Sunday, February 25, 2024

அரசியலில் அதிரடியாகக் களம் இறங்கிய கயல்விழி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு  இன்னமும் சில மாதங்களே உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை  முன்னிலைப்படுத்தியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மிகப் பலமாக அப்படியே  உள்ளதுஅந்தக் கூட்டணியில் கமல்  இணைவது  உறுதியாகி உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  இருந்த   கூட்டனிக் கட்சிகள்  ஒவ்வொன்றாக வெளியேறின. பாரதீய ஜனதாக் கட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  வெளியேற்றிவிட்டது. பலமான கூட்டணியை  அமைக்கப் போவதாக அறிவித்த எடப்பாடி தனித்து விடப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியால்  புறம் தள்ளப்பட்ட .பன்னீர்ச்செல்வம் பாரதீயஜனதாவிடம் சரணடைந்து விட்டார். தினகரனும் இவர்களுடன்  இணையத் துடிக்கிறார். சசிகலாவுக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. வாசன்  போன்றவர்கள் மதில் மேல் பூனையாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசியலில் தனிவழி செல்லும் சீமான் வழக்கம் போல் 31 வேட்பாளர்களின்  பெயர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார். எந்த கட்சிகயுடனும்  கூட்டணி இன்றி தனித்துப் போட்டி என்ற கொள்கையுடன் அரசியல் செய்யும் சீமான், 31 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய சீமான் திட்டமிட்டுள்ளார்.  தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 31 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.  50% பெண்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள்.

 திராவிடர் இயக்க மேடைகளில் தீவிர கொள்கை, அரசியல் பிரசாரம் செய்தவர் சீமான். 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற  இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பேசியதுடன்  நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக்கினார்  தமிழகத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் கூட்டணி சேராதுதனித்துப் போட்டியிடும் சீமானின் கட்சி படு தோல்வியடைந்தாலும் வாக்கு சத வீதத்தை அதிகரித்துள்ளது.   அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவால் வாக்கு சதவீதம் அதிகரிக்கிறது.  இதனையே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி; அடுத்த ஆட்சியே நாம் தமிழர் கட்சிதான் என பெருமிதத்துடன் பேசி வருகிறார் சீமான்.

 மக்களைக் கவரும்  பேச்சாளராக அரசியல் களத்தில்  வலம் வரும் சீமான்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது விமர்சனத்தில் மறக்காது வாரிசு அரசியலைச் சாடுவார்.

  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் பெயர்கள், தொலைபேசி  எண்கள் என்பன  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை நிலையம் தொடங்கி ஒவ்வொரு தொகுதி வாரிய சட்ட ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்துவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தென் சென்னை தொகுதிக்கு ராஜன் செல்வராஜ், புருசோத்தமன் ஆகியோருடன் கயல்விழி காளிமுத்துவும் சட்ட ஆலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் கயல்விழி காளிமுத்துவின் தொலைபேசி இலக்கம் எண்கள்   மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

 நாம் தமிழர் கட்சியினர் திமுகவை விமர்சிக்கும் போது மறக்காமல் வாரிசு அரசியலை முன்வைத்தும் பேசுவர். ஒவ்வொரு மேடையிலும் திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறதாக சீமான் உள்ளிட்டோரும் விமர்சிப்பர். சிமானின் மனைவி  நியமிக்கப்ப்ட்டது வாரிசு அரசியல் இல்லையா என எதிர்க் கட்சிகள்  கேள்வி எழுப்பி உள்ளன.

 கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்துவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் மறைவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் போராட்டங்கள், சட்டசபை தொகுதி அலுவலகங்கள் திறப்பு ஆகியவற்றிலும் கயல்விழி முன்னிறுத்தப்பட்டார். அவரை வைத்து நாம் தமிழர் கட்சியினர் சில நிகழ்வுகள் நடத்த அதுவே அக்கட்சிக்குள் சர்ச்சையாகவும் வெடித்தது. நாம் தமிழர் கட்சியினர் பொதுவெளியிலேயே கயல்விழிக்கு முக்கியத்துவம் தருவதை விமர்சனம் செய்தனர்.

  நாம் தமிழர் கட்சியில் சீமானின் மனைவி கயல்விழிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ முதல் பதவி இது என்பதால் தொண்டர்கள்  கொண்ணாடுகிறார்கள்.  சமூக வலைதளங்களில்  மகிழ்ச்சியுடன் இந்த அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் கயல்விழி  சட்டத் துறையில்  சித்தியடைந்து  ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை, அவங்க எந்த வக்கீல் கிட்ட ஜூனியரா  இருக்கிறார் என்றும் தெரியவில்லை ஆனால் அதுக்குள்ள சட்ட ஆலோசகர் பதவி கொடுத்திருக்கிறார்? இதுக்கு பேர் குடும்ப அரசியல் இல்லையா?" என நாம் தமிழர் எதிர்ப்பாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கயல்விழிக்கான நாம் தமிழர் கட்சி பொறுப்பு விவாதப் பொருளாகி இருக்கிறது.

வாரிசு அரசியலை  சகல அரசியல்வாதிகளும்  தமக்குச் சாதகமாக  திரிபுபடுத்திக் கருத்துக் கூறுகின்றனர். தனது மகன் தேர்தலில் போடியிடுவது வாரிசு அரசியல் அல்ல என  ஜெயக்குமார் வியக்கியானம் செய்கிறார். கருணாநிதியி மகன் ஸ்டாலின், ஸ்டாலினின் மகன் உதயநிதி  அரசியலுக்கு வருவதுதான்  வாரிசு அரசியல். எடப்பாடியின் மகன் அரசியலுக்கு வந்தால் அதுதான் வாரிசு அரசியல் என்று   புதியதொரு விளக்கத்தை ஜெயக்குமார்  கொடுத்துள்ளார்.

  வாரிசு அரசியலுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து  வெளியேறிய வைகோ,  இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி  சேர்ந்துள்ளது மட்டுமல்லாது  தனது மகனின் கையில் கட்சியைக் கொடுத்துள்ளார்.

வாரிசு அரசியலுக்கு எதிராகப் போராடுவதாகப் பறைசாற்றும்  பாரதீய ஜனதாவுக்குள்ளும் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது. சக்தி மிகுந்த அமைச்சர் அமித்ஷாவின் மகன்  ஜெய்ஷாவின் கட்டுப்பாட்டினுள்  இந்திய கிறிக்கெற் சிக்கி உள்ளது. திருமணம் செய்யாத அல்லது திருமணம் செய்தும்  குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்தால் வாரிசு அரசியல்  இல்லாமல் போக சாத்தியம் உள்ளது. எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் வாரிசாக  ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். ஜெயலலிதா தான் மட்டும் தலைவராக  இருந்தார். இரண்டாம் கட்டத் தலைவர்களை அடக்கி ஒடுக்கியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை இல்லாமல் தடுமாறுகிறது.

இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,  இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வாரிசு அரசியலை  முற்றுமுழுதாக  அகற்றிவிடமுடியாது.

No comments: