Monday, November 21, 2022

ஆரம்பப் போட்டியில் அசத்தியது ஈக்குவடோர்


 உலகக் கிண்ண  உதைபந்தாட்டத்  திருவிழா, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் கட்டார் அணியை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஈகுவடார் வீழ்த்தியது. 

உலகமே உற்று நோக்கிய உலகக் கிண்ணத் தொடர் கட்டாரில்   அல்கோர் நகரில் உள்ள அல்-பேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 60,000 ரசிகர்கள் திரண்டிருந்த இந்த மைதானத்திற்குள், பிரான்ஸ் ஜாம்பவான் மார்செல் டிசைலி, உலகக் கிண்ணத்துடன்  வலம் வந்தார். அப்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் கட்டாரே அதிர்ந்தது.

 ஹொலிவுட் நட்சத்திரம் மார்கன் ஃப்ரீமன், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர், அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளை, ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலும், தென்கொரிய பாப் பாடகர் BTS ஜங் கூக்கின் இசைமழையில் ரசிகர்கள் நனைந்தனர். மேலும், தொடக்க விழாவின் போது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் அல்கோர் நகரமே ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்தது.

போட்டி   தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஈக்குவேடாருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்திருந்தது.   வெலன்சியா மூன்றாவது நிமிடத்திலேயே ஒரு கோலை அடித்தார். கோலும் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் VAR மூலம் பரிசோதித்த போது இந்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. ஃப்ரீ கிக் மூலம் பந்து உதைக்கப்பட்ட சமயத்தில் ஈக்குவேடார் வீரர் ஒருவரின் கால் மட்டும் கட்ட‌ர் அணியின் கடைசிக்கு முந்தைய டிஃபண்டரை தாண்டி இருந்தது. அதனாலயே கோல் வழங்கப்படாமல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.

  16 வது நிமிடத்தில்  பெனால்டி மூலம்  வெலன்சியாதான் முதல் கோலை அடித்தார்.  30 வது நிமிடத்தில்  வெலன்சியா மீண்டும் ஒரு கோலை அடித்தார். இரண்டு கோல்களும் இடைவேளைக்கு முன்பு அடிக்கப்பட்டது.

  வெலன்சியாவிற்கு 33 வயதாகிறது. ஈக்குவேடார் அணிக்காக அதிக கோல்களை அடித்திருக்கும் வீரர் அவரே. 37 கோல்களை அடித்திருக்கிறார். இதுவரை நான்கு  உலகக் கிண்ணப் போட்டிகளில் விளியாடிய வெலன்சியா  5 கோல்களை அடித்திருக்கிறார்.  உலகக்கிண்ணப் போட்டியில் ஈக்குவடோர் சார்பாக அதிக கோல்களை அடித்த வீரரும் அவர்தான்.

 2014 பிறேஸிலில்  நடந்த‌உலகக் கிண்ணப் போட்டியில்  3 கோல்களை அடித்திருந்தார். 8 ஆண்டுகள் கழித்து மீண்டும்  வந்து வ்வெற்றியத் தேடிக்கொடுத்துள்ளார்.  வெஸ்ட் ஹாம், எவர்டன் போன்ற க்ளப்களுக்கும் ஆடியிருக்கிறார். சமீபமாக டர்க்கீஸ் லீகில் ஃபெனர்பாஜி அணிக்காக சிறப்பாக ஆடி வந்தார். ஒரே சீசனில் 13 கோல்களை அடித்திருந்தார். 

2006 ஜேர்மனி,2010 தென் ஆபிரிக்கா,2014 பிறேஸில், 2018 ரஷ்யா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண ஆரம்பப் போட்டிகளில் அந்த நாடுகள்  வென்ற வரலாறு கட்டாரில் மாறியது.

கட்டார் 5 முறையும் ,ஈக்குவடோர் 6 முறையும் கோலகம்பத்தை நோக்கி அடித்தன.  ஈக்குவடோரின் மூன்று கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

கட்டாருக்கு  எதிராக 4 மஞ்சள் அட்டைகளும், ஈக்குவடோருக்கு எதிராக இரண்டு மஞ்சள் அட்டைகளும் காட்டப்பட்டன.    

No comments: