Saturday, February 10, 2024

காத்திருக்கிறது பா.ஜ.க கைவிட்டது அ.திமு.க


 ஜெயலலிதா மறைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  உருவான  முரண்பாடுகளை தீர்த்து வைத்தது  பாரதீய ஜனதாக் கட்சி. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, அதன்  நாட்கள் எண்ணப்பட்டன. அப்போதும் ஆட்சியைக் காப்பாற்றியது   பாரதீய ஜனதாதான். பன்னீர்ச்செல்வம் , எடப்பாடி ஆகிய  இருவரும்  ஒற்றுமையாக  இருக்க வேண்டும் என்பதில்  பாரதீய ஜனதா  உறுதியாக  இருந்தது.    அவர்கள்  இருவரும் பிரிந்தால் வாக்கு வங்கி  சிதைந்து விடும் என்ற  உண்மை பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தெரிந்திருந்தது.எடப்பாடியின் பதவி ஆசையும், துரோகத்தின் வெளிப்பாடும்    எல்லவற்றையும் குலைத்துவிட்டன.

தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் தலைமையிலான  கூட்டணி படுதோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்தான்  தமிழகத்தில் வெற்றி பெறலாம் என்பதை பாரதீய ஜனதா  புரிந்து வைத்துள்ளது. பார்தீய ஜனதாவுடன் சேர்ந்ததால்த்தான் தேர்தல்களின்  வெற்றி  பெற முடியவில்லை என்ன்ற உண்மையை காலம் கடந்து எடப்பாடி தெரிந்துகொண்டார்.

ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவும், பதவி  சுகத்தை அனுபவிப்பதற்காகவும் பாரதீய ஜனதாவின் ஆட்டத்துக்கு ஆடிய எடப்பாடி, அப்போது தப்புச் செய்ததாக  இப்போது  ஒப்புதல் வாக்கு மூலமளித்துள்ளார்.

பெரியார்,அண்ணா, எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகியோர் மீது அண்ணாமலை விஷமப் பிரசாரம் செய்தபோது கொந்தளிக்காத அண்ணா திராவிட   முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  இன்று வீர வசனம்  பேசுகிறார்கள். தமிழக  பாரதீய ஜனதாவின் தலைவராக அண்ணாமலை  நியமிக்கப்பட போது உருவான முட்டல், உரசல் , மோதல்  பிளவை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாவுடன் ஒட்டும்  இல்லை, உறவும்  இல்லை என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடித்துச் சொல்லியுள்ளது..

வடமாநிலங்களில் மோடியின்  வெற்றி உறுதி என்பதை இந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தென்  மாநிலங்களான தமிழகம், கர்நாடகா,தெலுங்கானா,  ஆந்திரா ஆகியவற்றில் பாரதீய ஜனதா படுதோல்வியடையும் என்பதையும் கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தாமரை மலரும் என  தமிழிசை செளந்தராஜன் சொல்லி வருடங்கள் பல கடந்த போதிலும் அது பிளாஸ்ரிக் தாமரையாகவே  உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு என  நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கழகத்தின் வாக்கு வங்கி சிதிலமடைந்துள்ளது.

பாரதீய ஜனதாவுடன் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம்  இணக்கமாகச் செயற்பட்டமை, .பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை எடப்பாடி தூக்கி எறிந்தமை  போன்றவற்றால் நிரந்தரமான வாக்கு வங்கிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.. ஆகையினால்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் தோல்வியடையும் என்பதையே கருத்துக் கணிபுகள்  தெரிவிக்கின்றன.

ஸ்டாலினின் ஆட்சியும்,  திட்டங்களும்  வெற்றியைத்  தேடிக் கொடுக்கும் என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை. திராவிட முன்னேற்றக் கழகதின்  கூட்டணியில்  மாற்றம் எதுவும் ஏற்படாது. கமலை உள்ளே  இழுப்பதில் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். தொகுதிப் பங்கீட்டில் சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை  கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளன.

ராமதாஸ்,பன்னீர்ச்செல்வம் வாசன், தினகரன்,சசிகலா,விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோரின் நிலைப்பாடு தேர்தலில் எதுவித  தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ராமதாஸையும்,  பிரேமலதாவையும் இழுப்பதற்கு எடப்பாடி தரப்பு முயற்சி  செய்கிறது.எடப்பாடியுடன்  இணந்தாலும் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள். பாரதீய ஜனதாவுடன்  சேர்ந்தால் தேர்தலில் போட்டியிடாமல் நியமன எம்.பி பதவி ஒன்றைப் பெறலாம என்பதால் ராமதாஸும், பிரேமலதாவும்  பாரதீய ஜனதாவின் பக்கம் சாயும் சாத்தியம் உள்ளது.

பன்னீரும், வாசனும்  பாரதீய ஜனதாவின் செல்லப் பிள்ளைகள்,  தினகரனுக்கு  போக்கிடம்  எதுவும் இல்லை. சசிகலாவின் அரசியல் பாதை எது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறார். பிரேமலதாவின் அறிவிப்பால் அவரதி கட்சியினரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.  14      தொகுதிகளும்  ஒரு  எம்.பி பதவியும் வேண்டும் என அடம் பிடிக்கிறார். விஜயகாந்தின்  மறைவின் போது கூடிய கூட்டம் வாக்காக மாறும் எனக் கனவு காண்கிறார். விஜயகாந்தால் கூக்கி நிறுத்த முடியாத கட்சியை அனுதாப அலை  கரைசேர்க்கும் என நினைக்கிறார்.

 அரசியல் கட்சித் தலைவர்கள் சதுரங்க வேட்டை நடத்தும்  நேரத்தில் அரசியல் கட்சியை விஜய் அறிவித்துள்ளார். தமிழக அரசியலையும், தமிழ் சினிமாவையும் பிரித்துப் பார்க்க  முடியாது இரண்டும்  ஒன்றுடன்  ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. "தமிழக வெற்றி கழகம்" எனும்  விஜயின் கட்சிப் பெயரே விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. தமிழகம் அல்ல தமிழ்நாடு என விஜய்க்கு எதிராக  பலர் கருத்துக் கூறியுள்ளனர். தமிழ்நாட்டை, தமிழகம் என ஆளுநர் ஆர்.என். ரவி       விழித்தபோது தமிழகமே  கிளர்ந்து எழுந்தது. எதிர்ப்பின் வீரியத்தைக் கண்டு மிரண்ட ரவி  பின்வாங்கினார்.    கடந்த வருடம் நடந்த  இந்தச் சம்பவத்தை  விஜயும்  அவரது அவரது ஆலோசகர்களும் எப்படி மறந்தார்கள் என்ற  கேள்வி எழுந்துள்ளது." தமிழக வெற்றி கழகம்"   அல்ல  "தமிழக வெற்றிக் கழகம்" என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

கட்சியின் கொள்கை, கோட்பாடு,சித்தாந்தம்,கருத்தியல் பற்றி விஜய் அறிவிக்கவில்லை. அவரது ரசிகர்கள் மட்டும்  இப்போது மகிழ்ச்சியுடன்  கொடி பிடித்துள்ளனர். சினிமாவில்  கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகள்  விஜய்க்கு உள்ளனர்.  அவரது நல்ல படங்களை   மோசமான படங்களாக வெளிப்படுத்துவார்கள். விமர்சன ரீதியில் தோல்வியடையும் படங்கள் வசூலில் வெற்றி பெறுகின்றன.  தமிழகத்தின்  சகல கட்சிகளிலும் விஜய்க்கு  ரசிகர்கள்  உள்ளனர். அவை வாக்காக  மாறும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. ரஜினியின் ரசிகர்களும், அஜித்தின் ரசிகர்களும் விஜயின் தோல்வியைக்  கொண்டாடுபவர்கள். விஜய் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய் சொன்னதால்  "சூப்பர் ஸ்டார்"  பட்டத்துக்குப் போட்டி  இல்லை என ரஜினி ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.  தமிழக சட்ட மன்றத் தேர்தல்தான் தனது குறி என விஜய் அறிவித்ததால் நடை பெறப் போகும் தேர்தலில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. .

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும்  திராவிட முனேற்றக் கழக கூட்டணி வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய தி மூட் ஆப் தி நேஷன்  கருத்துக்  கணிப்பு கூறியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அண்ணா  திராவிட முனேற்றக் கழகம்  உள்ளிட்ட பிற கூட்டணிகளும் பெரும் தோல்வியைத் தழுவும் என்றும் அது தெரிவித்துள்ளது.

கடந்த 2019 தேர்தலில்  திராவிட முனேற்றக் கழக கூட்டணி 38 தொகுதிகளில் வென்று.. தேனியில் மட்டும் தோல்வியைத் தழுவியது என்பது நினைவிருக்கலாம். அப்போது அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேனி பன்னீரின் கோட்டை.  பன்னீர் இபோது அண்ணா திராவிட முனேற்றக் கழத்தில் இல்லை.  கூட்டணிக் கட்சிகள்  இல்லாமல் அண்ணா திராவிட முனேற்றக் கழகம் தனித்து விடப்பட்டுள்ளது.

 முன்னதாக  டைம்ஸ் நவ் சார்பிலான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிமுகவுக்கு 2 தொகுதிகளும், பாஜகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடசியாக வெளியான  இந்தியா டுடே தி மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் மொத்த தொகுதிகளையும் திமுக கூட்டணியே அள்ளப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 தேர்தலின்போது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. இந்த முறை 15 சதவீத வாக்குகளை அது பெறுமாம். அதாவது கடந்த முறையை விட இந்த முறை 3 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்குமாம். திமுக கூட்டணிக்கு கடந்த முறை  53 சதவீத  வாக்குகள் கிடைத்த நிலையில் இந்த முறை 6 சதவீத வாக்குகள் குறைந்து 47 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். மற்ற கட்சிகள் கடந்த முறை 35 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்த முறை 38 சதவீத வாக்குககளைப் பெறுமாம்.

மோடிதான் அடுத்த பிரதமர் என சகல கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.  இந்தியா மோடிக்கு, தமிழகம் ஸ்டாலினுக்கு என்பதை யாராலும் மாற்ற முடியாது

No comments: