Sunday, September 2, 2018

வடக்கே போகும் மெயில் நூல் நயப்பு


சூரன் .ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
ஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக
ஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே
தின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை .பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்
நினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.
வடக்கே போகும் மெயில்என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனைவடக்கே செல்லும் மெயில்இருத்தியே பயணிக்கின்றன.
ஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.
சைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாகபோனால் போகட்டும்சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவிகதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகைமல்லிகைஇலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும்ஞானம்சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தைஎன்னைத் தெரியுமா?” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.
செல்லாக்காசுநாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.
திக்குத் தெரியாதசிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.
உருவகக் கதை பாணியில்குலதெய்வம்என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.
புலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதியதிரைகடல் ஓடியும்கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.
இடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியதுஎன்று மறையும்என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ளவிடியலைத் தேடிசிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.
ஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.
அந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் .ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

கானா பிரபா

27.08.2018

Saturday, August 11, 2018

தமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்



 அரசியலில் எதிரியும் இல்லை. நண்பர்களும் இல்லை எனத் தத்துவம் சொன்ன ஜெயலலிதா தனது அரசியல் வளர்ச்சிக்காக சிலசமயங்களில் எதிரிகளுடன் கைகோர்த்துள்ளார். பலசமயங்களில்   தயவு தாட்சண்யம் பார்க்காமல் எதிரிகளைப் பழிவாங்கி உள்ளார். குரோத அரசியலைத் தமிழகத்தில்  வளர்த்துவிட்டதில் ஜெயலலிதாவுக்கு முக்கிய  பங்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கோஷ்டிகளும் ஜெயலலிதாவுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக வாழ்ந்த சசிகலாவின் கணவன் நடராஜன் அண்மையில் காலமானார். அரசியலில்  எதிரிகளாக இருந்த தலைவர்கள்  பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேரில் செல்லாதவர்கள் அனுதாபச்செய்தி வெளியிட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத் தலைவர்கள் எவரும் மரண வீட்டுக்குச்செல்லவில்லை. அதேவேளை அனுதாபச் செய்தியும் வெளியிடவில்லை. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினால் அல்லது அனுதாபச் செய்தி வெளியிட்டால் தினகரன் தரப்பு அதனை அரசியலாக்கிவிடும் என நொண்டிச்சாக்குத் சொன்னார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரைச் சந்திப்பதற்கு சசிகலாவைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் ஜெயலலிதா  ஒதுக்கி வைத்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்துவதற்காக சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தார்கள். சசிகலாவை ஜெயலலிதா மன்னித்தபோது ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் அடிமையாக இருந்தார்கள்.

ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் சசிகலாவின் பதவி ஆசைக்கு எடப்பாடி தரப்பு  ஆதரவு தெரிவித்தது. பன்னீர் குழுவினர் போர்க்கொடி தூக்கினார்கள். ஜெயலலிதாவை அம்மா என்றவர்கள் சசிகலாவை சின்னம்மா என தூக்கித் தலையில் வைத்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இரட்டை இலைச்சின்னமும் முடக்கப்பட்டதால் பதவியைத் தக்கவைப்பதற்காக  இருவரும் இணைந்தனர்.

கருணாநிதியின் தமிழக அரசு செய்தவைகள் அனைத்தையும் ஜெயலலிதா முதல்வரானபின் தூக்கி எறிந்தார். புதிய தலமைச்செயலகத்தை முடக்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளவில்லை. கருணாநிதி நிறுவிய கண்ணகி சிலையை அகற்றிய ஜெயலலிதா அதனை மறைத்து வைத்தார். கருணாநிதி முதல்வரானதும் அதனை மீண்டும் நிறுவினார்.


 சிவாஜியின்  சிலையை கருணாநிதி அமைத்ததால்  நீதிமன்றத்தின் மூலம் அது அகற்றப்பட்டு சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.  கொடுமை என்ன வென்றால் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது.
கருணாநிதி மறைந்ததும் அவரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்தது. திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடியதால் அண்ணாவின் அருகே கலைஞர் அடக்கம் செய்யப்பட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பத்துக்கமைய எம்.ஜி.ஆருக்கு அருகில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சில அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் ஜெயலலிதாவை மெரீனாவில் அடக்கம் செய்யப்பட்டதற்கு  எதிராக   வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளைக் காரணம் காட்டி தமிழக அரசு மறுத்தது. வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்ட போதும் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க முடியாததால் அண்ணாவின் அருகே கலைஞருக்கு இடம் கிடைத்தது.

எடப்பாடியின் தலமையிலான  அரசின்மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கருணாநிதியின் இறப்பை தமிழக அரசு அரசியலாக்கியதால் மக்களின் வெறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. வாபஸ் பெறப்பட்ட ஜெயலலிதாவின் சமாதிக்கு எதிரான வழக்குகள் வேறு ரூபத்தில் கிளம்பும் சாத்தியம் உள்ளது.

Monday, August 6, 2018

ஈழத்து ஆலயங்களில் ஒலிக்கும் நம்மவர் குரல்





அதிகாலையில் கோயில்மணி ஓசையுடன் பொழுது புலர்வது அன்று தொட்டு வழமையான ஒன்று. கோயில் மணி ஓசையுடன் பக்திப் பாடல்களும் இப்போது மக்களைத் துயில் எழுப்புகின்றன. இந்தியப் பக்திப்பாடல்கள்  ஒலித்த நமது ஆலயங்களில் இன்று நம் நாட்டுக் கவிஞர்கள் எழுதிய  நமது நாட்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்த நமது நாட்டுப் பாடகர்கள் பாடிய பாடல்கள் ஒலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல கோயில்களில் ஒலிக்கும் பக்திப் பாடல்கலை எழுதியவர் விஷ்ணுப்ரியா.

விஷ்ணுப்ரியா என்ற புனை பெயரில் கவிதைகளையும் பக்திப் பாடல்கலையும் எழுதுபவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் மாணிக்கம் கிருஷ்ணகாந்தன்.தேவரையாளி இந்துக்கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, மருதானை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றவர்.

கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்ற  இவர், கேகாலை தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம், கொட்டஞ்சேனை உப்புக்குளம் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம்,வவுனிக்குளம் 2ஆம் யுனிட் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மன்னார் சிராட்டிகுளம் தமிழ் கலவன் பாடசாலை,தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலை,தேவரையாளி இந்துக்கல்லூரி,குடத்தனை அமெரிக்க மிஷன் த.க.பாடசாலை,உடுப்பிட்டி அமெரிக்க மிஷன்கல்லூரி,வதிரி வடக்கு மெதடிஷ்த த.ம.வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவராவார்.

வதிரி பூவற்கரை  பிள்ளையார் ஆலய முன்னாள் தலைவரும் வதிரி தமிழமன்றம் வட்டுவத்தை சனசமூக நிலையம், தமிழ் மன்றம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும்  வதிரி டையமண்ட் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரருமாவார்.

கே; கவிதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு எப்படி அமைந்தது?

ப; பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவப்புலவர்  சி. வல்லிபுரம் எமக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தார். அப்போது வெண்பா எழுதுவது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். அதே போல் அறுசீர் விருத்தம்,எண்சீர் விருத்தம்,அந்தாதி என்பனவற்றை எப்படி எழுத வேண்டும் எனவும் சொல்லிக்கொடுத்தார்.  அவருடைய பாடத்தின் போது வெண்பா,அறுசீர் விருத்தம் எண்சீர் விருத்தம் என்பனவற்றை எழுத வேண்டும் அதன் காரணமாக கவிதை எழுதும் ஆற்றல் உருவாகிவிட்டது.

கே; உங்களுடைய கவிதையைப் பற்றி ஆசிரியரின் கருத்து எப்படி இருந்தது.?

ப; எனது தமிழ் ஆசான் அமரர் சி.வலிபுரம், எனக்குத் தேவையான தமிழ் வளங்களைத் தெளிவாகவே ஊட்டியவர். அதிலும் க.பொ.த.{சா.த } வகுப்பில் இலக்கியத்திற்காகக் கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம் போன்ற பாடல்களை எனது ஆசான் எனக்கு விளக்கிய விதமும் அதிலுள்ள நயங்களைத் தெரிய வைத்த பாங்கும்  எனக்குக் கவிதைமேல் தீராத ஆவலை ஏற்படுத்தியது. இதற்குத் துணையாக ஈற்றடியைத்  தந்து வெண்பா இயற்றும் பயிற்சியை எமக்கு அளித்தார். ”பாலும் தெளி தேனும்” எனும் வெண்பாவை  எனது விருப்பப்படி மாற்றி எழுதிக் காட்டினேன்.
பார்த்ததும் பளார் என எனது கன்னத்தில் ஓர் அறை. சிறிது நேரத்ஹ்டின் பின் என்னை அழைத்து வெண்பாவைப் புகழ்ந்தார்.


கே; வெண்பா நல்லதென்றால் எதற்காக அந்த அறை? அந்த வெண்பா இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறதா?

ப;  நான் நிவேதித்த பொருட்கள் ஆசானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது எனப் புரிந்து கொண்டேன்.
“பற்றீசுடன் கட்லட் பதமான பட்டர் பாண்
வெற்றிலையும் நான் தந்து வேண்டுவேன் - சற்குணனே
இருதார மணம் புரிந்த இளமுரு
கா நான்  விரும்பும்
ஒருதார மளிப்பாய் ஓம்

கே: எப்படிப்பட்ட கவிதைகளை எழுதியுள்ளீர்கள்?

ப: இயற்கை,அன்பு,பாசம், ஆன்மீகம், பாராட்டு, அரசியல்,பண்டிகைகள், சுனாமி,கூத்து , மாற்றுத் திறனாளி, இனப்பிரச்சினை ,தேர்தல், பணம்  போன்ற மனதில் பட்ட அனைத்தையும் கவிதையாக்கினேன்.

கே: இதுவரை எத்தனி கவிதைகள் எழுதியிருப்பீர்கள்?

ப: ஆரம்பத்தில் நான் எழுதிய கவிதைகள் கொப்பிகளிலே கிடந்தன. அவற்றை சேர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் நான் எழுதியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது சுமார்   150 கவிதைகள் கைவசம் உள்ளன. கவிதைகள் கொப்பியில் தூங்காமல் பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என விரும்பினேன்.


கே: உங்களது கவிதைகள் பிரசுரமான பத்திரிகைகள்  எவை?
ப: வலம்புரி,சுடர் ஒளி, தினக்குரல்,வீரகேசரி , உதயன் ஆகிய பத்திரிகைகளில் எனது கவிதைகள் பிரசுரமாகின.

கே:  கவிதைகளை எழுதுவதற்கான சூழ்நிலைகள் எப்படி உண்டாகின.?

ப: சில சம்பவங்கள், சந்திக்கும் மனிதரின் குணங்கள்  போன்றவை கவிதைகளாகின. எனது பேரன் பங்குபற்றும் கவியரங்குகளுக்காக கவிதைகளை ஆக்கியமையும் நான் கவிதையைத் தொடர்வதற்கு  ஒரு காரணியானது.


கே: உங்களுக்குப் பிடித்தமான கவிஞர்கள் யார்?

ப:    மகாவித்வான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர்,கவிஞர் சோ.ப.வைரமுத்து,மு.மேத்தா,பாரதிதாசன்.  மகாவித்வான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரை எனது மானசீகக் குருவாக வரித்துக் கொண்டேன். அவரது கற்பனையில் உதித்த  “ சுட்டிபுரம் வழும் சிவ சுந்தரியே” என்கின்ற பாடலே என்னுள் கவிதை எழுதும் திறனுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

கே: கவிஞரான விஷ்ணுப்ரியா பாடலாசிரியரானது எப்படி? பக்திப் பாடல்களை எழுதுவதற்குத் தூண்டு கோலாக அமைந்த சம்பவம் எது?

ப: எமது  வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் ஒரு சிறிய கடையை ஆரம்பித்து வியாபாரம் செய்தேன். சும்மா இருக்கும் போது பிள்ளையாரைப்  பார்த்தபடி ஏதாவது எழுதுவேன். அதுவே பக்திப் பாடலானது.  ஆலய பரிபாலன சபைத்  தலவரானபின்னர் எனக்கும் பிள்ளையாருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்தது.

எனக்கு மிகவும்  பிடித்தமான இராகம் ஷாமா. அந்த இராகத்தில் தான் நான் முதன் முதலில் என் குல தெய்வத்துக்கு “வேழ முகம் கொண்ட நாயகனே” என்ற பாடலை எழுதினேன்.எமது ஆலய திருவிழா ஒன்றில் எனது நண்பரும் சங்கீத வித்துவானுமாகிய செ.குமாரசாமி பாடியமை என்னை உற்சாகப்படுத்தி இத்தனை பாடல்களையும் எழுத வைத்தது.
பூவற்கரைப் பிள்ளையாரின் பாடல் இறுவட்டு வெளியாதும்  ஏனைய கோயில்களில்  இருந்தும் பாடல்கள் எழுதும்படி எனக்கு அழைப்பு வந்தது.

கே :எத்தனை கோயில்களுக்கு பக்திப் பாடல்கள் எழுதியுள்ளீர்கள்?

ப: வதிரி பூவற்கரை பிள்ளையார், வல்வெட்டி வன்னியப்பிள்ளையார், கம்பர்மலை ஞான வைரவர், புதுத்தோட்ட விநாயகர்,  ஏழாலை வசந்த நாகபூசணி அம்மன், எள்ளங்குளம் முத்துமாரி அம்மன் ஆகிய கோயில்களுக்கு நான் எழுதிய பக்திப் பாடல்கள் இறுவட்டுக்களாக வெளிவந்துள்ளன.

கே: கவிதைகளுக்கும் பக்திப் பாடல்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

ப: கவிதைகள் யாப்பிலக்கணத்துக் குட்பட்டவை.கனதியானவை. பாடல்கள் சற்று நெகிழ்ச்சிப் போக்கானவை.அழகிய சொற்கள் பாடல்களாக மிளிரும்.  ஆனால், கவிதை அப்படியல்ல பாடல் எழுதுவதிலும் பார்க்க கவிதை எழுதுவ்ழ்து சற்று கடினமானது.

கே: உங்கள் பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் யார்?

ப: இசை விரிவுரையாளர் செ.குமாரசாமி, இசை விரிவுரையாளர் செ. பத்மலிங்கம்,மல்லாகம் வரதன் ,எஸ்.திவாகர்,செல்வி.ரி.தினிஷா ஆகியோர் எனது பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

கே:      அவர்களின் இசை அமைப்பில் அப் பாடல்களைப் பாடியவர்கள் ?

ப: இசைவிரிவுரையாளர் செ.குமாரசாமி, மல்லாகம்  வரதன் என்.கே.ரகுநாதன், ஏழாலை வரதன், சாந்தன், ஜெயபாரதி ஆகியோர் பாடியுள்ளனர்.

கே: இறுவட்டில் வெளிவராத பக்திப்பாடல்கள் கைவசம் இருக்கிறதா?

ப: நல்லூர்,  தொண்டமனாறு செல்வச்சன்னதி, வல்லிபுர ஆழ்வார், பூவற்கரைப் பிள்ளையார் , அல்வாய்  சாமணந்தறை பாலகணபதி, நயினாதீவு நாக பூஷணி ஆகிய கோயில் பாடல்களும்  ஆலயக் கும்பாபிஷேக, தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்களில் உள்ள பாடல்களும் இறுவட்டுகளாக வெளிவரவில்லை.
அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன்ஆலய நிர்வாகம் கேட்டதற்கிணங்க 11 பாடல்களை எழுதிக் கொடுத்தேன். வருடங்கள் பல கடந்தும் வெளிவராதது வியப்பாக இருக்கிறது.


கே: அவற்றை என்ன செய்வதாக உத்தேசம்?
ப: அவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க   வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

வர்மா
தினக்குரல்
29/07/2018






Thursday, July 19, 2018

அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்


தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் ஏறிய பாரதீய ஜனதாக் கட்சி  தமிழகத்தில் கால் பதித்தது.

அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஈடாடிக்கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை பாரதீய ஜனதா தாங்கிப் பிடிக்கிறது. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக ஜெயலலிதா நிராகரித்த திட்டங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒப்புதல் அளித்தது. பாரதீய ஜனதாவின் மீதான மக்களின் கோபம் தம் மீது மீதுபடிவதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அரசுக்கெதிராகக் காய் நகர்த்தத் தொடங்கியது.  அணைக் கட்டு மசோதா,  பல்கலைக் கழக மானியக் குழு  ஆகியவற்றுக்கு  எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் பாதை மாறுவதை உணர்ந்த பாரதீய ஜனதா வருமான வரி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டத் தொடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு அடிபணியாத மாநிலத் தலைவர்களை அடக்கும் ஆயுதமாக வருமான வரிச் சோதனை, ஊழல்,சிபிஐ விசாரணை போன்றவற்றை மத்திய அரசு கையில் எடுத்து மிரட்டுவது அன்று முதல் இன்றுவரை நடைபெறும் சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.

நரேந்திர மோடியுடன் இணைந்து பாரதீய ஜனதாவை இயக்கும்  அமித் ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தபோது இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது என்றார். அந்தச் செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கிடையில்  எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியவர்களுடன் நெருக்கமான இரண்டு நிறுவனங்களின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி கணக்கில் இல்லாத பலகோடி ரூபா பணம், கிலோக் கணக்கில் தங்கம், பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.   

       
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்ரி நிறுவனத்துடன் தொடர்புடைய  அலுவலகங்கள், வீடுகள் உட்பட 176 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை சோதனை செய்தனர். தமிழகம் ,கர்நாடகம் ஆகிய  மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் 17 கோடி ரூபா பணம்,10 கிலோ தங்கம், ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. கிறிஸ்ரி நிறுவன மில் காசாளர் கார்த்திகேயன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். காயமடைந்த் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எடப்பாடியின் கையில் இருக்கும் நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர் செய்யாத்துரையின் மீது வருமான வரித்துறையின் பார்வை விழுந்துள்ளது. ஓ.பன்னீர்ச்செல்வத்தின் பிடியில் நெடுஞ்சாலை இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த செய்யாத்துரை, நெடுஞ்சாலை இடம்மாறி எடப்பாடியிடம் போனபோது  அவரும் இடம் மாறினார்.

மணல்குவாரி என்றால் சேகர் ரெட்டி போல நெடுஞ்சாலை என்றால் செய்யாத்துரை என்பது தமிழக அரசின் எழுதப்படாத சட்டம். ஆட்டு வியாபாரம் செய்து வந்த செய்யாத்துரையும் அவரது மகன்களும் அன்வர் பாய் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பினால் தமிழக அரசின் சாலை ஒப்பந்தங்களைப் பொறுப்பேற்றனர்.  செய்யாத்துரை குழுமம் எஸ்பிகே குழுமமாகியதும் தமிழக நெடுஞ்சாலைகள் அனைத்தையும் கைப்பற்றியது. தமிழ்கட்தின் நெடுஞ்சாலைப் பொறியியலாளர்களும் எஸ்பிகே நிறுவனத்தைத் தட்டிக் கேட்க முடியாதநிலை ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் மிக நெருங்கிய புள்ளியின் மீது மத்திய அரசின் பார்வை விழுந்துள்ளது.  செய்யாத்துரையுடன் தொடர்புடைய நிறுவனங்கள்,அலுவலகங்கள் ,வீடுகள் என்பனவற்றின் மீது  வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை  இந்தியாவையே திரும்பிப் பார்க்க  வைத்தது. புதையல் போல அள்ள அள்ள பணமும் தங்கக் கட்டிகளும் கிடைத்தன.  சுவர்களிலும் கார்களிலும் பதுக்கி வைக்கப்பட்ட பனம், தங்கக் கட்டிகள் என்பன மீட்கப்பட்டன.வருமான வரித்துறையின் சோதனையின் முடிவில் 610  கோடி ரூபா பணாம்,310  கிலோ தங்கம். 300க்கும் அதிகமான சொத்துப் பத்திரங்கள். 250 பென் ட்ரைவ்கள், 56 ஹாட்டிஸ்கள், பினாமிகளின் பெயரிலான் ஆவணங்கள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு முறையாகக் காட்டப்படாவிட்டால், கனக்கில் இல்லாத பணம்,தங்கம்,சொத்து என்பனவற்றைப் பதுக்கி வைத்தால் சட்டம் பாயும் என்பதைத் தெரிந்துகொண்டும் இவற்றை ஒருவர் பதுக்கி வைக்கிறார் என்றால் அவருக்குப் பலமான பின்னணி இருப்பது ஒன்ரும் ரகசியமல்ல.

நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதா ஊழல் ஒழிப்புக் குழுவுக்கு திராவிட முன்னேற்றாக் கழகம்  கொடுத்த புகாரைத் தொடர்ந்து செய்யாத்துரையின்  மீது வருமான வரிஅதிகாரிகளின் பார்வை திரும்பியது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு பண உதவி செய்பவர்களின் மீது மத்ஹ்டிய அரசின் பார்வை விழுந்தது. அன்புநாதன்,சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,அப்போதைய  தலமைச் செயலர் ராம மோகன ராவ், சசிகலாவின் உறவினர்களின்  வீடுகள் அலுவலகங்கள் மீது மத்திய அரசின் ஆயுதம் பாய்ந்தது. அப்போது கோடிகோடியாகப் பணம், கிலோக் கனக்கில் தங்கம், ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.  தவிர கொண்டெய்னர்களில் கைப்பற்றப் பட்ட கோடிக்கனக்கான பணம் என்பனவற்றுக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதுவும் அதுபோல் கடந்து போகுமா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லும். 

Monday, July 16, 2018

சம்பியனானது பிரான்ஸ் ரசிகர்கள் குதூகலம்


ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்  போட்டியில் குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சம்பியனாகியது.

21 ஆவது ஃபிபா உலகக்கிண்ண உதைப்ந்தாட்டத்தொடர் ரஷ்யாவில் ஒருமாதமாக நடைபெற்றது. 32 நாடுகள் போட்டியிட்ட  இந்த உதைபந்தாட்டத் திருவிழாவின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ரஷ்ய  ஜனாதிபதி புடின்,  பிரான்ஸ் ஜனாதிபதி  குரோஷிய ஜனாதிபதி ஆகியோர் இறுதிப் போட்டியை நேரடியாகக் கண்டு ரசித்தனர். உலகக்கிண்ண சம்பியனாகும் என எதிர்பார்க்கப்பட்ட பிறேஸில்,ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா ஆகியவை ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. நெய்மர்,மெஸ்ஸி,ரொனால்டோ ஆகியோரின் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றமாகின.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் கப்டன் லுகா மாட்ரிச் துாக்கி அடித்த பந்தை பிரான்ஸின் பவார்டு தலையால் முட்டி தடுத்தார். இந்நிலையில் 18வது நிமிடத்தில் கிரீஸ்மேனை குரோஷியாவின் மார்சிலோ புரோஜோவிச் 'பவுல்' செய்ய பிரான்ஸ் அணிக்கு 'பிரீ கிக்' வழங்கப்பட்டது. இதில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்து குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச் தலையில் பட்டு 'சேம்சைடு' கோலானது. அப்போது மைதானத்தில் இருந்த குரோஷிய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.


 21வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் மாட்ரிச் அடித்த பந்தை விடா 'கோல்போஸ்ட்டுக்கு' மேலே அனுப்பி வீணடித்தார். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் மாண்ட்ஜூகிச் அடித்த பந்தை பெற்ற விடா, இவான் பெரிசிச்சிடம் 'பாஸ்' செய்தார். சிறிதும் தாமதிக்காத பெரிசிச் பந்தை கோலாக மாற்றிஇ 1-1 என சமநிலை பெறச் செய்தார்

ஆனால் இது நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்தை குரோஷியாவின் பெரிசிச் கையால் தடுத்து வெளியே அனுப்பினார். இதற்கு பிரான்ஸ் வீரர்கள் 'மேட்ச் ரெப்ரியிடம்' முறையிட்டனர். அவர், உடனடியாக 'வி.ஏ.ஆர்.' தொழில்நுட்ப உதவியை நாடினார். இதில் 'ரெப்ரி', நடந்த சம்பவத்தை 'ரீப்ளே'யில் பார்த்து முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 'ரீப்ளே'யில் பந்து கையில் பட்டுச் சென்றதை உறுதி செய்த 'ரெப்ரி' பிரான்ஸ் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு வழங்கினார். இதில் கிரீஸ்மேன் (38வது நிமிடம்) ஒரு கோலடித்தார்.


முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 'கார்னர்' வாய்ப்புகளில் கோலடிக்கவிடாமல் பிரான்ஸ் அணியினர் சாமர்த்தியமாக செயல்பட்டனர். ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் கிரீஸ்மேன் 'பாஸ்' செய்த பந்தை பால் போக்பா கோலாக்க முயற்சித்தார். அதனை குரோஷியாவின் விடா தடுத்தார். அப்போது திரும்பி வந்த பந்தை போக்பா கோலாக்கினார். தொடர்ந்து அசத்திய பிரான்ஸ் அணிக்கு 65வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் 'பாஸ்' செய்த பந்தில் கிலியன் எம்பாப்பே ஒரு கோலடித்து 4-1 என முன்னிலை பெற்றுத் தந்தார். இந்நிலையில் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியுகோ லோரிஸ் பந்தை உம்டிடியிடம் 'பாஸ்' செய்ய முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த குரோஷியாவின் மாண்ட்ஜூகிச் பந்தை தடுத்து கோலாக்கினார். தொடர்ந்து போராடிய குரோஷிய அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுஇ 2வது முறையாக (1998, 2018) கோப்பை வென்றது.


போட்டி துவங்குவதற்கு முன்இ கடந்த 2014ல் கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு கேப்டனாக இருந்த பிலிப் லாம்  சாம்பியன் கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார்.
குரோஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் அணி 4 கோல் அடித்தது. இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து பைனலில்இ 48 ஆண்டுகளுக்கு பின்இ ஒரு அணி 4 கோல் அடித்துள்ளது. கடைசியாக கடந்த 1970ல் மெக்சிகோவில் நடந்த தொடரின் பைனலில் பிரேசில் அணி 4-1 எனஇ இத்தாலியை வென்றது.

பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட 'பெனால்டி' வாய்ப்புஇ உலக கோப்பை பைனலில் ஒரு அணிக்கு கிடைத்த 6வது 'பெனால்டி'. கடந்த 2006ல் இத்தாலிக்கு எதிரான பைனலில் பிரான்சின் ஜிடேன்இ 'பெனால்டி' மூலம் கோலடித்திருந்தார்.
உலக கோப்பை பைனலில் 'சேம்சைடு' கோலடித்த முதல் வீரரானார் குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச்.