நாட்டையும், நாட்டு மக்களையும் போற்றிப் பாதுகாப்பதே அரசியல்வாதியின் தலையாய பண்பு. தன்னலம் கருதாது பொதுமக்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்கு முன்னுரிமை கொடுப்பவரே அரசியல்வாதி. தனக்கும் தனது அரசியல் கட்சிக்கும் அதிகளவு அள்ளிக் கொடுப்பவர்களுடன்தான் கூட்டணிப் பற்றிப் பேசுவேன் என்கின்றார் ஓர் அரசியல் தலைவர். நாட்டையும், நாட்டு மக்களையும் பற்றி எவ்விதமான அக்கறையும் இல்லாமல் தனது அரசியல் எதிரி வீழ்த்தப்படவேண்டும் என்கிறார் இன்னொரு அரசியல்வாதி. நிறைய அனுபவமும், முதிர்ச்சியும் நிறைந்த தலைவர் ஒருவர் நேற்று முளைத்த காளானுக்காக கதவைத் திறந்து வைத்தபடி தூங்காமல் காத்தி ருக்கிறார். தன்னை உயரத்தில் இருத்தியவர்களைப் பற்றிக் கவலைப்படாது வண்டியை இயக்கத் தொடங்கிவிட்டார் இன்னொருவர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப்பேரம் முற்றுப்பெறாததனால் தனியாகக் களம் இறங்கிவிட்டார் கருணாநிதி. வீறாப்புப் பேசும் கருணாநிதி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கூட்டணி சேர்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று பலமுறை அடித்துக்கூறிய கருணாநிதியின் பார்வை விஜயகாந்தின் மீது விழுந்துள்ளது. எமது கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் சந்தோஷம் என வருந்தி அழைக்கிறார். பிடிகொடாது நழுவும் விஜயகாந்துக்கு மேலவைத் தேர்தலின் மூலம் செக் வைத்துள்ளார் கருணாநிதி.
ஜெயலலிதாவின் புண்ணியத்தில் சட்ட மன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதனால் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது கட்சிக்கு அதிக தொகுதி வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை. சட்டமன்றத்திலேயே அவர்களது செயற்பாடு எதிர்பார்த்தளவு இல்லை. விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர்போல் செயற்படவில்லை. இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் இவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், பாரதீய ஜனதா கட்சியுடனும் பேச்சு நடை பெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட எவரும் வெளிப் படையாக உண்மையைக் கூறவில்லை. விஜயகாந்தின் பிடிவாதத்தால் மனமுடைந்த கருணாநிதி, மேலவைத் தேர்தலில் திருச்சி சிவா போட்டியிடுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜயகாந்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? சமிக்ஞையா? எனத் தெரியாது குழப்ப மாக உள்ளது.
கூட்டணிப்பற்றிய கேள்விகளுக்கு விஜயகாந்த் குழப்பமான பதிலையே கொடுக்கிறார். விஜயகாந்துடன் கூட்டணிப்பற்றிப் பேசவில்லை என்று கூறும் கருணாநிதி, விஜயகாந்த் வந்தால் சந்தோஷம் என்கிறார். தமிழ்ச் சினிமாவின் நகைச்சுவைக் காட்சி போன்று அவர் வருவார், வரமாட்டார் என்ற தோரணையில் உள்ளது தமிழக அரசியல்.
தமிழக மேலவைத் தேர்தலில் வெற்றிபெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் 26 உறுப்பினர்கள்தான் உள்ளனர். கருணாநிதியின் நடவடிக்கையால் விஜயகாந்த் தனது வேட்பாளரைக் களமிறக்கக்கூடும். விஜயகாந்தின் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தால் அங்கேயும் 26 உறுப்பினர்கள்தான் உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். இத்தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணிக்கும். அவர்களை எவருமே கணக்கில் எடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் இரகசியமாக வாக்களிக்கலாம். ஆகையால் விஜயகாந்தின் கட்சியிலிருந்துதான் கருணாநிதி ஆதரவை எதிர்பார்க்கிறார். விஜயகாந்தை விட்டுப்பிரிந்து ஜெயலலிதாவிடம் சரணடைந்தவர்கள் அல்லது விஜயகாந்தின் நடவடிக்கை பிடிக்காத அவரது கட்சி உறுப்பனர்களின் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வை விழுந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டபோது தெளிவாகவும், ஆதாரத்துடனும் குரல் கொடுத்தவர் திருச்சி சிவா. அவர் கனிமொழியின் ஆதரவாளர். அவரை நியமித்தது ஸ்டாலினுக்குப் படிக்கவில்லை என்ற தகவல் கசிந்தது. நாடாளுமன்ற விவகாரத்தில் அனுபவமும், சிறந்த பேச்சாளருமான திருச்சி சிவாவின் தெரிவு சரியானதுதான். ஆனால், தான் எப்படி வெல்லப் போகிறேன் என்று அவருக்குகே தெரியவில்லை.
மேலவைத் தேர்தலில் போட்டியிட நான்கு வேட்பாளரின் பெயரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங் களிலிருந்தே நான்கு வேட்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மேயர் விஜிலா சாந்தி, தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பராஜா, முத்துக்கருப்பன், என்.சின்னதுரை ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மாக்ஸிஸ்ட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னமும் வெளிவராத நிலையில், கூட்டணி சேர்வதற்குத் தலைவர்கள் ஆலாப் பறக்கிறார்கள். கருத்துக்கணிப்புகள் அவர்களின் ஆசையில் மண்ணைப்போடுகின்றன. ஐ.பி.என். நடத்திய கருத்துக் கணிப்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன. பரவலாக வீசும் மோடி அலை தமிழகத்தில் இல்லை என்று ஐ.பி.என். கணிப்பு தெரிவிக் கின்றது.
கூட்டணிக் கட்சிகளிடமிருந்து அதிக தொகுதிளை எதிர்பார்க்கும் விஜயகாந்தின் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. விஜயகாந்துக்கு எட்டு சதவீதம் முதல் பத்து சதவீத வாக்கு இருப்பதாகவே கருதப்பட்டது. ஐ.பி.என்னின் கருத்துக்கணிப்பு விஜயகாந்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, ஏனைய கட்சிகளுக்குத் தெம்பை அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை தனியாக சந்திக்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 15 முதல் 23 தொகுதிகளிலும், திராவிட முன் னேற்றக்கழகம்7 முதல் 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்று முதல் ஐந்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என ஐ.பி.என்னின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஏனையவர்கள் நான்கு முதல் 10 தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்கள். மோடி, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோர் ஏனையவர்களுக்குள் அடங்குகிறார்கள். அவர்களின் கட்சி வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் கூட்டணி சேரும்போது இன்றைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். மேலவைத் தேர்தலின் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதிநாள் 30ஆம் திகதியன்று எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா
சுடர் ஒளி 26/01/14
2 comments:
கலைஞர் அரசியல் காய் நகர்த்தலில் பலே கில்லாடி, இந்த முறை அவரின் போதைக்கு சிக்கியுள்ளார் விஜயகாந்த, கடைசியில் ஊறுகாயை நக்கப் போவது என்னவோ திமுக தான் என்பது உறுதி. மிச்சத்தை மக்கள் தான் சொல்ல வேண்டும். காத்திருப்போமாக.
உண்மைதான். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment