார இறுதியில் மும்பையில் நடக்கும் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இதுகுறித்து உறுதிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொஸ்
ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறவிருக்கும் விளையாட்டுகளுக்கான முதல்கட்ட பட்டியல் கடந்த
பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் 28 விளையாட்டுகள் இறுதிசெய்யப்பட்டிருந்தன.
அந்தப் பட்டியலில் கிறிக்கெற் இல்லை. கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டிய விளையாட்டுகள்
என்ற பட்டியலில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. இப்போது லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்
ஏற்பாட்டாளர்களும் பரிந்துரை செய்திருப்பதால் கிறிக்கெற் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட
உறுதியாகியிருக்கிறது.
ஒலிம்பிக்கில்,
ரி20 தொடராக இந்தப் போட்டிகளை நடத்தலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது ஐசிசி. தரவரிசையில் முதல் ஆறு இடத்திலிருக்கும் அணிகளை
அதில் பங்கேற்க வைக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. குரூப்கள் பிரித்து நடத்தப்படுமா,
ரவுண்டு ராபின் முறையில் நடத்தப்படுமா என இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
1900-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்
கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது. அதில் பிரிட்டன், பிரான்ஸ் என மொத்தமே இரண்டு அணிகள்தான்
பங்கேற்றன. டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பிரிட்டன் எளிதில் வெற்றிபெற்றுத்
தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. பிரான்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றது.
இப்போது
128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளது.
2032 ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என்பதால் ஒலிம்பிக் போட்டிகளில் கிறிக்கெற் நீடிக்கப்படும்
என்றே தெரிகிறது. சமீபத்தில் ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றிலும்
கிரிக்கெட் இடம்பெற்றது. இரண்டுக்கும் நல்ல வரவேற்பே கிடைத்தது
No comments:
Post a Comment