Tuesday, January 16, 2024

ராமரை முன்நிறுத்தி ஆன்மீக அரசியல் செய்யும் பாரதீய ஜனதா

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் எண்ணப்பட்டு வரும் வேளையில் சகல அரசியல் கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன.  மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க பரதீய ஜனதாக் கட்சி வியூகம் வகுத்துள்ளது.

ராம ஜென்மபூமி என  சொல்லப்படும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும்  ராமர் கோயில் கும்பபாபிஷேகம் எதிர் வரும் 22 ஆம் திகதி நடக்க  உள்ளது.பாரதீய ஜனதாவின் தேர்தல் துருப்புச் சீட்டாக   ராமர் கோயில் கும்பாபிஷேகம்  இருக்கப்போகிறது.

 பாபர் மசூதியை  இடித்தழித்து அரசியல் அத்திபாரத்தைப் போட்ட  பாரதீய ஜனதாக் கட்சி  ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் ஆட்சியைத் தக்க  வைக்க  உறுதி பூண்டுள்ளது. வட இந்தியாவில்  ராம பக்தைகள்  மிக அதிகமாக  உள்ளனர். அவர்களின் மனதைக் குளிர்விக்கும் விதமாக  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மிகப் பிரமாண்டமாக நடத்த பாராதீய ஜனதா திட்டமிடுகிறது.

இந்திய எதிர்க்கட்ச்சிகள்  அனைத்தும் இணைந்து  பாரதீய ஜனதாவை எதிர்த்து தேர்தலில் களமிறங்கத் தயாராகின்றன. எதிர்க் கட்சிகள்   விட்டுக்கொடுப்புடன்  பேச்சுவார்த்தை நடத்துவதால்,  பாரதீய ஜனதா அச்சமடைந்துளது. அதனால் தான்  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பாரதீய ஜனதா கையில் எடுத்துள்ளது.

 சகலருக்கும்  பொதுவான  ராமரை பாரதீய ஜனதா  உரிமை கோருகிறது. பாரதீய ஜனதாவின் அரசியல் ஊதுகுழல் போல் ராமர் சித்திரிக்கப்படுகிறார். வாஜ்பாயும், அத்வனியும் இரத யத்திரை நடத்தி  பாரதீய ஜனதாவை  வலுப்படுத்தினார்கள். மோடியும்,  அமித்ஷாவும் ராமர் கோயிலைக் காட்டி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு   எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள்  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பகிஸ்கரிக்கின்றன.  பாரதீய ஜனதாவின்  அரசியல் அஜந்தாவில் கும்பாபிஷேகம்  இருப்பதாக  எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன. ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தமக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என அறிவித்திருக்கின்றன. எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாது  ராமர் கோயில் கும்பாபிஷேகத்திக்கு பாரதீய ஜனதா  நாள்  கு|றித்தது. ராமரை பாரதீய ஜனதாக் கட்சிக்குள்  மோடி அடக்கி விட்டார்.  ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஆன்மீக விழாவாக  இல்லாமல்  பாரதீய ஜனதாவின்  கட்சி மாநாடுபோல் நடத்தப்படுகிறது.  இதனை  எதிர்க் கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.

 


 இந்துமத மடாதிபதிகளும்   மோடியுன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

மூலஸ்தானத்தில் ராமர் சிலையை  மோடி பிரதிஷ்டை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேகத்திற்கு செல்ல பூரியில் உள்ள கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்த நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதியும் ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்றுள்ளார். அதோடு நாட்டின் நான்கு முக்கிய சங்கராச்சாரியார்கள்அல்லது மதத் தலைவர்களோ அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார். இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது. மோடி இதை திறப்பார்.. சாஸ்திரத்தின் படி மோடி இதை திறக்கவே கூடாது. ஆனால் அதை மீறி மோடி இதை திறந்து வைப்பார். நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

  கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இப்போது சிலை பிரதிஷ்டை செய்வதே தவறானது. அதையும் மோடி செய்வது மிக தவறானது என்று  நான்கு  சங்கர்ச்சாரியார்களும் தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் முழுமையாகப் பூர்த்தியடைய  இன்னும்  இரண்டு வருடங்கள் தேவை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற வேண்டிய தேவை இருப்பதால் ராமர் கோயில் கும்பாபிஷேக நாடகதை மோடி அரங்கேற்ரியுள்ளார். சங்கராச்சாரியார் என்பவர்கள் 8 ஆம் நூற்றாண்டில் இந்து துறவியான ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட இந்து மதத்தின் அத்வைத வேதாந்த பாரம்பரியத்தின் தலைவர்கள் ஆவார்கள். இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நான்கு மடங்கள் அல்லது துறவற குழுக்களின் மடாதிபதிகள்தான் சங்கராச்சாரியார். ஜோதிர் மடம் (ஜோஷிமத்) மற்றும் கோவர்தன் மடம் தவிர மற்ற இரண்டு மடங்கள் சிருங்கேரி சாரதா பீடம் (சிருங்கேரி, கர்நாடகா), மற்றும் துவாரகா சாரதா பீடம் (துவாரகா, குஜராத்) ஆகும். இந்த நான்கு மடங்களும் முதல்முறையாக மோடிக்கு எதிராக திரும்பி உள்ளன. இந்து மத சாஸ்திரப்படி, சனாதானத்தின் படி மோடிக்கு  ராமர் சிலையை வைக்கும் அதிகாரம் இல்லை. அதை மீறி அவர் வைப்பதை இவர்கள் விரும்பவில்லை என்பதால் நாட்டின் நான்கு முக்கிய சங்கர்ச்சாரியார்களோ அல்லது மதத் தலைவர்களோ அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.  எதிர்க் கட்சிகளுக்கு இது   நல்லதொரு வாய்ப்பாக  உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ஆதி சங்கரரும் அவரது மடங்களும், ஷைவம் - இந்துக் கடவுளான சிவன் வழிபாடு - மற்றும் சக்தி, இந்து தெய்வம் சக்தியின் வழிபாடு ஆகியவற்றை மட்டுமே மேற்கொண்டு வந்தது. இருப்பினும் இது வைஷவம் பற்றிய கருத்துக்களை போக போக ஏற்றுக்கொண்டது. இந்து கடவுள் விஷ்ணு மற்றும் ராமர் உட்பட அவரது பல்வேறு அவதாரங்களை வழிபடுதல் அதன்பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் ராமர் கோவில் வழிபாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர் சங்கராச்சாரியார்

ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில்  2000 கோடி ரூபாவுக்கு  அதிகமாக நிதி பெறப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் திறப்பு விழா குறித்த அறிவிப்பை உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்துள்ளார்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.

 ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் கோவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம ஜானகி பாத், பக்தி பாத், ராம் பாத் ஆகியவற்றின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக   விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு மிக முக்கியமாக ராம் ஜென்ம பூமியையும், அயோத்தியில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஹனுமன் கோவிலையும் இணைக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹனுமனையும் தரிசிக்க செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராம் ஜெயண்ட பூமி பாத் 30 மீற்றர் அகலமும், பக்தி பாத் 14 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.

இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 இலட்சம் ரூபாயாகும்.

1000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் ராமர் கோவிலை கட்டி வருகிறது. பல கட்ட சோதனைகள் நடத்தி, ஸ்திரதன்மை ஆராயப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும்  பாபர் மசூதி வாழ்வு கொடுத்தது. மோடியையும், அமித்ஷாவையும்  மோடி கைதூக்கி  விடுவாரா அல்லது  கைவிடுவாரா என்பதை  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு  சொல்லும்.

 

ரமணி

 

No comments: