Sunday, May 3, 2026

உதிக்குமா சூரியன்? ஒலிக்குமா விசில்? இரட்டை இலைக்கு என்னாச்சு?


 

  இந்தியத் தேர்தலை இலங்கையில் உள்ளவர்களும்  எதிர் பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கைக்குச் சாதகமா? பாதகமா?  தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?

விஜய்யின் வருகையால் சீமான் பெருமளவில் பாதிக்கப்ப‌ட்டுள்ளார். திமுக, அதிமுகவுக்கு  எதிரான வாக்குகள் முழுமையாக சீமானுக்குச் சென்றன. அந்த வாக்குகள்  சிஜய்யை நோக்கிச் சென்றுள்ளன.

 அறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 1957ம்  ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது 14 சதவீத வாக்குகளை பெற்றது.. அப்போது திமுக சுயேசையாக போட்டியிட்டது..

நடிகர்களின் முதல் தேர்தல் வாக்கு சதவீதம். எம்.ஜிஆர் 30.4,  என்.டி. ராமா ராவ்  46.2,  விஜயகாந்த்  8.4 ,  சிரஞ்சீவி 16.3 ,   பவன் கல்யாண்   5.5  ,   கமல்ஹாசன் , 2.6    சீமான்   1.10,விஜய்?

மேற்கு வங்கத்தில் பாஜக, கேரளாவில் காங். ஆட்சிக்கு வாய்ப்பு - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியத் தேர்தலின்  போதும், தமிழக சட்டசபைத் தேர்தலின்  போதும் உப கண்டத்தையும் தாண்டி இலங்கையில் உள்ளவர்களும்  எதிர் பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கைக்குச் சாதகமா? பாதகமா?  தமிழக அரசு இல்;அங்கைத் தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?  போன்றவற்றுக்கான விடை தேடப்படும்.   அந்தக் கேள்விகளுக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலை இலங்கைத்தமிழர்கள்  அக்கறையுடன் எதிர் நோக்குகின்றனர். விஜய் எனும் நடைகரே அத்ற்குக் காரணம்.

 சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து அதிர்வலையை ஏற்ப‌டுத்தியுள்ளார்.விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பட்டாளம் விஜய்க்குப் பின்னால் அணிவகுத்துள்ளது. அதன் காரணமாக  தமிழக சட்டசபைத்  தேர்தல் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழக‌த்தின் அடுத்த முதல்வர்  விஜய் என்பதில் இளைஞர்கள்  உறுதியாக  இருக்கின்றனர். தேர்தலுக்குப் பின்னரான  கருத்துக் கணிப்பு அவர்களது நம்பிக்கையை சோதித்துள்ளது.  இதுவரை வெளியான தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகளில் அதிகமானவை திமுக  மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன. தேர்தலுக்குப் பின்னரான    இரண்டு கணிப்புகள் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கின்றன. ஒரே ஒரு தேர்தலுக்குப் பின்னரான  கருத்துக்கணிப்பு மட்டும்  தவெக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி 401 தொகுதிகளில் வெற்றி பெறும்  எனக்கணித்து த்லைகுனிந்த நிறுவனம் விஜய் முதல்வராவார் எனத் தெரிவித்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான திமுக - அதிமுக மோதலுக்கு அப்பால்,  விஜய்யின் தமிழக வெற்றி கழகம்  என்ற புதிய  கட்சி நுழைந்திருப்பது ஒட்டுமொத்த தேர்தல் களத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் எக்ஸிட் பூல் முடிவுகளைத் தொகுத்து உருவான 'பூல் ஆஃப் பூல்ஸ்' (Poll of Polls) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கத்தைத் தெரிவிக்கின்றன.'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் , அரசுப் பஸ்களில் இலவச பயணம் போன்ற திட்டங்கள் பெண்களிடம் திமுகவுக்கு ஒரு நிலையான ஆதரவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. திமுக அரசுக்கு எதிராக  விமர்சனங்கள்  உள்ளன. அவை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவு  வலிமையானதல்ல.திராவிட முன்னாற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போயுள்ளன. தேர்தலுக்கு முன்னரே இது  பற்றி எச்சரிக்கை விடப்பட்டது.

 திமுகவுக்கு எதிரான வாக்குகள்  எதிர்க்கட்சிகளிடையே சிதறிப்போனது திமுகவுக்குப் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது.   இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஈர்ப்பு விசை என்றால் அது நடிகர் விஜய் தான். அவர் தனித்துப் போட்டியிட்டாலும், முதல் முறையிலேயே 15% முதல் 18% வரையிலான வாக்கு சதவீதத்தைப் பெற்று 13 முதல் 19 இடங்களை வெல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  புள்ளிவிவரங்களின்படி, விஜய் பிரித்தது பெரும்பாலும் ஆட்சி எதிர்ப்பு வாக்குகளைத் தான். இது நேரடியாக அதிமுகவுக்குச் செல்ல வேண்டிய வாக்குகளாகும். இளைஞர்களின் எழுச்சி: 18-25 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களின் முதல் தேர்வாக தவெக இருந்தது, வாக்குப்பதிவு நாளன்று வெளியான வீடியோக்கள் மூலம் உறுதியானது. ஆனால், இந்த இளைஞர் வாக்குகள் ஒரு பெரும் அலையை உருவாக்கி ஆட்சி மாற்றத்தைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதார்த்தத்தில் அது வாக்குப்பிரிப்புக்கு மட்டுமே வழிவகுத்துள்ளது போல் தெரிகிறது.

2016 தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நல கூட்டணி சுமார் 6% வாக்குகளைப் பிரித்ததால், திமுக வெற்றி வாய்ப்பை இழந்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இன்று 2026-ல், அதே போன்ற ஒரு சூழல் விஜய்யால் உருவாகியுள்ளது. ஒருவேளை அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைத்திருந்தால், இந்த 150 இடங்கள் திமுகவுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. "ஆட்சி எதிர்ப்பு வாக்குகள் சிதறினால் அது ஆளும் கட்சிக்கே சாதகம்" என்ற அரசியல் அரிச்சுவடியை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளன.

அதிமுக  பெறும் எனக் கணிக்கப்பட்ட 80-95 இடங்கள் என்பது ஒரு பலமான எதிர்க்கட்சிக்கான அறிகுறியாகும்.  எடப்பாடி பழனிச்சாமி தனது அடிமட்டத் தொண்டர்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததும், பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்ததும் அதிமுகவை முழுமையாக வீழ விடாமல்  தடுத்துள்ளது. விஜய்யின் வருகையால் சீமான் பெருமளவில் பாதிக்கப்ப‌ட்டுள்ளார். திமுக, அதிமுகவுக்கு  எதிரான வாக்குகள் முழுமையாக சீமானுக்குச் சென்றன. அந்த வாக்குகள்  விஜய்யை நோக்கிச் சென்றுள்ளன.

தேர்தல் வாக்களிப்பு முடிந்ததும்  யூடியூப்  , எக்ஸ் (X) தளங்களில் "விஜய்க்குத்தான் வாக்கு  என்று சொன்னவர்களின் எண்ணிக்கைக்கும், எக்ஸிட் பூல் முடிவுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.   40 வயதைக் கடந்த குடும்பத் தலைவிகள் ,கிராமப்புற வாக்காளர்கள் பெரிய அளவில் வீடியோக்களில் பேசவில்லை. அவர்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுக , அதிமுக என்ற இருமுனைப் போட்டியிலேயே சுருங்கிவிட்டன.  சமூக வலைதளங்கள் ஒரு பிம்பத்தை   உருவாக்கலாமே தவிர, பலமான வாக்குச் சாவடி முகவர்கள் , பல ஆண்டுகால அடிமட்டத் தொண்டர்கள் இல்லாத வரை ஒரு புதிய கட்சி ஆட்சியைப் பிடிப்பது கடினம்.   எக்ஸிட் பூல் முடிவுகள் என்பது ஒரு முன்னறிவிப்பு மட்டுமே. நிஜமான தீர்ப்பு மக்களின் வாக்குப் பெட்டிகளில்  தூங்கிக் கொண்டிருக்கிறது. மே 4‍ம் திக‌தி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது  திமுக தனது பலத்தை நிரூபித்து 'ஹட்ரிக்' வெற்றியை நோக்கி நகருமா? எதிர்க்கட்சிகளின் வாக்குப்பிரிப்பு அரசியலில் யார் பலியாகப்போவது?  எதிர்பார்த்ததை விட அதிக இடங்களைப் பெற்று  விஜய் 'கிங்-மேக்கராக' மாறுவாரா?  இந்தக் கேள்விகளுக்கான விடை கிடைத்துவிடும். 

  தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை திரையுலகில் இருந்து அரசியல் களத்தில் பலர் களம் அமைத்துள்ளனர். இவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றனர்? எத்தனை தொகுதிகளில் வென்றனர். அவர்களை விஜய் விஞ்சுவாரா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

  தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகர்களில் ஒருவராக இருக்க கூடிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட விஜய்யின் கட்சி எத்தனை சதவீத வாக்குகள் பெறும்? வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அதிகரித்துள்ளன. தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகள் விஜய்க்கு நம்பிக்கையளித்துள்ளன.

அறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 1957ம்  ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது 14 சதவீத வாக்குகளை பெற்றது.. அப்போது திமுக சுயேசையாக போட்டியிட்டது.

 எம்.ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்.ஜி.ஆர் அந்த தேர்தலில் 30.4 சதவீத வாக்குகள் பெற்ற்று ஆட்சியை பிடித்தார். முதல் தேர்தலிலேயே 51,94,876 வாக்குகள் பெற்று 130 தொகுதிகளில் வென்றார். 200 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட நிலையில், 130 தொகுதிகளில் வென்றது.

 ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்த என்.டி. ராமா ராவ் தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை தெலுங்குதேசம் கட்சி எதிர்கொண்டது. 250 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. 46.2 சதவீத வாக்குகள் பெற்று முதல் தேர்தலிலேயே ஆந்திர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுதினார்.

 * எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கிய பெரிய நடிகராக இருந்தவர் சிவாஜி கணேசன். 1989 தேர்தலை எம்.ஜி.ஆர் மனைவி விஎன் ஜானகியுடன் இணைந்து அதிமுக அணியுடன் இணைந்து 50 தொகுதிகளில் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்டது. ஆனால், இதில் சிவாஜி உள்பட அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது.

 விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். 2006 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இதர அனைத்து தொகுதியிலும் தேமுதிக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். 8.4 சதவீத வாக்குகளை விஜயகாந்த் பெற்றார்.

நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2009 ஆம் ஆண்டு தனது முதல் பொதுத்தேர்தலை சந்தித்தது. 288 தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தம் 16.3 சதவீத வாக்குகள் பெற்று அவரது கட்சி வென்றது. ஆனால், அவரது கட்சி நாளைடைவில் கரைந்து போனது. இறுதியாக காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்த சிரஞ்சீவி மீண்டும் முழு நேரமாக சினிமா பக்கம் திரும்பினார் .

 சிரஞ்சீவியின் சகோதராரான பவன் கல்யாண் 2019 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை சந்தித்தார். 137தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய பவன் கல்யாணால் 5.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

 நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி அந்த தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 2.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனே தோல்வியை தழுவினார்.

டாக்டர் ராமதாஸால் துவங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி 1991ம் வருடம் முதல் சட்டமன்ற தேர்தலில் சந்தித்து 5.80 சதவீத வாக்குகளை பெற்றது.

திமுகவிலிருந்து பிரிந்த வை.கோபால்சாமி துவங்கிய மதிமுக 1996-ல் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் 5.80 சதவீத வாக்குகளை பெற்றது.. மூப்பனாரால் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் 1996ம் வருடம் முதல் தேர்தலை சந்தித்து 9.30 சதவீத வாக்குகளை பெற்றது.

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்ட தேமுதிக 2006ம் வருடம் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் 8.40 சதவீத வாக்குகளை பெற்றது.

சினிமா துறையிலிருந்து வந்த சீமான் துவங்கிய நாம் தமிழர் கட்சி 2016ஆம் வருடம் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் 1.10 சதவீத வாக்குகளை பெற்றது.. ஆனால் அதே கட்சி தற்போது வளர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றது.

 233 தொகுதிகளுக்கும் விஜய் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். அவரது கட்சி பெறும் வாக்கை அறிவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லரசிகர்க ளும் ஆவலாக உள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎப்) வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கேரளாவில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 78 முதல் 90 இடங்களை கைப்பற்றும் எனவும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 49 முதல் 62 இடங்களை கைப்பற்றும் எனவும், பாஜக 3 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் யுடிஎப் 66 முதல் 76 இடங்களையும், எல்டிஎப் 58 முதல் 68 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் யுடிஎப் 75 முதல் 85 இடங்களையும், எல்டிஎப் 55 முதல் 65 இடங்களையும் கைப்பற்றும் எனவும் பாஜக 3 இடங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் அசாம் மாநிலத்தில் பாஜக 88 முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 24 - 36 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 25 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

 பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 15 முதல் 26 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.மே 4 ஆம் திகதி வாக்காளர்களுன் முடிவு ஏற்படுத்தப் போகும் தாக்கம் வலுவானதாக  இருகும் ஏனதில்  எவ்வித ஐயமும் இல்லை.

 

ரமணி

3/3/26

No comments: