Saturday, July 20, 2019

இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகும் வைகோவின் குரல்


கணீரென்றகுரல், கம்பீரமான உச்சரிப்பு, சவால்விடும் உடல் மொழி, ஆதாரங்களைப் புட்டு வைக்கும் லாவகம் ஆகியவற்றுடன் இந்திய நாடாளுமன்றத்தைக் கலக்கிய வைகோவின் குரல் இருபது வருடங்களுக்குப் பின்னர்  மீண்டும் ஓங்கி  ஒலிக்கப்போகிறது. கடந்த இருபது வருடங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்வியடைந்தபோது அவரின் மீது மதிப்பு வைத்திருந்த தமிழக மக்களும் இலங்கைத் தழிர்களும் வருந்தினார்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த வைகோவின் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஸ்டாலின் ஒதுக்கினார், கூடவே வைகோவை ராஜ்யசபா உறுப்பினராக்கி நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்தார் ஸ்டாலின். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தின் 22 தொகுதிகளில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.தமிழகம்  முழுவதும் வைகோ,  பிரசாரம் செய்தார்.  ஸ்டாலினின் நாடாளுமன்றக்கணக்கு வெற்றி பெற்றது. தமிழக சட்டமன்றக் கணக்கு சறுக்கிவிட்டது.  திராவிட முன்னேற்றக் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் சத்தியப்பிரமாணம் செய்தபோது நாடாளுமன்றம், அதிர்ந்தது. இவர்களுடன் வைகோவும் சேரும்போது நாடாளுமன்றத்தில் மேலும் பல அதிர்வலைகள் ஏற்படும்.

தமிழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி முடிவடைகிறது. திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் கனிமொழி,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுன்,வி.மைத்திரேயன். ஆர்.லட்சுமணன், டி. ரத்னவேல் சிபிஐ  உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் பதவி இழக்கிறார்கள். புதிய  உறுப்பினர்களைத் தெரிவு செய்தற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துவிட்டது. ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு தேவை. இம்முறை திராவிட முன்னேற்றக் கழகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தலா மூன்று உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக சட்ட மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கூட்டணியின் உறுப்பினர்கள் அதிகமானதால்   இம்முறை இரண்டு உறுப்பினர்கள் அதிகரிக்கிறார்கள்.

ஸ்டாலின் வாக்குறுதியளித்ததுபோல வைகோவுக்கு ஒன்று ஒதுக்கப்பட்டது. தொழிற் சங்கப்பொதுச்செயலாளர் சண்முகம்,வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராகிறார்கள். திழிர்சங்கவாது சன்முகத்தை ராஜ்யசபா உறுப்பினராக்கப்போவதாக  கருணாநிதி உயிரோடு இருந்தபோது அறிவித்தார்.  ஸ்டாலினதனை செயற்படுத்தியுள்ளார். திராவிட முன்னேற்ரக் கழகத்தின் வழக்குகளை முன்னின்ரு நடத்துபவர் வில்சன். கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுத்தபோது ஒரே இரவில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொடுத்தவர் வில்சன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்று உறுப்பினர்களும் மூன்று துரையுல் வல்லுநர்கள். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மூவரும் குடைச்சல் கொடுப்பார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவியையும் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்தது.  பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளிலும் படு தோல்வியடைந்ததால் ராஜ்யசபை உறுப்பினர் கொடுக்கப்படாது என்ற கருத்துநிலவியது. பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தாலும், வாக்கு வங்கியில் சரிவு ஏற்படவில்லை. அடுத்து வரும் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு தேவை என்பதன் அவசியம் கருதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.

தமிழகத்தின் அரூர்,சோளிங்கர்,பாப்பிரெட்டி ஆகிய தொகுதிகளில்  நடைபெற்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி  பெற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குதான்  காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புவதால் அன்புமணி  மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.  அடுத்து நடைபெறும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  என்பனவற்றில் வெற்றி பெறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் சந்திரசேகரன் ஆகிய  இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து ஆறு பேர் ராஜ்யசபைக்குச் செல்கிறார்கள். அங்கு வைகோவின் குரல் மற்றையோரின் குரலைவிட சத்தமாக ஒலிக்கப்போகிறது. 1978,1984,1990 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டார். ஹைட்ரோ காபன், மீதேன், எட்டு வழிச்சாலை, ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்  இலங்கை கடற்படையால் கொல்லப்படுதல் போன்றவற்றில் வைகோ காத்திரமாகக்குரல் குடுப்பார். 

Tuesday, July 16, 2019

ஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.


கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த  இரண்டு வாரங்களாக  இலண்டனில் நடைபெற்றது. எட்டுமுறை விம்பிள்டன் சம்பியனான சுவிட்சர்லாந்து நாட்டின்  ரோஜர் பெடரர்,  நடப்புச் சம்பியனான சேர்பிய வீரர்  ஜோகோவிச் ஆகியோர் ஆண்கள்  ஒற்றையர்  பிரிவு இறுதிப்போட்டியில் மோதினர். பலம் வாய்ந்த  இரண்டு வீரர்கள்  மல்லுக்கட்டியதால் இருதிப் போட்டி பரபரப்பாக இருந்தது. ஐந்து மணி நேர போராட்டத்தின் பின் நடப்புச் சம்பியனான ஜோகோவிச் தனது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

சேவீஸ்களையே  புள்ளிகளா மாற்றுவதில்  இருவரும் கவனம் செலுத்தினர். இதனால் 6-6 என சமநிலையானது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் செற்றில்  ஜோகோவிச்  7[7]- 6[5] வெற்றி பெற்றார். இரண்டாவது செற்றை 6-1 என பெடரர் எளிதாகக் கைப்பற்றினார். மூன்றாவது செற்றும் டை பிரேக்கர் வரை சென்றது மிகுந்த போராட்டத்தின் பின்  7[7]- 6[4]   ஜோகோவிச் வெற்றி பெற்றார் நாக்வாது செற்றை 6-4 எனபெடரர் கைப்பற்றினார்.

சம்பியனைத் தீர்மானிக்கும் ஐந்தாவது  செற்றில் சளைக்காமல் இருவரும் மாறிமாறி  வெற்றி பெற்றதால், போட்டி விறுவிறுப்பானது. இறுதியில் 13-12 [ 7- 3 ] புள்ளியில் ஜோகோவிச் சம்பியனானார். ஜோகோவிச் கைப்பற்றிய 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.  

சம்பியனானது இங்கிலாந்து


லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிறிக்கெற் இறுதிப் போட்டியில்  முதலில் துடுப்படுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.  பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது. உலகக்கிண்ண  இறுதிப்போட்டி  வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 15 ஓட்டங்கள் அடித்தது. 16 ஓட்ட வெற்றி இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து 15 ஒட்டங்கள் எடுத்ததால் போட்டி சம நிலையில் முடிந்தது. 50 ஓவர்களில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து சம்பியனாகியது. இங்கிலாந்து 22  பவுண்டரிகளும் நியூஸிலாந்து 14 பவுண்டரிகளும் அடித்தன.

 சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 3,2 ,4,1,2,4 ஓட்டங்கள் அடித்தது.  இங்கிலாந்தின் முதல் பந்து வைடாக வீசப்பட்டதால் ஒரு ஓட்டம் கிடைத்தது நியூஸிலாந்து 2,6,2,2,4 ஓட்டங்கள் எடுத்தது. 

உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்  இறுதிப்போட்டியிலும் ஏமாற்றினார்கள். மாட்டின் கப்தில் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த நிக்கோலஸும் வில்லியம்ஸனும் பொறுமையாக விளையாடினார்கள். வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் முதல் 10 ஓவர்களில் 33 ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மார்க் வுட்,பிளங்கட், ரஷீட் ஆகியோரின்  ஓவர்களைக் குறிவைத்து  ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். அடுத்த 10 ஓவர்களில் விக்கெற் இழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தனர்.

நியூஸிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்த நேரத்தில் 30 ஓட்டங்கள் அடித்த வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார்.  இரண்டாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த வில்லியம்ஸன், நிக்கோலஸ் ஓடி அதிக பட்சமாக 74 ஓட்டங்கள் எடுத்தது.  இங்கிலாந்தின் பந்து வீச்சினால் நியூஸிலாந்து வீரர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. அவர்களால் இரண்டு சிக்சர்களும் 14 பவுண்டரிகளும் மட்டுமே அடிக்க முடிந்தது.

 அதிரடியாக விளையாடிய நிகோலஸ் 55 ஓட்டங்களில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 15, ஜேம்ஸ் நீஷம் 19, கிராண்ட ஹோம் 16,  ஹென்றி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நியூஸிலாந்துன் துடுப்பாட்ட வரிசை சரிந்தது.  லாதம் மட்டும் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்த நியூசிலாந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.  வோக்ஸ், பிங்கெட் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும் ஆர்ச்சர், மாக் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

242  எனும்  வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள்,  நியூஸிலாந்தின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறினர்.  ஹென்ரியின் பந்து வீச்சில் 17 ஓட்டங்கள் எடுத்த ராய். ஆட்டமிழந்தார். 9 ஆவது ,10 ஆவது, 11 ஆவது ஓவர்களில் ஓட்டம் எதுவும் எடுக்கப்படாமையால் இங்கிலாந்து வீரர்கள் பதற்றமடைந்தனர். இந்த நெருக்கடியில் 30 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்த ரூட், ரூட் ஆட்டமிழந்தார்.  மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பேர்ஸ்டோ 36 ஓட்டங்களிலும்,  மார்கன்  9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.


23.2 ஓவரில் நான்கு விக்கெற்களை இழந்த இங்கிலாந்து 86 ஓட்டங்கள் எடுத்தபோது ஜோடி சேர்ந்த பென் ஸ்டொக்ஸும், படலரும்  நியூஸிலாந்தின் பக்கம் இருந்த வெற்றியை தம் பக்கம் திருப்பினர்.இவர்கள் இருவரும்  இணைந்து அடித்த 110  ஓட்டங்களால் இங்கிலாந்து வீரர்கள் நம்பிகையடைந்தனர். 59 ஓட்டங்கள் அடித்த படலர் ஆட்டமிழந்ததும் வெற்றிக்காற்று நியூஸிலாந்தின் பக்கம் வீசத்தொடங்கியது. பென் ஸ்டொக்சின் அனுபவ ஆட்டத்தால் போட்டி சமனானது. பென்ஸ்டொக்ச் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் அடித்தார்.

பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்


விஜய் தொலைக்காட்சியில்  கமல்தொகுத்து வழங்கும் பொக்பொஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது தொடரில் வனிதாவின் பங்கு மிக முக்கியமானது. விஜயகுமாரின் மகளான வனிதாவைப் பார்வையாளர்கள் மிகவும் விரும்பினர். போட்டியாளர்களிடையே  பிரச்சினையை உருவாக்கி அவர்களைப் பிரித்துவைப்பதில் வனிதா கில்லாடி. மூன்று திருமனம், விஜயகுமாருக்கு எதிராக பொலிஸில் புகார் செய்தது போன்றவற்றால்  ஊடகங்ளின்  மூலம் மிகவும் பிரபலமானவர். அனைவரும் எதிர்பார்த்ததுபோல்வே வனிதா கச்சிதமாக காய் நகர்த்தினார்.

பொக்பொஸ் வீட்டினுள் வனிதா செய்யும் அடாவடியைப் பார்த்து ரசிகர்கள் அவர் மீது வெறுப்படைந்தனர். முதல் இரண்டு வாரங்கள் தலைவராக வனிதா தெரிவு செய்யப்பட்டதால் அவரை வெளியேற்ற முடியவில்லை. இரண்டு பேர் சும்மா கதைத்தால் அதனுள் புகுந்து இருவரையும் பிரித்து விடுவார். வனிதாவுக்குக்  கொலைகாரன் டாக்ஸ் கொடுக்கப்பட்டபோது  திறமையாகச் செய்தார். பொக்பொஸ்சின் விருப்பத்தை நிறைவேற்றியதால்  வனிதா இப்போதைக்கு வெளியேற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத நேரத்தில்  பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

வனிதாவின் கொடுமையைத் தாங்கமுடியாத அபிராமி,  பிக்பொஸ்  வீட்டைவிட்டு வெளியேறப்போவதாக அழுதார். முன்னர் நடைபெற்ற பிக்பொஸ் நிகழ்ச்சியில் காயத்திரியும் ஜூலியும்  சேர்ந்த் செய்ததை வனிதா தனி ஒருவராகச் செய்தார். ரசிகர்கள் வனிதாவை வெறுத்தாலும், டிஆர்பியில் பிக்பொஸ் நிகழ்ச்சி முன்னிலையில் இருந்தது. ஆதலால், வனிதா பிக்பொஸ்  வீட்டினுள் இருப்பார் என்ற யூகட்தை பிக்பொஸ்  உடைத்தெறிந்துள்ளார். ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்ற பாத்திமா பாபுவை முதல் ஆளாக வெளியேற்றி அதிர்ச்சிதந்த பிக்பொஸ்  வனிதாவை வெளியேற்றி  ரசிகர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா  வெளியேற்றப்படுகிறார் என கமல் அறி வித்ததும், பிக்பொஸ் ஏமாற்ருகிறார்  சீக்கிரட் ரூமுக்கௌ தன்னை  அனுப்பபோவதாக வனிதா தெரிவித்தார். ரசிகர்களும் அப்படித்தான் நினைத்தார்கள்.  ஆனால், வனிதா உண்மையிலேலே வெளியேற்றப்பட்டுவிட்டார். பிக்பொஸ்  வீட்டினுள் வனிதா இருக்கும் வரை திட்டியவர்கள், அவர்  வெளியேறியதும் ஆதங்கப்பட்டனர். வனிதா ஆமி என அவரைத் தூக்கிப் பிடித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி  பிக்பொஸ்  நிகழ்ச்சியைப் பார்க்கப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.

பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா, கமலுடன் உரையாடும்போது தனது பக்க  நியாயத்தை எடுத்துரைத்தார். ஒருசிலர்  வனிதாவுக்காக அனுதாபப்பட்டனர். வனிதா இல்லாத பிக்பொஸ் நிகழ்ச்சி களைகட்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றனர்.

Saturday, July 13, 2019

உலகக்கிண்ணக்கு முதல் முத்தம் கொடுப்பது யார்?


உலகக்கிண்ண கிறிக்கெற் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்தும்  இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகளும் இதுவரை சம்பியனானதில்லை. உலகக்கிண்ணத்துக்கு முதலில் முத்தமிடப்போவது இங்கிலாந்து கப்டன் இயன் மோர்கனா, நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்ஸனா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.  உலகக்கிண்ணத்தை  உயரே தூக்கிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்பது வீரர்களின் கனவு. அந்தக் கனவு இன்று  நிஜமாகப்போகிறது.

உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஆறு முறை தோல்வியடைந்த நியூஸிலாந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடியது. கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூஸிலாந்து இம்முறை அரை இறுதியில் வெற்றி பெற்று  இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றுள்ளது. கடந்த உலகக்கிண்ணத் தொடரில் நழுவவிட்ட சம்பியன் கிண்னத்தை இந்த வருடம் கைப்பற்று ஆவலுடன் நியூஸிலாந்து காத்திருக்கிறது.

மூன்று உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மூன்று முறையும் தோல்வியடைந்து சம்பியனாகும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டது. 1979 ஆம் ஆண்டு மேற்கு, இந்தியத் தீவுகளிடமும், 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடமும், 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமும் தோல்வியடைந்த இங்கிலாந்து, கிறிக்கெற்றின் தாயகத்துக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுத்தரும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். 27 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ன இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு  இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணப்  போட்டியை நடத்தும் நாடு சம்பியனாவதில்லை எனும் கருத்து நிலவியது. 1996 ஆம் ஆண்டு இந்தியா,பாகிஸ்தான், இலங்கை ஆகியன கூட்டாக உலகக்கிண்ணப் போட்டியை நடத்தின. பாகிஸ்தானில் நடைபெற்ற  இறுதிப் போட்டியில்  இலங்கை சம்பியனாகியது.  2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியை நடத்திய இந்தியா சம்பியனானது. 2015 ஆம் ஆண்டு  நியூஸிலாந்தும்அவுஸ்திரேலியாவும் உலகக்கிண்ணப்போட்டியை நடத்தி அவுஸ்திரேலியா சம்பியானாகியது. அந்த வரிசையில் இங்கிலாந்து சேருமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் லீக் போட்டியில் மோதியபோது 119 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 1966 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் இங்கிலாந்து சம்பியனாகியது. அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் இங்கிலாந்து சம்பியனாகியதில்லை. பெக்கம், ரூனி போன்ற உதைபந்தாட்ட  ஜாம்பவான்களாலும் உதைபந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை முத்தமிட முடியவில்லை. 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து உலக ரக்பி சம்பியனானது.

இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதால் அடுத்து  களம் இறங்கும்  வீரகள் பதற்றமின்ரி விளையாடுகிறார்கள்.  நியூஸிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மாட்டின் குப்தில்,ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் பலமான அத்திபாரத்தை இடவில்லை.  ஆகையால் அடுத்து துடுப்பெடுத்தாடும் வீரகள் பதற்றத்துடன் களமாடுகிறார்கள். இங்கிலாந்தின் மத்திய வரிசை வீரர்கள்  சிறப்பாகச் செயற்பட்கிறார்கள். இங்கிலாந்தின் களத்தடுப்பும் பந்துவீச்சும் நியூஸிலாந்தை விட  மேலோங்கி இருக்கிறது.
ஒன்பது போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து, ஆறு வெற்றி ஒரு தோல்வியுடன் 12  புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றது. எட்டு போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து ஐந்து வெற்றி,மூன்று தோல்விகளுடன் 11  புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. மழை காரணமாக இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டி கைவிடப்பட்டு  இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 இங்கிலாந்து வீரர்களான ஜேசன் ராய், ஜானிபெர்ஸ்டோ, ஜோரூ ஆகியோர் துடுப்பாட்டத்திலும், ஆர்ச்சர், மாக் வுட் ஆகியோர் பந்து வீச்சிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.  நியூஸிலாந்தி வீரரான கேன் வில்லியன்சன் துடுப்பாட்டத்திலும், ஃபேர்கிசன், போல்ட் ஆகியோர் பந்து வீச்சிலும் முன்னணியில் இருக்கின்றனர். கிறிக்கெற்றைப் பொறுத்தவரை நானயச்சுழற்சி  முக்கியமானது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை அடிக்க வேண்டும்.

Thursday, July 4, 2019

27 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதியில் இங்கிலாந்து.


உலகக்கிண்ணப் போட்டியின் ஆரம்பத்தில் எதிரணிகளை மிரட்டி வெற்றி பெற்ற இங்கிலாந்து   பின்னர் தோல்வியின் பக்கம் சென்றது. இந்தியாவை வென்றதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்தது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ஓட்டங்களால் வெற்றிபெற்று பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது.  

  செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 305 ஓடங்கள் எடுத்தது  நியூஸிலாந்து அணியில் லாக்கி ஃபெர்குசன், ஐஸ் சோதி ஆகியோருக்குப் பதிலாக டிம் செளதி, மாட் ஹென்றி சேர்க்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

 ஆரம்பத்துடுப்பாட்ட  வீரர்களான‌ ஜேசன் ராய்-ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி  முதல் விக்கெற்றூக்கு  123 ஓட்டங்கள் சேர்த்தது. 60 ஓட்டங்களில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜானி பொஸ்கோவுடன் ஜோஸ் பட்லர்  ஜோடி சேர்ந்தார். 106 ஓட்டங்கள் எடுத்த ஜானி பொஸ்டோவ் மூன்றாவது விக்கெற்றக வெளியேறினார்.அடுத்து வந்த  இயன் மார்கன் 42 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய பட்லர் 11, பென் ஸ்டோக்ஸ் 11, கிறிஸ் வோக்ஸ் 4, ஆதில் ரஷீத் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற்களை இழந்து  305 ஓட்டங்கள் எடுத்தது  லியாம் பிளங்கெட் 15 ஓட்டங்களுடனும் , ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி , போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெற்களையும், சேன்ட்னர், செளதி தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

  306ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 45 ஓவர்களில் 186  ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.அதிகபட்சமாக டாம் லதாம் மட்டும்  57 ஓட்டங்கள் அடித்தார்.   கப்டில் 8, நிகோலஸ் 0, கேப்டன் வில்லியம்சன் 27, டெய்லர் 28, நீஷம், 19, கிராண்ட்ஹோம் 3, சேன்ட்னர் 12, ஹென்றி 7, போல்ட் 4 ஓட்டங்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
அந்த அணி இதற்கு முன்பு 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியடைந்தது

  106 ஓட்டங்கள் அடித்த‌ இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஆட்ட நாயகன் ஆனதுடன், உலகக் கிண்ண‌ கிறிக்கெட் போட்டியில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆட்டத்துக்கு முன்பாக, இந்தியாவுடனான ஆட்டத்திலும் பேர்ஸ்டோவ் 111 ஓட்டங்கள் அடித்தார்

உலகக் கிண்ணப் போட்டியில் 36 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிரானக இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இங்கிலாந்துன்  நட்சத்திர வீரரான  ஜோ ரூட்  இந்தஉலகக் கிண்ணப் போட்டியில்  500 ஓட்டங்களை எட்டினார்.   இந்த உலகக்கிண்ணப் போட்டியில்  கோப்பையில் 5 வீரர்கள் 500 ஓட்டங்களைக் கடந்துள்ளனர். முதல் 4 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா,  , பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல்-ஹசன், அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் ஆகியோர் உள்ளனர். உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் 5 வீரர்கள் 500 ஓட்டங்களை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக 3 வீரர்கள் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.

Tuesday, July 2, 2019

தினகரனைக் கைவிட்டு வெளியேறும் தளபதிகள்.


அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தையும், இரட்டை இலைச்சின்னத்தையும் கைப்பற்றப் போவதாகச் சபதம் எடுத்து புதிய கட்சியை ஆரம்பித்த தினகரனைக் கைவிட்டு அவரது தளபதிகள் வெளியேறுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட தினகரனை நம்பிப்போனவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசியலில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் தினகரனைக் கைவிட வேள்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினகரனின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த செந்தில் பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மீண்டும் சட்ட சபை உறுப்பினரானார். அதிரடியாக கருத்துச் சொல்லும் தங்கதமிழ்ச்செல்வனும் காலம் பிந்தி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.  பசை உள்ள முக்கியஸ்தரான இசக்கி சுப்பையா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர முடிவு செய்துள்ளார். தினகரனுடைய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சசிரேகாவும் தாய்க் கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தினகரனின் கட்சியினுடைய மாவட்டச்செயலாளர்களும் நிர்வாகிகளும் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்கிறார்கள். இதனால் தினகரனின் கட்சியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

தினகரனுக்கும், தங்கதமிழ்ச்செல்வனுக்கும் இடையில் சுமுக நிலை இருக்கவில்லை. தினகரனின் செயற்பாடுகளால் தங்கதமிழ்ச்செல்வன் அதிருப்தியடைந்திருந்தார்.  பட்டென வெளிப்படையாகப் பேசும் தங்கதமிழ்ச்செல்வனின் அண்மைக்காலச் செயற்பாடுகள்அனைத்தும் தினகரனின்  நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருந்தன. தினகரனின் உதவியாளருடன் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய  ஒலிநாடா பகிரங்கப்படுத்தப்பட்டதால் தினகரனின் கட்சியில் இருந்து வெளியேற நிலை அவருக்கு ஏற்பட்டது. தினகரனின் மீது வெறுப்படைந்த தங்கதமிழ்ச்செல்வன், அவருடைய உதவியாளருடன் பேசியபோது கோபத்தின் உச்சிக்குச் சென்று மிக மோசமாகப் பேசினார். அந்த உரையாடலை  ஒலிப்பதிவு செய்தவர்கள் பகிரங்கப்படுத்தியதால் தினகரனின் மீது இருந்த நம்பகத்தன்மை இல்லாமல் போனது.

தாய்க்கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்கதமிழ்ச்செல்வனுக்கு அழைப்பு விடுத்தது. தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு ஓ.பன்னீர்ச்செல்வம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். ஓ.பன்னீர்ச்செல்வம், தங்கதமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. தங்கதமிழ்ச்செல்வனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பற்றிக்கப்பட்டு தங்கதமிழ்ச்செல்வனிடம் கொடுக்கப்பட்டது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் வெளியேறி தினகரனுடன் சேர்ந்ததால் ஓ.பன்னீர்ச்செல்வத்துடனான பகைமை  முற்றியது. தங்கதமிழ்ச்செல்வனைக் கட்சியில் இணைத்து ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு செக் வைக்க எடப்பாடி விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.

தேனியின் திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களான ஐ.பெரியசாமி,கம்பம்கிருஸ்ணமூர்த்தி,கம்பம்செல்வேந்திரன்,மூக்கையா,லெட்சுமணன் போன்றவர்களின் கோஷ்டி மோதலால் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது. தங்கதமிழ்ச்செல்வனின் வருகையால் கோஷ்டி மோதலைக் கைவிட வேண்டிய நிலை உள்ளது. தங்கதமிழ்ச்செல்வனின் வருகையால் தென்மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தினகரனுடன் சேர்ந்ததால் இழந்தவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததால் பெற்று விடலாம் என தங்கதமிழ்ச்செல்வன் நம்புகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேறி  திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. சுப்புலச்சுமி ஜெகதீசன்,ஈரோடு முத்துசாமி,கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன், ..வேலு ஆகியோர்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தூண்களாக உள்ளனர். கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் கட்சி மாறியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கட்டட ஒப்பந்தம்மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சேர்த்த இசக்கி சுப்பையா  மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் இழந்தவற்றைத் திரும்பப்பெற்று விடுவார். தினகரனுடன் சேர்ந்ததால் அவருக்கு தமிழக அரசாங்க ஒப்பந்தங்கள் கொடுக்கப்படவில்லை. கோடிக்கணக்கான பழைய ஒப்பந்தப் பணம் பாக்கியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால், பாக்கிப் பணமும்  புதிய  ஒப்பந்தங்களும் கிடைக்கும் என இசக்கி சுப்பையா நம்புகிறார்.

தினகரனுடன் இரகசியப் பேச்சுவார்த்தை செய்ய முடியாது என்பதை  கடந்தகால சம்பவங்கள்  வெளிப்படுத்துகின்றன.  முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என்னுடன் ரகசியமாகப் பேசினார். பன்னீர்ச்செல்வம் என்னை இரகசியமாகச்சந்தித்தார் என அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியதால் தின்கரனுடம் இரகசியப்பேச்சுவார்த்தை நடத்து எவரும் செல்லமாட்டார்கள். தமிழகத்தின் மிகப்பெரும்தலைவராக உருவகப்படுத்தப்பட்ட தினகரனின் பிம்பம் தேர்தலுடன் காணாமல் போய்விட்டது. தினகரனுடன்   இருந்தால் தமது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் ஒவ்வொருவராக அவரை விட்டு வெளியேறுகிறார்கள். அரசியல் அரங்கில் தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார்.