Tuesday, November 22, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி – 44


  பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான கவிஞர்களில் முத்துலிங்கமும்  ஒருவர்.   எம்.ஜி.ஆரை அவமானப் படுத்தியதற்காக  தான் செய்த வேலைகளைத் தூக்கி எறிந்தவர் கவிஞர் முத்துலிங்கம்.

1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்யா ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தார்கவிஞர் முத்துலிங்கம், அப்போது அங்கே ‘மீனவ நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும், ‘இந்தப் படத்தில் நீ எந்தப் பாட்டு எழுதியிருக்க..?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நான் எந்தப் பாட்டையும் எழுதலை’ என்றார். எம்.ஜி.ஆர். அதிர்ச்சியாக ‘ஏன்?’ என்றார். ‘என்னை யாரும் பாட்டு எழுத கூப்பிடலை..’ என்றார் கவிஞர் முத்துலிங்கம்.

உடனே அங்கேயிருந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை?’’ என்று கோபத்துடன் கேட்டார். ‘நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை’ என்றார் ராஜாராம். உடனே முத்துலிங்கத்தை பர்த்து   ‘நீங்க எங்க போனீங்க..?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘ஒரு அவசர வேலையா ஊருக்குப் போயிருந்தேன். உடனேயே கிளம்பிட்டதால யார்கி்டடேயும் சொல்லிட்டுப் போக முடியலை’ என்றார்.  

உடனே எம்.ஜி.ஆர்., ராஜாராமிடம் ‘அதான் இப்போ வந்துட்டார்ல்ல..? இவரை வைச்சு ஒரு கனவு பாட்டு எழுதி வாங்குங்க..’ என்றார். ‘படம் முடிஞ்சிருச்சே..’ என்றார் ராஜாராம். உடனேயே, படத்தின் இயக்குநர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர்கள் வந்ததும், ‘இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைச்சு ஒரு கனவுக் காட்சி பாடலை ரெடி பண்ணுங்க. அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்திக்கலாம்’ என்றார். அவர்களும் ராஜாராம் சொன்ன மாதிரியே ‘அதற்கான சிச்சுவேஷன் படத்துல இல்லையே’ என்றார்கள்.

‘கனவுப் பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் வேணும்..? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வர்றதுதானே கனவுப் பாட்டு.. அதற்குத் தனியா என்ன சிச்சுவேஷன் ணும்..? உங்க ‘உரிமைக் குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாட்டுக்கு எப்படி சிச்சுவேஷன் வந்துச்சு..? அது மாதிரி இதை ரெடி பண்ணுங்க.. அப்புறமா ஷூட்டிங்கை வைச்சுக்கலாம்’ன்னு ஸ்ரீதரிடம் கண்டிப்பா சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர். அப்புறம் அந்த கனவுப் பாடலா நான் எழுதியதுதான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலா அமைஞ்ச ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாட்டும் முதல்ல ரொம்ப எளிதா அமையலை. இந்தப் பாடலுக்கு முதல்ல நான் எழுதியிருந்த பல்லவி…

‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்

அங்கங்களே மன்மதனின் படைக்களம்

இரவினிலே தீபமாகும் உன் முகம் – நீ

இன்பத் தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்

என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலில் ‘படைக்களம்’ என்ற வார்த்தையில் இயக்குநர் ஸ்ரீதருக்கு ஏதோ சந்தேகம் வந்தது. ‘படைக்கலன் என்றுதானே இருக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘படைக்கலன்’ என்றால் அது ‘ஆயுத’மாகிவிடும். ‘படைக்களம் என்றால் அது போர்க்களமா’கிவிடும் என்று அவருக்கு உணர்த்தினேன். ஆனாலும், அவருக்குத் திருப்தியில்லாததால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

அப்போது இசையமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதனுகும் .க்கும் ஒரு மிகப் பெரிய சந்தேகம். ‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்’ என்றிருந்த வரியில் ‘அடைக்கலம்’ என்ற வார்த்தைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இதை அப்படியே விட்டுட்டா நாளைக்கு யாராவது ‘அடைக்கலம்’ என்ற பெயர் வைச்சிருக்கிறவன் கோர்ட்ல கேஸ் போட்டு நம்மளை கோர்ட்டுக்கு இழுப்பான். அதெல்லாம் வேண்டாம்.. அதையும் மாத்து’ன்னு சொல்லிட்டார்.

அப்புறம் அந்த பல்லவி மொத்தத்தையும் மாற்றி

‘தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ –

நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ’

என்று எழுதினார்  முத்துலிங்கம்.

  சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தவர் முத்துலிங்கம்.  சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தார். பாடத்தில் மனப்பாடப் பகுதியாக, கம்பராமாயணத்தி லிருந்து ஆறு பாடல்கள் வைத்திருந்தார்கள். அதன் சொல்ஓசையில் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணம் முழுவதையும் படித்தார். அர்த்தம் தெரிந்து படிக்கவில்லை. சந்தத்துக்காகவே முத்துலிங்கம் படித்தார். அந்த வாசிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை… எனத் தொடர்ந்தது.  15ஆவது வயதில் முதல் கவிதை எழுதி கல்கிக்கு அனுப்பினார். ஆனால், திரும்பி வந்தது. திரும்பி வந்த அந்தக் கவிதை 44ஆண்டுகள் கழித்து கலைமகளில் பிரசுரமானது.

1966இல் முரசொலியில் உதவி ஆசிரியராக முத்துலிங்கம் வேலை செய்தபோது . தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த முத்துலிங்கம் முரசொலியிலிருந்து விலகி அலையோசையில் சேர்ந்தார். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தபோது . அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினார்.

அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினார்.. அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றார். எம்.ஜி.ஆர் வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.

“இது நாட்டைக் காக்கும் கை – உன்

வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை  முத்துலிங்கத்தியும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம் என் முத்துலிங்கம் தெரிவித்தார்..

“அன்புக்கு நான் அடிமை – தமிழ்ப்

பண்புக்கு நான் அடிமை ’’

“இது நாட்டைக் காக்கும் கை – உன்

வீட்டைக் காக்கும் கை’’

இந்தக் கை நாட்டின் நம்பிக்கை – இது

எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை ’’

“மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ!!’’

உள்பட 1,500 திரைப்பாடல்களை எழுதிக் குவித்தவர், கவிஞர் முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.

காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, முதல் அரசவைக் கவிஞர் ஆனார். இராஜாஜி முதல்வரான பிறகு, அப்பதவியை நீக்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணதாசனையும் புலமைப்பித்தனையும் அரசவைக் கவிஞர்கள் ஆக்கினார். அதற்குப் பிறகு முத்துலிங்கம் அரசவைக் கவிஞ்ரானார்.. கலைஞர், ஆட்சிக்கு வந்ததும் ‘நானே ஒரு கவிஞன். என் ஆட்சியில் இன்னொரு கவிஞன் எதற்கு?’ எனக்கேட்டு அப்பதவியை ரத்து செய்தார். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அப்பெருமை கிடைத்தது. அரசவைக் கவிஞர் என்பது இலாகா இல்லாத அமைச்சரைப் போல. அவருக்கு கார், தொலைபேசி, உதவியாளர் ஆகிய வசதிகள் உண்டு. அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

‘மதுரையை மீ்ட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்னும் பாட்டில் ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்னும் வரி வரும். இந்த வரியால் சென்சாரில் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது? அதனால் ‘கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்’ என மாற்றிவிடுங்களேன் என்றார் எம்.ஜி.ஆர்.

  பாட்டின் மீட்டருக்குச் சரியாக ‘மகர கொடி’ என்று போடலாமா? என முத்துலிங்கம் கேட்டார்.

மீன் என்றாலும் மகரம் என்றாலும் ஒன்றுதானே… அப்படியானால், முன்பே உள்ள வரியோடு ஒருமுறையும், மகர கொடி என்று பாடி ஒருமுறையும் பாடலைப் பதிவுசெய்யுங்கள். சென்சாரில் பிரச்சினை வந்தால் சமாளிப்பதற்கு அது உதவும் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்னும் வரிகளை மட்டும் கொண்ட பாடல் மட்டுமே ஒலிப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வியிடம் “நான் இரண்டு முறையில் ஒலிப்பதிவு செய்யச் சொன்னேனே” என்று சொல்லியிருக்கிறார்.

“நீங்கள் ஏற்றுக்கொண்ட வரிகள்தான் இவை என்று முத்துலிங்கம் சொன்னார்” என்று எம்.எஸ்.வி. தெரிவித்திருக்கிறார். படம் சென்சாருக்குச் சென்றது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்தது.

படத்தின் வரிகளை சென்சார் அதிகாரிகளிடம் காட்டி, படத்தின் சூழலை விளக்கி இந்த வரிகளால் ஏதாவது பிரச்சினை வருமா என்று அவர்களிடம் கேட்டு, இந்த வரிகளால் எந்தப் பிரச்சினையும் வராது என்று அவர்கள் உறுதி அளித்ததால்தான், கோட்டையிலே நமது கொடி பறக்க வேண்டும் என்னும் வரியையே மெல்லிசை மன்னரிடம்  முத்துலிங்கம் தெரிவித்தார்.

இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். படத்தின் வெற்றி விழாவில், “பாடலாசிரியர் என்றால் பாட்டை எழுதுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். நமக்காக சென்சார் அதிகாரிகளைப் பார்த்து, பேசி, அவர்களின் விளக்கத்தைப் பெற்று, இவ்வளவு வேலைகளை யார் பார்ப்பார்கள்? அதனால்தான் முத்துலிங்கத்துக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறேன்” என்றார்.   

No comments: