Saturday, February 3, 2024

சாதனைகளுடன் இரட்டைச் சதம் அடித்த ஜெய்ஸ்வால்


 விசாகபட்டினத்தில்  இங்கிலாந்து,இந்தியா ஆகியவற்றுக்கிடையே நடைபெறும்  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் அடித்தார்.

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசும் 25வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக இரட்டை சதம் விளாசிய 4வது இடதுகை வீரர்  என்ற சாதனையையும் படைத்துள்ளார். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 7 சிக்ஸ், 19 பவுண்டரி உட்பட 209 ஓட்டங் கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது ஜாம்பவான் சேவாக் போல சிக்ஸர் , பவுண்டரியை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 50 ஓட்டங்கள்   அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

  சேவாக்கின் 20 வருட சாதனையை உடைத்து மாபெரும் வரலாறு படைத்துள்ளார்.

1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 209, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*

2. விரேந்தர் சேவாக் : 195, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2003

 3. வினோத் மன்கட் : 184, இங்கிலாந்துக்கு எதிராக, 1952 

உலக அளவில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ஓட்டங்கள் கூட தாண்டாத போது இரட்டை சதமடித்த 2வது வீரர் என்ற வரலாற்றையும் ஜெயிஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2005இல் அடிலெய்ட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஜாம்பவான் பிரைன் லாராவும் மேற்கு இந்திய வீரர்கள் 35 ஓட்டங்கள் கூட தாண்டாத போது தனி ஒருவனாக 226 ஓட்டங்கள் குவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் முதல் நாளிலேயே அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற 60 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1964ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்காக முன்னாள் வீரர் புத்தி குண்டேரன் 170*  ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியின் ஒரு நாளில் 2வது அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 1979 ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் சுனில் கவாஸ்கரும் 179 ஓட்டங்கள் அடித்தார். கருண் நாயர் (236 ஓட்டங்கள், சென்னையில், 2016) முதலிடத்தில் இருக்கிறார்.

2023ஆம் ஆண்டு   மேற்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமடித்த ஜெய்ஸ்வால் தற்போது இந்திய மண்ணிலும் சதமடித்துள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில்   22 வயதிலேயே வெளிநாட்டு மண்ணிலும் சொந்த மண்ணிலும் சதமடித்த 3வது இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக ரவி சாஸ்திரி , சச்சின் டெண்டுல்கர் ஆகிய ஜாம்பவான்களும் தங்களுடைய 22 வயதுக்குள் வெளிநாட்டிலும், இந்தியாவிலும்  சதமடித்துள்ளனர்..

No comments: