Friday, November 11, 2022

மாணவர்களை குற்றவாளியாக்கும் கொடுமை


 "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்கையிலே"  புகழ்  பெற்ற இந்த சினிமாப்பாடலை அனைவரும் கேட்டிருப்பார்கள். முதல் வகுப்பில் இருந்து .பொ.[/] வரை மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகுபவர்கள் ஆசிரியர்கள். மாதா,பிதா,குரு,தெய்வம் என்பார்கள்.குருவுக்கு அடுத்த இடத்தில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில ஆசிரியர்களின் நடத்தையினால் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய நிலை  உள்ளது.

ஹொரணையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையின் பணப்பையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் தரம் ஐந்து பாடசாலை மாணவர்கள் மூவர் அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சில ஆசிரியர்களும் பொலிஸாரும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) அதிர்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் போது மாணவர்கள் மீது பொலிஸார் மின்சாரம் பாய்ச்சியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டிக்கப்பட வேண்டிய துரதிஷ்டமான சம்பவத்தை, நடந்த பள்ளியின் ஆசிரியர்கள் நிதானத்துடன் செயல்பட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்.  மாணவர்கள் மீது பொலிஸார் ஏன் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.அதிபரும்,  பணப்பையைக் களவு கொடுத்த ஆசிரியையும் பொலிஸாருக்கு மிக வேண்டப்பட்டவர்கள் என்பதால்தான் அவர்கள் அப்படி நடந்துகொண்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. சிறுவர்களையும், மாணவர்களையும் எப்படிக் கையாள்வது என  பொலிஸாருக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் அதனை மீறினார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அதிபரும், இரண்டு பொலிஸாரும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 களுத்துறையில், சாப்பிட ஏதாவது வாங்குவதற்காக ஐந்து ரூபாயை திருடிய ஒரு வயதுக்குட்பட்ட சிறுமியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அதே மாவட்டத்தில்  பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக தேங்காய் திருடியதற்காக மற்றொரு பள்ளி மாணவி கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் பலகோடி ரூபாய் மோசடி செய்தவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்கிறது. மக்களை ஏமாற்றி பெரும் தொகையை ஏமாற்றிய திலினி ப்ரியமாலியை கண்ணியமாக நடத்துகிறார்கள். நாட்டைத் திவாலாக்கிய அரசியல்வாதிகளுக்கு பொலிஸார் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.

சிறு திருட்டு சம்பவங்களில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அடிக்கப்படும் போது, 22 மில்லியன் மக்களை ஏமாற்றி, நாட்டையே திவாலாக்கிய அரசியல்வாதிகளுக்கு, தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது, உச்சக்கட்ட கேலிக்கூத்து! யஹபாலன அரசாங்கத்தின் கீழ் நிதிக் குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்ட மிகப் பெரிய ஊழல்வாதிகள் விடுதலை! பொது நிதியை கொள்ளையடிக்கும் ஒரு சமூகத்தில், குழந்தைகள் நேர்மையை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

சில மாணவர்கள் திருடு உண்மையானால் அதற்கு  காரணம் என்ன  என்பதைக் கண்டறிய வேண்டும். பல குழந்தைகள் வெறும் வயிற்றில் பள்ளிக்குச் செல்கின்றனர். அல்லது, அவர்களுக்கு வேறு ஏதாவது பணம் தேவைப்பட்டதா? போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பல்வேறு பொருட்களை விற்பவர்கள் உட்பட சில தீய சக்திகளின் இலக்காகவும் மாணவர்கள் மாறியுள்ளனர். காவல்துறை, என்சிபிஏ, ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதில் அதிக் அக்கறை காட்ட வேண்டும்.

மாணவர்கள்  மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோரும்  இணைந்து மாணவர்கள்  மீது அதிக அக்கறை காட்ட வேண்டும். 

தலைமுடியை வெட்டாமைக்காக சில ஆசிரியர்கள் மாணவர்களை கிரங்கமாகத் தண்டிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன வேதனையை ஆசிரியர்கள்  புரிந்துகொள்வதில்லை. தண்டிக்கப்படும் மாணவர்கள் ஆசிரியகளை  மிரட்டும் சம்பவங்களும் நடை பெறுகின்றன

 மாணவர்கள் சிலரை இழுத்த இரண்டு ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோருகின்றனர்.

பாடசாலை சூழலில் சிறுவர்கள் திடீரென கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு ஆளாகியுள்ளனர் என மருத்துவ உளவியலாளர் லக்மால் பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.

இணையத்திற்கான இலவச அணுகல் புதிய உலகங்களைத் திறந்தது, வழிகாட்டுதல் இல்லாமல், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம்.

கடந்த மூன்று வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நண்பர்களுடன் கூடிய பாடசாலைச் சூழல் இல்லாததும் ஒழுக்காற்று அதிகாரம் இல்லாததும் இந்த நிலைமைக்குக் காரணமாகியுள்ளது.

இந்த சிக்கலில் இருந்து மாணவர்களை  மீட்டெடுப்பது  பெற்றோரினதும், மாணவர்களினதும் தலையாய பணியாகும்.

 

 

 

 

 

No comments: